அவுஸ்திரேலியா மெல்பேணில் ”தமிழர் விளையாட்டு விழா”


.
வங்கக்கடலில் வீரகாவியமான கேணல் கிட்டு உட்பட பத்து மாவீரர்களின் 19 ம் ஆண்டு நினைவான ”தமிழர் விளையாட்டு விழா” அவுஸ்திரேலியாவின் மெல்பேணில் சிறப்பாக நடைபெற்றுள்ளது.
வருடந்தோறும் நடைபெற்றுவரும் இந்நிகழ்வு, கடந்த ஞாயிற்றுக்கிழமை 29 - 01 - 2012 அன்று ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணி தொடக்கம் இரவு 8 மணி வரை வொன்ரோனாவில் ஜேடபிள்யு மான்சன் றிசேவ் (J.W. Manson Reserve, Wantirna)மைதானத்தில் நடைபெற்றது.



கேணல் கிட்டு - விடுதலைக்காக புறப்பட்ட நாளிலிருந்து வீரச்சாவடைந்த 1993 வரை தாயகத்தின் பரப்பு எங்கும், அதன்பின்னர் தமிழகத்திலும் இந்தியாவிலும், அதற்குப்பின்னர் பிரித்தானியாவிலும், அங்கிருந்து புறப்பட்டு ஐரோப்பிய நாடெங்கும், அதனொரு பொழுதில் மெக்சிக்கோ வரை சென்று தனது கால்களை தொட்டபோதும், விடுதலைப்பணிக்காகவே உழைத்தார். வங்கக்கடலூடாக சமாதான தூது காவிவந்த தளபதி கேணல் கிட்டுவும் ஒன்பது தோழர்களும் விடுதலையின் வீரியத்தை உரைத்து கடலின் நடுவில் தீயிலே எரிந்தார்கள்.



இம்மாவீரர்கள் நினைவாக நடைபெற்ற இந்நிகழ்வில், கிறீன் கட்சியைச்சேர்ந்த மத்தியு கேர்வன் (Mathew Kervan) என்பவர் அவுஸ்திரேலிய தேசியகொடியையும், நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் சிட்னி மாநில பிரதிநிதி யோகராசா தமிழீழ தேசியக் கொடியையும் ஏற்றிவைத்து விழாவை தொடக்கிவைத்தனர். தமிழர் விளையாட்டுவிழாவில் துடுப்பாட்டம், கரப்பந்தாட்டம், உதைபந்தாட்டம், சிறுவர்களுக்கான விளையாட்டுக்கள் என பல்வேறு வயதுப்பிரிவினருக்கான போட்டிகள் நடைபெற்றன.


கரப்பந்தாட்டத்தில் டெனிஸ் அணியினர் வெற்றிக்கேடயத்தையும் எல்லாளன் அணி இரண்டாவது இடத்தையும், உதைபந்தாட்டத்தில் டான்டிபோய்ஸ் அணியினர் வெற்றிக்கேடயத்தையும் எல்லாளன் அணியினர் இரண்டாவது இடத்தையும், துடுப்பாட்டத்தில் டான்டிபோய்ஸ் அணியினர் வெற்றிக்கேடயத்தையும் கொப்றா அணியினர் இரண்டாவது இடத்தையும் பெற்றுக்கொண்டனர்.

சிறுவர்களுக்கான போட்டிகளாக ஓட்டப்பந்தயப் போட்டிகள் சங்கீதக்கதிரை பழம்பொறுக்குதல், தவளைப் பாய்ச்சல், சாக்கோட்டம் உட்பட பல்வேறு போட்டிகள் நடைபெற்றன.


போட்டிகள் நடைபெறும் போது நாவிற்கு ருசியான தோசை, அப்பம், கொத்துரொட்டி, ஓடியல் கூல், சிற்றுண்டி வகைகள் உட்பட பலவிதமாக தாயக உணவுப் பொருட்களுடன், அன்றைய தட்பமான காலநிலைக்கேற்ப குளிர்பானங்களும், தொண்டர்களினால் தயார் செய்யப்பட்டு காலை முதல் இரவு வரை மக்களிற்கு விற்பனை செய்யப்பட்டது. அன்றைய தினம் நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு, தமிழ் அமைப்புக்களின் செயற்பாட்டாளர்களினால் வெற்றிக் கோப்பைகளும், கேடயங்களும் வழங்கிக் கௌரவிக்கப்பட்டனர்.



இந்நிகழ்வில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டு நாடுகடந்த தமிழீழ அரசின் நிகழ்கால செயற்பாடுகளை விளக்கியதுடன், வாரம் 1 டொலர் திட்டத்திலும் பல மக்கள் தம்மை இணைத்துக் கொண்டனர். வெற்றிபெற்ற அணிகளுக்கான பரிசில்கள் வழங்கப்பட்டதை தொடர்ந்து, கொடியிறக்கமும் அதனைத் தொடர்ந்து “தமிழரின் தாகம் தமிழீழ தாயகம்“ என உறுதியெடுத்தலைத் தொடர்ந்து தமிழர் விளையாட்டு விழா இனிதே நிறைவடைந்தது.

No comments: