துரோகி - பூமாறங் - - யதீந்திரா


.
ஈழ அரசியலைப்  பொறுத்தவரை இன்று யாரெல்லாம் துரோகியல்ல என்பதைக் கண்டுபிடிப்பது தான் கடினமானது. அந்தளவிற்கு துரோகிகள் மலிந்துகிடக்கும் தேசமிது. விடுதலைப்புலிகளின் வீழ்ச்சியைத் தொடர்ந்து நேற்றுவரை போராளிகளாக இருந்த பலர் துரோகிகளாக்கப்பட்டிருக்கின்றனர். நாளுக்கு நாள் துரோகிகள் பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது. யுத்தத்தின் தீர்மானகரமான முடிவின்போது. அரச படைகளிடம் சரணடைந்த ஆயிரக்கணக்கான போராளிகள் கூட நாளை துரோகப்பட்டியலில் இடம்பெறலாம். ஏலவே சிலர் சேர்க்கப்பட்டும் விட்டனர். இறுதியில் ‘துரோகி’ அது எவரையும் விட்டுவைக்காது போகலாம்.
Mathaiahஎனக்கு இப்போதும் நன்றாக நினைவிருக்கிறது- அது 1990- விடுதலைப்புலிகளின் பிரதித் தலைவர் கோபாலசாமி மகேந்திரராஜா எனப்படும் மாத்தையா எனது சொந்தக் கிராமமான தம்பலகாமத்திற்கு வருகிறார். ஊரே திரண்டு அவரை வரவேற்கிறது. வீதிகள் தோறும் நிறைகுடம் சகிதமாக மக்கள் அவரை மலர் தூவி வரவேற்றனர். எங்கள் முறையின் போது நான் மாத்தையாவிற்கு சந்தனப்பொட்டு வைத்த நினைவுகள் இப்போதும் பசுமையாகவே இருக்கினறன.அப்போது இணக்கம் என்ற சொல்லைத் தவிர வேறு ஏதும் அறிந்திராத வயது. தமிழ் தேசியம் என்னும் சொற்தொடரை நான் ஒரு பேச்சுகுத்தானும் கேள்வுற்றிராத காலம் அது. எனது கிராமத்தில் ‘இயக்கம்’ என்னும் சொல்லைக்கூடப் பெரியளவில் புழக்கத்தில் இருக்கவில்லை. பொதுவாக இயக்கங்களைப் ‘பொடியள்’ என்றே மக்கள் அழைப்பதுண்டு. பின்னர் காலம் என்னையும் தமிழ் தேசிய பக்கமாக நகர்த்தியது. ஆனால் ஆச்சரியம்- தமிழ் தேசியத்தைச் சொற்களாகக்கூடக் கேள்வியுறாத காலத்தில் மலர் தூவி வரவேற்கப்பட்ட மாத்தையா, நான் தமிழ்த் தேசிய அரசியல் குறித்து அறிந்து  கொள்ள முற்பட்டபோது, எனக்கு துரோகியாகவே அறிமுகமானார்.


ஏவ்வாறு மாத்தையா துரோகியானார்? எந்த அரசியல் மாத்தையாவை துரோகியாக்கியது? ஏவ்வாறு பல்வேறு இயக்கங்களின் தலைவர்களும் துரோகியானார்கள்? இந்த துரோக வாதங்களை மக்கள் எவ்வாறு எதிர்கொண்டார்கள்? நான் நன்கு அறிவேன். இது பற்றி வெளிப்படையாக பேசுவதால் என்னையும் இந்தப் பூமாறங் துரத்தும். ஆனால் இப்போது சில விடயங்கள் குறித்துப் பேசாது விட்டால் பிறகு எப்போதுமே பேச முடியாமல் போய்விடும். இன்று ஒரு போராட்டம் எப்படியிருக்கக் கூடாது என்பதற்கு ஈழ விடுதலைப் போராட்டம் உதாரணமாயிருக்கிறது. ஆகவே நாம் பல்வேறு விடயங்கள் குறித்தும் வெளிப்படையாகவே பேசியாகவேண்டும். இது நமது தலைமுறைக் கடமையாகும்.
ஈழ அரசியலைப்  பொறுத்தவரை இன்று யாரெல்லாம் துரோகியல்ல என்பதைக் கண்டுபிடிப்பது தான் கடினமானது. அந்தளவிற்கு துரோகிகள் மலிந்துகிடக்கும் தேசமிது. விடுதலைப்புலிகளின் வீழ்ச்சியைத் தொடர்ந்து நேற்றுவரை போராளிகளாக இருந்த பலர் துரோகிகளாக்கப்பட்டிருக்கின்றனர். நாளுக்கு நாள் துரோகிகள் பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது. யுத்தத்தின் தீர்மானகரமான முடிவின்போது. அரச படைகளிடம் சரணடைந்த ஆயிரக்கணக்கான போராளிகள் கூட நாளை துரோகப்பட்டியலில்thuraiyappahஇடம்பெறலாம். ஏலவே சிலர் சேர்க்கப்பட்டும் விட்டனர். இறுதியில் ‘துரோகி’ அது எவரையும் விட்டுவைக்காது போகலாம்.
ஈழ அரசியலை பொறுத்தவரை எந்தப் பக்கம் திரும்பினாலும்- அவன் துராகி- அவங்கட ஆள்- எங்கட ஆள் இல்ல- இவ்வாறான கோஷசங்களைத்தாம் கேட்கமுடிகிறது. உண்மையில் துரோக வாதத்தின் ஊற்று எது? இதை தீர்மானிக்கும் அரசியல் எத்தகையது? இந்தக் கட்டுரை அரசியல்  அர்த்தத்தில துரோகி அல்லது துரோகம் என்னும் சொற்களை கட்டுடைக்க விளைகிறது. இதை விளங்கிக் கொள்வதற்குச் சற்று பின்னோக்கி செல்ல வேண்டியிருக்கிறது. ஈழ அரசியல், தமிழீழ அரசியலாக உருமாறுவதற்கு முற்பட்ட காலத்து மேடை அரசியல் கோஷங்களை இந்த இடத்தில் நாம் நினைவு கொள்ள வேண்டிருக்கிறது. ஈழத்து அரசியல் சூழலில் முதல்முதலாக துரோகி அல்லது துரோகம் என்ற சொற்களை அரசியலுக்கு அறிமுகம் செய்தவர்கள் மிதவாத தலைவர்களே தவிர ஆயத இயக்கங்களல்ல.
இலங்கையில் முதலாவது தமிழ் அரசியல் கட்சியான ஜி;.ஜி.பொன்னம்பலத்தின் அகில இலங்கை தமிழ் காங்கிரசின் கூட்டத்தில்தான் எங்களது தீர்மானத்துக்கு எதிராக கைகைளை உயர்த்துவோர், கைகளை இழக்க வேண்டிவரும் என்ற எச்சரிக்கை குரல் ஒலித்தது  அகில இலங்கை தமிழ் காங்கிரசின் ஊடாகத் தனது அரசியல் பயணத்தை ஆரம்பித்த, தந்தை செல்வா என்று பிற்காலத்தில் அழைக்கப்பட்ட எஸ்.ஜே.வி. செல்வநாயகம், காங்கிரசிலிருந்து வெளியேறித் தமிழரசுக் கட்சியை ஆரம்பித்தார். இப்போது காங்கிரஸ் தரப்பினரை பொறுத்தவரையில் செல்வநாயகம் ஒரு துரோகி. இப்படித்தான் துரோகவாத அரசியல் கருக்கொண்டது.
தமிழரசு கட்சி கூட்டங்களின் போது பாம்பை விடுதல் ,கூட்டத்தின்போது பறை மேளமடித்து தொந்தரவு செய்தல், கட்சி பந்தலை இரவோடு இரவாக உடைத்தல் இப்படித்தான் அன்று (தங்களின்) துரோகிகளான, தமிழசுக் கட்சியினரைக் காங்கிரஸ் பழிதீர்த்தது. மறுபுறமாக செல்வநாயகம் டட்லி சேனநாயகா அரசுடன் கைகோர்த்துக் கொண்டபோது தமிழரசு கட்சியில அங்கம் வகித்த வி.நவரெட்ணம் செல்வநாயத்தை துரோகி என்றார். இதன் தொடர்ச்சியாக நவரெட்ணம் தமிழர் சுயாட்சி கழகத்தை உருவாக்கினார். பின்னர் இடதுசாரிகள் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியுடன் இணைந்து ‘தோசே மசாலட வடே அப்பட எப்பா’ (தோசையும் மசால் வடையும் எங்களுக்கு வேண்டாம் – தமிழ் மக்களின் உணவு பழக்கத்தை காட்டுவதன் மூலம், தமிழர்களின் அரசியல் கோரிக்கைகளுக்கு எதிரான சுலோகத்தை இவ்வாறு முன்னிறுத்தினர்) என்று பிரச்சாரம் செய்தபோது ஒட்டுமொத்த இடதுசாரிகளும் துரோகியானார்கள்.
Amirthalingamபின்னர் தமிழர் விடுதலைக் கூட்டணி மேடைகளில் ‘துரோகி’- என்னும் சொல் தராளமாகவே பயன்படுத்தப்பட்டது. அப்போது அரசாங்கத்துடன் இணைந்திருந்த அரசியல் தலைவர்கள் குறிப்பாக அல்பிரட் துரையப்பா இயற்கை மரணத்துக்குரியவர் அல்லர்  என்றே அன்றைய கூட்டணியின் முக்கிய தலைவர்களான காசி ஆனந்தன், வண்ணை ஆனந்தன் போன்றோர் மேடைகளில் முழங்கிக் கொண்டிருந்தனர் இதையே பின்னர் பிரபாகரன் தத்தெடுத்துக் கொண்டார்.
1975ம் ஆண்டு பிரபாகரன் அல்பிரட் துரையப்பாவைத் ‘துரோகி’ என்ற அடைமொழியுடன் படுகொலை செய்தார். ஈழத் தமிழர் அரசியலில் துரோகிகள் கொல்லப்பட வேண்டியவர்கள் என்னும் அரசியல் அறிமுகமாகிறது. அல்பிரட் துரையப்பா மீதான படுகொலை நடவடிக்ககையே புலிகளின் முதலாவது தாக்குதலாக பின்னர் பதிவு செய்யப்பட்டது. அல்பிரட் கொலைக்கு எந்தவொரு  கூட்டணி தலைவரும் கண்டனம் தொவித்திருக்கவில்லை. ஏனெனில் அவர்கள் அதைத்தான் விரும்பியிருந்தனர். ஆனால் கூட்டணி தலைவர் அமிர்தலிங்கத்தைத் :துரோகி’ என்னும் அடைமொழியுடன் புலிகள் படுகொலை செய்யதபோதுதான் தாங்கள் வீசிய :துரோகி’ – பூமாறங் தங்கள் கழுத்தையும் குறிவைக்கிறது என்னும் உண்மை கூட்டணி தலைவர்களுக்கும் உறைக்கத் தொடங்கியது. ஆனால் பிரபாகரனோ அதை விடுவதாக இல்லை. எப்படித் தமிழர் விடுதலைக் கூட்டணி அறிமுகப்படுத்திய தமிழீழ சுலோகத்தைப் பிரபாகரன் கெட்டியாகப் பிடித்துக் கொண்டாரோ அப்படியே ‘துரோகி’ என்னும் அழித்தொழிப்புவாத அரசியலையும் கெட்டியாகப்பிடித்துக் கொண்டார்.
வரலாற்றில் எந்தவொரு பெறுமதியுமற்ற ‘துரோகி’ என்னும் சொற்பிரயோகத்தை ஒரு கருத்தியலாக வளர்த்தவர்கள் மிதவாதத் தலைவர்களே. விடுதலைப்புலிகள் அந்தக் கருத்தியலைத் தங்களது ஏகப்பிரதிநிதித்துவத்துக்குப் பயன்படுத்திக் கொண்டனர். தமது அரசியல் வேலைத் திட்டத்திற்குத் தொந்தரவாக அல்லது இடைஞ்சலாக இருந்தவர்க்ள அல்லது எதிர்காலத்தில் அத்தகைய ஒரு நிலைக்கு வரக் கூடியவர்கள் என்று கருதப்பட்டோர் அனைவரையும் மக்கள் மத்தியில் இருந்து அன்னியப்படுத்தும் தந்திரோபாயமாகவே இந்தத் ‘துரோகி’ அல்லது :’துரோகம்’ என்னும் சொற்கள் அடுத்தவர்கள் மீது சுமத்தப்பட்டன. மிதவாத அரசியல் தலைவர்களால் முன்தள்ளப்பட்டஅரசியல் சுலோகத்தை அப்பழுக்கில்லாமல் உள்வாங்கிக் கொண்டன. ஆனால் புலிகள் போன்று இதை மிகவும்  மூர்க்கமாகவும் நுட்பமாகவும் எந்தவொரு இயக்கமும் பயன்படுத்தியிருக்கவில்லை. ஆனால் புலிகள் வீசிய பூமாறங் இப்போது  அவர்கள் கழுத்துகளையும் குறிவைத்திருப்பதுதான் இதிலுள்ள முரண்நகை.
புலிகள் டெலோவை தாக்கி அழித்ததிலிருந்து ஏனைய  இயக்கஙகளைப் போராட்ட அரசியலிருந்துsriSabaratnam அப்புறப்படுத்தியது வரை அனைத்தையும் ’துரோகம்’ என்னும் ஒரு வார்த்தை கொண்டே நியாயபப்டுத்தினர். டெலோவை தாக்கியழித்தமைக்கு புலிகள் சொன்ன காரணம்- அவர்கள் இந்தியாவை இங்கு கொண்டுவர முயல்கின்றனர். டெலோவை புலிகள் தாக்குவதற்கு முன்னர் யாழ்ப்பாணத்தில் ‘பொதுமக்கள்’ என்ற பேரில் பல சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன. டெலோ ஒரு மக்கள் விரோத அமைப்பு என்றவாரான கருத்து வெகுசன மனோநிலை ஆக்கப்பட்டது. பின்னர் புலிகள் டெலோவை அழித்தபோது ஏற்கனவே தயார்படுத்தப்பட்டிருந்த மக்கள்  வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர். இதே போன்று பின்னர் ஈ.பி.ஆர்.,எல.எப் தாக்கப்ட்டபோதும். அதே மக்கள் புலிகளுக்கு இளநீர் வெட்டிக் கொடுத்தனர்.
புலிகளே மற்றய இயக்கங்களை தாக்கியழிக்க முயன்றனர். ஏந்தவொரு இயக்கமும் புலிகளை தாக்கியழிக்க முயன்றதாக சான்றில்லை. ஆங்காங்கே சிறிய சச்சரவுகள் இடம்பெற்றிருப்பினும் புலிகளை அழித்துத் தங்கள் தலைமையை உறுதி செய்துகொள்ள வேண்டுமெனும் முனைப்பில் எந்தவொரு இயக்கமும் செயற்பட்டிருக்கவில்லை. இதை விடயமறிந்த அனைவரும் அறிவர். ஆனால் சகல போராட்ட இயக்கங்கள் மத்தியிலும் தலைமை குறித்த ஈடுபாடும் எதிர்பார்ப்பும் இருந்தததையும் மறுப்பதற்கில்லை. அத்தகைய தலைமை குறித்த எதிர்பார்ப்பே டெலோவை அழிக்க முயலும் புலிகள், நாளை தங்களையும் அழிக்க தயங்கமாட்டார்கள் என்ற உண்மையை விளங்கிக் கொள்ள முடியாத நிலைக்குள், அவர்களை தள்ளியது எனலாம். புலிகள் டெலோவை அழிக்க முற்பட்ட போது ஏனைய இயக்கங்கள் அனைத்தும் ஒன்றுபட்டு புலிகளை எச்சரித்திருந்தால் அல்லது தடுத்திருந்தால் புலிகள் அடங்கியிருப்பர் அல்லது அழிந்திருப்பர். ஆனால் அந்த நேரத்தில் அவ்வாறு எந்தவொரு அமைப்பும் சிந்தித்திருக்கவில்லை. டெலோவை அழிப்பதில் வெற்றிகொண்ட புலிகள், அனைத்து இயக்கங்களையும் கட்டுப்படுத்த முடியும் என்ற இறுமாப்பில் ருசி கண்டனர். இதற்கு அந்த நேரத்தில் புலிகள் தவிர்ந்த இயக்கங்கள் இந்தியாவுடன் தொடர்பிலிருந்ததை தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டனர்.
pathmanabaஆனால் இவ்வாறு புலிகளால் வஞ்சிக்கபட்ட இயக்கங்கள், பிற்காலத்தில் தங்களின் பாதுகாப்புக கருதிச் சில நடவடிக்கைகளை முன்னெடுத்ததும் உண்மையே அதில் விமர்சனம் இல்லாமல் இல்லை. ஆனால் தமிழ் மக்களின் விடுதலைக்காகப் போராட முன்வந்த பலரையும் அரசின் பக்கமாக சாயவேண்டிய நிர்பந்தத்தை உருவாக்கியவர்கள் புலிகள்தாம். புலிகள் தமிழ் மக்களுக்காக போராடும் ஏகபோக உரிமையைக் குத்தகைக்கு எடுத்துக்கொள்ள முற்பட்டதன் விளைவால், மிக உயர்ந்த இலட்சிய எண்ணத்தோடு வந்த பலர் போராட்ட அரசியலில் இருந்து அன்னியப்பட நேர்ந்தது. இது பற்றப் புலிகளால் தடைசெய்யப்பட்ட ஒரு முன்னணி இணக்கத்தின் மூத்த உறுப்பினருடன் பேசிக்கொணடிருக்கும் போது அவர் கூறினார்- தமிழ் மக்களுக்காக நீங்கள் போராடக் கூடாது என்று சொல்லுவதற்குப் பிரபாகரனுக்கு என்ன உரிமை இருக்கிறது. அவர் எவ்வாறு அப்படி சொல்ல முடியும். எப்போது புலிகள் ஏனைய இயக்கங்களை அழித்து, தாங்கள் மட்டுமே போராடுவதற்குத் தகுதி உள்ளவர்கள் என்றனரோ அப்போதே தமிழர் விடுதலைப் போராட்ட  அரசியல் முற்றுபெற்றுவிட்டது. தவிர பிரபாகரனால் ஒரு போதும் எதையும் அடைய முடியாது என்பதும் அப்போதே தெளிவாகிவிட்டது.
இதிலுள்ள இன்னொரு முரண்நகையான விடயம் என்வென்றால், தங்களுடைய நலனுக்காக அரசுடன் கூட்டுச் சேரும் அரசியலையும் தொடங்கிவைத்தவர்களும் புலிகள்தாம். இது பலரும் தொட்டுக் காட்டாத விடயமாகும். நான் இங்கு புலிகள் என்று குறிப்பிடுவது அதன் தலைமையையே அன்றி, தன்னலமற்றுப் புலிகள் அமைப்பில் இணைந்து கொண்ட போராளிகளை அல்ல, இந்தியாவை வெளியேற்றும் நோக்கில் புலிகளே முதன்முதலாக அரசுடன் கூட்டுச் சேர்ந்துகொண்டனர்.
இந்திய படைகள் வடகிழக்கில் நிலைகொண்டிருக்கும்வரை தனது ஏகத்தலைமைவாத அரசியலை முன்னெடுக்க முடியாது என்று கருதிய பிராபகரன் பிரேமதாசாவுடன் கூட்டணி அமைத்துக்கொண்டார். அன்னறைய சூழலில் புலிகளுக்கு எதிர் நிலையில் இருந்த இயக்கங்கள் அரசுடன் சேர்ந்திருக்கவில்லை. அப்போது தங்களது செயல்பாட்டிற்கு வகையில் ‘அரசு-புலிகள் பேச்சு-புலிகளால் மேற்கொள்ளப்ட்ட ஒரு தந்திரோபாய நடவடிக்iகை’ எனும் தலைப்பில் சிறு கைநூல் ஒன்றையும் வெளியிட்டிருந்தனர். நான்கு கேள்விகளுக்குப் பதிலளிப்பது போன்று தொகுக்கப்ட்டிருந்த மேற்படி நூலில்-இனவாத சிறலங்கா அரசாங்கத்துடன் பேசுவது சரியான ஒன்றாகுமா என்னும் கேள்விக்கு – இந்திய இராணுவத்தை வெளியேற்றுவதில்;, தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும் சிறலங்கா அரசிற்கும் இடையே பொது நலன்கள் சந்தித்துக்கொள்கின்றன. எங்கள் நடவடிக்கை, யப்பானைச் சீனாவில் இருந்து வெளியேற்றுவதற்காக மாவோ,சியாங்காய் ஷேக்குடன் சமரசம் செய்து கொண்டதற்கு ஒப்பானதாகும் என்று பதிலளித்திருந்தனர்.
இதன் மூலம் தங்களது சொந்தநலன்களுக்காக எதிரியுடன் கூட்டுச் சோந்த புலிகள், மற்றவர்கள் தங்களது அரசியல் தெரிவுக்காக அரசுடனோ அல்லது இந்தியாவுடனோ சேர்ந்திருக்கும்போது அதை துரோகம் என்றனர். இராணுவத்துடன் தங்களது இருப்புக்காகச் சேர்ந்தியங்க முடியும் என்றும் வழிமுறைகளை சொல்லிக் கொடுத்தவர்களும் புலிகள்தாம். மன்னார் முள்ளிக்குளத்தில் அமைந்திருந்த புளெட் இயக்கத்தின் பிரதான முகாமைக் கடற்படையின் உதவியுடனேயே புலிகள் தாக்கி அழித்தனர். அதில் புளெட் இயக்கத்தின் முக்கிய உறுப்பினர்கள் பலரும் கொல்லப்பட்டனர். ஈழத் தமிழர் போராட்ட அரசியலில் (சொந்த நலன் கருதிய) எங்கள் இருப்புக்காக இராணுவத்துடன் இணைந்திருப்பதும் தவறல்ல என்னும் தந்திரோபாயத்தை முதலில் அறிமுகம் செய்தவர்கள் புலிகளேயன்றி வேறு எவருமல்லர். தாங்களே முதன்மை பெற வேண்டுமெனும் பிரபாகரனின் பிடிவாதம்தான், இறுதியில் தன்னலமற்று போராடப் புறப்பட்ட பல ஈ.பி.ஆர்.எல்.எப் போராளிகள், பிற்காலங்களில் நாட்கூலிகளாக வேலை செய்ததை நான் கண்டிருக்கிறேன். இப்போது அந்த நிலை புலிகளின் போராளிகளுக்கும் ஏற்பட்டிருக்கிறது. புலிகளின் எதேச்சதிகாரச் செயல்பாடுகளால் ஏற்பட்ட வெறுப்பால்தான், புலிகளால் தடைசெய்யப்பட்ட இயக்கங்கள் பலவும் அரசில் தஞ்சமடைய நேர்ந்தது. அத்தகையதொரு நிலைக்கு அவர்கள் தள்ளப்பட்டனர். என்பதைத்தான் நாம் விளங்கிக் கொள்ள வேண்டும். ஏதிரிக்கு எதிரி நண்பன் என்ற வகையில் அரசும் புலிகளின் இராணுவரீதியான செயற்பாடுகளை எதிர்கொள்ளுவதற்கு மற்றைய இயக்கங்களைப் பயன்படுத்திக் கொண்டது.
சுருக்கமாச் சொன்னால் ஈழத் தமிழர்களுக்கான அரசியல் எனின் அதில் ஒருவர்தான் இருக்க முடியும்- அது பிரபாகரன் தலைமையிலான புலிகள் மட்டும்தான். பிரபாகரனின் முடிவுக்கு மாறாக எவர் சிந்திப்பினும் அது துரோகம். எனது சிறு பிராயத்தில் மலர் தூவி வரவேற்கப்பட்ட மாத்தையா துரோகியானதும் இந்தப் பின்புலத்தின் விளைவுதான். டெலோவை அழிப்பதற்குப் புலிகள் என்ன பழிகளை போதித்தனரோ அதே பழியை மாத்தையா மீதும் சுமத்தினர். மாத்தையா இந்திய உளவுத்துறையான ‘றோ’ உடன் இணைந்து பிரபாகரனை கொல்லச் சதி செய்தார் என்பதுதான் மாத்தையா மீதான குற்றச்சாட்டு. ஆனால் அது குறித்த எந்தவொரு ஆதாரத்தையும் புலிகள் பகிரங்கபடுத்தவில்லை. ஆனால் புலிகளிடம் அப்படி எந்தவொரு ஆதாரமும் அவர்களிடம் இல்லை என்பதுதான் உண்மை. மாத்தையாவின் குழுவில் இருந்த ஒருவருக்கு இந்திய உளவுத்துறை நடிகையொருவரை செட்பண்ணிக் கொடுத்தே மாத்தையாவை தங்கள் வலையில் வீழ்த்தியதென்றுகூடக் கதை சொல்லப்பட்டது. உண்மையில் பிரபாகரனின் முடிவு என்று வாதிட்டால், அதை செயல்படுத்த எத்தனித்தால் அதன் விளைவு துரோகியாகச் சாவதுதான்.
sampanthanஇன்று ஈழத் தமிழ் மக்கள் தங்களின் தலைவராக அங்கீகரித்திருக்கும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இராஜவரோதயம் சம்பந்தன் ஒரு காலத்தில் புலிகளின் துரோக பட்டியலில் இருந்தவர் என்பது பலருக்கும் தெரியாத சங்கதி. சந்திரிகா அரசின் ஊடாகத் தமிழ் மக்களின் இனப்பிரச்சினைக்கான தீர்வைக் காண்பதற்கு முயன்றதால், சம்பந்தன் ‘போட்டுத்தள்ள வேண்டியவர்கள்’ பட்டியலில் இணைக்கப்பட்டார். அன்றைய சூழலில் சம்பந்தன் தனது வீட்டிற்கு நூறு மீற்றர் தொலைவிலுள்ள தனது குடும்ப ஆலயத்துக்கூட பாதுகாப்பு இல்லாமல் போக முடியாமல் இருந்தவர் என்பதும் பலருக்கு தெரியாத சங்கதியே! ஏற்கனவே சம்பந்தனின் ஆலோசகராகத் தொழில்பட்டுக்கொண்டிருந்த கலாநிதி நீலன் திருச்செல்வம் புலிகளின் தற்கொலைத் தாக்குதலில் கொல்லப்பட்டிருந்த நிலையில், அடுத்தது சம்பந்தன்தான் என்று வெகுசனப்பரப்பில் பேசப்படுமளவிற்கு நிலைமைகள் இருந்தன. நோர்வேயின் சமாதான முயற்சி சம்பந்தனின் உயிரை காப்பாற்றியது. அன்றைய நிலைமையில் சம்பந்தன் போன்ற ஜனநாயக அரங்கில் தடம்பதித்திருந்த தலைவர்களின் ஆதரவு புலிகளுக்குத் தேவைப்பட்டது. புலிகள்தாம் எல்லாம் என்பதைச் சம்பந்தன் ஒப்புக்கொண்டதால் ‘துரோகி’ சம்பந்தன் புலிகளின் வட்டத்திற்குள் சிற்நத தலைவரானார். இது பற்றி பேசிக்கொண்டிருக்கும்போது நண்பர் ஒருவர் சுவாரசியமான தகவல் ஒன்றை பகிர்ந்து கொண்டார். புலிகள் அமிர்தலிங்கத்தை துரோகி என்று சுட்ட போது உடுவில் சிவா எனப்படும் சிவசிதம்பரம் காயத்துக்குள்ளானார். பின்னர் அதிஷ்டசவமாக தப்பித்தும் கொண்டார். ஒரு வேளை சிவசிதம்பரம் அன்றே கொல்லப்பட்டிருந்தால் ‘துரோகி’ ஆனால் பிழைத்துக் கொண்டதால், தம்பிதான் எல்லாம் என்று தியாகி ஆகிவிட்டார்.
ஆனால் இதிலுள்ள சுவாரசியம் என்னவென்றால், பிரபாகரன் யாரையெல்லாம் துரோகி என்று துரத்தினாரோ, அவர்களே இன்று ஈழத் தமிழ் மக்களின் அரசியல் எதிர்காலத்தை நிர்ணயிப்பவர்களாக வெளித் தெரிவதுதான்.
சிவராம்- இந்தப் பெயர் நான் எழுதத் தொடங்கிய காலத்தில் எனக்கு ஆதர்ஷமான பெயர். ஒரு sivaramவகையில் நான் அரசியல் ஆய்வுத்துறைக்குள் வர வேண்டுமென்னும் உத்வேத்தை அளித்த பெயரென்றும் சொல்லலாம். ஆனால் இப்போது வெளிவரும் தகவல்களோ அனைத்தையும் புரட்டிப்போடுவதாக இருக்கிறது. நண்பர் நடராசா குருபரன் எழுதிவரும் ‘மௌனம் கலைகிறது’ என்னும் தொடரில் 2004 இல் விடுதலைப்புலிகளின் இராணுவ கட்டமைப்பபை நிலை குலையச் செய்த, கிழக்குத் தளபதியும்  பிரபாகரனின் நம்பிக்கை நட்சத்திரமுமான கருணாவின் பிளவின் பின்னணியில் செயலாற்றிய மூளை சிவராமே என்று பதிவு செய்திருக்கிறார். கருணா பிளவின் பின்னரான நிலைமைகள் தனக்குப் பாதகம் என்பதை அறிந்ததும், சிவராம் பிரபாகரன் பக்கமாக சாய்ந்து கொண்டு, இராணுவ அர்த்தத்தில் வன்னியின் முக்கியத்துவம் என்ன என்பதை விளக்கும் வகையில் கருணாவுக்கு பகிரங்க கடிதம் ஒன்றை எழுதியிருந்தார். பின்னர் விடுதலைப்புலிகள் கருணாவை இராணுவரீதீயாக எதிர்கொண்டபோது, அதற்கும் பிறிதொரு விளக்கத்தைக் கொடுத்திருந்தார். இதுவரை சிறிலங்கா இராணுவத்தை எதிர்கொண்டு வந்த புலிகள் தங்களது படைப்பிரிவொன்றையே வெற்றிகரமாக எதிர்கொண்டதன் மூலம் புதியதொரு அனுபவத்தைப் பெற்றுக் கொண்டனர். என்றாவது,புலிகள் கிழக்கின் கருணா அணியினரைத் தாக்கியழித்ததை நியாயப்படுத்திருந்தார். வாசித்த நாங்களோ சிவராமின் இராணுவ விஞ்ஞான அறிவையெண்ணி மெச்சிக்கொண்டோம். ஆனால் அதன் சூத்திரதாரியே சிவராம் எனும்போது என்ன சொல்வது! பின்னர் சிவராம் படுகொலை செய்யப்பட்டபோது பிரபாகரன் தனது அதியுயர் விருதான :மாமனிதர்’ விருதை வழங்கிக் கௌரவித்தார். புலிகளின் இராணுவ மரியாதையோடுதான் உடல் அடக்கம் செய்யப்பட்டது.
இப்போது ஈழத் தமிழ் தேசிய அரசியலில் சிவராமின் இடம் என்ன-மாமனிதரா, தேசியவாதியா, துரோகியா, தியாகியா-சிவராம் யார்? எனவே இங்கு ஒரு விடயம் தெளிவாகிறது.- பிரபாகரனின் முடிவுகளை கண்ணை மூடிக்கொண்டு ஆதரித்தால் அவர் தியாகி. சிறந்த தமிழ் தேசியவாதி- எதிர்த்தால் அவர் பக்கம் எத்தகைய நியாயம் இருப்பினும் அவர் ஒரு துரோகியே! கடந்த முப்பது வருட கால அரசியலில் துரோகி- தியாகி என்பதை- பிரபாகரனை ஆதரித்தல் எதிர்த்தல் என்பதில் தங்கியிருந்தது.
புலிகளின் வீழ்ச்சியை தொடர்ந்து இந்த (துரோக) முத்திரை குத்தும் அரசியல் நகைப்பிற்கிடமாகியது. அதுவரை புலிகளை எதிர்த்து நின்றவர்களையும் புலிகளை நிராகரித்தவர்களையும் மக்கள் மத்தியிலிருந்து அன்னியப்படுத்தவதற்காக் பயன்டுத்தப்பட்ட ‘துரோகி’ என்னும் வாதம், ஆச்சரியகாரமான வகையில் அதன் மூத்த உறுப்பினர்களுக்கும் பலவருடங்களாகப் புலம்பெயர்ந்த நாடுகளில் பிரபாகரனுக்கு சேவகம் செய்தவர்களுக்கும் எதிராக திரும்பியது. விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் போரின்போது வீரச்சாவடைந்து விட்டார் என்னும் தகவலை வெளியிட்ட புலிகளின் சர்வதேச பொறுப்பாளராக இருந்த கே.பி.துரோகியானார். பின்னர் புலிகளின் சொத்துக்களை பதுக்கிக் கொள்வதில் ஏற்பட்ட கோஷ்டி மோதல்களின் காரணமாக பலர் துரோகிகளாக்கப்பட்டனர். காஸ்டோ பிரிவின் கட்டுப்பாட்டில் ஊடகங்கள் இருந்ததால் தங்களது செயற்பாடுகளுக்குக் குந்தகமானவர்கள் என்று கருதப்பட்டடோர் மீதெல்லாம் பிரபாகரன் வீசிய துரோகி-பூமாறங் அவரது சகாக்களையே பதம் பார்த்துக் கொண்டிருக்கிறது.
ஆல்பிரட்துரையப்பா, அமிர்தலிங்கம், யோகேஸ்வரன், சபாரத்தினம், மாத்தையா, பத்மநாபா, நீலன்திருச்செல்வம், கருணா- இன்னும் நூற்றுக்கணக்கானோருடன் நீண்டு கிடக்கும் பிரபாகரனின் துரோகி பட்டியலில் இப்போது பல புலிகள் இறுதியில் அது பிரபாகரனையாவது விடடுவைக்குமா என்பது சந்தேகமே!
நன்றி: காலச்சுவடு

No comments: