ஸ்ரீ ராம "ராஜா" ராஜ்ஜியம் -கானா பிரபா
.


மனதுக்கு நிறைவானதொரு படைப்பைப் பார்த்துவிட்டு வந்து அதைப்பற்றி யாரிடமாவது சொல்லிச் சொல்லிச் சிலாகிக்கவேண்டும் என்று ஒரு எண்ணம் வருமே அதே நிலையில் தான் இந்தப் பதிவை எழுதிக் கொண்டிருக்கின்றேன். ஶ்ரீ ராம ராஜ்யம், தெலுங்கில் வரப்போகும் இந்தப் படத்தின் பாடல்கள் வெளிவந்த நாளே கேட்டுக் களித்துக் கொண்டிருக்க வைத்து விட்டது. அதை ஆந்திராவின் இசையுலகமும் நிரூபிப்பது போல இப்படத்தின் பாடல் இசைத்தட்டுக்கள் விற்பனையில் சாதனையைப் படைத்து விட்டது. 
சில மாதங்கள் கழித்து நேற்று முன்தினம் இப்படம் வெளியாகியிருக்கின்றது. ஏற்கனவே இந்தப் படம் வந்தால் தியேட்டர் சென்று பார்க்கவேண்டும் என்ற முனைப்பில் இருந்த எனக்கு இன்று அதற்கான சந்தர்ப்பம் அமைந்து விட்டது. ஶ்ரீ ராம ராஜ்யம் படம் பார்க்கவேண்டும் என்பதற்கு முழுமுதற்காரணியாக அமைந்தது இசைஞானி இளையராஜா ஏற்கனவே தந்து விட்ட பாடல்களும், படத்தில் தரப்போகும் பின்னணி இசை தான். ஏற்கனவே "சீனி கம்" (ஹிந்தி), "ரசதந்திரம்", "பாக்யதேவதா" (மலையாளம்) வந்தபோதும் இன்னொரு மொழிப்படத்துக்காகத் தியேட்டரை எட்டிப்பார்க்க வைத்தார் ராஜா. இப்போது முதன்முறையாக ஒரு தெலுங்குப் படத்துக்குப் போகும் பெருமையை இந்தப் படம் பெற்றுக்கொண்டது.


இராமாயணத்தின் முக்கியமான பகுதியாக இராவணன் சங்காரம், சீதை சிறைமீட்பு என்பதோடு படங்கள் வந்துவிட்டன. அதன் நீட்சியாக சம்பூர்ண ராமாயணம், லவ குச போன்ற படங்கள் இராமர் சீதை, இலக்குமணர் சகிதம் அயோத்தி சென்று பட்டாபிஷேகம் பூண்டு ஆட்சி செய்யும் போது சீதை மீதான அவதூறால் சீதையைக் காட்டில் விட, காட்டிலே வால்மீகி முனிவரின் பராமரிப்பில் சீதை லவ குச என்ற பிள்ளைகளை ஈன்றெடுத்து வளர்த்து வரும்போது மீண்டும் தந்தை இராமனை லவ குச சந்திப்பதும், சீதை எடுக்கும் முடிவும் என்று செல்லும். இந்த ஶ்ரீராம ராஜ்யம் படம் இராவண சங்காரத்துக்குப் பின்னான கதையை மட்டுமே எடுத்தாண்டிருக்கின்றது.

இசைஞானி இளையராஜாவை இந்தப் படத்துக்கு ஒப்பந்தம் செய்யும் போதே, இது உங்கள் படம் என்று அதீத உரிமை கொடுத்திருப்பார்கள் போல. படத்தில் மொத்தம் 16 பாடல்களை ஏற்கனவே கொடுத்து முன்னோட்டம் காட்டியவர், இரண்டரை மணி நேரப்படத்தின் ஒவ்வொரு அசைவுகளிலும் தன்னைக் காட்டி நிற்கின்றார். படத்தின் எழுத்தோட்டத்தில் ஆரம்பிக்கும் ராஜாவின் ராஜ்ஜியம், ஆரம்பக் காட்சியில் இராமர், சீதா, லக்குவணன் சமேதம் அயோத்யா வரும் காட்சி "ஜெகதானந்த" என்ற பாடலோடு இனிமையான பாரம்பரிய நடன அமைப்போடு நெஞ்சை நிறைக்கின்றது. படத்தின் முதல் 20 நிமிடங்களுக்குப் பாடல்கள் தான் அணி சேர்க்கின்றன. என் நினைவுக்கு எட்டியவரை இப்படித் தொடர்ந்து காட்சிகளுக்கு நெருக்கமாகப் பாடல்களைக் கொடுத்த சினிமா எழுபதுக்குப் பிந்திய காலத்தில் இருந்ததாக நினைவில் இல்லை.

அதுவரை பாரம்பரிய இசையோடு அமைக்கப்பட்ட காட்சிகளில் இருந்து விலகி, இராமர் பட்டாபிஷேகம் செய்யும் போது ஒரு சிம்பொனியை எடுத்து விடுகிறார் ராஜா. மேற்கத்தேய இசை நயம் உறுத்தவில்லை தொடர்ந்து தையோடு இராமர் காதல் கொள்ளும் போது ஒரு மெல்லிசை, சீதை மேல் ஐயம் கொண்டு இராமர் குழம்பித் தவிக்கும் போது கலவையாகக் கொட்டித் தீர்க்கும் வாத்திய முழக்கங்கள், சீதையின் தனிமை என்று சொல்லிக் கொண்டே போகலாம் ஒவ்வொன்றுக்குமே தனித்தனி ஆலாபனைகள். இப்படியொரு பிரமாண்டமான வரலாற்றுக்கதைக்களனுக்கு இசைஞானியின் தேவை இன்றி மற்றெல்லாம் வெறும் ஒலிச்சத்தங்களாகவே இருக்கும்.

படத்தில் திடீர் திடீரென்று முளைக்கும் பாடல்கள் கதையோட்டத்தோடு பயணிப்பதால் உண்மையில் ஒரு சுகானுபவம் கிடைக்கின்றது. எத்தனை நாளாகிற்று கம்பியூட்டரை நோண்டிப் போட்ட இ(ம்)சைகளை விடுத்து இப்படியான வாத்தியங்களின் உணர்வுபூர்வமான உழைப்பைக் கேட்டு. தியேட்டர் சென்று பார்ப்பவர்களுக்கு வாத்தியங்களின் சல்லாபத்தை இன்னும் நெருக்கமாக அனுபவிக்கக்கிட்டும்.

இசைஞானி இளையராஜா எங்கும் போகவில்லை, இப்படியான நல்ல படைப்புக்கள் வரும்போது தன்னை அவர் வெளிப்படுத்துவார் என்பது போன்று அமைந்திருக்கின்றது ராஜாவின் அதீத உழைப்பு.


இந்தப் படத்தின் உருவாக்கத்துக்கு இன்னொருவகையில் பெரிதும் கை கொடுத்திருப்பது திறமையான கிராபிக்ஸ் காட்சிகள். வனவாசத்தில் மான்கள் கூட மாந்தரோடு நடைபயில்வதும், அடவியில் சலசக்கும் பறவைகளும், பூஞ்சோலைகளும் என்று எல்லாமே உயிரோட்டமாக அமைக்கப்பட்டிருக்கின்றன. பூமாதேவி சீதையை ஏற்றுக் கொள்ளும் காட்சி உச்சம்.
இந்தமாதிரியான படத்துக்குத் தேவை தானே என்று எண்ண வைக்கும் பிரமாண்டமான செட், ஆனால் எதிர்பார்ப்பை மீறி ஆரம்பத்தில் இருந்து இறுதிவரை கலைரசனை கொண்டு அமைக்கப்பட்டிருப்பது வெகு சிறப்பு. குறிப்பாக அந்த அரண்மனையின் பிரமாண்டம், சின்னச் சின்னக் கற்களில் கூட ஏதோ ஒன்றைப் பொறித்து அழகு நயம் கொண்டு உருவாக்கப்பட்டிருக்கிறது. 

இதிகாச காலத்துக்குக் கொண்டு செல்லும் வண்ணமயமான ஒளிப்பதிவாளர் P.R.K.ராஜீவின் பங்கும் நிறைவாக இருக்கின்றது. 

ஶ்ரீ ராம ராஜ்யம் படம் ஆரம்பிக்கின்றது. படத்தின் எழுத்தோட்டத்தின் பின்னணியில் தபேலாவும், வீணையும் சேர்ந்து முழங்க, இராமாயணத்தின் ஆரம்பக் காட்சிகள சித்திரமாகப் போட்டுக் கொண்டே பயணிப்பது புதுமை. ஆரம்பமே இசைஞானி இளையராஜாவின் முழு ஈடுபாட்டைக் காட்டி நிற்க, எந்தவிதமான கதாநாயகத்தனமும் இல்லாத அறிமுகமாக புஷ்பக விமானத்தில் அயோத்தி நோக்கிப் பயணிக்கும் இராமர் (பாலகிருஷ்ணா), சீதை (நயன்தாரா), இலக்குவணன் (ஶ்ரீகாந்த்).

பாலகிருஷ்ணா இராமர் வேஷம் கட்டுகிறார் என்ற போது கொஞ்சம் யோசனையாகத் தான் இருந்தது. அவரின் தந்தை என்.டி.ராமராவ் கிருஷ்ணராகவே வாழ்ந்தவர், தனையனோ ஒற்றை விரலால் ரயிலை நிறுத்தி மசாலாச் சகாசங்கள் நிகழ்த்திய வகையில் தான் அதிகம் அறியப்பட்டவர். ஆனால் சொன்னால் நம்பமாட்டீர்கள். படத்தின் ஆரம்பம் முதல் முடிவு வரை பாலகிருஷ்ணாவை விட இன்னொரு நடிகர் இவ்வளவு பாந்தமாக நடித்திருக்க முடியுமா என்று எண்ண வைத்துவிட்டார். சீதையோடு காதல் காட்சிகளிலும், தனிமையில் உருகும் காட்சிகளிலும் எல்லாம் மிகைப்படுத்திவிட்டார் என்று சொல்ல முடியாத அளவுக்கு இயல்பான நடிப்பை மனுஷர் தந்துவிட்டார்.

சீதையாக வந்த நயன்தாராவுக்கு ஒரு சில காட்சிகள் தவிர மற்றைய எல்லாக் காட்சிகளுமே இராமனை நினைத்து உருகி அழும் தோரணையில் இருப்பவை. நயன்தாராவை விட்டால் இந்தப் பாத்திரத்துக்கு யார் பொருத்தம் என்பதை விட இப்போது வேறு யார் இருக்கிறார்கள்? என்ற கேள்விக்குறியோடு முடித்துக் கொள்ளலாம். இனிமேல் வால்மீகியை நினைக்கும் போதெல்லாம் நினைவுக்கு வருமாற்போல வால்மீகியாக வரும் அக்கினேனி நாகேஸ்வரராவ் இன் நடிப்பு. சிறுபையனாக உருமாறி வால்மீகி வனத்தில் உலாவரும் கலகலப்பான அந்தச் சுட்டிப்பையனும் கவர்கின்றான்.

என்னதான் தெரிந்ததொரு இதிகாசக்கதை என்றாலும், இந்தப் படத்தைப் பார்த்து முடிக்கும் போது இயக்குனர் எவ்வளவு தூரம் தெரிந்த கதைக்கு வித்தியாசமான திரைக்கதையைக் கொடுத்து இன்னொரு பரிமாணத்தைக் காட்டியிருக்கின்றார் என்பது இந்தப் படத்தைப் பார்த்து அனுபவித்தவர்களுக்குப் புரியும். இராமருக்கு சீதை மேல் ஏற்பட்ட மனக்குழப்பம், அதனைத் தொடர்ந்து வரும் காட்சிகள் எல்லாமே உணர்வு ரீதியான கோணத்தில் எடுக்கப்பட்டிருக்கின்றன. உதாரணமாக, இராமன் இன்னொரு பெண்ணைக் கரம்பிடிப்பானோ என்று மனம் சஞ்சலமடைந்து உணர்விழந்து சீதை நிற்கும் சமயம், வான்மீகி முனிவர் சீதையின் ஆவியை மட்டும் அயோத்திக்கு அனுப்பி அங்கே இராமன் தன் மஞ்சத்தில் சீதையைச் சிலைவடிவாக்கி நிதமும் உருகிநிற்பதுவும், சீதை அதைக் கண்டு மருகுவதுமான அந்தக் காட்சி ஒரு காவியம். இப்படி ஏகப்பட்ட காட்சி அமைப்புக்களில் தெரிவது இயக்குனர் மற்றும் திரைக்கதாசிரியர் பாபு. இந்தப் படத்தைத் தமிழிலும் மொழியாக்கிக் கொடுத்திருக்கலாம் என்ற ஆதங்கம் இப்போது மேலிடுகின்றது. 

ஶ்ரீ ராம ராஜ்யம், சினிமாவுக்கு நீண்டகாலத்துக்குப் பிறகு ஒரு புதுவெள்ளம் பாய்ச்சுகின்றது இசைஞானி இளையராஜாவின் துணையோடு.


Nantri: radiospathy.blogspot.com

2 comments:

Anonymous said...

கானா பிரபா அவர்களே, சிட்னியில் எந்த தியேட்டரில் இந்த படம் பார்க்கலாம்?

கானா பிரபா said...

இந்தப் படம் பேர்வூட் இல் திரையிடப்பட்டது இப்போது டிவிடியாகக் கடைகளில் கிடைக்கிறது பிரதி அவ்வளவு சரியில்லை, தியேட்டரில் பார்க்கும் பிரமிப்பு இருக்காது