உலகச் செய்திகள்

.
தென் சூடான் கலவரம்: 1 இலட்சம் பேர் பாதிப்பு
பாரசீகக் குடாவில் போர் மூளும் சாத்தியம்?
பஹ்ரேனில் மீண்டும் போராட்டம்

தென் சூடான் கலவரம்: 1 இலட்சம் பேர் பாதிப்பு


21/1/2012

தெற்கு சூடானில் நடந்து வரும் உள்நாட்டு கலவரத்தில் 1 லட்சத்து 20 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக ஐ.நா., தெரிவித்துள்ளது.

கடந்த 6 மாதங்களுக்கு முன் சூடானிலிருந்து பிரிந்து தெற்கு சூடான் புதிய நாடு உருவானது.

இந்நிலையில், அங்கு உள்நாட்டு கலவ்ரங்கள் தொடர்ந்த வண்ணம் உள்ளன.

இதன் காரணமாக சுமார் 1லட்சத்து 20 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களுக்கு மனிதாபிமான உதவிகள் தேவைப்படுவதாகவும் ஐ.நா. தெரிவித்துள்ளது
நன்றி வீரகேசரி

பாரசீகக் குடாவில் போர் மூளும் சாத்தியம்?

கவின்
23 /1/2012


அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகள் சர்ச்சைக்குரிய ஹோர்முஸ் நீரிணைப்பகுதிக்கு தமது போர்க் கப்பல்களை அனுப்பியிருப்பதால் அங்கு பெரும் பதற்றம் நிலவுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

ஈரான் அண்மையில் ஹோர்முஸ் நீரிணைப்பகுதியை மூடிவிடுவதாகத் தெரிவித்தமையை அடுத்தே இவ் அதிரடி முடிவினை மேற்குலக நாடுகள் மேற்கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

ஹோர்முஸானது பாரசீகக் குடாவையும், ஓமான் குடாவையும் இணைக்கும் நீரிணைப்பகுதியாகும்.

பாரசீகக் குடாவைச் சுற்றியுள்ள, பெற்றோலிய உற்பத்தி நாடுகள், திறந்த கடற்பகுதியை அடைவதற்கான ஒரே வழியாகும்.

கப்பல்கள் மூலம் சராசரியாக 17 மில்லியன் பெரல்கள் எண்ணெய் அதாவது உலக எண்ணெயின் 35% தினசரி இப் பகுதியினூடாகவே அனுப்படுகின்றன.

இது உலகில் பயன்படுத்தப்படும் எண்ணெயின் சுமார் 20% ஆகும்.

இதனால் வளைகுடா நாடுகளைப் பொறுத்தவரை இந் நீரிணை, பொருளாதார ,இராணுவ முக்கியத்துவம் கொண்ட ஒரு பகுதியாகும்.

மேற்குலகினால் தம்மீது பிரயோகிக்கப்பட்டுவரும் பொருளாதார நெருக்கடிக்கு பதிலடிகொடுக்கும் வகையில் இப்பகுதியை மூடி விடவுள்ளதாக ஈரான் தெரிவித்திருந்தது.

இந்நிலையில் 100,000 தொன்கள் நிறைகொண்ட 'USS Abraham Lincoln' என்ற விமானத்தாங்கி அமெரிக்க கப்பல் ஹோர்முஸ் பகுதியில் நங்கூரமிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

ஈரானின் கடுந்தொனியிலான எச்சரிக்கையையும் மீறி அமெரிக்கக் கப்பல் அங்கு நுழைந்துள்ளது.

பிரிட்டன், அமெரிக்கா மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகள் தனித்தனியாக பாரசீக வளைகுடாப்பகுதியில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபடுவது வழக்கமாகும்.

இம்மூன்று நாடுகளினதும் கப்பல்கள் ஒரே நேரத்தில் அப்பகுதியில் பிரவேசித்திருப்பதானது பெரும் பதற்றத்தினை ஏற்படுத்தியுள்ளது.
நன்றி வீரகேசரி

பஹ்ரேனில் மீண்டும் போராட்டம்


26/1/2012

பஹ்ரேனில், அரசுக்கு எதிரான போராட்டங்கள் மீண்டும் தீவிரம் அடையத் தொடங்கியுள்ளன. நேற்று முன்தினம் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது பலர் கைது செய்யப்பட்டனர்.

பஹ்ரேனில், ஷியா முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ளனர். ஆனால், மன்னர் ஹமாத் பின் இசா அல் கலீபா, சுனி பிரிவைச் சேர்ந்தவர். அந்நாட்டில், தாங்கள் இரண்டாந்தரக் குடிமக்களாக நடத்தப்படுவதாக ஷியாக்கள் கருதினர்.

இந்நிலையில், எகிப்தில் ஏற்பட்ட புரட்சியைத் தொடர்ந்து, பஹ்ரேனிலும், மக்கள் மன்னருக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். எனினும், சில மாதங்களிலேயே, இராணுவம், சவூதி அரேபியாவின் படைகள் ஆகியவற்றின் துணையால், ஆர்ப்பாட்டம் நசுக்கப்பட்டது.

இதற்கிடையில், இரு நாட்களுக்கு முன்பாக, சிட்ரா, பானி ஜம்ரா கிராமங்களில் பொலிஸார் குவிக்கப்பட்டுள்ள காட்சிகளை, "பேஸ்புக், டிவிட்டர்' உள்ளிட்ட சமூக வலைத் தளங்களில் வெளியிட்ட, அல் வெபாக் கட்சி, மக்கள் வீடுகளை விட்டு வெளியே வந்து இராணுவத்தை எதிர்கொள்ளும்படி அழைப்பு விடுத்திருந்தது. இதையடுத்து நேற்று முன்தினம், பல கிராமங்களில் இருந்து மக்கள் திரண்டு சாலை மறியல்களில் ஈடுபட்டனர்.

எனினும், பொலிஸார் அவர்களைக் கலைத்துவிட்டனர். இருதரப்புக்கும் இடையில் ஏற்பட்ட மோதலில், பலர் காயம் அடைந்தனர். பலர் கைது செய்யப்பட்டனர்.
நன்றி வீரகேசரி

No comments: