கிடைக்காத அந்த விருதின் கதை.. (பகுதி – 7)

.
அது ஒரு பெரிய வளாகம். அங்கே, வயது கருதி முதுமை கருதி உடனே எழுந்துவர இலகுவாக முன்னாள் உட்கார வைத்திருந்தார்கள் ஜானகிரமானை. தொன்னூரு சதவிகிதத்திற்கும் மேல் வயதில் முதிர்ந்தவர்களே விருது பெற வந்திருந்தனர் என்பதும் குறிப்பிடத் தக்கது. உலகின் பார்வையில் படத் துடித்த அன்றைய இளைஞர்களின் ரத்தம் சுண்டியபின் விருதுகளெல்லாம் இன்று வெறும் பெயருக்கு அவர்களின் தலைமேல் வைக்கப்பட்ட பணங்காய் போல் எண்ணி விருது வாங்கவந்த அநேகம் பேர் வருந்தியிருக்கலாம்.

ஜானகிராமனுக்கு உள்ளே ஒரு பயம், ஒரு பரவசம், உலகம் உற்றுநோக்கும் இந்திய தேசத்தின் முதல் குடிமகன் சிரித்தமுகத்தோடு நின்று கைகூப்பி படைப்பாளிகளை வணங்கி வரவேற்று ஒவ்வொரு துறை சார்ந்தவருக்குமாக விருதினை வழங்கிக் கொண்டிருப்பதை கண்குளிர பார்த்துக் கொண்டிருந்தாலும், நினைவெல்லாம் தன் மனைவி ஜானகியிடமே இருந்தது.


புறப்பட்டதிலிருந்து ஒரு மினர் தண்ணீர் குடிக்கக் கூட மனமின்றி மனைவியின் கவலையாகவே இருந்தார். அவரின் நினைப்பெல்லாம் ‘எப்படியோ தான் நம்பியது போலவே வாழ்வெல்லாம் அமைந்து விட்டது, தான் எதிர்பார்த்த அத்தனையும் தன் கடைசி நாளிற்குள்ளேனும் நடக்கவிருக்கிறது; எனில் நம்பியதை நம்பியவாறு பெற்றேன் என்று தானே அர்த்தம்? இந்த என் ஆழமான நம்பிக்கையை தன் இளைஞர்களுக்குக் கொடுத்து தன்னை விட பல மடங்கு அவர்களை சிறந்தவர்களாக ஆக்கவேண்டும்’ என் இளைஞர்கள் அத்தனைப் பெரும் சாதிக்கவேண்டும்' அவர்கள் தன் வாழ்க்கையில் வாழும்போதே ஜெயிக்கவேண்டும்' என்றெல்லாம் நினைத்துக் கொண்டிருக்கும்போதே வாழ்நாள் சாதனையாளர்களின் விருது வரிசை ஆரம்பிக்கப் பட்டது.

ஒவ்வொருவரையாய் அழைக்க தன் பெயரும் வருமோ என்றொரு பதட்டம் ஜானகிராமனுக்கும் வர அவர் சற்று உணர்வு பூத்து அமர்ந்திருந்தார். தூக்கம் கடந்த உடல் சோர்வின் அயர்ச்சியை வெளிப்படுத்தும் விதமாக கொட்டாவி வந்து வந்து போனது. உணவுன்ணாமை, ஆழ்ந்த கவலை, இறுகிய மனநிலை என எல்லாம் சேர்ந்து அவரை சுகமின்மை படுத்தியிருந்தாலும் மனதின் விடா-திடம் அவரை தற்போதுவரை கெட்டியாகவே வைத்திருந்தது.

ஆனாலும் அவ்வப்பொழுது மனைவிக்கு ஏதேனும் நேர்ந்து விடுமோ எனும் பயத்தில் அதை எண்ணி எண்ணி எச்சில் விழுங்கிக் கொண்டார். மகள் காலையிலேயே அழைத்துப் பேசியிருந்தாள். மனைவி ஜானகியிடம் பேசக் கேட்டதற்கு, அவர் நன்றாக பேசும் நிலையில் இல்லை, விவரத்தை விருது வாங்கியதும் அழையுங்கள் சொல்கிறேன் என்கிறாள். ஏதேனும் ஆனதோ என்று பதரியதும், விரைவில் அவசர சிகிச்சைக்கு தயார் செய்யவேண்டும் என்றும், வீட்டிற்கு வந்ததும் விருதோடு தருமந்த பணத்தில் நல்ல மருத்துவமனை சென்று மருத்துவம் பார்க்கலாம் என்றும், நான் அவரிடம் சொல்லி இங்கு வர சொல்லி இருக்கிறேன், நாளை அவர் வந்து விடுவார், நீங்கள் ஏதும் கவலைப் படாதீர்களப்பா” என்றும் சொல்லி மகள் தன் பேச்சை முடிப்பதற்குள் இணைப்பு துண்டிக்கப் பட்டது. அவளிடம் இருந்த கொஞ்ச பணத்தையும் வழிச் செலவிற்கு என்று ஜனகிராமனுக்கு கொடுத்துவிட்டிருந்தாள். எப்படியும் அதிகம் பேச பணம் இருந்திருக்காது, அதனால்தான் தொலைபேசி இணைப்பு துண்டிக்கப் பட்டுவிட்டது போலென்று எண்ணிக் கொண்டார் ஜானகிராமன்.

இருந்தாலும் ‘மனைவிதான் சொன்னாளே, ஏதேனும் ஆனால் உடனே அழைப்பேன் என்றாளே, எனவே ஏதேனும் ஆயிருப்பின் அழைத்திருப்பாளென்று எண்ணி, தொலைபேசி அழைப்பு வராதவரை தன் மனைவிக்கு ஒன்றும் நேராததாகவே மனதைத் தேற்றிக் கொண்டார்.

டிக் டிக்கென்று மணியடிக்கும் ஒவ்வொரு சொடுக்களின் சப்தத்திலும் விருதை விட ஜானகியின் நினைவே அவரை அதிகமாக கலவரப் படுத்திக் கொண்டிருந்தது. அந்நேரம் பார்த்து அவரின் பெயர் அறிவிக்கப்பட, அவரை தேர்ந்தெடுக்கப்பட்ட விவரங்களையும், இதுவரை அவர் எழுதியுள்ள புத்தகங்களின் பெயர்களையும் மேடையிலிருந்து வரிசையாய் சொல்ல ஆரம்பித்தனர்.

இதுவரை, அவர் எழுதிய படைப்புக்கள், அதன் சாரங்கள், அதன்மூலம் அவர் ஆற்றிய தொண்டுகள், தற்போது வாழும் எளிமை, ஏழ்மை நிலையிலும் கொண்ட எழுத்து பற்றிய அக்கறை, வெல்வோமெனும் திடமான நம்பிக்கை, விடாமல் தொடர்ந்த முயற்சியென இவ்வனைத்துமே அவரை நம் வருங்காலத்திற்கு உதாரண மனிதராக ஆக்கியிருப்பதாகவும், அதை பறைசாற்றும் பொருட்டே இவ்விருது அவருக்கு அளித்து கௌரவிக்கப் படுகிறது என்றும்’ ஒலிப்பெருக்கி அந்த வளாகம் முழுக்க அவரின் ஒவ்வொரு வெற்றிக்குமான வார்த்தைகளைக் கூறி நிறைக்க, அவருக்கு சற்று முகமெல்லாம் வியர்த்து போனது.

எழுந்து நின்று அங்கிருந்தே அவையினை நோக்கிக் கும்பிட்டார். மேடைக்கு வருமாறு அவர் அழைக்கப் பட, துண்டெடுத்து முகம் துடைத்துக் கொண்டு அவர் எழுந்திருப்பதற்குள் இருவர் அவரை நோக்கி அழைத்துப் போவதற்கென்று ஓடிவந்தனர். இதற்காக காத்திருந்த இத்தனை வருடத்துக் காத்திருப்பும் வேகமாய் உடைத்தெடுத்து அவரின் உடம்பெல்லாம் பாய, பதட்டம் கடந்த ஒரு கோபமும், யாரையோ சுட்டுத் தீர்க்கும் தீரா வஞ்சத்தின் நெருப்பும் உள்ளே சுடர்விட்டெறிந்தது ஜானகிராமனுக்கு.

அதை அடக்கிக் கொள்ளும் முயற்சியில் தன்னை ஆசுவாசப் படுத்திக் கொண்டு முன் பார்த்து காலை வைத்துத் திரும்ப, சற்று கால் இடறப் பட்டு கீழே விழப் போனார். உடனே மேடையின் ஓரமிருந்து அழைக்க வந்தவர்கள் விரைவாக ஓடி வந்து அவரைத் தாங்கிப் பிடித்துக் கொண்டனர். ஜானகிராமன் சற்று தன்னை சரிநிலைப் படுத்திக் கொண்டு, நிமிர்ந்து எல்லோரையும் பார்த்து ஒன்றுமில்லை ஒன்றுமாகவில்லையென தனக்குத் தானே சொல்லிக் கொண்டு, தன் வேட்டியை சரிசெய்து கட்டிக்கொண்டு மேடைக்குச் சென்றார்.

மேடையில் நின்றிருந்த மேன்மை மிகு ஜனாதிபதி ஒரு அடி அவரை நோக்கி முன்வந்து வணக்கமென்று அழகிய தமிழில் சொல்ல, ஜானகிராமனுக்கு உடல் சிலிர்த்துப் போனாலும், ஜனாதிபதியை பற்றியும் அவர் ஒரு தமிழ்மாமேதை என்றும், உலகலாவி பெயர்பெற்ற ‘இந்திய தேசத்தின் தலைசிறந்த முன்னாள் தலைமை விஞ்ஞானி அவரென்றும் முன்கூட்டியே அறிந்திருந்ததால், தன் முழு மதிப்பையும் ஒன்றுகூட்டி கையெடுத்து அவரை வணங்கினார்.

வணங்கியக் கையோடு ஜனாதிபதியின் அருகில் சென்று “கடவுளைப் பார்க்காத மனது பெரியவர்களை பார்க்கையில் குளிர்ந்து போகிறது ஐயா. மாலைவணக்கம் உரித்தாகட்டும். எனக்கு இந்த விருது பெரிதல்ல. விருதிற்காக நான் இத்தனை தூரம் வரவில்லை. ஆனால், நோயிலிருக்கும் என் மனைவியை விட்டுவிட்டு இந்த விருது நோக்கி நான் வந்ததன் காரணமே என் எழுத்து குடிகொண்டிக்கும் இந்த என் மக்களிடம் நான் சற்று பேசவேண்டுமென்று தான். சில மணித்துளிகள் பேச எனக்கு அவகாசம் கொடுப்பீர்களா? ” என்று கேட்க –

இல்லை இங்கு விருது பெற இன்னும் நிறையப் பேர் வந்துள்ளனர். ஒவ்வொருவருக்கும் பேச அனுமதி கொடுக்குமளவிற்கு ஜனாதிபதிக்கு அவகாசமோ அல்லது விழாநேர அமைப்போ பொருந்தாது என்று சொல்லி விழாக் குழுவின் அதிகாரி இடைப்பட்டு மறுத்தார்.

என்றாலும் அவர் உருக்கமாய் தமிழில் கேட்டது தமிழராக இருந்த ஜனாதிபதிக்குப் புரிந்துவிட்டதால், அவரின் வயதும் முதிர்ச்சியும் மரியாதை மிக்க தோற்றமும் ஏதோ அர்த்தமுள்ளதாய் இருக்க, அவரின் படைப்புக்களின் நோக்கமும் சமூகம் சார்ந்ததாகவே இருப்பதையும் முன்னிட்டு' விருது பெற்றப்பின் பேசட்டும் என்று உத்தரவிட்டார். அதனை ஏற்று அதிகாரிகள் அவருக்கான அந்த விருதினையும், ரூ பத்து லட்சம் மதிப்பிற்கான காசோலையையும் அவரிடம் கொடுக்கின்றனர்.



ஒவ்வொரு படைப்பாளியும் எதிர்நோக்கிக் காத்திருக்கும் அங்கீகாரமான, தன் வாழ்நாள் காத்திருப்பிற்குரிய அந்த விருதினை எல்லோரின் கரவொலிக்கு மத்தியிலும் பல புகைப்படங்களின் மின்னலொளிகள் அவர் முகத்தில் பட்டுத் தெறிக்க, வளாகம் நிறைந்த கம்பீர இசையொலி முழங்க, புத்தகங்கள் சுமந்த கைகளில் எல்லோரின் ஆரவாரத்தோடும் அந்த விருதினை தான் எண்ணியிருந்தவாறே நம்பியவாறே பெற்றுக் கொண்டார் ஜானகிராமன்.

விருதினைப் பெற்ற கையேடு, ஒலிபெருக்கியின் முன் சென்று பேச நின்றுக் கொண்டார். மனைவியிடம் இருந்து அழைப்பேதும் வரவில்லையே என்று அலைபேசியினை எடுத்து ஒருமுறை பார்த்துக் கொண்டார். ஒருவித கோபத்திலும், ஜானகி பற்றிய பயத்திலும் மனம் கலவரப் பட்டு கண்கள் ஈரமாகியிருந்தது.

அதை துடைத்துக் கொண்டு அனைவருக்கும் பொதுவாக வணக்கம் சொன்னார். எதிரே அமர்ந்திருந்த வேற்று மாநிலத்தவர்களையும் கவனத்தில் கொண்டு, அதோடு அங்கு நடந்த அத்தனை விசயங்களும் ஆங்கிலத்தில் மட்டுமே நடந்துக் கொண்டிருந்தமையால் ஜானகிரமானும் ஆங்கிலத்திலேயே பேசத் துவங்கினார்.

“அறுபத்தாறு வயதில் ஒரு விருது பெரிய்ய்ய்ய விருது. இந்த விருதுக்காக நான் காத்திருந்த வருடங்கள் நாற்ப்பத்தியாறு வருடங்கள். என் மனைவியை காதலித்தபோது அவர்பெயரையும் என் பெயரோடு இணைத்து வெறும் ராமனான நான் 'ஜானகிராமனாகி' முதன்முதலாய் “ஓயாத அலைகள்” எனும் தலைப்பில் கதை எழுதியபோது எனக்கு வயது இருபது. ஆனா இதுல விசேசம் என்ன தெரியுமா? இந்த விருது கிடைக்குமென்று எனக்கு என் பதின்மூன்று வயதிலேயே தெரிந்திருந்தது தான். அதெப்படி -

தொடரும்..

வித்யாசாகர்

No comments: