இலங்கைச் செய்திகள்

“இடைக்காலப் பருவப் பெயர்ச்சியே தற்போது பரவலாக மழை பெய்யக் காரணம்”
முல்லைத்தீவில் 3 வருடத்திற்கும் மேலாக மூடப்பட்டிருக்கும் 17பாடசாலைகள்

மாத்தறையில் திடீர் சுற்றி வளைப்பு 100 சந்தேக நபர்கள் கைது



சிறுமிகள் பாலியல் துஷ்பிரயோகம் குடாநாட்டில் மோசமாக அதிகரிப்பு

தமிழகத் தேசியவாத இயக்கங்களின் கவனத்துக்கு...

எதிரணிக்கு இருக்கும் ஒரு உடனடிப் பணி

வாழ்க்கைச்செலவு அதிகரிப்புக்கு எதிராக அட்டனில் கண்டனக் கூட்டம் (பட இணைப்பு)

தெல்லிப்பழையில் பாழடைந்த கிணற்றில் வெடி குண்டுகள் மீட்பு

கசூரினா கடலில் பெண்ணிடம் சில்மிஷம்: இளைஞர்கள் பொலிஸாரால் நையப்புடைப்பு

சர்வதேச குற்றவியல் விசாரணைக்கு இராணுவத்தினர் உட்படுத்தப்பட்டால் இனக்கலவரம் ஏற்படும்: சம்பிக்க எச்சரிக்கை

கொள்ளுப்பிட்டி சந்தியில் மக்கள் போராட்டம்

கொக்கிளாயில் பிள்ளையார் கோயிலை உடைத்துவிட்டு புத்தர் சிலை அமைப்பு மக்கள் பெரும் கொந்தளிப்பு




“இடைக்காலப் பருவப் பெயர்ச்சியே தற்போது பரவலாக மழை பெய்யக் காரணம்”


Wednesday, 14 March 2012

heavy_rainஇடைக்கால பருவப்பெயர்ச்சியின் ஆரம்ப கட்டத்தின் விளைவே தற்போது நாடு பூராகவும் அவ்வப்போது பரவலாக பெய்துவரும் மழைக்கு காரணமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. தற்போது வடகீழ்ப் பருவப்பெயர்ச்சி காலநிலை முடிவடைந்து இடைக்கால பருவப்பெயர்ச்சி ஆரம்பமாகும் காலம் உருவாகியுள்ளது. எதிர்வரும் 20 ஆம் திகதிக்குப் பின்னர் இக்கால நிலை ஆரம்பிக்குமென எதிர்பார்ப்பதாக வளிமண்டலவியல் திணைக்களத்தின் கடமை நேர அதிகாரி சூரிய குமார் தெரிவித்தார்.

இதன் காரணமாகவே தற்போது நாடு முழுவதும் பரவலாக அவ்வப்போது பெய்யும் மழைக்கு காரணமெனவும் அவர் தெரிவித்தார்.

வடக்கு, கிழக்கு, வடமத்திய, ஊவா மகாணங்களின் சில பகுதிகளிலும் அம்பாந்தோட்டை பகுதியின் சில பகுதிகளிலும் காலை வேலையிலும் நாட்டின் சில பகுதிகளில் பிற்பகல் வேளையிலும் இடியுடன் கூடிய மழை காணப்படுமெனவும் அவர் தெரிவித்தார்.

நன்றி தினக்குரல்

  முல்லைத்தீவில் 3 வருடத்திற்கும் மேலாக மூடப்பட்டிருக்கும் 17பாடசாலைகள்
Tuesday, 13 March 2012

முல்லைத்தீவு கல்வி வலயத்திற்குட்பட்ட 17 இற்கும் அதிகமான பாடசாலைகள் மூன்று வருடங்களுக்கும் மேலாக மூடப்பட்ட நிலையிலுள்ளதாகத் தெரிவித்துள்ள இலங்கை ஆசிரியர் சங்கம், இவற்றை உடனடியாக திறக்க நடவடிக்கையெடுக்குமாறு வட மாகாண ஆளுநரை வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவிக்கையில்;

முல்லைத்தீவு கல்வி வலயத்திற்குட்பட்ட 17 இற்கும் அதிகமான பாடசாலைகள் 3வருட காலங்களாக மூடப்பட்டுள்ளன. இதில் ஸ்ரீ முருகானந்தன் வித்தியாலயம்,கிழக்கு முள்ளிவாய்க்கால் வித்தியாலயம், மேற்கு முள்ளிவாய்க்கால் வித்தியாலயம், வலையன்மடம் வித்தியாலயம்,பொக்கணை மகாவித்தியாலயம்.மாத்தளன் வித்தியாலயம்,புதுக்குடியிருப்பு ஆனந்தபுரம் வித்தியாலயம்,அரசரத்னம் வித்தியாலயம், புதுக்குடியிருப்பு ரோமன்கத்தோலிக்க வித்தியாலயம்,கொக்குத்தொடுவாய் வித்தியாலயம்,தண்ணி முறிப்பு வித்தியாலயம் ஆகிய பாடசாலைகள் உள்ளடங்குகின்றன.

இவ்வாறு பாடசாலைகளை மூடியிருப்பதானது பலவருடங்களாக யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்து தமது கல்வியை சரியான முறையில் கற்க முடியாதுபோன பிரதேச பிள்ளைகளுக்கு ஏற்படும் பெரும் பாதிப்பாகும்.

அரசாங்கம் வடக்கின் வசந்தம் தொடர்பாக ஊடகங்களில் பல்வேறு பிரசாரங்களை மேற்கொண்டு வடக்கு,கிழக்கில் மக்கள் யுத்தத்திற்கு பின்னர் சகல உரிமைகளையும் உறுதிப்படுத்தும் வகையிலான சூழலில் வாழ்வதாக தெரிவித்து வருகின்றது.

ஆனால் முல்லைத்தீவு கல்வி வலயத்தில் பல பாடசாலைகள் இவ்வாறான சூழலிலேயே மூடப்பட்ட நிலையில் காணப்படுகின்றன என்பதனை சுட்டிக்காட்டுகின்றோம்.

இதேவேளை, இந்தப்பாடசாலைகளின் அதிபர்கள் வேறுபாடசாலைகளில் பணியாற்றி வருவதோடு, இந்த பாடசாலைகள் தொடர்பான தகவல்களை பெற்றுக்கொள்ளவோ அவர்களுக்குரிய அதிபர் கொடுப்பனவோ அல்லது கஷ்ட பிரதேச கொடுப்பனவோ வழங்கப்படவில்லை.

ஆகவே இந்த விடயங்கள் தொடர்பாக ஆராய்ந்து மூடப்பட்டிருக்கும் பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிக்க தேவையான நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு நாம் வட மாகாண ஆளுநரை வலியுறுத்துகின்றோம் என்றார்.
நன்றி தினக்குரல்


மாத்தறையில் திடீர் சுற்றி வளைப்பு 100 சந்தேக நபர்கள் கைது

Tuesday, 13 March 2012

மாத்தறை பொலிஸ் பிரிவில் கடந்த 10 ஆம் திகதி அதிகாலை திடீரென நடத்திய சுற்றி வளைப்பு தேடுதலின் போது பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடைய 100 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களில் 53 பேர் பெரும் குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர்கள் எனவும் 17 பேர் சிறு குற்றங்களுடன் தொடர்புடையவர்கள் எனவும் ஏனைய 30 பேரும் போக்குவரத்து விதிகளை மீறிய குற்றங்களுடன் தொடர்புடையவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இவர்களை மாத்தறை நீதிவான் உதேஷ்ரணதுங்க முன்னிலையில் ஆஜர் செய்த போது எதிர்வரும் 17 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

நன்றி தினக்குரல்


சிறுமிகள் பாலியல் துஷ்பிரயோகம் குடாநாட்டில் மோசமாக அதிகரிப்பு
Saturday, 10 March 2012

இலங்கையில் தமிழ் மக்களின் கலாசாரம் பண்பாட்டின் கேந்திரமாகத் திகழும் யாழ். குடாநாட்டில் சிறுமிகள் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாகிவரும் கொடூரச் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன என்ற செய்தி பேரதிர்ச்சியையும் கடும் விசனத்தையும் ஏற்படுத்துவதுடன், இது எங்கு சென்று முடியுமோ என்ற விரக்தியையும் வெறுப்பையும் தருகிறது.

ஏழு வயதுடைய சின்னஞ் சிறு மொட்டுகளைக் கூட பாதகர்கள் துஷ்பிரயோகம் செய்திருப்பதாகவும் குடாநாட்டு மக்கள் மத்தியில் விழிப்புணர்வுகள் அருகி வருவதாலேயே சிறுமியர் மீதான வன்முறைகள் அதிகரித்து வருவதாகவும் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையின் சட்ட மருத்துவ அதிகாரி எஸ். சிவரூபன் தெரிவித்திருக்கிறார். கடந்த இரு மாதங்களில் குடாநாட்டில் 32 துஷ்பிரயோகச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. இந்த 32 இல் 9 சம்பவங்கள் மிகப் பாரதூரமானதும் கொடூரமானதுமான சம்பவங்களாகும். 2010 இல் பாலியல் துஷ்பிரயோக சம்பவங்கள் 102 பதிவாகியிருந்தன. இந்த எண்ணிக்கை 2011 இல் 182 ஆக அதிகரித்திருக்கிறது. தற்போது இரு சிறுமிகளுக்கு மருத்துவமனையில் சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாக தெரிவித்திருக்கும் சட்ட மருத்துவ அதிகாரி 7 8 வயதுடைய பருவம் எய்தாத சிறுமிகள் இவ்வாறு துஷ்பிரயோகத்திற்கு இலக்காவது மிக அபாயகரமான விடயம் என்று வேதனையை வெளிப்படுத்தியிருக்கிறார். அண்மையில் நெடுந்தீவில் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளான 12 வயதுச் சிறுமியின் உயிரைக் காப்பாற்ற 1 1/2மணி நேரம் மருத்துவர்கள் சிகிச்சையை மேற்கொண்டனர்.

பெண்களுக்கு எதிரான பாலியல் துஷ்பிரயோகங்களும் வன்முறைகளும் அதிகரித்துச் செல்கின்றன. இதனைத் தடுத்து நிறுத்துவதற்கான பொறிமுறைகள் செயற்பாட்டுத் திறனுடன் முன்னெடுக்கப்படுவதில்லை. பெண் பிள்ளைகளை பூக்களைப் போன்று பராமரிக்கும் கட்டுக்கோப்பான சமூகத்தில் இத்தகைய துஷ்பிரயோகங்கள் ஊடுருவுவதற்கு இடமளித்தது யார்? சமூகமா? அல்லது சிவில் நிர்வாக கட்டமைப்புச் சீர்கேடா? மக்கள் மத்தியில் விழிப்புணர்வு போதாது என்று சட்ட மருத்துவ அதிகாரி கூறுகிறார். இதுவும் ஓரளவுக்கு உண்மை தான். ஆனால் சட்ட ஆட்சி செவ்வனே இடம்பெறவில்லை என்பதே இதற்கான அடிப்படைக் காரணமாகும். கடந்த மூன்று தசாப்த காலமாக போர்ச் சூழ்நிலையில், திறந்த வெளிச் சிறைகளில் யாழ். குடா நாட்டு மக்கள் வாழ்ந்து வந்த போதிலும் பெண்கள் மீதான வன்முறைகள், பாலியல் துஷ்பிரயோகங்கள் என்பன இந்தளவு தூரத்திற்கு அதிகளவுக்கு இடம்பெற்றிருக்கவில்லை என்றே கூற வேண்டும். ஆங்காங்கு ஒரு சில சம்பவங்கள் இடம்பெற்றிருக்கலாம். ஆனால் மோசமான விதத்தில் அருவருக்கத்தக்க வகையில் இந்தப் பாதகச் செயல்கள் இப்போது அதிகரித்துள்ளன. யுத்தம் முடிவுக்கு வந்து மூன்று ஆண்டுகள் முடிவுக்கு வருகின்ற போதிலும் வடக்கில் சிவில் நிர்வாக கட்டமைப்பு இன்னும் சீரான முறையில் ஏற்படுத்தப்படவில்லை.

குடாநாட்டில் வசிக்கும் மக்களின் எண்ணிக்கையை எடுத்துக் கொண்டால் 10 பேருக்கு ஒரு படை வீரர் என்ற விகிதத்தில் இராணுவத்தின் பிரசன்னம் இருப்பதாக தமிழ் அரசியல் கட்சிகள் கூறுகின்றன. பொது மக்களின் பந்தோபஸ்துக்கு படையினரின் பிரசன்னம் அவசியம் என்று அரசு கூறுகிறது. ஆனால் பெண்கள் சிறுவர்களுக்கு போதிய பாதுகாப்பு இல்லையென்பதையே இந்தப் பாலியல் துஷ்பிரயோகச் சம்பவங்கள் எடுத்துக் காட்டுகின்றன. யுத்தத்தினால் ஏற்பட்ட இடப்பெயர்வுகள் மக்களின் அடிப்படை வாழ்க்கை கட்டமைப்பையே சிதறடித்துவிட்டது. பண்பாடு, கலாசார விழுமியங்கள், சமூக நெறிமுறை, மனுநீதி என்பன என்ன விலை என்று பெரும்பாலானோர்கள் கேட்கும் அளவுக்கே தற்போதைய நிலைவரம் உள்ளது போன்று தோன்றுகிறது.சிறுமிகள் மீதான பாலியல் துஷ்பிரயோகம், பெண்கள், சிறுவர்கள் மீதான வன்முறைகளுக்கு வழங்கப்படும் தண்டனை போதாது என்று பலதரப்பினரும் கருதுகின்றனர். அதேவேளை இந்தக் கொடிய ஈனச் செயல்களில் ஈடுபடுவோர்கள் பண பலத்தினால் சட்டத் துவாரத்தைப் பயன்படுத்தி தப்பிச் சென்று விடுவதே அதிகளவுக்கு காணப்படுகின்றது. குற்றம் இழைத்தவர்களை சட்டத்தின் துணைக் கொண்டு பணமீட்டும் சட்டத்தரணிகள் காப்பாற்றி விடும் சம்பவங்களே அதிகமாகும். பாதிக்கப்பட்டோர் தொடர்பாக மனச்சாட்சிக்கு விரோதமாகச் செயற்படும் சட்டத்தரணிகளையே அதிகளவுக்கு பார்க்க முடிகிறது.

பெண் பிள்ளைகள் துஷ்பிரயோகத்திற்கு இலக்காகும் போது உரிய முறையில் சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு பெற்றோர்கள் பலர் தயங்குகின்றனர். தமது பிள்ளைகளின் எதிர்காலத்துக்கு நெருக்கடி ஏற்பட்டுவிடுமோ என்று பெரும்பாலான பெற்றோர் கருதுவதால் குற்றமிழைத்தவர்கள் இலகுவாக தப்பிவிடுகிறார்கள். இந்த விவகாரத்தை கையாளும் சட்ட மூலத்தில் திருத்தம் தேவையென்பதை சிறுவர் விவகார அமைச்சர் திஸ்ஸ கரலியத்த ஏற்றுக் கொண்டுள்ளதுடன் குற்றம் இளைத்தோர் கடுமையான முறையில் தண்டிக்கப்பட வேண்டும் என்று கூறியுள்ளார். ஆனால் பணபலம், அரசியல் செல்வாக்கு என்பனவற்றால் குற்றவாளிகள் தப்பி விடுவதே பரவலாகக் காணப்படுகிறது. அத்துடன் போர் முடிவடைந்த போதும் இயல்பு வாழ்க்கைக்கு பெரும்பாலான மக்கள் இன்னமும் திரும்பி வராத நிலையில் தமது ஜீவனோபாயத் தேவையை பூர்த்தி செய்வதற்காக போராடிக் கொண்டிருக்கும் பெற்றோர்கள் தமது பிள்ளைகளின் குறிப்பாக பெண் பிள்ளைகளின் பாதுகாப்புத் தொடர்பாக அதிகளவுக்கு கவனம் செலுத்தாத தன்மை அல்லது கவனம் செலுத்துவதற்கு வசதி வாய்ப்பு இல்லாத தன்மை அல்லது போதிய விழிப்புணர்வு இல்லாத தன்மை என்பனவே குற்றவாளிகளுக்கு வசதியை ஏற்படுத்திக் கொடுத்து விடுகிறது.

குடாநாட்டில் ஏற்பட்டிருக்கும் இந்த பேராபத்தான நிலைமை தொடர்பாக சிவில் சமூகத்திற்கு பாரிய பொறுப்பு உள்ளது. அரசாங்கம் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் உதவியைப் பெற்று மக்கள் மத்தியில் இந்தச் சமூகச் சீர்கேடு பற்றி விழிப்புணர்வை உடனடியாக ஊட்ட வேண்டும். அரசாங்கம் சட்டத்தை கடுமையான முறையில் அமுல்படுத்துவதுடன், தற்போதைய நடைமுறையில் உள்ள சட்ட விதிகளில் உடனடியாக திருத்தங்களை மேற்கொண்டு குற்றம் இளைத்தோருக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும். அண்மையில் இந்தியாவில் நீதிபதி ஒருவர் நீதிமன்றத்தில் தெரிவித்த கருத்தொன்றையும் இங்கு சுட்டிக்காட்டுவது அவசியமாகும். பாலியல் துஷ்பிரயோகக் குற்றவாளியை அடையாளம் கண்டு கொண்டால் அந்த நபரை நிரந்தரமாக ஆண்மையற்றவராக்கி விடவேண்டும் என்று அந்த நீதிபதி கூறியிருந்ததை இந்திய ஆங்கிலப் பத்திரிகையொன்று முன்பக்கச் செய்தியாக வெளியிட்டிருந்தது. சிறுமிகளை துஷ்பிரயோகம் செய்யும் பாதகர்களுக்கு இத் தண்டனை மட்டும் போதுமானதாக இருக்காது. இதனை விட கடுமையான தண்டனையை வழங்குவது பற்றி நீதியமைச்சர் சிந்திக்க வேண்டும்.

நன்றி தினக்குரல்


தமிழகத் தேசியவாத இயக்கங்களின் கவனத்துக்கு...
Monday, 12 March 2012

இலங்கையிலிருந்து தலயாத்திரை, கருத்தரங்குகள், வியாபார நடவடிக்கைகள், கல்வி மாநாடுகளுக்காக தமிழகம் செல்கின்ற பெரும்பான்மையினத்தை சேர்ந்தவர்கள் அங்குள்ள தமிழ்த் தேசியவாத இயக்கங்களின் தொல்லைகளுக்குள்ளாகி வரும் சம்பவங்கள் அண்மைக் காலத்தில் அதிகரித்து வருவதனை அவதானிக்க முடிகின்றது.

தலயாத்திரை ஒன்றுக்காக இராமேஸ்வரம் சென்ற ஜனாதிபதியின் உறவினரான தமிழர் திருக்குமார் நடேசன், இலங்கையில் இந்திய வம்சாவளி மக்களை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற தமிழ் அமைச்சர் ஒருவர் கூட இந்த தமிழ் தேசியவாத இயக்கங்களின் எதிர்ப்புக்கு ஆளானதாக செய்திகள் வெளிவந்தன. திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் கருத்தரங்கொன்றில் உரையாற்றச் சென்ற பெரும்பான்மையின பெண் விரிவுரையாளர் ஒருவர் கூட இந்த இயக்கங்களின் எதிர்ப்பினால் கருத்தரங்கிலிருந்து இடைநடுவில் வெளியேற வேண்டிய நிலை கடந்த வாரம் ஏற்பட்டதையும் செய்திகள் மூலம் அறியக் கூடிதாகவிருந்தது.

இலங்கையிலிருந்து தமிழகம் வரும் பிரமுகர்கள் முன்னறிவித்தலின்றி வருவதனால் தம்மால் அவர்களுக்கான போதிய பாதுகாப்பை வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தமிழக முதலமைச்சர் செல்வி ஜெயராம் ஜெயலலிதா இந்தியப் பிரதமர் கலாநிதி மன்மோகன்சிங்கிடம் முறையிடு மளவுக்கு இலங்கையிலிருந்து தமிழகம் செல்லும் பெரும்பான்மையினத் தவர்களுக்கு மட்டுமின்றி அரசுடன் தொடர்புடைய தமிழாக்ளுக்கு கூட தொல்லைகள் ஏற்பட்டு வருகின்றன.

அது மட்டுமின்றி வட இந்தியாவுக்கு தலயாத்திரைகள் செல்லும் இலங்கை பெரும்பான்மையினத்தவர்கள் தமிழக விமான நிலையங்களைத் தவிர்த்து பெங்களூர் விமான நிலையமூடாக தமது பயணங்களைத் தொடர வேண்டிய சூழலும் இந்த தமிழ்த் தேசியவாத இயக்கங்களினால் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இது தொடர்பில் கொழும்பு அரசாங்கம் பல தடவைகள் தமிழக மற்றும் மத்திய அரசுகளுக்கு சுட்டிக்காட்டிய போதிலும் நிலைமைகளில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படமுடியாதளவுக்கு தமிழ்த் தேசியவாத இயக்கங்களின் நடவடிக்கைககள் தீவிரம் பெற்றுள்ளன.

கொழும்பு அரசாங்கங்களினால் தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளைக் கண்டு ஆத்திரமடைந்த நிலையிலேயே தமிழகத்தில் உள்ள இயக்கங்கள் இவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர் என்பதை புரிந்து கொள்ளக்கூடியதாக இருக்கிறது. அதேவேளை, தமிழ் மக்களுக்கு உரிமைகள் கிடைக்க வேண்டுமென்பதற்காக தமிழகத்தில் முன்னெடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகளையும் தமிழக மக்கள் கட்சிகள், தமிழ்ப்பற்றாளர்களின் உணர்வுகளையும் தமிழ் மக்கள் மதிக்கின்றனர்.

ஆனால் இலங்கையிலிருந்து தமிழகம் வரும் பெரும்பான்மையினத்தவர்கள் மற்றும் அரசுடன் தொடர்புபட்ட பிரமுகர்களுக்கு இவ்வாறான எதிர்ப்புகளைக் காட்டுவதன் மூலம் 30 வருட போரினால் பாதிக்கப்பட்டுள்ள தமிழ் மக்களுக்கு என்ன விமோசனத்தை பெற்றுக் கொடுத்து விடமுடியும் என்ற கேள்வி எழுவதை தவிர்க்க முடியாதுள்ளது. போராட்டத்தினால் முடியாத தீர்வுகளை வெறும் இனரீதியான எதிர்ப்பு நடவடிக்கைகள் எவ்வாறு பெற்றுக் கொடுக்கும்?

30 வருடகால போர்முடிவுற்ற நிலையில் தமிழ்த் தரப்புகள் புதிய அணுகுமுறையொன்றின் மூலம் தமக்கான உரிமைகள், தீர்வுகளை பெற்றுக் கொள்ள முனைப்புக் காட்டி வரும் நிலையில் தமிழகத்தில் உள்ள தேசியவாத இயக்கங்களின் நடவடிக்கைகள் தமிழ் மக்களுக்கு எந்தவித தீர்வையும் பெற்றுத் தந்து விடப் போவதில்லை. மாறாக இலங்கையில் இனங்களுக்கிடையே மேலும் பிளவுகளையும் குரோதங்களையும் அதிகரிக்கவே வழியேற்படுத்தும். உள்நாட்டுப் போரினால் மிக மோசமான அழிவுகளை சந்தித்த தமிழினம் தற்போது அதிலிருந்து விடுபட பெரும் பிரயத்தனப்பட்டு வரும் நிலையில் அதற்கு பெரும்பான்மை அரசின் உதவிகள் போதியளவில் கிட்டவில்லை என்பது உண்மைதான்.

அதற்காக தமிழகம் வரும் பெரும்பான்மையினத்தவர்களுக்கு தொல்லைகள் கொடுப்பது, அவர்களுக்கு எதிராக போராடுவது போன்ற செயல்களினால் எதைத்தான் சாதித்து விடமுடியும்?

இது விடயத்தில் நாம் இன்னொன்றையும் சிந்திக்க வேண்டும். தமிழகத்திலிருந்து பெரும் எண்ணிக்கையான கல்விமான்கள், கலைஞர்கள், வியாபாரிகள், சுற்றுலாப் பயணிகள் இலங்கை வருகின்றார்கள். இவர்களுக்கு எதிராக இங்குள்ள பேரினவாத சக்திகள் குரோத உணர்வுகளைத் தூண்டி விடமுற்பட்டால் நிலைமை என்னவாகும்?

இலங்கையில் தமிழ் மக்களுக்கு பாதிப்புகள் ஏற்படக் கூடிய வகையிலான செயற்பாடுகளை தமிழகத்தில் உள்ள தேசியவாத இயக்கங்கள் முன்னெடுப்பது ஆரோக்கியமான விடயமல்ல. தமிழக இயக்கங்களின் உணர்வை தமிழ் மக்கள் புரிந்து கொண்டுள்ளதைப் போன்று இலங்கையின் யதார்த்த நிலையை அங்குள்ள தமிழ்த் தேசியவாத இயக்கங்களும் புரிந்து கொள்ள வேண்டும்.

நன்றி தினக்குரல்


எதிரணிக்கு இருக்கும் ஒரு உடனடிப் பணி
Tuesday, 13 March 2012

உள்நாட்டுப் போரின் முடிவிற்குப் பின்னரான காலகட்டத்தில் இலங்கை அரசாங்கம் சர்வதேச ரீதியில் எதிர்நோக்குகின்ற மிகவும் பாரதூரமான இராஜதந்திரச் சவாலாக தற்போது ஜெனீவாவில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரில் அமெரிக்காவினால் சமர்ப்பிக்கப்பட்டிருக்கும் தீர்மானம் அமைந்திருக்கிறது என்பதில் சந்தேகமில்லை. இன்னும் பத்து நாட்களில் வாக்கெடுப்புக்கு விடப்படுமென்று எதிர்பார்க்கப்படுகின்ற அந்தத் தீர்மானத்தைத் தோற்கடிப்பதற்காக மனித உரிமைகள் பேரவையில் உறுப்பு நாடுகள் மத்தியில் ஆதரவைத் திரட்டுவதற்கான சூறாவளி இராஜதந்திரப் பிரசாரங்களை இலங்கையின் அமைச்சர்களும் இராஜதந்திரிகளும் முன்னெடுத்துக்கொண்டிருப்பதைக் காணக்கூடியதாக இருக்கிறது.

அமெரிக்காவிடமிருந்தும் மேற்குலகிடமிருந்தும் இலங்கைக்கு பெரும் அச்சுறுத்தல் ஒன்று வந்துகொண்டிருக்கிறது என்றும் இலங்கையின் இறைமைக்கும் சுயாதிபத்தியத்திற்கும் பேராபத்தைத் தோற்றுவிக்கக்கூடிய இந்த அச்சுறுத்தலைத் தோற்கடிக்கும் அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு ஒருமைப்பாட்டை வெளிக்காட்டுவதற்கு அலை அலையாக அணிதிரளுமாறு நாட்டு மக்களைக் கேட்டிருக்கும் அரசாங்கத் தலைவர்கள் உச்சஸ்தாயில் தேச பக்திப் பிரசாரங்களைச் செய்துகொண்டிருக்கிறார்கள். உண்மையிலேயே ஜெனீவா தீர்மானத்திற்கு எதிராக இத்தகையதொரு சண்டப் பிரசண்டத்தை செய்ய வேண்டியேற்பட்ட சூழ்நிலையை அரசாங்கத்தினால் தவிர்த்திருக்க முடியாதா? தீர்மானத்தைத் தோற்கடிக்காவிட்டால் இலங்கையைப் பொறுத்தவரை சகலதுமே குடிமுழுகிப்போய்விடும் என்ற தோரணையில் அரசாங்கம் செய்துகொண்டிருக்கின்ற பிரசாரங்களில் எந்தளவுக்கு உண்மையிருக்கிறது? இந்தக் கேள்விகளைக் கேட்க வேண்டியவர்களாக நாட்டு மக்கள் இருக்கிறார்கள்.

உள்நாட்டுப் போரின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்றிருக்கக்கூடிய மனித உரிமை மீறல்கள் தொடர்பில் அரசாங்கத்திற்கு இருக்கும் பொறுப்புடைமையுடன் தொடர்புடைய விவகாரங்களில் அரசாங்கம் கடந்த மூன்று வருடங்களாக கவனம் செலுத்தாமல் இருந்து வருகின்றது என்று குற்றஞ்சாட்டும் சர்வதேச சமூகத்தின் முன்னணி வல்லாதிக்க நாடுகள் குறிப்பாக மேற்குலக நாடுகளே ஜெனீவாத் தீர்மானத்திற்கு ஆதரவாக இருக்கின்றன. ஆனால், அந்தத் தீர்மானத்தின் மூலம் இலங்கை அரசாங்கத்திடம் கேட்கப்படுவது என்ன? ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்டு அவரிடமே கடந்த வருட இறுதியில் அறிக்கையைக் கையளித்த கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் முக்கியமான விதப்புரைகளை நடைமுறைப்படுத்துமாறுதான் கேட்கப்படுகிறது. ஜெனீவாவில் தீர்மானம் தோற்கடிக்கப்படுமோ இல்லையோ என்பது ஒருபுறம் இருக்கட்டும். இத் தீர்மானத்திற்கு நேரக்கூடிய கதி எதுவாக இருப்பினும் ஆணைக்குழு அறிக்கைக்கு நேரப்போகும் கதி என்ன? அரசாங்கம் ஆணைக்குழுவின் விதப்புரைகளில் ஒரு பகுதியைத் தானும் நடைமுறைப்படுத்தப் போவதில்லையா? ஏற்கனவே இலங்கையில் நியமிக்கப்பட்டிருந்த ஆணைக்குழுக்களின் அறிக்கைகளுக்கு நேர்ந்த கதியா இந்த அறிக்கையையும் காத்திருக்கிறது? நல்லிணக்க ஆணைக்குழு ஏற்கனவே ஒரு இடைக்கால அறிக்கையை ஜனாதிபதியிடம் கையளித்திருந்தது. அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்த விதப்புரைகளை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் அரசாங்கத்தினால் காட்டப்பட்ட அக்கறையின்மை குறித்து ஆணைக்குழு அதன் இறுதி அறிக்கையில் கவலை தெரிவித்தது என்பதை இத்தருணத்தில் சுட்டிக்காட்டுவது பொருத்தமானதாக இருக்கும்.

மனித உரிமை மீறல்கள் தொடர்பில் உள்நாட்டிலும் சர்வதேச ரீதியிலும் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கும் விமர்சனங்களுக்குமான பதிலிறுப்பு செயன்முறையாகவே ஆணைக்குழு அமைந்தது என்ற தோற்றப்பாடே பொதுவில் காட்டப்பட்டது. ஆணைக்குழுவின் கண்டுபிடிப்புகளையும் அவதானிப்புகளையும் நிராகரிப்பதாக ஜனாதிபதியோ, அமைச்சர்களோ ஒருபோதும் அறிவிக்கவுமில்லை. எதற்கெடுத்தாலும் உள்நாட்டில் வகுக்கப்படக்கூடிய செயன்முறைகளின் மூலமான தீர்வுகள் பற்றியே பல்லவி பாடுகின்ற அரசாங்கம் உள்நாட்டுச் செயன்முறையாக அமைந்த நல்லிணக்க ஆணைக்குழுவின் விதப்புரைகளை நடைமுறைப்படுத்துவதற்கு ஏன் தயங்க வேண்டும்? பாராளுமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு மூன்று மாதங்கள் கூட கடந்துவிடாத நிலையில் விதப்புரைகளை நடைமுறைப்படுத்தும் செயன்முறைகளை ஆரம்பிக்கவில்லையென்று குறை காண்பது முறையானது அல்ல என்பதே அரசாங்கத்தின் வாதமாகும். பாராளுமன்றத் தெரிவுக்குழுவின் மூலமாக ஆறு மாதங்களில் இனப்பிரச்சினைக்கான அரசியல் இணக்கத்தீர்வை வகுத்துவிட முடியுமென்று கூறுகின்ற ஒரு அரசாங்கத்தினால் ஆணைக்குழுவின் விதப்புரைகளை நடைமுறைப்படுத்துவது தொடர்பிலான பூர்வாங்கப்பணிகளையாவது மூன்று மாதங்களில் ஏன் ஆரம்பிக்க முடியாதிருந்தது?

இந்த விவகாரத்தில் சர்வதேசத் தலையீடுகள் செய்யப்படுவதன் பின்னணியில் இருக்கக்கூடிய காரணங்கள் குறித்து ஆயிரம் வியாக்கியானங்கள் இருக்கலாம். ஆனால், அத்தகைய தலையீடுகளுக்கான பாதையைத் திறந்துவிட்டதற்கான முழுப்பொறுப்பையும் அரசாங்கத் தலைவர்களே ஏற்கவேண்டும். ஆணைக்குழுவின் விதப்புரைகளை நடைமுறைப்படுத்துமாறு உள்நாட்டில் அரசாங்கத்திற்கு நெருக்குதல்களைக் கொடுக்கக்கூடிய ஜனநாயக ரீதியான அரசியல் போராட்டங்களுக்கு மக்களை அணி திரட்டுவதில் எதிரணியினர் இறங்க வேண்டிய தருணம் இது என்பது எமது உறுதியான அபிப்பிராயமாகும்!

நன்றி தினக்குரல்

வாழ்க்கைச்செலவு அதிகரிப்புக்கு எதிராக அட்டனில் கண்டனக் கூட்டம் (பட இணைப்பு)


 14/3/2012

வாழ்க்கைச் செலவு அதிகரிப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஐக்கிய தேசிய கட்சி உட்பட எதிர்க் கட்சிகளின் உறுப்பினர்கள் இன்று அட்டன் நகரில் கண்டனக் கூட்டமொன்றினை நடத்தியிருந்தனர்.

இதில் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்ஹ, ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன், நுவரெலிய மாநகர சபையின் முன்னாள் மேயர் சந்தனலால் கருணாரத்ன உட்பட அரசியல் பிரமுகர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் பெருந்திரளான மக்கள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.








நன்றி வீரகேசரி


தெல்லிப்பழையில் பாழடைந்த கிணற்றில் வெடி குண்டுகள் மீட்பு

14/3/2012

வலிகாமம் வடக்கு தெல்லிப்பழைப் பகுதியில் பாழடைந்த கிணறு ஒன்றிலிருந்து பெருமளவிலான கைக்குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன.

தெல்லிப்பழை யூனியன் கல்லூரிக்கு பின்னால் உள்ள,பொதுமக்களுக்கு சொந்தமான காணியொன்றின் கிணற்றினை துப்புரவு செய்யும் போதே இக் கைக்குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன.

புதிதாக மீள்குடியேற்றம் செய்யப்பட்டுள்ள இப்பகுதியில் பொது மக்களின் பாவனைக்காக விடப்பட்டிருக்கும் குறித்த கிணறு சந்தேகத்திற்கிடமான வகையில், பொது மக்களால் துப்புரவு செய்யும் போதே பத்திற்கும் அதிகமான வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.

இன்னும் மேலதிகமான வெடிபொருட்கள் கிணற்றினுள் காணப்படலாமென மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள் ளது.

மேலதிக அகழ்வுப் பணி தற்போது மிகவும் தாமதமாகவே நடந்து வருகின்றதாகவும்,இராணுவத்தினரின் மேற்பார்வையி ல் தற்போது கண்ணி வெடி அகற்றல் பணிகள் ஆரம்பமாகியுள்ளதெனவும் அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

அண்மையில் மக்கள் மீள்குடியமர அனுமதிக்கப்பட்ட இப்பகுதிக் கிணறொன்றினுள் மனித எலும்புக் கூட்டு தொகுதிகள் கண்டுபிடிக்கப்பட்டிருந்தன. இதையடுத்தே தூர்க்கப்பட்ட கிணறுகளைத் துப்புரவு செய்யும் பணியில் மக்கள் ஈடுபாடு காட்டி வருகின்றனர்.

நன்றி வீரகேசரி

கசூரினா கடலில் பெண்ணிடம் சில்மிஷம்: இளைஞர்கள் பொலிஸாரால் நையப்புடைப்பு


13/3/2012

காரைநகர் கசூரினா கடற்கரையில் தென் பகுதி மக்களின் வருகை அதிகரித்துள்ள நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை கடலில் நீராடிக் கொண்டிருந்த தென்பகுதிப் பெண் ஒருவரிடம் அங்க சேஷ்டையில் ஈடுபட்ட இளைஞர்கள் இருவர் பொலிசாரினால் நையப்புடைக்கப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணியளவில் அதிகளவு சுற்றுலாப் பயணிகள் நீராடிக் கொண்டிருந்தனர். இதில் தென் பகுதியிலிருந்து வந்தவர்களும் அடங்குவர். இந்நிலையில் தென்பகுதியைச் சேர்ந்த இளம் பெண்ணொருவரும் குடும்பத்துடன் நீராடிக்கொண்டிருந்த போது நீருக்கு கீழாகச் சென்ற இளைஞர்கள் அப்பெண்ணுடன் அங்கசேஷ்டையில் ஈடுபட்டனர். இதனால் கோபமடைந்த அப்பெண் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸாருக்கு முறையிட்டார்.

இதனையடுத்து சிவில் உடையிலிருந்த பொலிசார் கடலுக்குள் பாய்ந்து சென்று சேஷ்டையில ஈடுபட்ட இரு இளைஞர்களையும் கடலுக்குள் வைத்து தாக்கியதுடன் அவர்களை கரைக்குக் கொண்டு வந்தும் தாக்கினர். பின்னர் அப்பகுதியில் இயங்கும் தற்காலிக பொலிஸ் நிலையத்தில் வைத்து எச்சரிக்கை செய்யப்பட்ட பின்னர் விடுவித்தனர்.

தற்போது கசூரினா கடற்கரைப் பகுதியில் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் இளைஞர்களின் தொல்லைகளிலிருந்து அவர்களைப் பாதுகாக்கும் நோக்கில் பொலிஸார் சிவிலுடையில் கடமை புரிந்து வருகின்றனர்.
நன்றி வீரகேசரி





சர்வதேச குற்றவியல் விசாரணைக்கு இராணுவத்தினர் உட்படுத்தப்பட்டால் இனக்கலவரம் ஏற்படும்: சம்பிக்க எச்சரிக்கை

15/3/2012
இலங்கையில் இனங்களுக்கு இடையில் மோதல்களை ஏற்படுத்தவே அமெரிக்கா ஜெனிவாவில் பிரேரணையை சமர்ப்பித்துள்ளது. சர்வதேச குற்றவியல் விசாரணைக்கு இராணுவ வீரர்கள் உட்படுத்தப்பட்டால் 1983 ஆம் ஆண்டு ஏற்பட்டதைப் போன்ற இனக்கலவரம் உள்நாட்டிலும் இடம்பெறும் என்று அமைச்சரும் ஜாதிக ஹெல உறுமயவின் தலைவருமான சம்பிக்க ரணவக்க எச்சரித்தார்.

நாட்டில் மீண்டும் இனங்களுக்கு இடையில் பிரார்த்தனைகளை உருவாக்கும் வகையில் மேற்குலக சமூகம் செயற்படக்கூடாது. தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு அமெரிக்காவுடனும் ஏனைய தீய சக்திகளுடனும் இணைந்து இலங்கைக்கு எதிராக செயற்படுவதை உடன் நிறுத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

அமைச்சர் சம்பிக்க ரணவக்க இதுத் தொடர்பாக கேசரிக்கு தொடர்ந்து கூறுகையில்:

அமெரிக்கா இலங்கைக்கு எதிராக கடுமையாக செயற்பட்டு வருகின்றது. இதில் மேற்குலக நாடுகளுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து கொண்டு நாட்டை மீண்டும் சீரழிக்கும் பிரேரணையை ஆதரித்து பேசி வருகின்றது. எவ்வாறாயினும் புலிகள் இலங்கையில் ஒழிக்கப்பட்டதன் பின்னர் நாட்டில் இவைகளுக்கு இடையில் ஒற்றுமையும் நிரந்தர சமாதானமும் ஏற்பட்டுள்ளது.

இதனை சீர்குலைக்கும் வகையிலேயே அமெரிக்காவும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பும் செயற்பட்டு வருகின்றன. ஜெனிவாவில் இலங்கைக்கு எதிரான பிரேரணையை சமர்ப்பித்துள்ள அமெரிக்கா அதன் ஊடாக இலங்கை இராணுவத்தை சர்வதேச விசாரணைகளை பொறிமுறைக்குள் சிக்க வைத்து தண்டனைகளை வழங்கவே முயற்சிக்கின்றது. புலிகளை அழித்திருக்காவிட்டால் இன்று இலங்கை இவ்வாறான சவால்களை ஒரு போதும் எதிர்கொண்டிருக்காது.

எவ்வாறாயினும் 1983 ஆம் ஆண்டு ஏற்பட்ட கலவர சூழலை நாட்டில் ஏற்படுத்த அமெரிக்காவோ கூட்டமைப்போ முயற்சிக்கக்கூடாது. தேசிய பிரச்சனையைத் தீர்த்துக் கொள்ள மக்களால் தெரிவு செய்யப்பட்ட அரசாங்கம் ஒன்று உள்ளது. அதே போன்று நீதிமன்ற கட்டமைப்பு ஒன்றும் உள்ளது. எனவே ஜெனிவாவில் பிரேரணையைக் கொண்டு வந்து உள்நாட்டு சம்பவங்களை விசாரணை செய்ய வேண்டியதில்லை என்றார்.
நன்றி வீரகேசரி


கொள்ளுப்பிட்டி சந்தியில் மக்கள் போராட்டம்

Thursday, 15 March 2012

muslim_protest_"சர்வதேசச் சதியிலிருந்து தாய் நாட்டைக் காப்பாற்றுவோம்' என்ற கோஷத்துடன் கொழும்பு கொள்ளுப்பிட்டி சந்தியில் இன்று வியாழக்கிழமை காலை முஸ்லிம் அமைப்புகள் பாரிய ஆர்ப்பாட்டப் பேரணியை நடத்தின.

இதில் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்போர் கலந்துகொண்டு அமெரிக்காவுக்கும் ஜெனீவாவில் இலங்கைக்கு எதிரான பிரேரணைக்கு ஆதரவளிக்கும் நாடுகளுக்கும் எதிராகவும் கோஷமெழுப்பினர்.

muslim_protest_11
muslim_protest_3


muslim_protest_4

muslim_protest_5

muslim_protest_6


muslim_protest_7

colombo_protest_kollpitiya_8


colombo_protest_kollpitiya_9

muslim_protest_10
muslim_protest_11
படப்பிடிப்பு: எஸ்.கிரிசாந்த்
நன்றி தினக்குரல்






கொக்கிளாயில் பிள்ளையார் கோயிலை உடைத்துவிட்டு புத்தர் சிலை அமைப்பு மக்கள் பெரும் கொந்தளிப்பு

Thursday, 15 March 2012

கொக்கிளாயில் பிள்ளையார் கோவிலை உடைத்து அகற்றிவிட்டு அந்த இடத்தில் புத்தர் சிலை நிறுவப்பட்டுள்ளது. இதனால் அப் பகுதியில் மீளக்குடியமர்ந்த தமிழ் மக்கள் மத்தியில் பெரும் குழப்பநிலை ஏற்பட்டுள்ளது. கொக்கிளாயில் காலம் காலமாக வாழ்ந்த மக்கள் பன்னெடுங்காலமாக வழிபட்டு வந்த பிள்ளையார் சிலையை அகற்றி சந்தியை உடைத்து அதே இடத்தில் புத்தர் சிலை நிறுவப்பட்டுள்ளது.

கொக்கிளாய் மருத்துவமனைச் சுற்றாடலிலிருந்த அரச மரத்தடியில் அறிமுகப் பிள்ளையார் வைரவர் ஆகிய இந்துக் கடவுள்களின் விக்கிரகங்களையே அகற்றிவிட்டு அந்த இடத்தில் இராணுவத்தினர் புத்தர் சிலையை வைத்துள்ளனர்.

அத்துடன் அங்கு பெரியளவில் விகாரை ஒன்றைக் கட்டுவதற்கான முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதற்கென அந்த இடத்தை சுற்றியுள்ள ஏழு தனியார் காணிகளும் அபகரிக்கப்படவுள்ளது. இக் காணிகள் இங்கு பூர்வீகமாக வாழ்ந்து வந்த தமிழ் மக்களுக்குச் சொந்தமான காணிகள் எனத் தெரிவிக்கப்படுகிறது.

விகாரை அமைப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் அதே சமயம் இங்கு திருகோணமலையிலிருந்து அழைக்கப்பட்ட ஒரு புத்த பிக்குவும் குடியமர்த்தப்பட்டிருக்கிறார்.

இராணுவத்தினரின் இந்த அடாவடிச் செயலால் அப்பகுதியில் மீள்குடியேற்றப்பட்டுள்ள மக்களிடையே பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. இது குறித்து இங்கு வாழும் மக்களால் 08 02 2012 அன்று இப்பகுதிக்கு வருகை தந்த ஜனாதிபதியின் புதல்வரும் அரச தரப்பு நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷவிடம் முறைப்பாடு செய்யப்பட்டது. ஆயினும் இதுவரை எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. மாறாக விகாரை கட்டுவதற்கான நடவடிக்கைகள் மட்டும் முழுவீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இப்பகுதி பூர்வீகமாக தமிழ் மக்கள் வாழ்ந்து வந்த இடம். இங்கு பௌத்த சமயத்தைச் சேர்ந்த ஒருவருமே வசிக்கவில்லை எனவும் யுத்தத்தின் பின் மீள்குடியமர்வு செய்யப்பட்டபோது சில சிங்களக் குடும்பங்கள் இப்பகுதியை அடுத்த இடங்களில் குடியமர்த்தப்பட்டுள்ள போதும் அவர்கள் கிறிஸ்தவ சமயத்தைப் பின்பற்றுபவர்கள் எனவும் அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
நன்றி தினக்குரல்












































No comments: