மெளன சாட்சிகள் - சிறுகதை - சுபானு

.


எங்களோடு வரப்போகின்றாயா அல்லது உன் தங்கச்சியைக் கூட்டிக்கொண்டு போகட்டுமா.. சில அதிகாரக் குரல்கள் நிதர்சனை நிலைகுலைய வைத்தன.
ஐயோ தம்பி என் புள்ளைய விட்டுடுங்க… என்ர தலைப்புள்ள அவன்.. உங்களுக்கு புண்ணியமாப் போகுமையா.. அவனை விட்டுடுங்க… அவன் பச்சப்பாலகன் தம்பி, இப்பத்தான் பதினாறு தொடங்கினது. அவனுக்கு ஒண்ணும் தெரியாது..விட்டுடுங்க எம் புள்ளையை…
என்று அந்த அதிகாரக் குரல்களுக்குச் சொந்தக்காரர்களின் கால்களைப் பிடிக்காத குறையாகக் கெஞ்சினாள் அவன் தாய் சீதாலக்மி..
இங்க பாருங்க அம்மா, குடும்பத்திற்கு ஒருத்தர் கட்டாயம் வந்தேயாகணும் என்று உத்தரவு, நீங்களா உங்கட மவனை அனுப்பி வைக்காட்டிக்கு நாங்க பிடிச்சு இழுத்துட்டுப் போவம்.. எங்களுக்கு இது கண்டிப்பான உத்தரவு… நாங்க இதை மீற முடியாது.. என்ற அந்த அதிகாரக் குரல்கள், அந்தத் தாய் கெஞ்சிக் கேட்டும் இரங்காது நிதர்சனை இழுத்துச் சென்றார்கள்.
அண்ணவை விடுங்க அண்ணா… என்ர அண்ணவை விடுங்க அண்ணா… என்று அவர்கள் பின்னாலேயே ஓடினால் அவள் தங்கை வானதி. அவள் கண் எதிரிலேயே அவள் தமையனை இழுத்துச் சென்றார்கள்.. அவன் கண்ணை விட்டு மறைந்தான் தமையன்.



★ ★ ★

அம்மா உங்கட மகன் தன்ர இன் உயிரினை மண்ணிற்காக தியாகம் செய்து விட்டார். சீதாலக்மியின் கண்கள் இருண்டன. ஐயோ என்ற மகனை இப்படி பலிகொடுக்கவா கஸ்டப்பட்டு வளர்த்த நான். வீட்டுக்கு ஓரு பிள்ளை வரணும் என்டு சொல்லி என் பிள்ளைய இப்படி பலி எடுத்திட்டிங்களே.. என்ற அந்தத் தாயின் புலம்பலையும் கேளாது நகர்ந்து சென்றார்கள் அந்த அதிகாரம் கொண்டவர்கள்.
ஆசை ஆசையாய் வளர்த்த தலைமகன் உடல் சிதறிப் பெட்டியில் அடைத்து வைத்திருந்தார்கள், பின்னர் இறக்கப்பட்டது புதைகுழிக்குள். அதற்கு மேலே ஒர் வாசகம்…



★ ★ ★



அம்மா, அண்ணா இனி வரமாட்டானாம்மா.. விம்மி விம்மி பசியால் அழுது கொண்டு இருந்த தன் இளைய தம்பியை மெல்ல அணைத்தபடி தன் தாயைக் கேட்டாள் வானதி. ஏன்தான் இறைவன் அவளோடு இப்படி கொடுமையாக நடந்து கொள்கிறானோ தெரியாது. அவளைச் சுற்றிப் பின்னப்பட்ட அந்த விதி என்னும் சதி வலையைப் புரிந்து கொள்ளக்கூடிய வயதோ அனுபவமோ அந்தச் சின்னப் பொண்ணுக்கு நிட்சயமாகக் கிடையாது. பதின்மூன்று வயதுக்குள் அவ்வளவு துயரங்களைச் சந்தித்து விட்டாள் அவள். காலத்தின் சவுக்கடிகள் அவளை இன்மும் வதைக்க இருக்கின்றன என்பதை சிறிதும் அறியாமல் இழந்த தன் தனையனை எண்ணி கண்ணீர் விட்டுக்கொண்டிருந்தாள் வானதி.



★ ★ ★




அம்மா தம்பி பாவம் அம்மா! நாங்களாவது பறுவால்ல சாப்பாடு தண்ணியில்லாம பங்கருக்க நாள்ப் பூரவும் கஸ்டப்பட்டாவது இருந்திடுவம் ஆனா இவன் தாங்கமாட்டானம்மா. அழுதுகொண்டே இருக்கிறானம்மா..! கொஞசம் செல்லடி குறையுறப்போ போய் கொஞ்ச பால் சரைச்சுக்கிட்டு வாரட்டாம்மா. பாசத்தோடும் பொறுப்போடும் கேட்டாள் தாயிடத்தே. அவள் தாயோ பாவம். கணவனை இழந்த போதே மனதால் இறந்துபோனாள். தன் மகன் இருக்கின்றான், அவன் வளர தன் கஸடங்கள் எல்லாம் போய்விடும் என நினைத்திருந்தவளுக்குக் கிடைத்த காலனின் பரிசுதான் மகனின் இழப்பு. இன்றோ அவள் மூச்சு மட்டும் உடலில் ஒட்டிக் கொண்ருக்கும் ஒரு நடைப்பிணம்.
நீயிம்மா நான் போய் பாலைக் கரைச்சுக் கொண்டு வாரன். உனக்கும் ஏதாச்சும் கடிக்கிறத்துக்குப் பார்த்து எடுத்துக் கொண்டுவாரன்.. என்று பங்கருக்குள் இருந்து வெளியெறினாள் சீதாலக்மி.
எங்கிருந்து வந்ததோ தெரியாது! திடீர் என அவர்கள் இருந்த பங்கரினைச் சுற்றிலும் எங்கும் புகைமூட்டம். காதடைக்கும் சத்தத்துடன் அங்கே அடுத்தடுத்து விழுந்து வெடித்த இரண்டு செல்லினூடு சீதாலக்மியின் நாடியும் அடங்கிப்போனது.
அம்மா.. எனக் கத்திய வானதியின் குரல் அவளுக்குக் கேட்டு இருப்பதற்தே சந்தர்ப்பம் இல்லை. ஸ்தலத்திலேயே மரணம் என்பது இதுதானா என்பதனைக் கூட உணர முன்னர் அவள் ஆவி பிரிந்திருந்தது. உடல் கூட்டியள்ளப்பட வேண்டிய சுப்பைபோல எங்கும் சிதறிக் கிடந்தது.
வாழ்க்கையென்பதே ஏதே இழப்புக்கள்தான் என்பது போலத் தோன்றியது வானதிக்கு. கண்முன்னே பெற்ற தாய் அடையாளம் தெரியாது சிதைந்து கிடந்தாள். கண்ணீர்விட்டு அழுதவளை தேற்றுவதற்குக் கூட பேருக்கென்று யாருமில்லை அங்கே. அவள் கதறினாள்.. கதறினாள்.. கதறினாள்.. கூடவே தம்பியும் கதறினான் பசியினால்..
ஏன் நான் போயிருக்கக் கூடாதா அந்த செல்லுக்கு… என்னால்தானே எல்லாம்.. இவ்வளவு நேரம் இருந்து விட்டு இப்போது தானா அம்மாவிடம் பசிக்குது என்று சொல்ல வேண்டும். முதல்முறையாக அநாதை என்றால் என்ன என்பதற்து அர்த்தம் புரிந்தது அவளுக்கு.. கண்முன்னே உலகம் இருண்டது. சிறிது நேரத்தில் எல்லாமே அடங்கிப்போனது அங்கே..
அயலவர்கள் வந்தார்கள். ஏதேதோ கதைத்தார்கள். அந்த பங்கருக்குள்ளேயே சீதாலக்மியைப் போட்டு மண்ணால் மூடிவிட்டு வானதியை அழைத்துக் கொண்டு சென்றார்கள். இனிமேல் இழப்பதற்து தம்பியைத் தவிர ஏதுமில்லை அவளிம் இப்போது.



★ ★ ★



ஆமிக்காரன் மண் அணையை உடைச்சிட்டானாம். எல்லாச் சனமும் ஆமிக்கரங்கட பக்கத்திற்து போறாங்க வாங்க நாங்களும் போவம்.. என எழுபது கடந்த
ஓரு முதியவர் வந்து கடற்கரையோரத்தில் அமைந்திருந்த பொலுத்தீன் கூடாரத்தினுள் சொன்னதும் அங்கிருந்து எல்லோரும் தமது மூட்டை முடிச்சுக்களுடன் கிளம்பினார்கள். அங்கிருந்த வானதியும் தன் ஒரே ஒரு உறவான தம்பியுடன் புறப்பட்டாள்.



★ ★ ★




பதின்முன்று வயதிலிருந்து முப்பத்ததைந்து வயதுக்குப்ட்பட்டவங்க இங்கால வாங்க… புதிதாய் முளைத்தன அதிகாரக் குரல்கள் சில.
கைக்குழந்தையான தன் தம்பியுன் போய் நின்றாள் வானதி. ஏய் கையில வைச்சிருக்கிறத உன் சொந்தக்காரர் யாரிடமாவது கொடுத்துவிட்டு இங்கால வந்து நில்லு.. மீண்டும் கொக்கரித்தன அதே அதிகாரக் குரல்கள். அவளை விட்டால் தம்பிக்கும், தம்பியை விட்டால் அவளுக்கும் வேறு நாதியென்பதே இந்த உலகத்திற் கிடையாது என்பது, எங்கே அந்த அதிகாரக் குரலுக்குப் புரியவா போகிறது.
ஏதோ வாழ்வாதரதத்திற்கு ஆதரவு தரப்போகிறார்கள் அதனால்த்தான் கூப்பிடுகின்றார்கள் என எண்ணி தம்பியை அந்த எழுபது கடந்த முதியவரிடம் ஒப்படைத்தாள். வாகனம் ஒன்றில் ஏற்றி எங்கோ கொண்டு செல்லப்பட்டாள்.. அவளுக்கும் தெரியாது எங்கே செல்கின்றாள் என்று..!



★ ★ ★




முள்ளுக் கம்பிகளுக்கு அப்பால் இறுகிய மனதோடு தம்பியை எப்போது பார்க்கப் போகின்றோம் என்ற எதிர்பார்ப்புடன் நின்றுகொண்டு இருந்தாள், ஒரு குடும்பத்தின் பரிதாப மரணங்களுக்கு எல்லாம் மொன சாட்சியான வானதி. அவளுக்கு என்றைக்கும் தெரிய வரப்போவதே இல்லை அவள் தம்பியின் நிலை. அவளும் என்றுமே வாய் திறந்து பேசப்போவதும் இல்லை அவளுக்கு இந்த உலகம் தந்த பரிசுகளைப் பற்றி. மொன மொழிபேசும் அவளுக்குள்ளேயே என்றும் உறங்கும் அந்தப் பரிசுகள்.

நன்றி: உஞ்சல்.com

No comments: