.ஸ்ரீகந்தராசா அவர்களின் நூல்வெளியீட்டு விழா - செ.பாஸ்கரன்


.

18.03.2012 ஞாயிறுமாலை சிட்னியில் செந்தமிழ்ச் செல்வர் பாடும்மீன் சு.ஸ்ரீகந்தராசா அவர்களின் சங்க காலமும் சங்க இலக்கியங்களும் நூல் வெளியீடு ஹோம்புஷ் ஆண்கள் பாடசாலையில் 5.00 மணிக்கு என்று அழைக்கப் பட்டிருந்தேன் சற்று தாமதமாகத்தான் தொடங்கியது. இலக்கிய நண்பர்கள் பலரும் இருந்ததால் அவர்களோடு உரையாடியதில் நேரம் போனது தெரியாமல் போய்விட்டது. சுந்தரதாசின் அறிவிப்போடு தொடங்கிய விழா ஜந்து பெண்கள் குத்துவிளக்கேற்ற யாகவி சோமசுந்தரம் தமிழ்மொழி வாழ்த்துப்பாட ஆரம்பமானது.
சுந்தரதாஸ் நிகழ்ச்சியை தலைமைதாங்கும்படி பிரபல எழுத்தாளரான மாத்தளைசோமுவையும் ஆசியுரை வழங்க முதுபெரும் எழுத்தாளர் எஸ்.பொ அவர்களையும் நூல் அறிமுக உரைவழங்க கம்பன் கழக பேச்சாளர் திரு.திருநந்தகுமாரையும் நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரம் இறுவெட்டை அறிமுகஉரை செய்ய எழுத்தாளரும் வானொலியாளருமான கானா பிரபாவையும் பதிலுரை வழங்க விழா நாயகன்  பாடும்மீன் சு.ஸ்ரீகந்தராசா அவர்களையும் வாழ்த்துக்கவிதை பாட திருமதி மனோ ஜெகேந்திரன் அவர்களையும் அழைத்தார். முதலில் திருமதி மனோ ஜெகேந்திரன் வாழ்த்துக்கவிதை பாடினார்.


தொடர்ந்து தலைமையுரை வழங்கிய திரு மா.சோமு அவர்கள் சங்ககால இலக்கியங்களின் பெருமை பற்றி அழகான உதாரணங்களுடன் விளக்கியதோடு சி.வை.தாமோதரம்பிள்ளை அவர்கள்தான் சங்ககால இலக்கியத்தை முதலில் அச்சு வாகனம் ஏற்றிய பெருமை பெற்றவர் என்பதையும் குறிப்பிட்டார். தொடர்ந்து எழுத்தாளர் எஸ்.பொ அவர்களை ஆசியுரை வழங்க அழைத்தபோது மேடைக்குவந்த எழுத்தாளர் எஸ்.பொ அவர்கள் அவரது பாணியிலேயே பேச்சை ஆரம்பித்தார்.


பாடும்மீன் சு.ஸ்ரீகந்தராசா அவர்களின் தைரியத்தை நான் பாராட்டுகிறேன் நான் எந்தமேடையிலும் ஆசிகூறியது கிடையாது என்று வேடிக்கையாக கூறி பின் மு.தலையசிங்கம் சிவத்தம்பி கைலாசபதி போன்றோரின் கதைகளோடு வந்து ஒளவையாரின் மூதுரை நன்னெறி போன்றவற்றில் உள்ள உண்டிசுருங்குதல் பெண்டிற்கழகு என்ற வரிகளையும் ஆறுபது சினம் என்றவரிகளையும் கூறி இவைகள் சிறுவர் இலக்கியம் என்று சிலர் குழந்தைகளுக்கு கற்பிப்பது தவறு என்று சர்ற்சயை ஆரம்பித்து வைத்தார். தொடர்ந்து ஆறுமுக நாவலர் இளங்கோவடிகளிலோ அல்லது சிலப்பதிகாரத்திலோ எந்த வெறுப்பையும் கொள்ளவில்லை ஆனால் சமண சமயத்து வாணிச்சி செட்டிச்சியை போற்றுவதா என்று தான் அதை யாழ்ப்பாணத்தவர்களிடம் அண்ட விடவில்லை என்ற குண்டைத்தூக்கிப்போட்டார். (யாழ்ப்பாண உயர் சாதியினரின் சைவத்தையும் தமிழையும் காத்தவரென்ற மங்காப் புகழ்பெற்ற நாவலரைப்பற்றிய காரசாரமான விடயங்கள் பல இருக்கின்றன அவற்றை அவர் கூறவில்லை) தொடர்ந்து நல்ல கருத்துக்களை முன்வைத்து அமர்ந்தார்.தொடர்ந்து அறிமுக உரை செய்யவந்த திரு.திருநந்தகுமார் தனக்கே உரிய பாணியில் வசீகரமாக தனது பேச்சை ஆரம்பித்து பின் மிக ஆக்ரோசமாக  எஸ்.பொ அவர்கள் நாவலரைப்பற்றி முன்வைத்த கருத்தைச் சாடினார் ஏன் பண்டிதர்களை குறை கூறுகின்றீர்கள் அவர்கள் எப்படி பண்டிதர்களானார்கள் என்று ஏழை விவசாயிகளாக இருந்துதான் படித்தார்கள் என்ற கருத்தை உதாரணத்தோடு முன்வைத்து. நாவலரைப் பற்றி பேச முனைந்தால் நேரம் போதாமல் போய்விடும் ஆனால் அடுத்த சமரில் நாவலருக்கு சிட்னியில் விழா எடுத்து அந்த மேடையில் எஸ்.பொ அவர்களை நாவலரைப்பற்றி பேசவைக்கிறேன் என்று முன்வைத்தார். அத்தோடு சங்ககால இலக்கியத்தில் சில வரிகளின் கருத்து விளங்காதபோது கலாநிதி பொன் பூலோகசிங்கம் ஜயாவிடம் தொலைபேசியில் கேட்டேன் நான்வரிகளை கூறக்கூற அவர் விளக்கம் தந்த விதத்தை கண்டு வியந்தேன் என்று  பாராட்டிபேசினார். புத்தகத்தைப்பற்றி குறிப்பிடும்போது சங்ககால இலக்கியம் படிக்காதவனுக்கு அதைப்பற்றி அறிந்துகொள்ளக் கூடிய இலகுவான தொகுப்பு என்று குறிப்பிட்டார். இதிலே இருக்கின்ற சில பாடல்களைக் குறிப்பிட்டு விளக்கம் தேவையில்லாது இலகுவாக விளங்கக்கூடிய பாடல்களும் சங்க இலக்கியத்தில் உள்ளது பற்றி பேசி அமர்ந்தார்.


தலைவர் மாத்தளை சோமு இதைப்பற்றி குறிப்பிடும்போது கலகம் பிறந்தால் நல்லது நடக்கும் நாவலரைப்பற்றி வந்த சில கருத்தால் இங்கே நாவலருக்கு ஒரு விழா நடக்கப்போகின்றது அது மிகவும் நல்லது என்று குறிப்பிட்டார்.
( இனி என்ன நாவலருக்கொரு விழா கற்புக்கரசி கண்ணகிக்கு ஒரு விழா , புருசனை சுமந்துசென்ற நளாயினிக்கொரு விழா என்று விழாக்கள் எடுத்து தமிழ்நாட்டையே தூக்கி எறிந்து விடுவோம் யாரங்கே உடனடியாக சங்கங்கள் பல உருவாகட்டும்)தொடர்ந்து சிலப்பதிகார இறுவெட்டை அறிமுகம் செய்ய வந்த கானா பிரபா அவர்கள் தற்காலத்திற்கேற்ற வகையில் கணனி துறையோடு தமிழும் தொற்றிக்கொண்டு செல்லும் விதம்பற்றி அழகாக கருத்தை முன்வைத்தார். பொன்னியின் செல்வன் போன்ற மிகப் பெரிய நாவல்களே இலத்திரனியலில் வந்துவிட்டது. இந்த இறுவெட்டை பாடும்மீன் சு.ஸ்ரீகந்தராசா அவர்கள் ஒருமணி ஜம்பத்திஆறு நிமிடங்கள் கொண்ட இறுவெட்டாக உருவாக்கியுள்ளார் இலக்கியங்கள் புத்தகங்களை வாசிக்க நேரமில்லாதவர்கள் பிரயாணம் செய்யும்போது வாகனங்களிலேயே கேட்கலாம். ஒரு காப்பியத்தை தன்னுடைய குரலிலேயே மிக அழகாக செய்துள்ளார் என்று எடுத்துரைத்தார்.அதன்பின் முதற்பிரதிகள் வெளியிடப்பட்டது. பாடும்மீன் சு.ஸ்ரீகந்தராசா அவர்கள் பிரதிகளை வழங்கினார். அதன்பின் பதிலுரை வழங்கிய .ஸ்ரீகந்தராசா அவர்கள் தான் தமிழ்படித்த விதம்பற்றிகூறி ஆர்வமிருந்தால் ஒவ்வொருவரும் இலக்கியங்களையெல்லாம் முழு நிறைவாக கற்றுக்கொள்ளலாம் என்று மற்றவரும் கற்றுக்கொள்ள ஆசைப்படும் வகையில் எடுத்துரைத்தார். தமிழில் இதைக்கொண்டுவந்தது தமிழ் தெரிந்த தமிழர்கள் சங்ககால இலக்கியத்தின் பெருமைகளை அறிந்து கொள்வதற்காக இதையே ஆங்கிலத்தில் கொண்டு வந்துள்ளதன் காரணம் தமிழ் தெரியாத நம் தமிழ்ச் சந்ததியினர் தமிழர்களிடம் இருந்த இருக்கின்ற இலக்கியம் உயர்வான இலக்கியம் என்பதை அறிந்து கொள்ளவும் தமிழரல்லாதோரும் இதை அறிந்து கொள்ளவும் என்று எடுத்துரைத்தார்.பல இலக்கிய விடயங்களையும் தொட்டுச்சென்ற .ஸ்ரீகந்தராசா அவர்கள் எல்லோருக்கும் நன்றிகூறி சிற்றுண்டிக்கான அழைப்பை விடுத்திருந்தார்.


மீண்டும் சிற்றுண்டிக்குப் பின்பு நகைச்சுவைப் பட்டிமன்றம் பழைய திரைப்பாடல்களில் மக்களின் மனதில் பெரிதும் நிலைத்திருப்பவை கண்ணதாசனின் பாடல்களே இடம்பெற உள்ளது என அறிவிக்கப்பட்டது. வழமைபோல் பாதிப்பேர் சென்றுவிட மீதிப்பேர் இருந்தார்கள். .பாடும்மீன் ஸ்ரீகந்தராசா அவர்கள் தலைமைதாங்க திரு குலம் சண்முகமும் சௌந்தரி கணேசனும் ஆதரித்துப் பேச திரு.திருமலை மூர்த்தியும் சோனா பிறின்சும் எதிர்த்துப் பேசினார்கள். தலைவர் ஆரம்பிக்கும்போது கணீர் என்ற குரலில் பல பாடல்களை பாடி மனதில் நிற்கும் பாடல்கள் என்று குறிப்பிட்டார். முதலில் பேசவந்த குலசிங்கம்  அவர்கள் கண்ணதாசனின் நல்ல பாடல்களை பாடி கருத்துக்களையும் கூறினார் தொடர்ந்து மூர்த்தி பழையபாடல்களை கணணி யில் இருந்து ஒலிக்கவிட்டு தனது கருத்துக்களை கூறினார் அடுத்து வந்த சௌந்தரி எங்கள் குழுவினர் பாடத்தெரியாதவர்கள் என்று ஆரம்பித்து  கண்ணதாசனின் பல பாடல்களை நன்றாக பாடினார் அத்தோடு நல்ல கருத்துக்களையும் கூறினார். அடுத்து வந்த சோனா பிறின்ஸ் தான் வாலியைவைத்தே இவர்களை வாரிவிடுகின்றேன் எனக்கூறி பல MGR படப் பாடல்களான வாலியின் பாடல்களை மிக நன்றாக பாடி பல கருத்துக்களால் அடித்தார். மீண்டும் வந்த மூர்த்தி கண்ணதாசனோடு வேறும் பலர் உள்ளார்கள் என்ற கருத்திற்கு ஆதாரங்களை முன்வைத்தார். கடைசியாக வந்த குலசிங்கம் மிக நகைச்சுவையாக பேசி அரங்கத்தின் பலத்த கைதட்டல்களைப் பெற்றுக்கொண்டார். தீர்ப்புக் கூறவந்த தலைவர் திணறிப்போனார் பின் இவர்கள் சொல்லாத பல பாடல்களையும் சுட்டிக்காட்டி கண்ணதாசன் பாடல்கள் மனதில் நிலைத்திருப்பவை என்றாலும் பல கவிஞர்களின் பாடல்களும் மனதில் நிலைத்திருக்கும் பாடல்களே என்ற நல்ல தீர்ப்பை வழங்கினார்.


ஒரு கட்டத்தில் கண்ணதாசனைப்பற்றி கூறிய .ஸ்ரீகந்தராசா அவர்கள் கண்ணதாசன் சேராத கட்சிகளே இல்லை ஒரேஒரு கட்சியைத் தவிர அது அதிமுக என்றும் அக்கட்சி தொடங்கும்போது அவர் இல்லை என்றும் குறிப்பட்டார். ஆனால் அது சரியான தகவல் இல்லை என்பது என்கருத்து. அதிமுக வில் MGR முதலமைச்சராக வந்தது 1977 ம் ஆண்டு கண்ணதாசன் இறந்தது 1981ம் ஆண்டு இறக்கும்போது கண்ணதாசனே அரசவைக் கவிஞர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பல சுவையான நிகழ்வுகளோடும் சுவையான சிற்றுண்டிகளோடும் பாடும்மீன் .ஸ்ரீகந்தராசா அவர்களின் நூல் வெளியீடு 9.20 மணியளவில் நிறைவுற்றது. இனிமையான ஒரு மாலைப்பொழுதோடு திரும்பினேன்.2 comments:

Ramesh said...

புத்தக வெளியீடு நன்றாகவே நடந்தது. நேரத்திற்கு கயிறுகட்டி வைத்திருந்தால் இழுத்தாவது பிடித்திருக்கலாம் ஸ்ரீகந்தராசாவிற்கு மீண்டும் ஒருமுறை பாராட்டுக்கள். எஸ் பொ வந்ததினால் களைகட்டியது மேடை. கண்ணதாசக் அதிமுக விற்கு முன்பாக இறந்ததென்றது சரியல்ல என்று நினைத்தேன் பாஸ்கரன் குறிப்பிட்டு எழுதியுள்ளார்.
சிரிப்பு பட்டிமன்றம் என்றதால் போலும் திருமலை மூர்த்தி சீரியசாக செய்தார் குலம்மாஸ்டர் சிரிப்பு பட்டிமன்றம் என்று சொன்னதை காப்பாற்றி விட்டார். பாஸ்கரன் நன்றாக பதிந்துள்ளீர்கள் பாராட்டுக்கள். மா.சோ வின் தலைமை நன்றாக இருந்தது. நல்ல நிகழ்வோடு நல்ல சிற்றுண்டியும் தந்த ஸ்ரீக்கு பாராட்டுக்கள்

Anonymous said...

எங்கட ஊர்க் கண்ணகியள் வாழ வழிதெரியாமல் தற்கொலை செய்யுதுகள் அதை எழுத ஆளில்ல சங்ககால கண்ணகிக்கு இறுவட்டு தேவைதானா சிந்தியுங்க பெரிசுகளே.