இலங்கைச் செய்திகள்

.
சன்னார் கிராமத்தில் வெளியார் அத்துமீறிப் பிரவேசம் மக்கள் மத்தியில் பதற்றம், பெரும் களேபரம்


போலி ஆவணங்களை பயன்படுத்தி பாரியளவில் காணி மோசடிகள் பொலிஸார் கடும் எச்சரிக்கை

திருகோணமலை நகரின் விநாயகபுரம் பகுதியில் அப்பாவி தமிழ் மக்கள் மீது சிங்களர்கள் கடுமையான தாக்குதல்:-


அன்றாட நிகழ்வாகிவிட்ட வீதி விபத்துகளும் உயிர்ப்பலிகளும்
வடக்கு புகையிரதப்பாதை 2013 இல் நிறைவடையும் (பட இணைப்பு)

சன்னார் கிராமத்தில் வெளியார் அத்துமீறிப் பிரவேசம் மக்கள் மத்தியில் பதற்றம், பெரும் களேபரம்
Tuesday, 24 January 2012

 மன்னார் சன்னார் கிராமத்திற்குள் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் புத்தளத்திலிருந்து வாகனங்களில் வந்திறங்கிய 150 க்கும் மேற்பட்டோர் அப்பகுதி மக்களின் வாழ்விடங்களை ஆக்கிரமிக்க முற்பட்டதுடன் அப்பகுதியில் பல்வேறு பாதைகளையும் அமைத்ததால் பெரும் கலவர நிலையேற்பட்டது. அங்கு வாழும் மக்களுக்கும் புத்த ளத்திலிருந்து அரசியல்வாதியொருவரால் அழைத்து வரப்பட்ட மக்களுக்குமிடையே ஏற்பட்ட முறுகல் நிலை மோதலாக மாறவிருந்த நிலையில் நேற்று நண்பகல் அங்கு சென்ற மன்னார் மேலதிக அரச அதிபர் கடும் உத்தரவுகளைப் பிறப்பித்ததையடுத்து நிலை ஓரளவு சுமுக நிலைக்கு வந்துள்ளது. இது பற்றி மேலும் தெரியவருவதாவது; மன்னார்பூநகரி வீதியில் பள்ளமடு சந்தியிலிருந்து சுமார் 8 கிலோ மீற்றர் தூரத்தில் பெரியமடு கிராமத்திற்கு அருகில், மன்னாரிலிருந்து சுமார் 32 கிலோ மீற்றர் தூரத்தில் மாந்தை மேற்கு பிரதேச சபை ப்பிரிவில் சன்னார் கிராமம் உள்ளது. இங்கு 147 குடும்பங்கள் வசிக்கின்றன. இவர்கள் விவசாயம், சேனைப் பயிர்ச் செய்கையில் ஈடுபடுவதுடன் விவசாயக் கூலிகளாகவுமுள்ள னர். இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் ஐந்து வாகனங்களில் புத் தளத்திலிருந்து 150 க்கும் மேற்பட்டோர் சன்னார் கிராமத்திற்குள் வந்திறங்கினர். இவர்களுக்கு அரசியல்வாதியொருவர் தலைமைதாங்கினார். ஏற்கனவே இந்தக் கிராம எல்லையில் புல்டோசர்கள் கொண்டுவந்து நிறுத்தப் பட்டிருந்த நிலையில் அங்கு வந்தவர்கள் அந்த புல்டோசர்கள் மூலம் பற்றை, செத் தைகளை வெட்டி அழித்து காணிகளைத் துப்புரவாக்கியதுடன் புதிய பாதைகளையும் குறுக்குப் பாதைகளையும் அமைத்தனர். இவர்கள் தங்களுடன் நில அளவை யாளர்களையும் அழைத்து வந்திருந்ததுடன் அவர்களின் உதவியுடன், புத்தளத்திலிருந்து வந்தவர்களுக்கு அவசர அவசரமாக காணிகளும் பங்கிடப்பட்டன. திடீரென அங்கு வந்திறங்கியோரின் அத்துமீறல்கள் ஆக்கிரமிப்புகளால் அதிர்ந்து போன கிராம மக்கள் ஒன்று திரண்டு கேள்வி எழுப்பவே இரு தரப்புக்குமிடையே வாய்த்தர்க்கம் ஏற்பட்டு கைகலப்பு ஏற்படும் நிலை உருவானது. கிராமத்தவர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்ததுடன் தாங்கள் ஆண்டாண்டு காலமாக வசிக்கும் பகுதியை அரசியல் பின்னணியுடன் ஆக்கிரமிக்க முயல்வதை அனுமதிக்கப் போவதில்லையெனக் கோஷமெழுப்பினர். இவ்வேளையில் அங்கு வந்த மாந்தை மேற்குப் பிரதேச செயலாளர் ஸ்ரீஸ்கந்தராஜாவும் புத்தளத்திலிருந்து வந்தவர்களுக்கு சார்பாகப் பேசியதுடன் அரசின் உயர்மட்ட உத்தரவிலேயே இவை நடப்பதாகவும் இதனைத் தடுத்து நிறுத்த முயலவேண்டாமெனவும் தடுத்து நிறுத்த முயல்வோருக்கெதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படுமென எச்சரித்ததாகவும் கிராமவாசிகள் தெரிவித்தனர். இதன்போது அக்கிராமத்திற்கு பெருமளவு படையினரும் பொலிஸாரும் வந்து சேர்ந்ததுடன் படையினர் தங்களை மிகக் கடுமையாக மிரட்டிய போது புத்தளத்திலிருந்து வந்தோர் தங்களுக்கு கொலை மிரட்டல் விடுத்ததுடன் பெண்களைக் கீழ்த்தரமான வார்த்தைகளால் பேசியதாகவும் பொலிஸார் ஓரளவு நியாயமாக நடந்துகொண்டதாகவும் கிராமவாசிகள் தெரிவித்தனர். மாந்தை மேற்கு பிரதேச சபை உறுப்பினர் ஒருவரது தலைமையில் வந்தவர்களே இவ்வாறு செயற்பட்டதாகவும் மாலைப்பொழுது மங்கி இருள் சூழ்ந்ததும் அவர்கள் அங்கிருந்து வெளியேறியதாகவும் கிராமத்தவர்கள் தெரிவித்தனர். இந்த நிலையில் கிராமவாசிகள் நேற்றுக் காலை மன்னார் மாவட்ட செயலகத்திற்கு முன்பாக ஒன்றுகூடவிருந்த நிலையில் நேற்றுக் காலையும் புத்தளத்திலிருந்து வந்தோர் கிராமத்திற்குள் புகுந்ததால் சுமார் 50 கிராமவாசிகள் வன்னிமாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்.பி.யான எஸ்.விநோநோகராதலிங்கம், மன்னார் நகரசபைத் தலைவர், நகரசபை கூட்டமைப்பு உறுப்பினர்கள், மாந்தை மேற்கு பிரதேச சபை உறுப்பினர்களுடன் அரச அதிபரை சந்திக்க காத்திருந்தனர். அரச அதிபர் இல்லாததால் மேலதிக அரச அதிபர் திருமதி எஸ்.மோகநாதனிடம் தங்களுக்கு ஏற்பட்டுள்ள அவல நிலை குறித்தும் அரசியல் செல்வாக்கும் அரச அதிகாரிகளும் செல்வாக்கு தங்களுக்கு எதிராக இருப்பதால் தங்களுக்கும் பாதுகாப்பு வழங்குமாறும் நிம்மதியாக வாழ அனுமதிக்குமாறும் கோரியதுடன் மகஜரொன்றையும் கையளித்தனர். இதேநேரம் சன்னார் கிராமத்திற்குச் சென்ற அப்பகுதி கிராம சேவகர் சுமார் 40 குடும்பங்களுக்கு அவசர அவசரமாக விண்ணப்பப் படிவங்களைக் கையளித்து அவற்றை உடனடியாக நிரப்பித்தருமாறு அவசரப்படுத்தியதாகவும் அந்தப் படிவத்தில் தாங்கள் கிராமத்தை விட்டு வெளியேறுவதாக உடன்பாடு தெரிவிக்கிறோமென எழுதப்பட்டிருந்ததாகவும் எனினும் தாங்கள் அதனை ஏற்க மறுத்துவிட்டதாகவும் கிராமத்திலிருந்து அவ்வேளையில் அங்கு வந்தவர்கள் மேலதிக அரச அதிபரிடம் முறைப்பாடு செய்து இதில் உடனடியாக தலையிடுமாறு கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து கிராமவாசிகளுடன் சன்னார் சென்ற மேலதிக அரச அதிபர், அங்கு விசாரணைகளை நடத்திய பின் மறு அறிவித்தல் வரை அனைத்து நடவடிக்கைகளையும் நிறுத்துமாறு வெளியார் எவரும் கிராமத்துக்குள் பிரவேசிக்கக் கூடாதெனவும் உத்தரவிட்டுள்ளார். இதனால், தற்போது அங்கு சற்று அமைதி நிலவுகிறது. ஏற்கனவே இங்கு பொது மக்களால் கட்டப்பட்ட பிள்ளையார் கோவிலை அப்புறப்படுத்துமாறு பொலிஸார் கிராமத்தவர்களுக்கு உத்தரவிட்டிருந்த நிலையில் ஓரிரு தினங்களில் வெளியார் அந்தக் கிராமத்திற்குள் புகுந்தது குறிப்பிடத்தக்கது.

நன்றி தினக்குரல்
போலி ஆவணங்களை பயன்படுத்தி பாரியளவில் காணி மோசடிகள் பொலிஸார் கடும் எச்சரிக்கை


police Tuesday, 24 January ௨௦௧௨

போலி ஆவணங்களை தயாரித்து காணி விற்பனை மோசடிகளில் ஈடுபடும் மோசடிக்காரர்கள் தொடர்பாக பொதுமக்கள் அவதானமாக இருக்குமாறு பொலிஸார் கேட்டுள்ளனர்.

இவ்வாறு 5 மில்லியன் ரூபாவிற்கும் அதிகமான காணிகளை விற்பனை செய்த மோசடிகள் தொடர்பாகக் கடந்த வருடத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அஜித் ரோஹண மேலும் தெரிவித்துள்ளதாவது;

போலி ஆவணங்களை தயாரித்து காணிகளை விற்பனை செய்யும் மோசடிகள் தொடர்பாக பல முறைப்பாடுகள் கிடைத்துவருகின்றன. அவற்றில் கடந்த வருடத்தில் 5 மில்லியன் ரூபாவிற்கும் அதிகமான பெறுமதியுடைய காணி விற்பனை மோசடிகள் தொடர்பாக நூற்றுக்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் குற்றவிசாரணைப் பிரிவிற்குக் கிடைத்துள்ளது.

இவ்வாறு மோசடியில் ஈடுபடும் மோசடிக்காரர்கள் இதற்காக பிரதான தந்திரமொன்றை கையாள்கின்றனர். முதலில் பிரதேசங்களில் நீண்ட நாட்களாக உரிமையாளர்களால் கவனிக்கப்படாது காணப்படும் காணிகள் தொடர்பாக அறிந்துகொண்டு கச்சேரிக்கோ அல்லது காணிகள் தொடர்பான தகவல்களை அறிந்து கொள்ளக்கூடிய இடங்களுக்கோ சென்று காணியின் உரிமையாளர் முதல் காணி எல்லை வரை தகவல்களை அறிந்துகொள்கின்றனர்.

அதன் பின் அதன் உரிமையாளர் போல் போலி அடையாள அட்டைகள் மற்றும் ஆவணங்களைத் தயாரித்து காணிக்கு தேவையான போலி உறுதிப் பத்திரங்களையும் தயாரித்துக் கொண்டு அவசரமாக காணிகள் விற்பனை செய்யப்படவுள்ளதாக விளம்பரப்படுத்தி காணியின் உண்மையான பெறுமதியை விட குறைந்த விலைக்கு விற்று பணத்தைப் பெற்றுக்கொண்டு தலைமறைவாகிவிடுகின்றனர். இவ்வாறான மோசடிக்காரர்களிடம் சாதாரண மக்களைவிட படித்த ஆசிரியர்களும் வைத்தியர்களும் சட்டத்தரணிகளுமே அதிகமாக ஏமாந்துள்ளனர்.

இதனால் காணிகளை வாங்கும் போது பொதுமக்கள் அவதானத்துடனிருக்க வேண்டுமென தெளிவுபடுத்த வேண்டியுள்ளது. இதன்படி புதிதாக காணியொன்றை வாங்கும் போது கட்டாயமாக சில விடயங்களை கவனிக்க வேண்டும்.

காணியை விற்பவரின் வதிவிடம், அவருக்கு காணியை விற்க வேண்டிய அவசியம், அவருக்கு காணி உரித்து எவ்வாறு கிடைத்தது. விற்கும் உரிமை என்பன தொடர்பாக சந்தேகமின்றி நன்றாக அறிந்துகொள்ள வேண்டும்.

இதேவேளை காணியை வாங்கும் போது பூரணப்படுத்தப்படாத ஆவணங்களிலோ அல்லது வெற்றுப் பத்திரங்களிலே எக்காரணத்திற்காகவும் கையொப்பமிடக்கூடாது. அத்துடன் எழுதப்பட காணி உறுதிப்பத்திரம் தமக்கு விளங்காத மொழியில் எழுதப்பட்டிருந்தால் விசுவாசமான ஒருவரைக் கொண்டு அதனை வாசித்து அறிந்துகொள்ளவேண்டும்.

அத்தோடு காணியை விற்பவரோடு தொடர்பு கொள்ளும் போது முடிந்த வரை அவரின் நிலையான தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பை ஏற்படுத்த முயற்சிக்க வேண்டும். இது பிரச்சினை ஏற்பட்டால் அவரை அடையாளம் காண மிகவும் உதவும்.

மேலும் உறுதிப்பத்திரம் எழுதும் போது முடிந்தவரை நொத்தாரிசு அல்லது சட்டத்தரணியொருவரை பயன்படுத்துவதுடன் காணியை விற்பவரின் புகைப்படமொன்றைப் பெற்றுக்கொள்வதும் சிறந்தது.

கடந்த காலங்களில் இவ்வாறான மோசடிக்காரர்களினால் போலி ஆவணங்களைத் தயாரித்து காணி விற்பனை மோசடியில் ஈடுபட்டது தொடர்பாக 500 இற்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் கிடைத்துள்ளதுடன் 5 மில்லியன் ரூபாவுக்கும் அதிக பெறுமதியுடைய காணி விற்பனை மோசடிகள் தொடர்பாக 40 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதேவேளை, காணிப் பிரச்சினைகள் தொடர்பாக முறைப்பாடுகளை முன் வைப்பதற்காக குற்ற விசாரணைப் பிரிவினால், “1933’ என்ற தொலைபேசி இலக்கமும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இதன் மூலம் 24 மணித்தியாலமும் பொதுமக்கள் முறைப்பாடுகளைத் தெரிவிக்க முடியுமென்றார்.

நன்றி தினக்குரல்

திருகோணமலை நகரின் விநாயகபுரம் பகுதியில் அப்பாவி தமிழ் மக்கள் மீது சிங்களர்கள் கடுமையான தாக்குதல்:-
திருகோணமலை நகரின் விநாயகபுரம் பகுதியில் அப்பாவி தமிழ் மக்கள் மீது சிங்களர்கள் நடத்திய தாக்குதல்களால் நால்வர் படுகாயமடைந்துள்ளனர். காரணமெதும் எதுவுமே தெரியாத நிலையில் இன்றிரவு 7 மணியளவினில் 30 இற்கும் மேற்பட்ட சிங்களர்கள் ஒன்று திரண்டு சென்று தாக்குதல்களை நடத்தியுள்ளனர். வீதிகளில் பயணித்தவர்கள் வீடுகளுள் தங்கியிருந்தவர்களென பலரும்  தாக்கப்பட்டுள்ளனர்.  தாக்குதலில் ஈடுபட்டவர்களை தடுக்க முற்பட்டவேளை மகன் மற்றும் தந்தை இருவரும் சுற்றி வளைக்கப்பட்டு தாக்கப்பட்டதில் இருவரும் படுகாயமடைந்த பரிதாபமும் நடந்துள்ளது.
 திருகோணமலை நகரின் மத்திய பேருந்து நிலையப்பகுதியில் அடாத்தாக குடியேறியுள்ள சிங்கள குடியேற்றவாசிகளே தாக்குதலில் ஈடுபட்டனர். சம்பவம் தொடர்பாக பொது மக்கள் சிலர் பொலிஸாருக்கு தகவல் வழங்கியதையடுத்து அவர்கள் சென்று அந்தக் குழுவினரை  விரட்டியடித்தனர். எனினும் எவரும் இத்தாக்குதல் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டதாக தகவல்கள் இல்லை.
திருகோணமலையில் என்றுமில்லாத அளவில் அதிகரித்து வரும் சிங்கள குடியேற்றம் பூர்வீக தமிழ் குடும்பங்களது எதிர்காலத்தினை கேள்விக்குறியாக்கி இருக்கின்றது. இவ்வாறான அச்சுறுத்தும் பாணியிலான தாக்குதல்கள்  தமிழ் குடும்பங்களை நிரந்தரமாக விரட்டியக்கும் திட்டமி;ட்டதோர் நடவடிக்கையெனவே சந்தேகிக்கப்படுகின்றது.   
Nantri Globaltamil news


அன்றாட நிகழ்வாகிவிட்ட வீதி விபத்துகளும் உயிர்ப்பலிகளும்
Tuesday, 24 January 2012 

இலங்கையைப் பொறுத்த வரையில் வீதி விபத்துகளும் அதனால் ஏற்படும் உயிர்ப்பலிகளும் அன்றாட நிகழ்வுகளாகிவிட்டன. வீதிப் போக்குவரத்து விதிமுறைகள் தொடர்பில் போக்குவரத்துப் பிரிவு பொலிஸார் பல்வேறு சட்டங்களையும் திட்டங்களையும் தினமும் அமுல்படுத்துகின்ற போதும் விபத்துகளின் எண்ணிக்கையையோ அல்லது உயிரிழப்பு வீதங்களையோ குறைக்க முடியாததொரு நிலையையே காணக்கூடியதாகவுள்ளது. நாட்டில் தினமும் பல்வேறு வீதிவிபத்துக்கள் இடம்பெறுகின்ற போதும் கடந்த வாரம் கல்கிஸைப் பகுதியில் நடந்த தனியார் பஸ் பாடசாலை வான் விபத்து பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்தில் 8 பாடசாலை சிறார்கள் படுகாயமடைந்ததைவிடவும் அந்தச் சிறார்களை ஏற்றிச் சென்ற வானின் சாரதி தற்காலிக சாரதி அனுமதிப் பத்திரம் வைத்துள்ள 21 வயது இளைஞர் என்ற தகவலே பலரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளதுடன் இவ்வாறானவர்கள் இன்னும் எத்தனை பேர் உள்ளனரோ என்ற அச்சத்தையும் ஏற்படுத்திவிட்டுள்ளது.

கல்கிஸை விபத்து நடந்த ஒரு சில தினங்களுக்குள்ளேயே கசலக்க பகுதியில் லொறியொன்றை செலுத்திச் சென்ற 16 வயது சிறுவனை மஹியங்கனை பொலிஸார் கைது செய்துள்ளனர். அத்துடன் அந்த லொறியின் உரிமையாளரையும் கைது செய்த பொலிஸார் இருவருக்கும் எதிராகவும் சட்ட நடவடிக்கைகளை எடுக்கவுள்ளனர். இவ்வாறான இள வயது சாரதிகளினதும் அனுபவமற்ற சாரதிகளினதும் செயற்பாடுகள் ஒரு சிலவே வெளிவரும் நிலையில் இன்னும் எத்தனையோ பேர் எமன்களாகவே வீதிகளில் வலம் வந்துகொண்டிருக்கின்றனர். இவ்வாறானவர்களைக் கண்டுபிடிக்கவும் கைது செய்யவும் தற்போது போக்குவரத்துப் பிரிவு பொலிஸார் துரித நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். இதன் ஒரு கட்டமாகவே கல்கிஸை பாடசாலை வான் விபத்தையடுத்து கொழும்பில் பாடசாலை போக்குவரத்து சேவையில் ஈடுபடும் 1200 வான்களின் உரிமையாளர்களையும் அழைத்து கொழும்பு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் அநுர சேனநாயக்க பாடசாலை போக்குவரத்து சேவை தொடர்பில் சில விதிமுறைகளை அமுல்படுத்தியதுடன் ஆலோசனைகளையும் வழங்கியுள்ளார்.

பாடசாலை போக்குவரத்து சேவையில் ஈடுபடும் சாரதிகள் 30 வயதுக்கு மேற்பட்டவர்களாக இருப்பதுடன் அவர்கள் சாரதி அனுமதிப்பத்திரம் பெற்று 5 வருடங்களுக்கும் குறையாமல் இருக்க வேண்டுமென்பது சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் அநுர சேனநாயக்கவின் உத்தரவு. இது வரவேற்கப்படக்கூடிய விடயம். அதேவேளை சாரதிகளில் பலர் மதுபானம் மற்றும் போதைப் பொருள் பாவனையாளர்களாக இருப்பதையும் கவனத்தில் எடுத்து அது தொடர்பிலும் கடுமையான விதிமுறைகளை பொலிஸார் அமுல்படுத்த வேண்டும். அதுமட்டுமன்றி செல்போன்களில் பேசியவாறு வாகனங்களைச் செலுத்தக் கூடாதென்ற சட்டம் அமுலில் உள்ள போதும் எந்தவொரு சாரதியும் அதனை ஒரு பொருட்டாக மதித்ததாகவே தெரியவில்லை. நாட்டில் இடம்பெறும் பல வீதி விபத்துகளுக்கு மதுபான பாவனையும் செல்போன் பாவனையுமே பெரும்பங்கு வகிப்பதாக போக்குவரத்து பொலிஸாரின் அறிக்கைகள் சுட்டிக்காட்டுவதை அவதானிக்க முடிகின்றது. எனவே இது தொடர்பிலும் கவனம்செலுத்தப்பட வேண்டும்.

இதேவேளை தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை பாடசாலைச் சிறார்களின் பாதுகாப்புக் கருதி பாடசாலைகளுக்கான வாகன சேவைகளை ஒழுங்கமைக்க நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இதற்காக போக்குவரத்து அமைச்சு மற்றும் தனியார் போக்குவரத்து அமைச்சு ஆகியவற்றுடன் இணைந்து வேலைத்திட்டங்களை முன்னெடுக்கவுள்ளது. இந்நிலையில் 1998 ஆம் ஆண்டின் (50 ஆம் இலக்க) பாடசாலை வாகனங்களை வீதியில் பயணிப்பதற்கு அனுமதிப்பதற்கான சட்டத்தை மறுசீரமைப்பு செய்யவும் கடுமையாக அமுல்படுத்தவும் ஆலோசிக்கப்பட்டு வருகின்றது. அத்துடன் பாடசாலை வாகன சேவை முறையை ஒழுங்குபடுத்துவதற்காக அமைச்சரவையில் பத்திரம் சமர்ப்பிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுவரும் அதேவேளை இந்தக் கல்கிஸை பாடசாலை வான் விபத்து சம்பவம் தொடர்பில் தனக்கு முழுமையான அறிக்கை சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதியும் பணித்துள்ளார்.

2011 ஆம் ஆண்டில் இடம்பெற்ற வீதி விபத்துகளால் ஒரு வயதுக்கும் 19 வயதுக்குமிடைப்பட்டவர்கள் 224 பேர் பலியாகியுள்ளதுடன் 4133 பேர் காயமடைந்துள்ளனர். இவற்றில் பெரும்பாலான விபத்துகளுக்கு சாரதிகளே காரணமாக இருந்துமுள்ளனர். அதுமட்டுமன்றி தகுதியவற்றவர்களுக்கு கூட பணத்துக்காக சாரதி அனுமதிப்பத்திரங்களை வழங்கும் அதிகாரிகளும் இவ்வாறான தகுதியற்ற சாரதிகளை அடையாளம் கண்ட பின்னரும் அவர்கள் மீது பணத்திற்காக சட்ட நடவடிக்கை எடுக்காத பொலிஸாரும் இவ்வாறான விபத்துகளுக்கு ஏதோவொரு வகையில் பாத்திரவாளிகளாகவே உள்ளனர். எனவே சாரதி அனுமதிப்பத்திரம் வழங்குவதிலிருந்து வீதிகளில் சாரதிகளைக் கண்காணிப்பது வரை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நேர்மையுடன் செயற்பட்டால் மட்டுமே வீதி விபத்துகளையும் அநியாய உயிரிழப்புகளையும் ஓரளவுக்கேனும் தடுக்க முடியும். இல்லாதுவிட்டால் வீதியில் வலம் வரும் இவ்வாறான எமன்களுக்கு தொடர்ந்தும் பலர் இரையாக வேண்டிவரும். எனவே இது தொடர்பில் காத்திரமான நடவடிக்கைகள் உடனடியாக எடுக்கப்படவேண்டும்.

நன்றி தினக்குரல்


வடக்கு புகையிரதப்பாதை 2013 இல் நிறைவடையும் - (பட இணைப்பு)


அ.கனகராஜ்  26/1/2012

இந்தியக் கடனுதவித் திட்டத்தின் கீழ் வட பகுதியிலும் மேற்கொள்ளப்படும் புகையிரதப் பாதை அமைப்புப் பணிகள் 2013 முடிவில் நிறைவடையும். அத்துடன் வட மாகாணத்தின் காங்கேசன்துறை துறைமுகத்தில் கப்பல் சிதைவுகளை அப்புறப்படுத்தும் பணிகள் நிறைவடைந்துள்ளன என்று இலங்கைக்கான இந்தியத் தூதுவர் அசோக் கே.காந்தா தெரிவித்தார்.

இந்தியாவின் 63 ஆவது குடியரசு தினத்தை முன்னிட்டு இந்திய இல்லத்தில் இன்று வியாழக்கிழமை காலை நடைபெற்ற வைபவத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இலங்கை கடற்படையினரின் பேண்ட் வாத்திய இசைக்கு மத்தியில் இந்திய தேசியக்கொடியை ஏற்றி வைத்ததன் பின்னர் அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், இந்தியாவுக்கும் இலங்கைக்குமிடையேயான நெருங்கிய சகோதரத்துவ உறவிலான அபரிமிதமான முன்னேற்றம் இவ்வாண்டிலும் தொடரும்.

இதன் மூலம் காங்கேசன்துறை துறைமுகத்தில் தற்போதுள்ள இறங்கு துறைக்குச் சரக்குகளை இறக்குவதற்காகக் கப்பல்கள் திரும்பவும் வர முடியும். இதனால் யாழ்ப்பாணத்தின் கடல் வாணிபம் முன்னேற்றமடையும்.

தென் பகுதியிலும் ஆரம்பிக்கப்பட்ட ரயில் பாதை ஏப்ரல் மாதத்தில் நிறைவடையும் என்றார்.

 
 
 
 
நன்றி வீரகேசரி


No comments: