சிட்னியில் முத்திரை பதித்த "காணும் பொங்கல்"

.
.

சிட்னி, தமிழ் கலை மற்றும் பண்பாட்டுக் கழகம் தனது முதல் குடும்ப ஒன்று கூடல் நிகழ்ச்சியாக "காணும் பொங்கல்" நிகழ்வை விமரிசையாக டன்டாஸ் சமூக அரங்கில் நடத்தியது. அரங்கம் நம் கலாசார முறைப்படி வாழைமரம் மற்றும் தோரணங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. மேலும் கரும்பு மற்றும் பொங்கல் பானை அலங்காரம் அரங்கத்தை மெருகூட்டியது. குத்துவிளக்கு ஏற்றலுடன் நிகழ்சிகள் தொடங்கியது. அதனை தொடர்ந்து தமிழ் தாய் மற்றும் மொழி வாழ்த்துடன் ஆஸ்திரேலியா தேசிய கீதம் இசைக்கப்பட்டது. சீர்காழியின் கம்பீரக் குரலில் இசைக்கப்பட்ட தமிழ் மொழி வாழ்த்து பங்கு கொண்டோரை பரவசப்படுத்தியது. கழக நிர்வாகிகள் கழகத்தின் நோக்கத்தையும் எதிர்கால திட்டங்களையும், உறுப்பினர் சலுகைகளையும் விவரித்தனர். கழக உறுப்பினர் அட்டைகள் அறிமுகம் செய்யப்பட்டு ஆயுட்கால உறுப்பினர்களுக்கு அனைவர் முன் வழங்கப்பட்டது.

 .
உறுப்பினர்கள் தங்கள் குடும்பத்துடன் முன் வந்து அறிமுகம் செய்து கொண்டனர். சென்னையில் இருந்து வந்திருந்த திரு. சச்சிதானந்தன் அவர்கள் தனது முயற்சியில் உருவாக்கிய தேவார இணைய தளத்தை விவரித்தார் . அத்துடன் வரும் சந்ததியினர் தேவாரம் படிப்பதின் அவசியத்தை உணர்த்தினார். நிகழ்ச்சியில் ராகாஸ் குழுவினரின் மெல்லிசை விருந்து அனைவரையும் கவர்ந்தது. கழகத்தின் அடுத்த மாபெரும் நிகழ்வு எதிர்வரும் ஏப்ரல் மாதம் 22 ம் நாள் கலைமாமணி புஷ்பவனம் குப்புசாமி கலந்து கொள்ளும் "சிட்னியில் சித்திரைத் திருவிழா" பலத்த கரகோஷத்தின் நடுவே அறிவிக்கப்பட்டது . வடை பாயாசத்துடன் அறுசுவை விருந்து பரிமாரப்பட்டது . நிகழ்ச்சியின் முத்தாய்ப்பாக பொங்கல் பானையை நடுவில் வைத்து கலந்து கொண்டோர் கும்மி அடித்தது அனைவரையும் இன்புரச்செய்தது. கலந்துகொண்டோர் குடும்ப நிகழ்வில் கலந்துகொண்ட பூரிப்புடன் கழகத்தின் எதிர்கால நிகழ்ச்சிகளை ஆவலுடன் எதிர்நோக்கி விடைபெற்றனர்.


கழகத்தின் மேலதிக விவரங்களை www.tacasydney.org என்ற இணையத்தளத்தில் காணலாம்.


No comments: