சமீபத்திய ஆக்கம்: குறும்படம் - அ.முத்துலிங்கம்


ஒருமுறை நான் பொஸ்டனில் இருந்தபோது வழக்கம்போல காலை குளியலறையில் முகத்தில் நுரை தடவிவிட்டு, சவரம் செய்வதற்கு முன்னர் ஒரு நிமிடம் என் முகத்தை நானே கண்ணாடியில் உற்று நோக்கினேன். இந்தப் பக்கம் அந்தப் பக்கம் முகத்தை திருப்பிப் பார்த்தேன். அந்தக் கணம் என் மூளையில் ஏதோ ஒன்று உதித்தது. எப்படி என்று தெரியவில்லை. அது ஒரு சின்னக் கதை. ஒன்றரைப் பக்கம்தான்.  அந்த நிமிடத்தில் அதை எழுதி முடித்தேன். இதிலென்ன அதிசயம் என்றால் இப்படி சிறுகதைக்கான கரு என் மூளையில் தோன்றுவது கிடையாது. ஒரு சிறுகதையை எழுதி முடிக்க எனக்கு குறைந்தது ஒரு வாரம் ஆகும். மூன்று மாதம் ஆகும்.  சிலவேளை ஆறு மாதம்கூட எடுக்கும்.

அந்தச் சிறுகதையை என் இணைய தளத்தில் ’பவித்திரா’ என்ற தலைப்பில் வெளியிட்டேன். பின்னர் நான் அதைப்பற்றி பெரிதாக நினைக்கவில்லை. மறந்தும் போனேன். ஆறு மாதங்கள் கழிந்திருக்கும். பிரபல இயக்குநர் பாலு மகேந்திராவிடம் இருந்து ஒரு மின்னஞ்சல் வந்தது. இதற்கு முன்னால் எங்களுக்கிடையே தொடர்பு கிடையாது. அந்தக் கடிதத்தில் அவர் திரைப்படக் கல்லூரியில் தன்னிடம் படிக்கும் மாணவர் ஒருவர் அந்தக் கதையை குறும்படமாக எடுக்க விரும்புகிறார் என்றும் அதற்கு அனுமதிகேட்டும் எழுதியிருந்தார்.


எனக்கு இதில் இரண்டு ஆச்சரியம் இருந்தது. ஒன்று, நான் மதிக்கும் இயக்குநர் பாலு மகேந்திராவிடம் இருந்து கடிதம் வந்திருந்தது. இரண்டு, அனுமதி கேட்டது. இந்தக் காலத்தில் யார் அனுமதி கேட்கிறார்கள்? அதுவும் ஒரு குறும்படம் இயக்குவதற்கு. அவருடைய பெருந்தன்மை அப்படி எழுதிக் கேட்டிருந்தார். நான் உடனேயே ஒருவித ஆட்சேபமும் இல்லை என்று பதில் எழுதினேன். விசயம் அத்துடன் முடிந்தது.

பாலு மகேந்திரா நான் படித்த அதே யாழ்ப்பாணக் கல்லூரியில் படித்தவர் என்ற தகவல் எனக்கு சில வருடங்களுக்கு முன்னர்தான் கிடைத்தது. அவர் நான் தங்கிய அதே விடுதியில்தான் தங்கியிருக்கிறார். நான் படுத்த அதே கட்டிலில் படுத்திருக்கவும் கூடும். ஒருவரை ஒருவர் சந்தித்துக்கூட இருக்கலாம். மாணவனாயிருந்த சமயத்தில் அவர் ஒரு நாடகம் எழுதி கதாநாயகனாக நடித்திருக்கிறார். இலங்கையில் பல இடங்களில் அந்த நாடகத்தை மேடையேற்றி வெற்றிகண்டவர் என்றெல்லாம் சொன்னார்கள். எப்படியோ நான் பார்க்கத் தவறிவிட்டேன்.

1980களில் நான் ஆப்பிரிக்காவில் இருந்தபோது அவருடைய திரைப்படம் ஒன்றைப் பார்த்தேன். ஆப்பிரிக்காவில் எங்கே தமிழ் திரைப்பட அரங்கு  இருக்கிறது? வீடியோ கெசட்டில் வந்த அவருடைய ’அழியாத கோலங்கள்’ படத்தைத்தான் சொல்கிறேன். அப்பொழுது ஆப்பிரிக்காவில் அந்த நகரத்தில் வேலைபார்த்த அத்தனை தமிழர்களும் என் வீட்டுக்கு படம் பார்க்க வந்துவிட்டார்கள். 20 – 30 பேர் அன்று அந்தப் படத்தை பார்த்தோம். பல தடவை பார்த்தோம். தமிழில் இப்படியெல்லாம் படம் எடுக்கமுடியுமா என்று ஆச்சரியப்பட வைத்தது அந்தப் படம். 

அதைத் தொடர்ந்து பாலு மகேந்திராவின் பல படங்களை தொடர்ந்து பார்த்தோம். மூடு பனி, யாத்ரா, மூன்றாம் பிறை, வீடு, சந்தியா ராகம், இரட்டைவால் குருவி எல்லாமே வித்தியாசமானவை. ஒன்றுபோல ஒன்று இல்லை. ஒரு கதையை திரைப்படமாக எடுக்கும் உத்தியை சரியாகக் கற்றவர் பாலு மகேந்திரா. அவரைப் பார்க்கவேண்டும் என்ற ஆவல் எனக்கிருந்தது. ஒருமுறை இந்தியா போயிருந்தபோது  நண்பர் ஒருவர் என்னை அவரிடம் கூட்டிப்போனார். ஆனால் சந்திக்க முடியவில்லை. அவர் ஒரு படப்பிடிப்புக்கு போயிருப்பதாகச் சொன்னார்கள். திரும்பிவிட்டோம்.

பாலு மகேந்திரா எனக்கு மின்னஞ்சல் அனுப்பி ஒரு வருடம் கழிந்திருக்கும். அவர் மீண்டும் ஒரு மின்னஞ்சலில் அவர் தெரிவுசெய்த சிறுகதை  குறும்படமாக சீக்கிரம் வரும் என தெரிவித்தார். பின்னர் தகவல் இல்லை. இரண்டு நாட்களுக்கு முன்னர் ரதன் என்ற நண்பர் என்னை தொலைபேசியில் அழைத்து நான் எழுதிய பவித்திரா சிறுகதையை தழுவி எடுத்த ஐந்து நிமிடக் குறும்படம் வெளிவந்துவிட்டதாகச் சொன்னார். அதைப் பார்த்தபோது அதன் ஆரம்பக் காட்சி எனக்கு பெரிய ஆச்சரியத்தை கொடுத்தது. ஒரு மனிதர் முகத்தில் நுரை பூசிக்கொண்டு கண்ணாடியின் முன் நின்று சவரம் செய்கிறார். முகத்தை அப்படியும் இப்படியும் திருப்பி திருப்பி பார்க்கிறார். பொஸ்டனில் ஒரு காலை நேரம் நான் குளியலறையில் கண்ணாடியின் முன் நின்று முகத்தை அப்படியும் இப்படியும் திருப்பி பார்த்ததை நினைத்துக்கொண்டேன்.

இன்று பாலு மகேந்திராவிடம் இருந்து வந்த மின்னஞ்சல் என்னை திடுக்கிட வைத்தது. விக்னேஸ்வரன் விஜயன் அவருடைய மாணவன் அல்ல; அவர் புனே திரைப்பட கல்லூரி மாணவன். அவர்தான் இந்த படத்தை இயக்கியவர். அத்தனை பெரிய இயக்குநர் அனுமதி வாங்கியிருக்கும்போது இந்த மாணவர் அனுமதி பெறாமலேயே படத்தை எடுத்துவிட்டார்.

இந்த மாணவரின் ஆர்வத்தை பாராட்டுவதா, விடுவதா? எனக்கு ஒன்றுமே புரியவில்லை.
http://www.nizhal.in/?page_id=400 

No comments: