இயேசு நம் உள்ளத்தில் பிறக்கட்டும்! திருவருகைக் காலத்தில் அதற்கு ஆயத்தமாவோம்! *அருட் தந்தை பொப் ரொட்ரிகோ

.
கிறிஸ்து பிறப்பின் திருவருகைக் காலத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இக்காலம் நம் வாழ்க்கையை திரும்பிப் பார்த்து அதனைச் சரிசெய்து கொள்ள நம்மை அழைக்கிறது.

நம் வீடுகளும் வாகனங்களும் அழகுறுவதும் உடலை மூடும் ஆடைகளும் இக்காலத்தில் நமக்கு முக்கியம் பெறுவதைப்போல் நம் மனமாற்றம் இந்த அனைத்தையும் விட முக்கியமானது. மனதும் மனதில் இயேசு பாலன் பிறக்க அதனைத் தூய்மைப்படுத்துவோம். எழில்படுத்துவோம்.

அருட் தந்தை பொப் ரொட்ரிகோ அவர்கள் வாழ்க்கைப் படிப்பினையை மனதில் பதியும் படி தருவதில் கைதேர்ந்தவர். இக்காலத்தில் அவர் வழங்கிய மறையுரையொன்றை தியானிப்போம்.


நாம் மனம் மாற வேண்டும். இயேசுநாதர் அதனையே நம்மிடம் எதிர்பார்க்கிறார். அவர் கூறுவது நம் மனமாற்றத்தையே.

எமது வாழ்க்கையில் சில கெட்ட பழக்க வழக்கங்களை நாம் அன்று தொட்டு இன்றுவரை தொடர்ச்சியாக கைக்கொள்ளலாம். அதனைக் கைவிட முடியாது.

பற்றிப் பிடித்துக்கொண்டிருக்கலாம். அதனை விடச்சொல்லி ஆண்டவர் நம்மிடம் எதிர்பார்க்கின்றார். நம்மில் சிலர் இருக்கின்றனர் வாயைத் திறந்தால் பொய். பொய் சொல்தையே வாழ்க்கையாக்கிக் கொண்டு திரிவர். அவர்களால் சொல்ல முடியுமா நான் அதனை விட்டு விடுவேன் என்று?

அல்லது மற்றவர் மனம் புண்படும்படி பிறரைப் பற்றி கதைக்கின்றோம். ஒருவரைப்பற்றி ஒருவர் புறம் பேசுகின்றோம். அநேகமாகப் பெண்களில் இதைக் காணமுடிகிறது. தமக்கு இது பெரிதாகத் தோன்றாது. ஆனால் இதனால் பலரது மனங்கள், குடும்பங்கள் பாதிக்கப்படும். இந்த மனமாற்றத்திற்கான காலத்தில் அதனை விட்டுவிட்டீர்களா?

ஆண்களில் பெரும்பாலானோர் மது அருந்துபவர்கள். சிலர் வறுமைநிலையில் வாழும் போதும் குடிப்பதைக் கைவிடுவதில்லை. அதனால் குடும்பத்தில் பிரச்சினைகளும் உறவுகளுக்குள் பாதிப்புகளும் ஏற்படுகின்றன. இவற்றைத் தடுக்கும் வகையில் அத்தகையோர் குடியை நிறுத்திவிடத் தயாரா? இத்தகையோரில் சிலர் குடித்து வெறித்து செய்யும் தவறுகளால் குற்றங்களால் சிறைசென்று திரும்பி வருகிறார்கள். எனினும் மீண்டும் அதனையே செய்வதை நாம் கண்டிருக்கின்றோம்.

சில பெற்றோர்கள் நம்மில் உள்ளனர். தமது பிள்ளைகளை முறையாக வளர்ப்பதில்லை. அவர்கள் எங்கு செல்கிறார்கள் என்னென்ன கெட்ட பழக்க வழக்கங்களுக்கு ஆளாகியுள்ளார்கள் எனப் பார்ப்பதில்லை. அவர்கள் சமூகத்தில் நல்ல பிரஜைகளாக வளர வேண்டும். அவர்களது எதிர்காலம் பிரகாசிக்க வேண்டும் என எதிர்பார்க்கின்aர்களா, அப்படியானால் அவர்களை நன்கு வளர்க்க வேண்டும் என்ற தீர்மானத்தை எடுத்து விட்டீர்களா?

பொன்னான நேரத்தை வீண் விரயமாக்குவது. வீண் பேச்சுக்களைப் பேசுவது போன்ற செயல்கள் நாம் நம்மை மாற்றிக்கொள்ளவில்லை நாம் மனம் மாறவில்லை என்பதையே காட்டுகின்றன.

இது கிறிஸ்தவர்களுக்கு முக்கியமானவர்கள் திருவருகைக் காலம். இந்தக் காலத்தில் இத்தகைய மாற்றங்கள் இடம்பெற வேண்டும் என்று திருச்சபை எதிர்பார்க்கிறது.

அன்று ஸ்தாபக அருளப்பர் கூறினார் வரப்போகின்றவர்களை நீங்கள் சந்திக்க வேண்டுமென்றால் அவரது அன்பு உங்களுக்குக் கிடைக்க வேண்டும் என்றால் மனமாற்றம் அடையுங்கள். அது மிக மிக அவசியம் என்றுரைத்தார்.

அவர் சற்று கடும் குரலில் விரியன் பாம்பு குட்டிகளே இத்தகைய தீய வழிகளை உங்களுக்குக் காட்டியது யார் என வினவுகிறார். அதனைக் கேட்ட மக்கள் மனம் மாறினார்கள். தாம் செய்த பாவங்களுக்காக மன்னிப்புப் பெற்று அதன்பின் ஞானஸ்தானம் பெற்றுக் கொண்டார்கள்.

இயேசு கிறிஸ்துவின் பிறப்புக் கொண்டாட்டத்திற்கு ஆயத்தமாகும் எங்களுக்குத் திருச்சபை கூறுவது மனமாற்றத்தைத்தான்.

உலக இரட்சகராம் இயேசுவைப் பெற்றெடுக்க அன்னை மரியாள் பிரசவ காலத்தில் இருந்தபோது அதற்கான தகுதியான இடமொன்றை அவர் தேடுகிறார்.

எவரும் அவருக்கு அதை வழங்கவில்லை. அவர்களில் பலர் உள்ளவர்களாக இருந்தார்கள். எனினும் மனம் இல்லாதவர்களாகவே இருந்தனர். இறுதியில் மாட்டிடைக் கொட்டிலே அவருக்கு பிறப்பிடமாகியது. இயேசு கிறிஸ்து நம் மனதில் பிறக்க நம்மிடம் இடம் கேட்கிறார்.

அதற்குத் தகுதியானவர்களாக மாறுவோம். பாவம், கறைபடிந்த தூய்மையற்ற மனங்களில் அவர் வர மாட்டார். மனமாற்றம் பெற்று தூய்மையான மனதை அவருக்கு வழங்குவோம் அவரது ஆசீர்வாதம் நம் வாழ்விலும் நிரம்பி வழிவது உறுதி

நன்றி தினகரன்

No comments: