மௌனம் கலைகிறது....நடராஜா குருபரன் -பகுதி 1

.


நடராஜா குருபரனின் மௌனம் கலைகிறது என்ற தொடரை அவரின் குளோபல்தமிழ்நியூசில் இருந்து தொடற்சியாக தமிழ்முரசுஓஸ்ரேலியா நமது வாசகர்களுக்காக மீள்பிரசுரம் செய்ய இருக்கின்றது என்பதை அறியத்தருகின்றோம். நன்றி குளோபல் தமிழ்நியூஸ்.





வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் அடைந்தவற்றையும் அறிந்தவற்றையும் உணர்ந்தவற்றையும் மௌனமாகச் சுமந்து திரிந்தேன். நித்திய கண்டமென்றாலும் நீண்டு வாழக்கிடைத்த தவத்தால் மௌனம் கலைகிறேன்.
காலத்தடம் என் நினைவுகளுள் பதித்தவற்றை அதுவே மீண்டும் பறித்துக் கொள்வதற்குள் நினைவுகளைத் தூசிதட்டி பலவேளைகளில் சாம்பல்களையும் தட்டி எடுத்து உங்கள் முன் வைக்க வேண்டிய கடமையை ஒரு ஊடகவியலாளனாக உணர்கிறேன்..
எதைச் சொல்லலாம் எதனைச் சொல்லக் கூடாது என மறுகிக் குறுகிக் கிடந்த நாட்கள் போயின. எல்லாவற்றையும் சொல்லிவிட வேண்டும் என்னும் அறிவின் தடத்தில் வந்து நிற்கிறேன்.



எங்கள் காலத்தின் மௌனம் கலைவது துகிலுரிவது போன்றது. துயர் களைவதற்கான முதல் நிலையாக கலையும் என் மௌனமும், உங்கள் ஆதரவு தொடரும் என்ற துணிவில் வெளிக்கிளம்பும் எதிர் வினைகளுக்காகவும்  நிமிர்கிறேன்.
வழமையான இளமைப்பருவத்தைத் தொலைத்து 80களில் தங்கள் இலட்சியப்பயணத்தைத் தொடங்கிய ஆயிரக்கணக்கான இளைஞர்களுள் ஒருவனாக விடுதலைப்போராட்டத்துள் இறங்கிய போது இத்தனை மௌனங்களைச் சுமக்க வேண்டியிருக்கும் என நினைத்திருக்கவில்லை. 
மூன்று தசாப்தங்கள்... ஒவ்வொரு தசாப்தமும் ஒவ்வொரு பரிமாணத்தை கொண்டதாக அமைந்தது ஒன்றும் அதிசயமல்ல.

எண்பதுகள் ( விடுதலை இயக்கங்களின் காலம்)

தமிழீழ மக்கள் விடுதலைக்கழகப் (PLOT) போராளியாக...
இயக்கங்களுக்கிடையிலான முரண்பாடுகளின் பலிக்கடாவாக மரணத்தின் விழிம்புகளைத் தொட்டவனாக...
தமிழீழ மக்கள் விடுதலைக்கழகத்தின் (PLOT) உட்கட்சிப் போராட்டத்தில் ஒருவனாக...
விடுதலைப்புலிகளின் கைதியாக...
இந்திய இராணுவ ஆக்கிரமிப்பில் அகதியாக..
பல்கலைக்கழக மாணவனாக...

தொண்ணூறுகள் (தனிமனித வாழ்வும் இருப்புமான காலம்)

அச்சு ஊடக ஊடகவியலாளராக (சரிநிகர்)..
தனியார் கல்விநிலைய ஆசிரியராக..
அச்சக உரிமையாளராக..

இருபதாம்நூற்றாண்டு (முழு நேர ஊடகவியலாளனான காலம்)

சூரியன் FM இல் வானொலிச் செய்தியாளனாக..

2000 ஆண்டில் வானொலிச் செய்தியாளனாகிய எனக்கு, அக்காலப்பகுதியில் தொடங்கிய இலங்கைஅரசுக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையிலான சமாதானப் பேச்சுவார்த்தைகளின் செய்திசேகரிப்பாளனாகும் வாய்ப்புக்கிடைத்தது. இன்னும் சொல்லப்போனால் எனது முயற்சியினால் உருவான வாய்ப்பது.
* டோக்கியோ உதவி வழங்கும் நாடுகளின் மகாநாடு
* இலங்கைப் பிரதமர் றணில் விக்கிரமசிங்கவின் வெள்ளை மாளிகை விஜயம் 
* பிரித்தானிய பிரதமர் அலுவலகத்திற்கான விஜயம் 

என்பவற்றின் போது செய்தி சேகரிப்பாளனாக இருந்தேன்.

2006ல் கொழும்பில் நான் 'இனம்தெரியாதோரால்' கடத்தப்பட்டதைத் தொடர்ந்து எழுந்த தொடர் உயிர் அச்சுறுத்தல் காரணமாக 2007ன் இறுதிப் பகுதியில் பிரித்தானியாவுக்குப் புலம்பெயர நேர்ந்தது. உடல் பெயர்ந்தபோதும் உள்ளம் பெயரவில்லை. இன்று உலகத் தமிழ் ஊடக வலையமைப்பின் (GLOBAL TAMIL MEDIA NET WORK) பணிப்பாளராக நமக்குத் தொழில் ஊடகமானது. 
இயக்க காலம், தனிமனித இருப்புக்கானகாலம், ஊடகக்காலம் என நீளும் கட்டங்களைத் தாண்டி வந்த என் வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் பலதை விழுங்கவும் சிலதை மெல்லவும் ஒன்றிரண்டை மட்டுமே பேசவும் முடிந்தது. 
என்னுடையது மட்டுமல்ல கடந்த மூன்று தசாப்தத்தின் தமிழர் வாழ்வின் பல்வேறு கூறுகளைச் சேர்ந்த அனுபவங்களும் பேசப்படவேண்டும்.  தங்களுடைய மௌனங்களைக் கலைக்கத் துணிபவர்களுக்கு ஆதரவாக துணையாக என் நீண்ட மௌனமும் கலைகிறது... தொடராக நீள்கிறது...

(காலப்பொருத்தம் கருதி 2000 ஆண்டுக்குப் பின்னான அனுபவங்களில் தொடங்கிப்பின் எண்பது தொண்ணூறுகளுக்குச் செல்லலாம் என நினைக்கிறேன்)

இரண்டாயிரமாம் ஆண்டு (ஊடகக்காலம்)

2002ஆம் ஆண்டு இலங்கையின் அரசியலில் பல திருப்பங்களை ஏற்படுத்திய ஆண்டு.  இலங்கையின் இரண்டாம் குடியரசு யாப்பு உருவாக்கத்தின் பின் 22 வருட ஆட்சியில் நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி ஒரு கட்சியின் தலைவராகவும், பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை பெற்று பிரதமராக பிறிதொரு கட்சியின் தலைவரும் தெரிவு செய்யப்பட்ட ஒரு முக்கிய ஆண்டு.
இந்த ஆண்டில்தான் இலங்கையின் இரண்டு தசாப்தத்திற்கு மேலாக இடம்பெற்ற ஆயுத மோதல் நீண்டதொரு சமாதானத்திற்காக ஓய்வுக்கும் வந்தது. ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்தின் பிரதமராக இருந்த றணில் விக்கிரமசிங்கவும் விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனும் சமாதான உடன்படிக்கையில் கையொப்பம் இட்டதும் 2002ஆம் ஆண்டுதான். 
இந்த ஒப்பந்தத்துடன் நோர்வேயின் மத்தியஸ்த்தில் இலங்கைக்கு வெளியில் பேச்சுவார்த்தைகள் ஆரம்பமாகின. இது இலங்கை அரசியலில் மட்டுமல்ல எனது வாழ்விலும் பல மாற்றங்களை ஏற்படுத்தியது. இலங்கையின் அரசியல் எல்லைக்குள் மட்டுமே குறுகி இருந்த என் பார்வை உலக அளவில் விரிவடைவதற்கும் ராஜதந்திர மட்டத்திலும், சர்வதேச ஊடக அமைப்புகள் மட்டத்திலும் பல்வேறு தொடர்புகள் கிடைப்பதற்கும் இந்தச் சமாதானப் பேச்சுவார்த்தைகள் அனைத்திலுமே செய்தியாளனாக கலந்து கொள்ளும் வாய்ப்புக்கிடைத்தது காரணமாகியது.
2000 ஆண்டில் சூரியன் FM இல் ஒரு வருட ஒப்பந்தத்தில் செய்தி ஆசிரியராக இணைந்ததுடன் என்வாழ்வு முன்னரை விடவும் சுவாரஸ்யமானதாகவும் சவால்கள் நிறைந்ததாகவும் மாறியது. விடுதலைப்புலிகளுக்கும் இலங்கை அரசபடையினருக்கும் இடையிலான மோதல்கள் உக்கிரமடைந்திருந்த காலப்பகுதியில் மக்களின் மனதில் நிலையான இடத்தைப் பிடித்திருந்த இலத்திரனியல் ஊடகமான சூரியன் FM இல் இணைந்தமை என் வாழ்வில் ஒரு திருப்புமுனை ஆகியது. ஏற்கனவே அச்சு ஊடகத்தில் பணியாற்றிய அனுபவம் இருந்த போதும் இலத்திரனியல் ஊடகப் பணியின் ஆரம்பம் ஒரு புதிய சவாலாகவே இருந்தது.
சூரியனில் இணைந்து 3 ஆவது நாள் அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரசின் தலைவரும் பிரபல சட்டத்தரணியுமான குமார் பொன்னம்பலம் வெள்ளவத்தை விவேகானந்த வீதியில் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த செய்தி எனது நண்பரும் முச்சக்கர வண்டிச் சாரதியுமான காமினி மூலமாக எனது கையடக்கத் தொலைபேசிக்கு உடனடியாகவே வர திரு பொன்னம்பலம் அவர்கள் சுடப்பட்டு ஐந்து நிமிடங்களுக்குள் சூரியன் FM ல் அது உடனடிச் செய்தியாக ( Breaking News ) ஒலிபரப்பாகியது. இந்தச் செய்தி மூலமாகவே தமது தந்தை சுடப்பட்ட செய்தியை அவரது மகன் கஜேந்திரகுமார் பொன்னம்பலமும் மகளும் மனைவியும் அறிந்தனர். 
இந்தச் சம்பவம் நான் வேலைக்குச் சேர்ந்து மூன்று நாட்களே ஆகியிருந்த போதும் சூரியன் FM நிறுவனம் என்மீது கவனம் கொள்வதற்கான காரணமாகவும் அமைந்தது. (சூரியக் குடும்பத்தின் வாழ்வுக் காலம் குறித்து எனது கடத்தலும் தொடர் உயிர் அச்சுறுத்தலும் என்ற தனியான ஒரு பதிவில் பார்ப்போம்.)

இது போன்ற பல முக்கிய செய்தி சேகரிப்புக்கள் உடனடிச் செய்திகள் காரணமாக ஒரு ஊடகவியலாளனாக எனது பெறுமானம் அதிகரித்தது. எண்பதுகளில் தொடங்கிய எனது அரசியல் வாழ்வு எனக்களித்த எல்லாவிதமான இழப்புக்களுக்கும் நித்திய கண்டங்களுக்கும் பிரதியுபகாரமாக எனக்கொன்றை விட்டுச்சென்றிந்தது. அதுதான் விலைமதிக்க முடியாத அரசியல் மற்றும் தனிமனிதத் தொடர்புகள்.
சமூகத்தின் சகல மட்டங்களிலும் எனக்கிருந்த இந்தத் தொடர்புகள் எனது ஊடகச் செயற்பாடுகளுக்கு வலுச்சேர்த்தன. இந்த வலு என்னை சூரியனுள் பொறுப்பும் கவனமும் நிறைந்த தமிழ்ச் செய்திப்பிரிவின் பொறுப்பாளர் என்ற உயர் நிலைக்கு இட்டுச்சென்றது. இதன்வழி அரசு-புலிகள் சமாதானப்பேச்சு வார்த்தைகளில் ஊடகவியலாளனாகக் கலந்துகொள்ளும் வாய்ப்புத்  தோன்றுகிறது.

2000ம் ஆண்டுகளில் எமது வானொலி நிறுவனம் ஐக்கிய தேசியக் கட்சியுடன் ஒரு மெல்லியதான நெருக்கத்தைக் கொண்டிருந்தது. அந்த நெருக்கமும் ஐக்கியதேசியக் கட்சியின் முக்கியஸ்த்தர்கள் சிலருடன் எனக்கு இருந்த தொடர்பும்,  சமாதானப் பேச்சுக்கள் அனைத்திலும் செய்தியாளனாக கலந்துகொள்ளும் வாய்ப்பை ஏற்படுத்தின. பிரதானமாக முன்னாள் பிரதமர் றணில் விக்கிரமசிங்கவின் அமரிக்க வெள்ளை மாளிகை விஜயம், பிரித்தானிய பிரதமர் ரொனிபிளையருடனான சந்திப்பு போன்றவற்றுக்கு செல்லும் வாய்ப்பு கிடைப்பதற்கு அவை முக்கிய காரணமாகின.
கூடவே 2003 நவம்பருக்கு இடைப்பட்ட காலத்தில் நிகழ்ந்த மூன்று கட்ட சமாதானப் பேச்சுவார்த்தைகள் குறித்த செய்தி வழங்கல் மூலம் தமிழ்வானொலி கேட்போர் மத்தியில் ஒரு கவனிப்பை எமது வானொலியால் ஏற்படுத்த முடிந்தமையால் எமது நிறுவனமும் எனக்கு முழுமையான ஆதரவை வழங்கியது. 
இவையே வெள்ளை மாளிகைக்கு சென்ற றணிலின் பயணத்தில் நான் இணைந்து கொள்ளக் கிடைத்தமைக்கான பின்னணிகள்.
றணில் விக்கிரமசிங்கவின் அமரிக்க வெள்ளைமாளிகை விஜயமும் மறைக்கப்பட்ட உண்மைகளும் 
அண்மைய நாட்களில் விக்கிலீக்ஸில் ஐக்கியதேசியக் கட்சியின் தலைவர் றணில் விக்கிரமசிங்க, அவரது முன்னைய அரசாங்கம், முன்னாள் அமைச்சர் மிலிந்த மொறகொட, அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் முதலானோர் குறித்துப் பரபரப்பான தகவல்கள் வெளியாகி வருகின்றன. குறிப்பாகச் சமாதான காலத்தில் ஐக்கியதேசியக் கட்சி அரசாங்கத்தினதும் அதன் முக்கிய தலைவர்களதும் நடவடிக்கைகள் குறித்த தகவல்களை விக்கிலீக்ஸ் அம்பலப்படுத்தி வருகிறது. ஆனால் அமெரிக்க அரசாங்கத்திற்கும் அதன் உலகளாவிய தூதரகங்களுக்கும் இடையில் கேபிள் ஊடாக இடம்பெற்ற தகவல் பரிமாற்றங்களையே விக்கிலீக்ஸ் அம்பலப்படுத்துகிறது. அதற்கு அப்பாலும் நேரடியாக இடம்பெற்ற சந்திப்புக்கள் அதன்போது செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தங்கள் பற்றிய அன்றைய காலத்தின் திடுக்கிடும் தகவல்கள் பற்றி அதிகம் வெளிவரவில்லை எனவே நினைக்கிறேன். அதனால் இப்போது பரபரப்பாக பேசப்படும் விடயங்களில் தொடங்கி பின்னோக்கிச் செல்லலாம் என நினைக்கிறேன்.
அன்று செய்தி சேகரிப்பிற்குச் சென்றவர்களில் ஒருவர் மூத்த முஸ்லீம் ஊடகவியலாளரான அமீன் மற்றயது நான். நாமிருவர் மட்டுமே தமிழ்பேசும் ஊடகவியலாளர்கள். சுட்டுக்கொல்லப்பட்ட லசந்தவிக்கிரமதுங்க உள்ளிட்ட பல சிங்கள ஊடகவியலாளர்களும் அன்று வந்திருந்தனர். அமீன் லேக்கவுஸில் பணிபுரிந்ததால் அவர்குறித்து எவரும் ஐயம் கொள்ள வில்லை. ஆனால் சமாதானப் பேச்சுவார்த்தைகளில் செய்தியாளராக கலந்துகொண்ட என் மீது சிங்கள ஊடகவியலாளர்கள் மத்தியில் சந்தேகம் இருந்தது. றணிலின் அமரிக்க விஜயம் குறித்து அங்கு மேற்கொள்ளப்பட்ட இரகசிய உடன்படிக்கைகள் குறித்து தகவல் வெளிச் சென்றால் சமாதானப் பேச்சில் தாக்கம் ஏற்படுத்தும் என அவர்கள் ஐயுற்றிருந்தார்கள். அதனால் பல முக்கிய சந்திப்புக்களுக்கு தெரிவு செய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் மட்டுமே அழைத்துச் செல்லப்பட்டனர்.
எனினும் பின்னர் அவ்வாறு அழைத்துச் செல்லப்பட்ட ஊடகவியலாளர்கள் விடுதியில் வந்து உரையாடும் போது கசியும் விடயங்கள் மற்றும் முக்கிய தகவல்கள் மனதில் பதிவு செய்து கொள்ளக் கிடைத்தன. ஆயினும் அந்தப் பதிவுகைளை இப்படி தொடராக எழுத வேண்டும் என்ற நினைப்போ நோக்கமோ அன்று என்மனதில் இல்லாததனால் திகதி வாரியாகவோ அல்லது ஒளிப்படத் தொனுப்பாகவோ அவற்றை பேணத் தவறிவிட்ட துர்பாக்கியத்தை நினைக்கும் போது மனது வலிக்கிறது. என்றாலும் இயன்றவரை மனதுள் உறைந்திருக்கும் பழைய நினைவுகளை மீட்கிறேன்.
அந்த நினைவுகள்,  மௌனத்தை கலைக்கும் எனது அடுத்த பதிவில் 
மகிந்த ராஜபக்ஸ அன்றன்றே கொல்வார் றணில் நின்று கொல்வார்...!. என்பதாக தொடரும்.... 
நடராஜா குருபரன்

No comments: