வேட்டை
பயந்த சுபாவமுள்ள அண்ணன், வீரமும் துணிச்சலும் மிகுந்த தம்பி ஆகிய இரண்டு சகோதரர்களை பற்றிய கதை வேட்டை.
மாதவன்- ஆர்யா இருவரும் அண்ணன் தம்பிகள். இதில் அண்ணனான மாதவன் மிகவும் பயந்த சுபாவம் உடையவராக இருக்கிறார்.
சிறுவயதிருந்தே தன்னை யார் அடித்தாலும் அவர்களுக்கு பதிலடி கொடுக்க தனது தம்பி ஆர்யாவைத்தான் அழைத்து செல்வார். இந்நிலையில் பொலிஸ்காரரான அவர்களின் அப்பா திடீரென்று இறந்து விட, அந்த வேலை மாதவனுக்கு கிடைக்கிறது.
இந்த வேலையில் மாதவனுக்கு துளியும் விருப்பமில்லை, ஆனால் ஆர்யா அவரை சமாதானம் பண்ணி வேலையில் சேர்க்கிறார். தூத்துக்குடி ரவுடிகள் ஏரியாவில் பொலிஸ்காரராக காலடி எடுத்து வைக்கிறார் மாதவன். ஆனால் அவர் காக்கி சட்டையை மட்டுமே மாட்டிக்கொள்ள, அவர் செய்ய வேண்டிய அடிதடி வேலைகளையெல்லாம் மாறுவேசத்தில் ஆர்யா செய்து முடிக்கிறார். இதனால் மாதவனுக்கு பாராட்டுகள், பரிசுகள் குவிகிறது.
ஆனால் ஒருகட்டத்தில் உண்மை வில்லன் கோஷ்டிக்கு தெரியவர, மாதவனை அடித்து உதைக்கின்றனர். இதனால் இனிமேல் நமக்கு இந்த வேலையே வேண்டாம் என்று முடிவெடுக்கிறார் அவர். ஆனால் அவருக்கு மனத்தைரியம் கொடுத்து, கோழைத்தனத்தை மாற்றி மீண்டும் வேலைக்கு செல்ல வைக்கிறார் ஆர்யா. அதுவரையில் சிரிப்பு பொலிசாக இருந்த மாதவன், அதன்பிறகு அதிரடி பொலிசாக மாறுகிறார். வில்லன் கோஷ்டிகளுடன் ஆவேசமாக மோதுகிறார்.
பிறகு இருவரும் சேர்ந்து வில்லன் கோஷ்டிகளை வேட்டையாடி முடிக்கிறார்கள் என்பதே வேட்டையின் கதை. இதற்கிடையில் அண்ணன் - தம்பிகளின் காதல் என்று படம் நகர்கிறது. நடிப்பை பொறுத்தவரை ஆர்யாவுக்கு ஒரே முகம், அண்ணன் மாதவனுக்குதான் ஆறுமுகம். எனக்கிந்த வேலை வேண்டாம் என்று பதறுவதில் ஆரம்பித்து, பக்காவாக எதிரிகளை சுளுக்கெடுக்கிற வரைக்கும் விதவிதமாக நடிக்கிறார்.
ஆர்யாவுக்கு நகைச்சுவை உணர்வு நன்றாக வருகிறது. ஆக்ஷனும் நகைச்சுவையும் நன்றாக வரும் எந்த நடிகரும் தோல்விப்படங்களைத் தொடர்ந்து கொடுக்க நேர்ந்தாலும் தமிழ்சினிமாவைப் பொறுத்த வரை அவர்கள் தோற்றுப் போவதில்லை.
இன்னும் சொல்லப்போனால் ஆர்யாவின் முதல் முழு நீள ஆக்ஷன் படமென்றுகூட வேட்டையைச் சொல்லலாம். ஆர்யா அடிவாங்கும் போது மாதவன் அந்த கூண்டில் ஏறித்தாண்டி வருவது மனோ சக்தி என்கிற தத்துவத்தின் அடிப்படையில் சாத்தியமே. கால்கள் முற்றிலுமாக செயல் இழந்தவர்கள்கூட அசாதரணமான நேரங்களில் எழுந்து நடந்திருக்கிறார்கள்- இது அறிவியல் பூர்வமான உண்மை.
இருந்தாலும் நேற்று மரண அடி வாங்கின வில்லனின் அடியாட்கள் அடுத்தா நாளே மலர்ச்சியாக வருவது கொஞ்சம் சலிப்பினை ஏற்படுத்துகிறது. ரெண்டுபேரும் வில்லன்களை தீர்த்துக்கட்டும் என்கவுன்ட்டர் மிகவும் அதிர வைக்கிறது தியேட்டரை. இதைப்போலவே ஆக்ஷன் ரசிகர்கள் ரசிக்கிற இன்னொரு காட்சி, தனது கட்டை விரலை வெட்ட வரும் வில்லனின் கட்டை விரலை ஆர்யா காவு கொள்வது.
சமீரா ரெட்டி, அமலா பால் அக்காள் தங்கையாக வருகின்றனர். சமீரா ஸ்கூட்டரை உடைத்து சண்டைக்காரராக ஆர்யா அவரோடு அறிமுகமாவதும் பிறகு அண்ணன் மாதவனுக்கு அப்பெண்ணே மனைவியாக வருவது கண்டு தவிப்பதுமாகிய காட்சிகள் ரசிக்கும்படி உள்ளது.
உயர் பொலிஸ் அதிகாரியாக வரும் நாசர், அவ்வப்போது நகைச்சுவை செய்கிறார். ஏட்டு தம்பி ராமய்யா, வில்லன் அசுதோஷ் ரானா கவனம் ஈர்க்கிறார்கள்.
வில்லனுக்கு முக்கியத்துவம் கொடுப்பதற்காக, அவர் சம்பந்தப்பட்ட காட்சிகளை அதிகரித்துள்ளனர். சமீரா மற்றும் அமலா பால் இடம்பெறும் ஒரு பாடல் மட்டும் நன்றாக உள்ளது.
ஆக்ஷன் படம் என்பதை மனதில் கொண்டு லாஜிக்குகளை யோசிக்க வைக்காமல் விறுவிறு என காட்சிகளை நகர்த்துகிறார் லிங்குசாமி. என்றாலும், அவரது பழைய படங்களின் சாயல் ஆங்காங்கே தலை தூக்குகிறது.
குறிப்பாக 'ரன்' படத்தின் பாடல் காட்சிகள் இங்கேயும் எட்டிப்பார்க்கின்றன. மேலும் வழக்கமான பொலிஸ் கதைகளின் சாயலும், வில்லன் அதை எதிர்கொள்ளும் காட்சியமைப்புகளும் இரண்டாம் பாகத்தின் சுவராஸ்யத்தை குறைக்கிறது. ஆனால் ஒரு நல்ல படம் பார்த்த திருப்தியை கொடுத்திருக்கிறார் லிங்குசாமி.
நடிகர்கள்: ஆர்யா, மாதவன், அமலா பால், சமீரா ரெட்டி, நாசர், தம்பி ராமய்யா, அசுதோஷ் ரானா
இசை: யுவன்சங்கர் ராஜா
இயக்கம்: லிங்குசாமி
தயாரிப்பு: திருப்பதி பிரதர்ஸ்
கொள்ளைக்காரன்
திருட்டையே தொழிலாக கொண்ட ஒரு இளைஞனின் வாழ்க்கையும் அவன் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை செல்லும் கதை கொள்ளைக்காரன்.
தெப்பக்குளத்துல திமிங்கலத்தை இறக்கிவிட்ட மாதிரி படம் முழுக்க குலுங்கிக் கொண்டேயிருக்கிறது தியேட்டர்.
பேரரசு கதைக்கு பாக்யராஜ் வசனம் எழுதினால் எப்படியிருக்குமோ, அப்படி நகைச்சுவை வேலைகளில் நம்மை வசீகரித்து விடுகிறார் அறிமுக இயக்குநர் தமிழ்ச்செல்வன். ஆடு, தோடு என்று கிடைத்ததையெல்லாம் திருடும் கொள்ளைக்காரன்தான் விதார்த்தை காதலிக்கிறார் சஞ்சிதா.
யாருக்கும் அடங்காமல் திரியும் விதார்த், அந்த ஊர் தர்மகர்த்தாவுக்கும் அதே முகத்தை காட்ட, நேரம் பார்த்து கழுத்தறுக்கிறார் வில்லன். திருட்டு தொழிலுக்கு 'பூட்டு' போட்ட பின்பு சோதனை வருகிறது விதார்த்துக்கு. கோவில் நகையை தானே திருடிவிட்டு பழியை இவர் மீது போடுகிறார் வில்லன்.
அதில் நடக்கும் சண்டையில் மனவளர்ச்சி குன்றிய தங்கையை பறி கொடுக்கிறார் விதார்த். அப்புறமென்ன? ரத்தக்களறியாகிறது ஏரியா. வில்லனை கொன்றுவிட்டு சிறைக்கு போகும் விதார்த், அப்புறம் வந்து காதலியை கரம் பிடிப்பதே முடிவு.
'மைனா' ஹிட் என்பதாலேயே விதார்த்துக்கு குருவி என்று பெயர் வைத்திருப்பார்கள் போலிருக்கிறது. திருட்டு ஆட்டை விற்ற பணத்தில் கூலிங்கிளாஸ், குளுகுளு சட்டை சகிதம் வரும் விதார்த், தனது அழகை வர்ணிக்க ஆள் பிடிப்பது நல்ல நகைச்சுவை. ஜாமென்ட்ரி பாக்சில் பணம் இருப்பது தெரியாமல் சஞ்சிதாவிடம் அதை நேர்மையாக திருப்பிக் கொடுப்பதும், அவருக்காகவே டுட்டோரியல் காலேஜில் சேர்ந்து படிக்க முனைவதுமாக ரகளையடிக்கிறார்.
சஞ்சிதாவை அடிக்கும் வாத்தியாருக்கு, அடுத்த கணமே விழுகிற பிரம்படிக்கு தியேட்டரே 'கொல்'லென்கிறது. இமேஜ் பார்க்காமல் அக்காவிடம் விளக்குமாறு அடி வாங்குகிற காட்சி ஒன்றுக்காகவே ஸ்பெஷலாக பாராட்டலாம் விதார்த்தை.
தெருமுனையில் பஸ் ஸ்டாண்டில் இப்படி எங்கு பார்த்தாலும் தென்படுகிற முகம்தான் சஞ்சிதாவுக்கு. அதுவே அவர் மீது தனி அட்டென்ஷனை ஏற்படுத்துகிறது. இதே அடக்க ஒடுக்கத்தை பின்பற்றினால் இன்னொரு தேவயானியாகலாம்.
ஆட்டை திருட்டுக் கொடுக்கிற ஆயா முதல், அநியாயமாக செத்துப் போகிற சிறுமி வரைக்கும் ஃபுல் மார்க் கொடுக்கலாம் எல்லா கேரக்டர்களுக்கும். அக்காவாக வரும் செந்தில் குமாரியின் நடிப்பினைச் சொல்லவே தேவையில்லை. அவர் இருந்தாலே படங்கள் முழுமை பெறுகின்றன என்று சொன்னால் அது மிகையல்ல.
இந்தப் படத்தில் அவரது வழக்கமான மதுரைப் பேச்சுவழக்கும் இருக்கிறது அதனையும் மீறி பொறுப்பற்ற தம்பி, மன நலம் குன்றிய தங்கை, வாழ்க்கைப்பட்டுப் போன இடத்தில் தம்பியால் ஏற்படும் பிரச்சினை தொடர்ந்து தங்கையின் இழப்பு இப்படி ஒவ்வொரு இடத்திலும் தன் நடிப்புத்திறமையை வேறு ஒரு கோணத்தில் பதிவு செய்திருக்கிறார். குணச்சித்திர நடிகைக்கான தேசிய விருது செந்தில் குமாரிக்கு வெகு தூரத்தில் இல்லை எனலாம்.
மன நலம் குன்றியவராக நடித்த பேபி வர்ஷாவும் அருமை. எதைச்சாப்பிட்டாலும் அது இட்லியாக இருந்தாலும் மிட்டாய்களாக இருந்தாலும் அண்ணனுக்கு என்று கொஞ்சம் எடுத்து தன் சட்டைப்பையினுள் வைக்கும் அழகே அழகு.
ஆரம்பத்தில் அப்படி இப்படி என்று படம் அலைபாய்ந்தாலும், போக போக சரியான ரூட்டில் திரைக்கதை நகர்ந்து ரசிக்கும்படி இருக்கிறது. ஏற்கனவே தமிழ் ரசிகர்கள் பார்த்த சென்டிமென்ட் ஃபார்மூலாதான் என்றாலும், அதை திரும்பவும் பார்க்கும் அளவுக்கு திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கிறது.
அதிலும் விதார்த் கூலிங்க்ளாஸ் ஒன்றை மாட்டிகொண்டு நான் இப்போ எப்படி இருக்கேன் சொல்லு. என்று ஒவ்வொறு முறையும் கிரேன் மனோகரை துரத்த, அதற்கும் அவர் ஓடும் காட்சிகளில் தியேட்டரே சிரிப்பு சத்தத்தில் அல்லோலப்படுகிறது.
இப்படி வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் இயக்குநர் சென்டிமென்ட் காட்சிகளின் மூலம் அவ்வப்போது கண்களை ஈரமாக்கி தாய்மார்களின் வரவேற்பையும் பெற்றுவிடுகிறார்.
ஜோகனின் இசை பரவாயில்லை. இரண்டு பாடல்கள் கேட்கும்படி உள்ளன. குறிப்பாக 'சாமிக் குத்தம்' என்ற சோகப்பாடல்.
டைரக்டர் தமிழ்ச்செல்வனின் பேனாவில் துள்ளிவிளையாடும் நகைச்சுவை, சப்பாத்திக் கள்ளியில் சாறெடுத்து அதை பேனா மையாக்கி எழுதுவது போன்ற கிராமத்து இயல்புகள், பழக்க வழக்கங்கள் மனசை கொள்ளையடிக்கிறது.
நடிகர்கள்: விதார்த், சஞ்சிதா ஷெட்டி, ரவிசங்கர், செந்தில் குமாரி, பேபி வர்ஷா, கிரேன் மனோகர்
இசை: ஜோகன்
இயக்கம்: தமிழ்ச் செல்வன்
தயாரிப்பு: கே.வி. பிரசாத்
நண்பன்
இந்தியாவின் கல்வி முறையில் மாற்றம் கொண்டு வர வேண்டியதன் அவசியத்தை சொல்லும் கல்லூரி மாணவர்களின் கதைதான் நண்பன்.
நண்பன் படம் சொல்ல வந்ததெல்லாம் உங்களுக்குப் பிடித்தமான துறையைத் தேர்ந்தெடுத்து படியுங்கள். அதில் நிச்சயமா ஜெயிப்பீர்கள் என்பதுதான். வாழ்க்கையின் மிகப்பெரிய தத்துவத்தை மூன்று மணிநேரத்தில் சொல்லிவிட்டுப் போகிறது நண்பன்.
ஏற்கனவே வெளிவந்த '3 இடியட்ஸ்' படத்தின் ரீமேக், விஜய், ஜீவா, ஸ்ரீகாந்த் நடிப்பில் ஷங்கர் இயக்கும் படம் என்பதால் மிகப்பெரிய எதிர்பாப்பு இருந்தது அதை அதிகமாகவே நிறைவேற்றியிருக்கிறது நண்பன்.
என்ஜினியரிங் படிக்கும் மாணவர்களான ஜீவா, ஸ்ரீகாந்த் உடன் கல்லூரியில் வந்து சேர்ந்து படிக்கிறார் விஜய். மூன்றுபேரும் நல்ல நண்பர்களாகி விடுகிறார்கள். கல்லூரியில் படித்து முடித்து ஜீவா, ஸ்ரீகாந்த் இருவரும் நன்றாக செட்டில் ஆகிவிடுகிறார்கள். ஆனால் நண்பன் விஜய் பற்றி எந்த தகவலும் இல்லை. சில வருடங்கள் கழித்து நண்பனை (விஜய்) தேடி அவனது ஊருக்குப் போகிறார்கள். அங்கு போய் பார்த்தால், அங்கு அவனுக்கு பதிலாக வேறு ஆள் (எஸ்.ஜெ.சூர்யா) இருக்கிறார். அதன் பிறகு என்ன நடக்கிறது என்பது கதை.
படம் முடிந்து வெளியே வந்தாலும் நம் நினைவுக்கு வருவது நாம் பார்த்தது விஜய் படம்தானா என்ற எண்ணம்தான்? இதற்கு முன்பு விஜய் நடித்த படங்களில் எல்லாம் விஜய் அறிமுகமாகும்போதே தாரை தப்பட்டை முழங்கும். பூ மழை பொழியும். இப்படித்தான் இருக்கும் விஜய்யின் அறிமுகக்காட்சிகள். இந்த படத்தில் அப்படி எதுவும் இல்லை. பஞ்ச் வசனங்கள் இல்லை. படத்தில் நடித்த எல்லோருமே ஒரு கேரக்டராகத்தான் வந்து போகிறார்கள்.
பஞ்சவன் பாரிவேந்தனாக வரும் விஜய்யை பார்த்தவுடனே நமக்குப் பிடித்துப் போகிறது. கல்லூரியில் சொல்லித் தருவதெல்லாம் வாழ்க்கைக்குத் தேவையான அறிவு சார்ந்த விஷயம் அல்ல எல்லாம் வேலை பார்ப்பதற்கு தேவையான ஜஸ்ட் படிப்புதான் என்கிற ரீதியில் இருக்கிறது இவர் வந்து பேசுகிற காட்சிகள் எல்லாம். விஜய் பேசும் வசனங்கள் ஒவ்வொன்றிலும் இன்றைய இளைய சமுதாயத்திற்கு இருக்கிறது ஆயிரம் மெசேஜ்.
நண்பன் வந்துவிட்டான் என்ற செய்தி கேட்டு கிளம்பிய விமானத்தையே திருப்பி தரை இறங்கச் செய்து விடும் ஸ்ரீகாந்த் அலட்டலில் ஆரம்பிக்கிற படம் முழுக்க முழுக்க சிரிப்பு மழைதான். சிரிப்பு மட்டுமல்ல சிந்திக்கவும் வேண்டிய மெசேஜ்கள் வந்து போகின்றன ஃப்ரேம் பை ஃப்ரேம். தனக்குப் பிடிக்காவிட்டாலும் அப்பாவுக்காக என்ஜீனியரிங் படித்துவிட்டு பின்பு தன் அப்பாவிடம் தனக்குப் பிடித்த போட்டோகிராபியை படிக்க ஆசைப்படுகிறேன் என்று சொல்லும் காட்சிகள் செம டச்சிங்.
விஜய்க்கு அடுத்து பிரமாதப்படுத்தியிருப்பவர் சத்யன். குறிப்பாக அந்த கல்லூரி விழா மேடைப் பேச்சு. சான்ஸே இல்லை. ஸ்ரீகாந்த், ஜீவா இருவரும் உணர்ந்து நடித்திருக்கிறார்கள். குறிப்பாக ஸ்ரீகாந்துக்கு அதிக வாய்ப்பு. நன்றாகவே பயன்படுத்திக் கொண்டுள்ளார். ஜீவாவின் ஏழ்மையைக் குறிக்க படம் முழுக்க ஒரு ஜிப்பாவை மாட்டிவிட்டிருப்பது நன்றாக இல்லை.
சத்யராஜுக்கு மிக முக்கிய வேடம். சரியாகத்தான் செய்திருக்கிறார். ஆனாலும் ஏதோ ஒன்று குறைவது போன்ற உணர்வு. ஒரு காட்சி என்றாலும் கதைக்கு முக்கிய திருப்பம் தருகிறது எஸ்.ஜே. சூர்யாவின் பாத்திரம். அவரும் கச்சிதமாகச் செய்திருக்கிறார்.
படத்தில் காமெடி ரொம்ப ரொம்ப அதிகம். அதுவும் குலுங்கி குலுங்கி சிரிக்கிற அளவுக்கு இருக்கின்றன காமெடிகள். ஜீவாவின் அம்மா சப்பாத்தி போடும் போது செய்கிற மேனரிஸம் இருக்கிறதே தியேட்டரே செம அலப்பறையாகிறது அந்த காட்சிக்கு. இதற்காகவே ரீப்பிட்டடு ஆடியன்ஸ் நிச்சயம்.
சில காட்சிகளில் குறைகளும் இருக்கின்றன. ஆனால் அது ஒரிஜினலிலும் உண்டு. அந்த வகையில் காட்சிக்குக் காட்சி, வசனத்துக்கு வசனம் அப்படியே மொழியாக்கம் செய்த ஷங்கரை குறைசொல்ல முடியாதுதான். ஆனால் அவர் நினைத்திருந்தால், அந்தக் காட்சிகளில் இன்னும் நம்பகத்தன்மை கொண்டுவந்திருக்க முடியும்.
குறிப்பாக, அந்த பிரசவ காட்சி. என்னதான் வீடியோ கான்பரன்சிங், சக மாணவர்களின் துணை, அபார பொறியியல் திறன் கொண்டு அந்த காட்சியை சமாளித்திருந்தாலும், நடைமுறை சாத்தியம் என்ற கேள்வியைத் தவிர்க்க முடியவில்லை. இந்தக் காட்சிக்கு முன்பு இலியானா - விஜய் டூயட்டால் லேசாக டல்லடிக்கும் படத்தின் இரண்டாம் பாதி, இந்த பிரசவக் காட்சியின் நீளத்தால் தொங்கிப் போகிறது.
மில்லி மீட்டர் சத்யராஜை கெட் அவுட் சார் என்று சொல்லிவிட்டு தள்ளிக்கொண்டு போகும் இடம் டச்சிங். விஜய் அல்லாத ரசிகர்களும் ரசிக்கும்படியாக ஒரு படத்தை நீண்ட நாளைக்கு அப்புறம் பார்த்த திருப்தி. இதற்காக ஷங்கரை எவ்வளவு வேண்டுமானாலும் பாராட்டலாம்.
ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சாவின் கேமிராவை பற்றி சொல்லவேண்டுமென்றால் கலர் ஃபுல், கலக்கல் என்று இரண்டு வார்த்தையில் சொல்லிவிடலாம். ஹாரிஸின் பாடல்கள் ஏற்கனவே ஹிட் அடித்திருக்கிறது. ரீரிக்கார்டிங்கிலும் தூள் கிளப்பியிருக்கிறார். படத்திலிருக்கும் துள்ளல் ரீரிக்கார்டிங்கிலும் இருக்கிறது. ஆண்டனியின் கத்திரியில் இருக்கிறது நாசூக்கு.
ஷங்கர் மற்றும் மதன் கார்க்கியின் வசனங்கள் கூர்மை ஆனால் முக்கியமான வசனங்கள் வரும் காட்சியில் சற்றே அழுத்தம் குறைவாக இருப்பது மிக குறைந்த அளவில் தெரிகிறது. லொகேஷன்கள் மிக அருமை.
சொந்த கதையை படமாக எடுப்பது என்றால் எப்படி வேண்டுமானாலும் எடுத்துத் தள்ளிவிடலாம். ஆனால் அதுவே இன்னொருவரது கதை என்றால், அதுவும் ஏற்கனவே வெளிவந்த படத்தை படமாக எடுப்பது என்றால் கரணம் தப்பினால் மரணம் என்கிற ரீதியில்தான் எடுக்கவேண்டி இருக்கும். அதையெல்லாம் கவனமாக பார்த்து பார்த்து செய்திருக்கிறார் ஷங்கர். நல்ல வேளை இந்த படம் ஷங்கர் இயக்கத்தில் இருந்து வெளிவந்தது.
அனைத்து தரப்பினரையும் முட்டாளாக்கி 3 மணி நேரம் ஜாலியாக இருக்க வைத்த ஷங்கரை கை குலுக்கு பாராட்டுவோம்.
நடிகர்கள்: விஜய், இலியானா, ஸ்ரீகாந்த், ஜீவா, சத்யன், சத்யராஜ், எஸ்.ஜே. சூர்யா, அனுயா
இசை: ஹாரிஸ் ஜெயராஜ்
இயக்குநர்: ஷங்கர்
தயாரிப்பு: ஜெமினி பிலிம்ஸ்
நன்றி விடுப்பு
No comments:
Post a Comment