மௌனம் கலைகிறது 7 –நடராஜா குருபரன்


.

கிழக்கில் கருணாவின் பிளவை நியாயப்படுத்திய சமூகப் பிரதிநிதிக ள்“ எல்லாப் புகழும் இறைவனுக்கும் எல்லாப்பழியும் புலிகளுக்கும் என்று மட்டுமாகி விடக்கூடாது.”

கிழக்கில் கருணாவின் பிளவை நியாயப்படுத்திய சமூகப் பிரதிநிதிகள் - மௌனம் கலைகிறது 7 –நடராஜா குருபரன்
 2000ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்தே கருணாவுக்கும் புலிகளுக்கும் இடையிலான முரண்பாடு மெல்ல மெல்ல உள்ளே வளரத்தொடங்கியிருந்தது. இந்த முரண்பாட்டின் விளைவாக 2001, 2002, 2003 ஆம் ஆண்டுகளில் நிகழ்ந்த முக்கியமான சில சம்பவங்களை முன்னர் குறிப்பிட்டிருந்தேன். 2004ல் கருணாவுக்கும் புலிகளுக்கும் இடையில் இருந்த முரண்பாடு வெளிப்படையான பிளவாக மாறியது. இந்த நிலையில்தான் கிழக்குப் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சிலர், பேராசிரியர்கள் சிலர், புத்திஜீவிகள் சிலர், ஊடகத்தரப்பினர் சிலர், வர்த்தகர்கள் சிலர் எனப் பல தரப்பினரும் சேர்ந்து கிழக்குத் தொடர்பாக வன்னிப்புலிகள் வெளிக்காட்டும் தொடர் புறக்கணிப்புக்கு ஒரு தீர்வு காணப்பட வேண்டியது அவசியம் என்னும் ஒரு நிலைப்பாட்டை எடுத்துக் கருணாவின் கோரிக்கையை நியாயப்படுத்தினர். இதற்குச் சிறந்த உதாரணமாக அந்த நேரத்தில் கிழக்குப் பல்கலைக்கழகப் பேராசிரியர் திரு தங்கராஜா அவர்கள் கருணாவின் பிளவுக்குக் காரணமான சூழலும் அவர் வைத்த கோரிக்கைகளும் நியாயமானவை என BBC சிக்கு வழங்கிய செவ்வியினைக் குறிப்பிடலாம். அதேபோல் கிழக்குப்பல்கலைக்கழகத்தில் புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு எதிராகக் கருணாஅணியினர் ஏற்பாடு செய்திருந்த எதிர்ப்புக்கூட்டம் கொடும்பாவி எரிப்பு என்பவற்றில் தமிழ்தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திரு ஜெயானந்தமூர்த்தி அவர்களும் அன்று பிரசன்னமாகி இருந்தார். சொந்த விருப்பத்தின் பேரிலா அல்லது வற்புறுத்தலின் பேரிலா அவர் அதில் கலந்துகொண்டிருந்தார் என்பது தெளிவில்லை.

ஏற்கனவே நான் குறிப்பிட்டது போன்று சிவராம் மற்றும் கருணாவின் நிலைப்பாட்டை ஆதரித்த குழுவினரது ஆலோசனையின்படி கருணா முக்கியமான சில அறிக்கைகளை வெளியிட்டார். 2004ஆம் ஆண்டு மார்ச் 3 திகதி ஒரு அறிக்கையும் மார்ச் 4 ஆம் திகதியும் இன்னொரு அறிக்கையும் வெளியாகின. இந்த இரண்டு அறிக்கைகளும் அரசியல் ரீதியான நியாயமான கோரிக்கைகள் சிலவற்றைத் தம்மகத்தே கொண்டிருந்தன. இதில் ஒரு அறிக்கையில் விடுதலைப்புலிகள் அமைப்பின் கட்டமைப்பில் அடிநிலையில் இருந்து உயர்மட்டம் வரையும் முடிவெடுக்கும் அதிகாரத்தைக் கொண்ட மிக முக்கிய பொறுப்புகளில் வடக்கைச் சேர்ந்தவர்களே நியமிக்கப்பட்டு இருந்தார்கள் எனக் குற்றம் சாட்டப்பட்டிருந்தது. புலிகளுள் வடக்கைச் சேர்ந்தவர்கள் பொறுப்பு வகித்த மிக முக்கியமான 16 துறைகளை அந்த அறிக்கை சுட்டிக் காட்டி இருந்தது. அதுபோல் புலிகள் அமைப்பின் நடவடிக்கைகள் எவ்வாறு கிழக்கைப் புறக்கணிப்பதாக இருந்தது என்பதனையும் அரசியல் கண்ணோட்டத்துடன் அந்த அறிக்கை தெரிவித்திருந்தது. 
மற்றைய அறிக்கையில் குறிப்பாக புலிகளின் தலைவர் ஆயிரம் போராளிகளை (ஆயிரமோ அல்லது இரண்டாயிரமோ ஞாபகம்) இல்லை வன்னிக்கு அனுப்புமாறு கோரியிருந்ததும் கருணா அதனை மறுத்திருந்ததும் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த அறிக்கைகள் அப்பொழுது எமக்கும் (சூரியன் FM) அனுப்பப்பட்டு இருந்தன. அவற்றை ஆவணப்படுத்த தவறிவிட்டோம். அந்த அறிக்கைகளை மீளவும் தேடியெடுக்கப் பல முயற்சிகளை எடுத்தேன். ஆனாற் கைகூடவில்லை. அந்த அறிக்கைகளை எவராவது பாதுகாத்து வைத்திருந்தால், அவற்றின் பிரதிகளை அனுப்பி வைத்தால் அவற்றையும் இந்தத் தொடரில் இணைத்துக்கொள்ளலாம்.  காரணம் கருணா என்ற தனிமனிதனினதும் அவருடன் இணைந்திருந்த சிலரினதும் அரசியற் தெளிவற்ற சுயநலமான நடவடிக்கைகள் காரணமாக அந்த அறிக்கைகளில் இருந்த அரசியற் கோரிக்கைகளின் நியாயங்கள் வலுவிழந்து போயின.
 ஆயினும் விடுதலைப்புலிகள் அழிக்கப்பட்டுள்ள இன்றைய நிலையில் அதனுடன் திருப்தி அடைந்து விடாமல் தமிழ் தேசியம் என்னும் கோட்பாட்டையே அழித்து விடுவதற்குப் பலர் முனைந்து நிற்கின்றனர்.  தமிழ்தேசியத்தின் வளர்ச்சிக்கு வித்திட்ட சிங்களப் பேரினவாத ஆதிக்கம் அசுர பலத்துடன் எழுந்து நிற்பதை தெரிந்தும் கண்டுகொள்ளாமல் தமிழ்தேசியத்தின் மீது ஒருதலைப்பட்சமான விமர்சனங்கள் வைக்கப்படுகின்றன. பிற்போக்குத்தனமான சிங்களப் பேரினவாதிகளின் ஆதிக்கமும் மோசமான ஒடுக்குமுறையும் இருக்கும் வரை தமிழ்தேசியவாதம் இதய சுத்தியுடன் கூடிய இணக்க அரசியலுக்குத் தயாராகாது. மேலும் இலங்கையில் தேசிய வாதங்களின் இருப்பை மறுப்பதோ அல்லது சிறுபான்மைத் தேசியங்களை அழித்துவிட நினைப்பதோ முட்டாள்த்தனமானதாகும். ஆனால் தேசியவாதங்களின் பிற்போக்குத்தனங்களையும் அடக்குமுறைக் குணாம்சங்களையும் இல்லாதொழிக்கும் ஒரு முனைப்புக்கான அறிவூட்டலை ஆரம்பிக்கமுடியும். இலங்கையின் சகல சமூகங்களையும் அவற்றின் அடையாளங்களையும் தனித்துவத்தையும் இருப்பையும் அங்கீகரித்துக்கொண்டு அவற்றைச் சனநாயக மயப்படுத்தமுனைவதுதான் இன்றைக்குப் பயன் தரக்கூடியது.
இந்த வகையில் தமிழ்தேசியவாதம் தன்னுள் இருக்கும் சாதிய முரண்பாடுகள் பிரதேசவாதம் இன்னும் பல வலிமையான ஒடுக்கு முறை அம்சங்களைக் கணக்கிலெடுத்து அவற்றைக் களைவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபடவேண்டும். அதுமட்டுமல்ல இலங்கையில் வாழும் ஏனைய  இனங்கள் தொடர்பாக தாம் கொண்டுள்ள பிற்போக்கான கொள்கைகளை மாற்றி வெளிப்படையான இதய சுத்தியுடன் கூடிய உரையாடல்களை ஆரம்பிக்க வேண்டும் . இந்த முறையில் தமிழ்த்தேசியம் தன்னைச் சனநாயகமயப்படுத்த முனையாவிட்டால் பிற்போக்குச் சிங்களப் பேரினவாத அரசியல்வாதிகளின் இராணுவ பொருளாதார மற்றும் கலாசார ஆக்கிரமிப்புக்களுக்கு எதிரான போராட்டத்தில் ஓரங்குலம் கூடத் அதனால் முன்நகர முடியாது. இந்தக் கொள்கையின் அடிப்படையில் எற்கனவே கருணா வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்த விடையங்களின் அடிநாதமாகவிருந்த வடக்கின் மேலாதிக்கம் குறித்து மீளாய்வு செய்வது முக்கியம் எனக் கருதுகிறேன். 
கருணாவின் அறிக்கைகள் வெளியிடப்பட்ட நிலையில் வன்னியில் முக்கியமான ஒரு பத்திரிகையாளர் மகாநாட்டுக்கு விடுதலைப் புலிகள் அழைப்பு விடுத்தனர். நானும் அப்பத்திரிகையாளர் மகாநாட்டிற்குச் சென்றிருந்தேன். (மட்டக்களப்பில் இருந்து வவுனியா சென்று அங்கிருந்து வன்னிக்கு போவதா விடுவதா எனக் குழம்பிப் பின் ஒருவாறு தன்னைத் தேற்றிக்கொண்டு திரு சிவராம் அவர்களும் அந்த பத்திரிகையாளர் மகாநாட்டுக்கு வந்திருந்தார்.)  அந்த ஊடகவியலாளர் மகாநாட்டில் புலிகளின் அரசியற்துறைப் பொறுப்பாளர் தமிழ்ச் செல்வன் மற்றும் அவரது ஆங்கில ஊடக மொழிபெயர்பாளர் திரு ஜோர்ஜ் ஐயா ஆகியோரைத்தவிர, இருந்த அனைவரும் புலிகளின் கிழக்கின் தளபதிகளாகும். அவர்களுள் இளந்திரையன் (மார்ஸல்), றமேஸ், கௌசல்யன் ஆகியோர் முக்கியமானவர்கள். ஏனையவர்களை ஞாபகப்படுத்திக் கொள்ள முடியவில்லை. இந்த மகாநாட்டில்தான் கருணா புலிகள் அமைப்பில் இருந்து வெளியேற்றப்படுகிறார் என்ற உத்தியோக பூர்வமான அறிவிப்பு வெளியிடப்பட்டது.
கருணாவினது பொறுப்புகள் யாவும் பறிக்கப்பட்டு அந்தப் பொறுப்புக்களை நிர்வகிக்கப்போகும் புதியவர்களது பெயர்களும் பதவி நிலைகளும் அறிவிக்கப்பட்டன. றமேஸ் அவர்கள் உடனடியாகவே கேணலாகத் தரமுயர்த்தப்பட்டார். ஏற்கனவே மட்டக்களப்பு அரசியத்துறைப் பொறுப்பில் இருந்து கருணாவின் பிளவின் போது வன்னிக்குத் தப்பிச் சென்ற கௌசல்யனே மீண்டும் அதே பொறுப்பிற் கிழக்கிற்குச் செல்வார் எனவும் அறிவிக்கப்பட்டது.
வன்னியிற் அரசியற்துறை அலுவலகத்தில் பத்திரிகையாளர் மகாநாடு முடிந்தவுடன் புலிகளின் ஊடகப் பேச்சாளர் தயா மாஸ்ரரை சந்திக்கக் கிடைத்தது.   பேசுவதற்கும் பழகுவதற்கும் இதமான மனிதர் அவர். சமாதான காலத்தில் ஊடகச் சந்திப்புகளுக்காக வன்னிக்குச் செல்கின்ற போதெல்லாம் எங்களை உபசரிப்பதும் அவரே. இதன் காரணமாக என்னுடன் அவருக்கு ஒரு ஊடகவியலாளனுடன் ஏற்படக்கூடிய நெருக்கமான நட்பும் ஏற்பட்டிருந்தது. தயா மாஸ்ரருடன் உரையாடும் போது அவரிடம் தனியாக கேட்டேன்: 'மாஸ்ரர் உங்கடை முக்கியமான பொறுப்பாளர்களில் இருந்து எல்லாரும் சொல்லினம் கருணா பிரிஞ்சு போறதால புலிகள் அமைப்புக்கு எந்தப்பிரச்சனையும் இல்லை இது ஒரு சின்ன விசயம் எண்டு, இது பற்றி நீங்கள் என்ன நினைக்கிறியள்?'.
அவர் சுற்றும்முற்றும் பார்த்து விட்டு எவரும் அருகில் இல்லை என்பதனை உறுதிப்படுத்தி விட்டு மெதுவாக:  'என்ன விசர்க்கதை கதைக்கிறியள் அதுதானே இப்ப இயக்கத்தில பெரிய பிரச்சனையே! கருணாவும் உவ்வளவு பெடியளும் பிரிஞ்சு போனால் எவ்வளவு தாக்கம் இருக்கும்!! உவை வெளியாலை உப்பிடித்தான் சொல்லிவினம்' எனக்கூறினார்.
கவலை தோய்ந்த தொனியில் மேற்கூறிய வார்த்தைகளைக் கூறியபோதே கருணாவின் பிளவு எவ்வளவு பாரதூரமானதென்பதை என்னால் உணர முடிந்திருந்தது. தயாமாஸ்ரர் இந்தத் தொடரை வாசிக்க நேர்ந்தால் எனக்கும் அவருக்கும் இடையில் நிகழ்ந்த அன்றைய அந்த உரையாடலை நினைவு கூர்வார் என்று நினைக்கிறேன்.
இந்தக் காலக்கட்டத்தில் தான் திருகோணமலையின் தளபதியாக இருந்த பதுமனும் திலக்கும் அப்பதவிகளில் இருந்து நீக்கப்பட்டு சொர்ணம் எழிலன் ஆகியோர் அப்பதவிகளுக்கு நியமிக்கப்பட்டனர்.
2002 இன் பின் கிழக்கில் இருந்து வன்னிக்கு செல்லும் சந்தர்ப்பங்களில் பதுமனும் கருணாவும் ஒன்றாகவே செல்வது வழக்கம் என அறிந்து கொள்ள முடிந்திருந்தது. நான் ஊடகச் சந்திப்புகளுக்கு வன்னி சென்ற சந்தர்ப்பங்களில் இரண்டு சந்தர்ப்பங்களில் இவர்கள் இருவரையும் ஒன்றாகக் கண்டிருக்கிறேன். கருணாவின் கோரிக்கைகளில் நியாயம் இருப்பதாக பதுமன் அப்போது கருதியிருந்ததாலேயே இந்த நெருக்கம் ஏற்பட்டிருந்ததாகக் கருதப்பட்டது. இதனால் கருணா புலிகள் முரண்பாடு வெளித் தெரியத்தொடங்கிய போது (எனக்கு கால ஞாபகம் இல்லை) பதுமன் தனக்கு நெருக்கமானவர்கள் பலருடன் வாகரையூடாகக் கிழக்கிற்குச் செல்ல முற்பட்ட போது புலிகளால் கைது செய்யப்பட்டு வன்னிக்கு அனுப்பப்பட்டார் எனவும் வன்னிக்கு வருமாறு அழைக்கப்பட்டதனால் பதுமன் அங்கு சென்றார் எனவும் இரு வேறு பட்ட முரண்பட்ட தகவல்கள் கசிந்திருந்தன.திலக் பற்றி இன்று வரையும் தகவல்கள் எதுவும் இல்லை. ஆனால் பதுமன் இலங்கைப் படையினரின் பாதுகாவலில் உள்ளதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழீழ விடுதலைப் போராட்டத்தினுள் ஈர்க்கப்பட்டிருந்த கிழக்குமாகாணத்தைச் சேர்ந்த போராளிகள் காலத்துக்காலம் பல அவலங்களைச் சந்தித்திருந்தனர். இந்த வகையில் கிழக்கு மாகாணத்தைச்சேர்ந்த போராளிகள் தொடர்பில் என்னை மிகவும் பாதித்த சில விடயங்களையும் நான் இங்கு குறிப்பிட்டே ஆக வேண்டும்.
சமாதானகாலத்தில் (2002...) வன்னியின் எல்லைகளைப் பாதுகாக்கும் பணியில் கிழக்கின்போராளிகளே பெருமளவில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். வடக்கைச்சேர்ந்த போராளிகளும் தொடர்செயற்பாட்டில் ஈடுபடுத்தப்பட்டிருந்த போதும் அவர்கள் தமது வீடுகளுக்குச் சென்று தமது குடும்பத்தாருடன் நாட்களை கழிக்கும் வாய்ப்புக்களும் அதிகளவில் இருந்தன. ஆனால் கிழக்கைச் சேர்ந்த போராளிகளுக்கு இந்த வாய்ப்பு அருகியே இருந்தது. நான் வன்னியின் உட்பிரதேசங்களுக்குச் சென்ற போது இதனை அவதானிக்க முடிந்திருந்தது.
இந்தவிடத்தில் விடுதலைப்புலிகளை மட்டும் குறைசொன்னால் அது வரலாற்றுத்தவறாகும். ஏனேனில் பிரதேசவாதம் என்பது புலிகளின் முதிசமல்ல. அது தமிழர்களின் முதிசம்.
கிழக்கைச் சேர்ந்த போராளிகள் எவ்வாறெல்லாம் கடந்த மூன்று தசாப்தங்களாகப் பந்தாடப்பட்டார்கள் என்பதை நினைக்கும் போது இதயம் வலிக்கிறது. 1986ஆம் ஆண்டு என நினைக்கிறேன். விடுதலைப் புலிகள் ஒவ்வாரு இயக்கமாகத் தடைசெய்து அல்லது அவற்றை அழிக்கத் தொடங்கியிருந்தனர். PLOT இயக்கமும் தடை செய்யப்பட உள்ளதாக தகவல்கள் கசிந்தன. அதே வேளை புளொட் இயக்கத்தினுள் உட்கட்சிப் போராட்டம் வலுத்து இந்தியாவில் உமா மகேஸ்வரன் தலைமையில் ஒரு அணியும் பரந்தன் ராஜன் தலைமையில் மற்றொரு அணியும் உருவாகும் நிலை தோன்றி இருந்தது. இந்த நிலையில் புளொட் இயக்கத்தில் இருந்த பெருவாரியான உறுப்பினர்களின் நலன் கருதி இலங்கையில் அதன் செயற்பாடுகளை நிறுத்துவதாக முடிவெடுக்கப்பட்டது. இதன்போது யாழ் மருதனார்மடம் சந்தியில் இருந்த சங்கீதம் றக்கோடிங் பாரினுள் முக்கியமானதொரு சந்திப்பு நிகழ்ந்தது. (இதற்கு முன்பாக வேறு சந்திப்புகளும் நிகழ்ந்நதன) அப்போது ஈழத்தின் தளச் செயற்பாட்டுக் குழுவில் இருந்த சிலரும் புளொட்டின் இராணுவப் பொறுப்பாளராகத் தளத்தில் காண்டீபனுடன் இணைந்து செயற்பட்ட சின்ன மென்டிசும் EPRLF மற்றும் EROS இயக்கங்களின் முக்கியஸ்த்தர்களுடன் ஒரு சந்திப்பை நடத்தினர்.
அதில் புளொட்டிற்கு புலிகளால் வரும் நெருக்குதல்கள் குறித்தும் ஆயுத உதவி கோரியும் கலந்துரையாடப்பட்ட போது தாம் ஆயுத உதவிகள் எதனையும் செய்ய முடியாது ஆனால் புளொட்டின் வாகனங்கள் உள்ளிட்ட சொத்துக்களைப் பாதுகாத்து தர முடியும் எனவும் அதேபோல் தமது முகாம்களிற்கு வந்தால் புளொட் உறுப்பினர்களை பாதுகாக்க முடியும் என EPRLFவும், கிழக்கு மாகாணத் தோழர்களை எங்களிடம் தாருங்கள் என ஈரோசும் கோரியிருந்தன. இந்தச் சம்பவத்தை நான் இங்கே குறிப்பிட்டதன் நோக்கம், 'கிழக்கின் தோழர்களை எங்களிடம் தாருங்கள்' என EROS அமைப்பு அன்றைக்கு கிழக்குப் போராளிகளைப் பண்டமாற்றுப் பொருட்கள் போல் அணுகியிருந்ததை நினைவுகூரவே.
TELO மற்றும் EPRLF இயக்கங்களைப் புலிகள் அழித்த போது அந்தந்த இயக்கங்களின் யாழ்ப்பாணத்திற் செயற்பட்ட கிழக்கின் போராளிகள் தப்பிச் செல்ல வழி இன்றிக் கொல்லப்பட்டனர் அல்லது அனாதரவாக விடப்பட்டனர்.
இந்த சந்தர்ப்பத்தில் முக்கியமான இன்னுமொரு பதிவையும் இங்கு இட்டுச் செல்ல வேண்டும். 86களின் நடுப்பகுதியில் PLOT இயக்கம் புலிகளால் தடைசெய்யப்படவுள்ளது எனத் தகவல் பரவியது.
இது குறித்துத் தளத்தில் (ஈழத்தில்) PLOTன் ஆயுதப் பிரிவுக்குப் பொறுப்பாக இருந்தவர்களில் ஒருவரான சின்ன மென்டிஸ் புளொட்டின் தள நிர்வாகப் பொறுப்பில் இருந்து பின் விலகியிருந்த PLO ரஜீவ் மற்றும் தொடர் செயற்பாட்டில் இருந்த சிவராம் (SR) ஆகியோரை அணுகி அப்போது புலிகளின் யாழ் மாவட்டப் பொறுப்பாளராக இருந்த கிட்டு என அழைக்கப்பட்ட சதாசிவம் கிருஸ்ணகுமாரைச் சந்தித்துத் தடை பற்றிக் கேட்கும்படி கூறியிருந்தார். சிவராமும் ரஜீவும் கிட்டுவைச் சந்திப்பதற்கு கடுமையான மனப்பயத்துடனேயே போயிருந்தனர். கிட்டுவுடனான அந்தச் சந்திப்புக்கு புறப்பட முன்பு அங்கிருந்தவர்களிடம் நாங்கள் திரும்பி வருவோமோ தெரியாது எனவே எங்களை நன்றாக ஒருமுறை பார்த்து விட்டு அனுப்புங்கள் என சொல்லிவிட்டுத்தான் மோட்டார் சைக்கிளில் புறப்பட்டு சென்றனர். காரணம் ரெலோ அமைப்பைத் தடை செய்த போது யாழ்ப்பாணத்தில் கிட்டு ஆடிய இராணுவ வேட்டை யாவரையும் அதிர வைத்திருந்தது. இந்தச் சூழ்நிலையிலேயே சிவராமும் ரஜீவும் கிட்டுவைச்சந்திக்க சென்று புலிகளின் தடைபற்றி உரையாடியிருந்தனர்
அந்த உரையாடலில் சிவராம் ரஜீவ் ஆகியோரின் கேள்விக்குப் பதில் அளித்த கிட்டு விடுதலைப்புலித்தலைமையிடம் இருந்து புளொட்டைத் தடைசெய்யும்  உத்தரவு வந்திருக்கிறது என்றும் ஆனால் தளத்தில் என்ன செய்வதென்ற முடிவை தாம் இன்னும் எடுக்கவில்லை எனவும் கூறியிருந்தார். அப்போது இடம்பெற்ற கலந்துரையாடலில் கிழக்கின் பெருமளவான தோழர்கள் வடக்கில் இருப்பதாகவும் அவர்களை அவர்களது சொந்த இடத்திற்கோ அல்லது இந்தியாவிற்கோ அனுப்ப வேண்டும் அதற்கு கால அவகாசம் தேவை என ரஜீவும் சிவராமும் கிட்டு அவர்களிடம் கோரி இருந்தனர். அதற்கு உடனடியாகவே இணங்கிய கிட்டு இருவார கால அவகாசம் வழங்குவதாகவும் விரைவாகக் கிழக்குத் தோழர்களை எங்கு வேண்டுமானாலும் அனுப்பும்படியும் கூறியிருந்தார். ஆனால் சின்ன மென்டிசும் அவருடன் நிற்பவர்களும் ஆயுதங்களை ஒப்படைக்கும் வரை எங்கும் செல்லக் கூடாது எனவும் பணித்திருந்தார். இந்த இருவார காலத்துள் புளொட்டின் பெரும்பாலான கிழக்கு தோழர்கள் பாதுகாப்பான முறையில் அவர்கள் விரும்பிய இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். சின்ன மென்டிஸ், சிவராம் பீ.எல்லோ ரஜீவ் உள்ளிட்டவர்களின் முயற்சியாலும் கிட்டுவின் ஒத்துழைப்பினாலும் புளொட் புலிகளால் தடைசெய்யப்பட்ட போது வடக்கில் சிக்கியிருந்த கிழக்குமாகாணத்தைச் சேர்ந்த தோழர்கள் பாதுகாக்கப்பட்டனர். ரெலோவுக்கெதிராக இராணுவ நரவேட்டையாடிய கிட்டு புளொட் தடைசெய்யப்பட்ட போது அதனைக் கையாண்ட விதம் சற்று வேறுபாடானதாக இருந்தது.  ஆயினும் இறுதிவரை களத்தில் நின்று புளொட்டில் இணைந்திருந்த போராளிகளை வீணான மோதலில் அழியவிடாமல் பாதுகாத்து அனுப்ப முனைந்த சின்ன மென்டிஸ் என்ற விஜயபாலனை புலிகளின் புலனாய்வுப் பிரிவின் உத்தரவின் பேரில் கைது செய்து  அடித்துக் கொன்ற போது அவர் பழைய கிட்டுவாகியிருந்தார். 
மற்றுமொரு சம்பவம் 1988,1989 காலப்பகுதியென நினைக்கிறேன் (ஆண்டு சரியாக ஞாபகம் இல்லை.) ஈழத்தில் நிலை கொண்டிருந்த இந்திய இராணுவம் வெளியேற முடிவு செய்த காலப் பகுதியில் அதனுடன் சேர்ந்தியங்கிய ENDLF மற்றும் EPRLF இயக்கங்களும் தமது நடவடிக்கைகளை நிறுத்தி இந்தியப் படையினருடன் இந்தியா புறப்படத் தயாரான போது நிகழ்ந்த சம்பவமொன்றையும் இங்கு கூறவேண்டும்.
சுண்ணாகத்தில் EPRLF இயக்கத்தின் சில முக்கியஸ்த்தர்கள் இந்தியா பயணமாவதற்கு ஒரு சில நாட்களுக்கு முன் என நினைக்கிறேன் வீதியில் ஆயுதம் தாங்கியவர்களாக நின்று வீதியில் செல்பவர்களிடம் பலாத்காரமாகப் பணம் பறித்து உரைப்பையில் நிரப்பிக்கொண்டு தப்பிச் செல்ல முனைந்திருந்தனர். ஆனால் இவர்களால் பலவந்தமாகப் பிடிக்கப்பட்டு தமிழ் இராணுவத்தில் சேர்க்கப்பட்ட பல இளைஞர்கள் குறிப்பாக் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த இளைஞர்கள் மற்றும் யுவதிகள் எந்த வித உதவிகளும் இன்றி தப்பிச் செல்ல வழியும் தெரியாமல் அல்லல்பட்டனர். இவர்களுள் பலர் பின்னர் புலிகளால் கொல்லவும்பட்டனர். (இந்தக் காலக்கட்டத்தில் தற்போதைய தமிழ்த் தேசியக் கூடமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் திரு சுரேஸ் பிறேமச்சந்திரன் அவர்களும் யாழ்ப்பாணத்தில் இருந்ததாக ஞாபகம்.)
அத்துடன் EPRLF, மற்றும் ENDLF இயக்கங்களின் உயர்பீடத்தில் இருந்தவர்களும் அவர்களுக்கு நெருங்கியவர்கள் மற்றும் அவர்களின் குடும்பங்களும் இந்திய இராணுவத்தின் உதவியுடன் பாதுகாப்பாக கப்பலில் இந்தியாவுக்கு ஏற்றிச் செல்லப்பட்டனர். இதில் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த மேற்குறித்த இயக்கங்களைச் சேர்ந்த உயர்மட்டத்தினரும் அடங்குவர். அவர்களும் தமது அடிமட்டப் போராளிகளைக் கைவிட்டுவிட்டு இந்தியா சென்று விட்டனர்.
வடக்கின் அல்லது யாழ்ப்பாணத்தின் மேலாதிக்க வாதத்தை விமர்சித்த பெரும்பாலான ஆரம்ப காலக் கிழக்கின் அரசியற் தலைமைகளும், பின்னாளிற் போராளித்தலைமைகளும் வடக்கின் தலைமைகளுடன் தமது சொந்த நலன்களுக்காகவே ஒட்டிக்கொண்டிருந்தார்களே ஒழிய கிழக்கின் அபிவிருத்தி அல்லது விடுதலைபற்றி உண்மையான பற்றுறுதியுடன் கூடிய அரசியல் நிலைப்பாட்டைக் கொண்டிருக்கவில்லை என்பதற்கு தெளிவான உதாரணங்கள் பல உள்ளன. இது தொடர்பாக பிறிதொரு தலையங்கத்தில் எழுதுவேன். எமது அரசியல் வரலாறு நெடுகிலும் கிழக்கின் பாராளுமன்ற அரசியல் வாதிகளும் சரி கிழக்கின் போராளித்தலைவர்களும் சரி தமது சொந்த நலன்கள் பாதிக்கப்படும் போது மட்டுமே வடக்கின் பிரதேசவாதத்தைக் காரணம் காட்டித் தமது தில்லுமுல்லுக்களை மறைக்க முனைந்தார்களே தவிரப் பிரதேச வாதம் எவ்வாறு தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தை சீரழித்து வருகிறது என்பதை கோட்பாட்டு ரீதியாகவோ நடைமுறை ரீதியாகவோ உணர்த்தும் அரசியல் முனைப்பெதுவுமின்றித் தமது சொந்த நலன்களைப்பற்றி மட்டுமே சிந்தித்திருந்தனர். இதனால் தாங்கள் அதுவரைகாலமும் எதிரியாகக் கருதிய சிங்களப் பேரினவாதிகளிடம் சென்று சேர்ந்து தமது நலன்களை பேணும் கீழ்த்தரமான அரசியலைச் செய்யுமளவுக்குத் தரம் தாழந்தும் விட்டிருந்தனர்.
பிரதேசவாதம் மற்றும் நான்காவது ஈழப்போரின் போது மக்களின் விருப்புக்கு மாறாகப் புலிகள் செய்த கட்டாய இராணுவச் சேர்ப்பு போன்றவை இன்றைக்குப் புலிகளின் மீது வைக்கப்படும் முக்கியமான விமர்சனங்களாகவுள்ளன.
ஆனால் இந்த விமர்சனங்களுக்குப் புலிகள் மட்டுமல்ல அவர்களுக்கு முன்னரே இவற்றைத் தொடக்கிவைத்த அரசியல் வாதிகளும் போராளிகளும் ஈழத்தில் 'கட்டாய ராணுவச் சேவையைத்'  தொடக்கி வைத்த பெருமையைப்பெற்ற EPRLF, ENDLF இயக்கங்களும் கூடவே இந்த விமர்சனங்களுக்குப் பதில் சொல்லவேண்டும்.  எல்லாப் புகழும் இறைவனுக்கும் எல்லாப்பழியும் புலிகளுக்கும் என்று மட்டுமாகி விடக்கூடாது.
ஆகத் தமிழ்மக்களிடம் இருந்த எல்லாவிதமான பிற்போக்குத் தனங்களினதும் இடியப்பச்சிக்கலாகவே மூன்று தசாப்தங்களாக முன்னெடுக்கப்பட்ட தேசிய விடுதலைப் போராட்டம் முள்ளிவாய்க்காலில் தனது பாரிய பின்னடைவைச் சந்தித்திருக்கிறது.
தொடரும்...

Nantri http://globaltamilnews.net 


No comments: