'சோக்கவுட்’ 'நிசப்தம்' ஈரானியச் சினிமா

.
நிசப்தம் எனும் நாத வெள்ளம் ‘சோக்கவுட்’ (The Silence)

கண்கள் இருந்தும் எம்மைச் சூழவுள்ள உலகைத் தெரிந்து கொள்ளாத மடையர்களாக நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். காதுகள் இருந்தும் எம்மைச் சூழவுள்ள உலகிலிருந்து எழும் உன்னத ஒலிகளின் லயநயத்தை ரசிக்கத் தெரியாத கலைஞானம் அற்றவர்களாக உழன்று கொண்டிருக்கிறோம்.


இருந்த போதும் காலையில் விழித்து எழும்போது எழுகின்ற பறவைகளின் ஒலியும், தென்றலின் இசையும், பல எழுத்தாளர்களின் மனத்தைத் தொடுவதை படைப்புகளுடாக வாசித்து மகிழ்ந்திருக்கிறோம். ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் நிச்சயம் ஒரு கலைஞன் ஒளிந்திருக்கிறான். ஒளிந்திருக்கும் அக் கலைஞனை மீட்டெடுத்து சுருதி கூட்ட வேண்டியது அவரவரால்தான் முடியும்.

வீதியில் ஓடும் வாகன இரைச்சலும், தொலைவில் கூவிச்செல்லும் இரயிலின் சக்கரங்கள் தண்டவாளத்தில் அராத்தும் ஒலியும் தூக்கத்தைக் கெடுத்து பலரையும் இம்சைப்படுத்துகின்றனவே ஒழிய மனம் உருக வைப்பதில்லை.
அடுத்த வீட்டில் கதவை அடித்து மூடும் ஓசையும், பைப் நீர் விழுந்து வாளி நிறைக்கிற ஒலியையும், அதிலிருந்து நீரை மொண்டு குளிக்கிற ஓசையிலும் ஒரு இனிய லயம் கலந்திருப்பதை எங்களில் யாராவது, எப்பொழுதாவது உணர்ந்திருக்கிறோமா? 

நித்திரையைக் குழப்புகின்றன, அமைதியைக் குலைக்கினறன என்று எரிச்சல்படத்தான் பலருக்கும் தெரிகிறது. இச் சத்தங்களும் ஒலிகளும் சூழலை மாசடையச் செய்து எமது காதுகளை மந்தமாக்குகின்றன என்ற குற்றச் சாட்டுகளுக்கும் குறைவில்லை. அதில் விஞ்ஞான ஆதாரம் இருப்பதை மறுக்க முடியாதுதான். ஆனால் ஓசை இல்லாத ஒரு உலகத்தை உங்களால் கற்பனை பண்ண முடிகிறதா? எவ்வளவு மந்தமான உயிர்ப்பற்ற சவக்காலையின் வெறுமைக் கலவையாக இருக்கும்.

கண்களால் காணும் காட்சிகளாவன, காதில் விழுபவற்றை விட வேகமாக எமது மூளையில் உறைப்பதால்தான் ஒலியை விட ஒளியில் மறந்து, ரசிக்கத் தெரியாது வாழ்கிறோம்.


குர்ஸிட் பார்வையற்ற ஒரு சிறுவன். அவன் எங்களைப் போல கலாஞானசூனியனாக இல்லை. அவனைப் பொறுத்த வரையில் அவனைச் சுற்றி எழுகின்ற ஒவ்வொரு ஒலியிலும் ஏதோ ஒரு இசை இருக்கிறது. லயம் இருக்கிறது. மனத்தை ஈர்க்கும் அமானுச சக்தி இருக்கிறது. வாத்திய ஒலிகளும், இன்னிசையும் மட்டும் அவனை ஈரப்பதில்லை. அவனைப் பொறுத்தவரையில் உலகே ரம்யமான ஒலிகளின் கூடம்தான். ஆனால் அதில் நல்லதையும் கெட்டதையும் பிரித்தறிந்து ரசிப்பவன்.

காலையில் இவனது வீட்டுக் கதவை கோபத்தோடு ஓங்கி அறைந்து தட்டும் ஒலியும், தொடர்ந்து அவர்களைத் துயில் எழுப்பி வாடகைப் பணத்தை அறவிடச் சத்தமிடும் வீட்டு சொந்தக்காரனின் கோபக் குரலிலும் கூட ஏதோ ஒரு ஓசை நயத்தை அவனால் ரசித்து மகிழ முடிகிறது. 

பும் பும் பூம்… பும் பும் பூம்…

இசைக்கு அப்பாலும் அவனது உணர்திறன் விசாலித்திருக்கிறது. வேலைக்குச் செல்லும் வழியில் தாம் சுட்ட பிரட்டுகளை விற்பதற்காகப் பெண்கள் நிற்பார்கள். தனது விரல்களின் தொடு உணர்வுகள் மூலம் அவர்களது பிரட்டின் தரத்தை இவனால் சொல்லிவிட முடிகிறது. ஆனாலும் ஒருவளது பிரட் சற்றுக் காய்ந்ததாக இருந்தபோதும் அவளிடம் வாங்கிச் சாப்பிடுகிறான். காரணம் அவளது குரல் இனிமையானது என்கிறான். அவனைப் பொறுத்தவரை உணவின் சுவையை விட இசை மாண்புடையது.

10-12 வயது மதிக்கத்தக்க சிறு பையன் அவன். ஒலிகளின் நயத்தைக் கூர்த்தறியும் அற்புத ஆற்றல்  இயல்பாகவே அவனுக்கு வாய்த்திருந்தது. தனது தாயுடன் வாடகை வீட்டில் குடியிருந்து வருகிறான். தகப்பனற்றவன் எனச் சொல்ல முடியாது. ஏதோ தேவைக்காக ரசியாவிற்கு சென்ற தகப்பனிடமிருந்து எந்தத் தகவலோ உதவியோ கிடையாது. இதனால் மிகவும் வறுமையிலிருக்கும் அவனது குடும்பத்தின் வயிற்றுப்பாட்டிற்கு அவனது உழைப்பு அவசியமாக இருக்கிறது.

அவனது ஆற்றல் அவனுக்கு ஒரு தொழிலைத் தேடிக் கொடுத்திருந்தது. இசைக் கருவிகள் விற்பனை செய்யும் ஒரு கடையில் அவன் அவற்றிக்கு சுருதி மீட்டிக் கொடுப்பவனாகத் தொழில் பார்க்கிறான். ஆனால் எல்லா முதலாளிகளையும் போலவே இவனது முதலாளியும் காசு ஒன்றே குறியானவன். இவனது திறமையை மதிப்பவனாக இல்லை. யாராவது அவன் விற்ற வாத்தியத்தைக் குறை கூறினால், சுருதி சேர்த்துக் கொடுத்த இவனே குற்றவாளியாக ஏச்சு வாங்க வேண்டியவனாகிறான்.

வேலைக்குச் செல்லும்போது பஸ்சில் பயணிக்க நேருகிறது. போகும் வழியெல்லாம் இவன் சூழலிருந்து எழும் ஒலிகள் கேட்காதவாறு, தனது காதுகளைப் பொத்திக் கொண்டே பயணிக்கிறான். அவனாக விரும்பி இதைச் செய்வதில்லை. நல்ல இசை கேட்டால் இவன் தனது சூழலையும், தன்னைக் காத்திருக்கும் பணிகளையும் மறந்து விடுவான். இவனது கால்கள் தன்னிச்சையாக இசை ஒலியைப் பின் தொடரும். எங்கோ செல்ல வேண்டியவன் அதை மறந்து வேறெங்கோ சென்றுவிடுவான். 

இவனது பயணத்தில் உதவுவது ஒரு குட்டித் தோழி நதீரா. ஆனால் இவனிலும் சற்றுப் பெரியவள். பார்வையற்றவனின் கண்களாக அவள் இயங்குகிறாள். அத்துடன் இவன் வாத்தியங்களைச் சுருதி மீட்டும் போது, அது சரியாக இருக்கிறதா எனச் சரிபார்ப்பதும் அவள்தான். அவன் சுருதி மீட்டும் போது மெல்லியதாக அவளது காது வளையம் ஆட ஆரம்பிக்கும், பின் தலை முடி, முகம், கைகள் எனத் தொடர்ந்து இறுதியில் உடலே தாளலயத்திற்கு ஏற்ப ஆடத் தொடங்கிவிடும். அந்த அழகை ரசித்திக் கொண்டே இருக்கலாம். அற்புதமாக நடிக்கிறாள் அந்தப் பெண். 

அவளது உலகம் குர்ஸிட் மட்டுமே. இவனது கவனம் அங்கும் இங்கும் அலையவிடாது கவனமாகக் கூட்டிச் செல்பவள் அவள்தான். அவளால்தான் அது முடியும். தெருப் பாடகனின் இசையில் மயங்கி அவனது ஓசையைப் பின் தொடர்ந்து செல்வதால், வேலைக்குச் செல்லத் தாமதமாகி ஏச்சு வாங்காஙாகாது காப்பாற்றுவது அவள்தான்.

அவன் எல்லா அழகையும் ஆராதிப்பவன். அவளின் புற அழகை அல்ல. அவளின் உள்ளொளியைப் புரிந்து வைத்திருக்கிறான். 

குர்ஸிட் ஒரு வண்டு போன்றவன். அவற்றின் ஓசை இவனுக்குப் பிடித்தமானது. ஆயினும் சாணியில் மொய்க்கும் வண்டுகளின் ரீங்காரம் அபசுரம் என்பான். ஆனால் மலர்களில் தேன் தேடும் தேனீக்களின் ரீங்காரம் அற்புதமானது என ரசிப்பான். தேனீக்களுடன் பாசம் கொண்டவன். அவற்றோடு பேசுவதும் இவனுக்குப் பிடித்தமானது. அவை பற்றிப் பேசுவதில் மகிழ்வு கொள்பவன். 

ஆனால் அவற்றைப் போலவே இவனும் நெறிப்படுத்தப்படாத தேனீ. பதவி, பணம், அந்தஸ்த்து  போன்றவை இவனது இசை ரசனையைப் பாதிப்பதில்லை. தெருப் பிச்சைக்காரன் எழுப்பும் இசை லயத்துடன் அமைகையில் அதில் ஆழ்ந்துவிடுவான். அந்த கானகக் கானமும் இவனை வாவென அழைக்கும்.

நெரிச்சல் மிகுந்த கடைத் தெருவில் இசையின் வழியே பயணிக்கிறான். இளைஞன் கையிலிருக்கும்; ரேடியோவிலிருந்து அற்புதமான இசை வருகிறது. நெருக்கமான சனங்களிடையே, இசையின் நீக்கல்களின் இடையே நெளிந்து வளைந்து புகுந்து பயணிக்கும் இவன் வழி தவறிவிடுகிறான். கூட வந்த நதீரா இவனைக் காணாது பயந்து தேடுகிறாள். என்னவானானோ என நாமும் கலங்கிவிடுகிறோம். 

ஆனால் அவள் எப்படி இவனைக் கண்டுபிடிக்கிறாள் என்பது அற்புதமான காட்சியாகிறது. அவள் தன் இரு கண்களையும் மூடிக் கொண்டு தேடியலைகிறாள். எங்கோ தொலை தூரத்தில் மங்கலாக இசை ஒலி கேட்கிறது. அதில் தன் மனத்தை ஆழச் செலுத்துகிறாள். கண்களை மூடியபடியே அது வரும் திசையில் தட்டுத் தடுமாறிப் பயணிக்கிறாள். அவள் அடைந்த இடம் ஒரு இசைக் குழு கானம் எழுப்பிக் கொண்டிருக்கும் கடையாகும். அங்கு வெளியே மதிலோரம் இசையில் மயங்கி, சுவரில் சாய்ந்தபடி தன் தனியுலகில் இருக்கிறான் குர்ஸிட்.

படம் முழுவதும் இசை பொங்கி வழிகிறது. காற்றில் பறந்தலையும் கடதாசிச் சுருள் போல நாம் அந்த இசையின் ஓட்டத்தில் அள்ளுண்டு பயணிக்கிறோம். மழை ஓசை இசையாகிறது. நாயின் குரைப்பிலும், குதிரையின் குளம்பொலியிலும், பறவைகளின் சிறகடிப்பிலும், செம்மறி ஆடுகளின் கனைப்பிலும் கூட இசை இருக்கிறது என்பதை உணர்ந்து அதிசயிக்கிறோம். ஒருதடவை வாத்தியத்துடன் சென்று கொண்டிருக்கும்போது மழை ஆரம்பிக்கிறது. அதில் குதித்து விளையாடி ஆனந்திக்கிறான். மழை விடவில்லை. நனைந்து தெப்பமாக குளிர்பிடிக்கிறது. ஓடும்போது தடக்கி விழுகையில் வாத்தியம் கை நழுவித் தூரப் போய் விழுகிறது. எங்கென பார்வையற்றவன் கண்டு கொள்வது எப்படி? மிகுந்த துயரம் ஆட்கொள்கிறது. ஏற்கனவே முதலாளி இவனை வேலையிலிருந்து கலைக்க முற்பட்டிருக்கிறான். இப்பொழுது வாத்தியமும் தொலைந்து விட்டால்? 

ஆச்சரியம் காத்திருக்கிறது. வாத்தியத்தின் மேல் விழும் மழைத்துளிகள் ஓசையை எழுப்புகின்றன. அது ஒரு சீரான ஒலிலயத்தில் அவன் காதில் பாய்கிறது. இசைத்துளி பொழிகிறது. அதுவே அவன் மனத்திற்கு ஒளதடமாகிறது. வாத்தியமும் கிடைத்து விடுகிறது.

எமக்கென்று தனிப்பாதை கிடையாது. வானை எட்டும் முகில்களாகப் பறந்தும், ஆழ்கடல் சிறுமீன்களாக நீந்தியும் இசையுடன் இரண்டறக் கலந்து பயணிக்கிறோம். சுட்டெரிக்கும் தீயும் இல்லாத, குத்தி வலிக்க வைக்கும் முற்களும் இல்லாத ஆனந்தப் பெருவெளி. சண்டை, சச்சரவு, குரோதம் ஏதுவும் எம்மைச் சஞ்சலப்படுத்தாத படம்.

அவன் வாழும் வீடு நதியுடன் இணைந்தது. பாலத்தால் வீதிக்கு வர வேண்டும். அவன் வேலையிலிருந்து வரும்போதும் மரங்களின் நிழல் அமைதியான நீரில் பிம்பமாக விழும் தோற்றம் அற்புதமானது. அதிசயிக்க வைக்கிறது. கை தேர்ந்த ஓவியனின் கன்வஸ் ஓவியம் போல கலைநயம் மிக்கது.


அதேபோல Tajikistan நகரின் கடைத் தெருக்களிலும், வீதிகளிலும் எம்மை கைபிடித்து அழைத்துச் செல்கிறது கமரா. மிகச் சிறப்பான படப்பிடிப்பு. அலங்காரமான கடைகள், அழகான முகங்கள், இவை யாவும் வித்தியாசமான கோணங்களில். நாம் காண்பது அவ்வாறாக இருந்தபோதும், அவர்களின் மொழியும், கலாசாரமும் அந்நியமாக தோன்றியபோதும், அந்த மனிதர்களின் அடிப்படை உணர்வுகள் மற்றெல்லா மனிதர்களுடையது போலவே இருப்பதால், அதில் எங்களையும் அடையாளம் காண முடிகிறது. இதனால் படத்துடன் ஒன்றச் செய்கிறது.

மிகவும் மாறுபட்ட பார்வையில்; மனித வாழ்வின் மறக்கவொண்ணா கணங்களையும், மனத்தில் எழும் கவித்துவ உணர்வுகளையும் இசையில் குழைத்து அள்ளிச் சொரிகிறது இப்படம். உள்ளத்தை அள்ளிப்பிடிக்கும் ஓவியம் போன்றிருக்கிறது. உலகம், மனித வாழ்வு, இசை இவற்றை வெறுமனே சித்தரிப்பதற்கு அப்பாலும் பயணிக்கிறது. கனதியில் எம்மனத்தை ஆழ்த்தியபடியே படம் நிறைவுறுகிறது.

ஈரானின் புகழ்பெற்ற Mohsen Mahmalbaf  ன் படைப்பு இது. அவர் திரைப்படத் துறையில் மிகப் பெரிய ஆளுமையாவார். நெறியாளர் மட்டுமல்ல நல்ல கதாசிரியரும் கூட. ஈரானிய சினிமாவில் புதிய அலை இவருடனேயே ஆரம்பிக்கிறது எனலாம். இவரது மிகப் பிரபலமான முதற் சினிமா கந்தஹர் ஆகும். 

இவரது வாழ்க்கை இவருக்கு நிறையவே கற்றுத் தந்திருக்கிறது. இந்தத் திரைப்படத்தின் நாயகனான குர்ஸிட் போலவே மிகச் சிறுவயதிலேயே குடும்பச் சுமையைத் தனது தோளில் ஏந்த வேண்டியதாயிற்று. 8 வயதிலேயே தந்தை இழந்து பல சின்னசின்னத் தொழில்களைச் செய்து, 15 வயதளவில் விடுதலைப் போராளியாகி, துப்பாக்கிச்; சூடுபட்டு சிறைப்பட்டவராவார். 4 ½ வருட தண்டனையில் தன்னைப் புடம்போட்டுக் கொள்கிறார். தீவிர அரசியலில் இருந்து விடுபட்டு இலக்கியத்தில் தன்னை ஆழ்த்திக் கொண்டு படிப்படியாக வளர்ந்தவர் ஆவார். இப்பொழுது பிரான்ஸ்சில் வசிக்கிறார்.

25 சினிமாக்களுக்கு மேல் இயக்கிய இவரது 5 திரைப்படங்கள் அவரது தாய் நாடான ஈரானில் தடைசெய்யப்பட்டுள்ளன. அதில் நிசப்தம் என்ற இந்தத் திரைப்படமும் அடங்கும்.

ஏன் இது தடைசெய்யப்பட்டது என்பதை படத்தை மனத்துள் மீள்வாசிப்பு செய்தேன்.

குர்ஸிட்டும், நதீராவும் பாதை வழி போகையில் அவள் திடீரென நிற்கிறாள். கையைப் பற்றி அவனையும் நிறுத்துகிறாள். அவள் முகம் பயத்தால் உறைந்திருப்தைக் காண்கிறோம். “அந்த வழியில் துவக்கோடு இளைஞன் நிற்கிறான். பெண்கள் முக்காடின்றி வந்தால் தாறுமாறாக ஏசுவான்” போகிற போக்கில் சொல்லிப் போகும் வசனமாக முதலில் தோன்றியது. அவள் வேறுபாதையால் செல்வோம் என்கிறாள். இது போன்ற வேறு ஓரிரு காட்சிகளும் இடம்பெற்றுள்ளன.

ஆனால் இரை மீட்கையில் மிகவும் முக்கியமான காட்சியாகப்படுகிறது. தீவிரவாதிகளும், மத கலாசார அடிப்படைவாதிகளும் மாற்றுக் கருத்துகளுக்கு இடமளிப்பதில்லை. துப்பாக்கி, பொல், கடும்சொல் போன்ற ஆயுதங்களால் மக்களை பயமுறுத்தி அடிமைப்படுத்துகிறார்கள். தங்கள் கருத்தை ஆயதமுனையில் திணிக்கிறார்கள். இவற்றைப் பொறுத்துக் கொள்ள முடியாத மக்கள் வேறுபாதையைத் தான் நாடமுடியும். நதீரா தெருப்பாதையை மாற்றுவது ஒரு குறியீடாக ஒலிப்பதாகவே நான் கருதுகிறேன். மிக நாச+க்காக தன் கருத்தைத் தெளிவித்திருக்கிறார். இப்படம் ஈரானில் தடை செய்யப்படுவதற்குக் இதுதான் காரணமாக இருந்ததோ தெரியவில்லை.

படம் முழுவதும் இசை அள்ளி அணைக்கிறது. வருடிக் கொடுத்து இதமளிக்கிறது. கிளுகிளுப்பூட்டிச் சிரிக்கவும் வைக்கிறது. மோனத் துயரில் ஆழவும் வைக்கிறது. இறுதிக் காட்சியில் பீத்தோவனின் 5வது சிம்பனி கம்பீரமாக ஒலிக்கிறது. மேற்கத்தைய உலகின் நாதமும், ஈரானிய கலாசாரத்தின் வாழ்வும், இசையாலும் அற்புதமான கமராக் கண்களாலும் இணையும் உன்னதம் அது.



மங்கிய ஒளி, அமைதியான ஆற்று நீர், அதில் மிருதுவான பூவாக மிதக்கும் ஓடம், தொலைவிலிருந்து அது மெதுவாக நகர்ந்து வருகிறது இவனையும் ஏற்றி வேறிடம் செல்ல. தொலைவில் அவர்கள் வாழ்ந்த வீடு அந்நியமாகி எட்டாத தூரத்தில் மறைந்துகொண்டு வருகிறது. 

வேலை போய்விட்டது. வீட்டு வாடகை கட்ட முடியாததால் பொருட்களை தூக்கி எறிந்து அவர்களையும் வீட்டிலிருந்து வெளியேற்றி விடுகிறான் சொந்தக்காரன். நிர்க்கதியாகி நிற்கிறார்கள் அவர்கள். ஆனால் வாழ்வு என்றுமே அஸ்தமித்துப் போய்விடுவதில்லை. ஏனெனில் அஸ்தமனங்ளையும் உதயமாக்க வலு கொடுக்கும் இசை அவனது கைவசம் இருக்கிறது. அவனது கைகள் அசைகின்றன. தலை தாளம் போடுகிறது. லயநயத்துடன் உடல் அசைந்தாடுகின்றது. ஒரு இசை ஞானிக்குரிய நுட்பத்துடன் இசையைப் பிறக்க வைக்கின்றன. 

அவனது கையசைவிற்கு ஏற்ப கடைத்தெருவே இசை எழுப்புகிறது. பானை, சட்டி, இசை கருவிகள், வாளால் மரமரிதல் என யாவும் வாத்தியங்களாகின்றன. தொழிலாளிகள் தாள லயத்துடன் தட்டி இசையாக எழுப்புகிறார்கள. சந்தை இசைக் கூடமாகிறது. 

இசையில் மயங்கி மனக்கண் மூடிக் கிடந்த நாம் ஏதோ அருட்டுணர்வில் மடல் திறக்கையில் படம் முடிந்திருக்கிறது.

எம்.கே.முருகானந்தன்.

No comments: