*
* உலகின் மிக உயரமான ஒலிபரப்பு கோபுரம் ஜப்பானில் அமைப்பு * 30 நிமிடங்களில் பூமியின் எப்பகுதியையும் தாக்கக்கூடிய அமெரிக்காவின் புதிய ஏவுகணை ஒலியைவிட 5 மடங்கு வேகம் கொண்டது
* இராணுவஅரசுக்கு எதிராக எகிப்தில் ஆர்ப்பாட்டங்கள்; 670 பேர் காயம்
* ஈராக் குண்டுவெடிப்பில் 10 பேர் பலி: 45 பேர் காயம்
* பாகிஸ்தான் இராணுவத்தினர் 20 பேர் நேட்டோ படையினரின் தாக்குதலில் பலி
உலகின் மிக உயரமான ஒலிபரப்பு கோபுரம் ஜப்பானில் அமைப்பு Monday,
உலகில் மிகவும் உயரமான தொலைக்காட்சிச் சேவை ஒளிபரப்புக்கோபுரம் ஜப்பானில் அமைக்கப்பட்டுள்ளது.
634 மீற்றர் உயரம் கொண்ட இந்தக் கோபுரம் டோக்கியோவில் அமைக்கப்பட்டுள்ளதுடன் கின்னஸிலும் இடம்பெற்றுள்ளது.
இதற்கான கின்னஸ் சான்றிதழ் டோபு டவரின் தலைவர் மிஸ்ஹியாகி சுசுகியிடம், கின்னஸ் உலக சாதனை தலைமைச் செயலாளர் அலிஸ்டர் ரிச்சாட்ஸ் வியாழக்கிழமை அளித்தார்.
இதன் மூலம் ஜப்பானுடைய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப உலகிற்கு தெரிய வந்துள்ளது. இந்த அங்கீகாரம் எங்களுக்கு மேலும் பலமாக அமையும். இதற்காகவே நாங்கள் முயன்றோம் என்று சுசுகி தெரிவித்தார்.
இதற்கு முன் சீனா 600 மீற்றர் உயரத்துக்கு கோபுரம் அமைத்ததுவே சாதனையாக இருந்தது. தற்போது அது முறியடிக்கப்பட்டுள்ளது. இந்தக் கோபுரம் அடுத்த வருடம் மே மாதம் மக்களின் பயன்பாட்டிற்கு வரும் என்று தெரிகிறது.
நன்றி தினக்குரல் 30 நிமிடங்களில் பூமியின் எப்பகுதியையும் தாக்கக்கூடிய அமெரிக்காவின் புதிய ஏவுகணை ஒலியைவிட 5 மடங்கு வேகம் கொண்டது
Monday, 21 November 2011
பூமியின் எந்தப் பகுதியிலுமுள்ள இலக்கையும் 30 நிமிடங்களில் சென்று தாக்கக் கூடிய அதி நவீன ஏவுகணை ஒன்றை அமெரிக்க இராணுவத்தினர் கண்டுபிடித்துள்ளனர்.
ஹைப்ப சொனிக் எனப்படும் இந்த ஏவுகணை ஒலியை விட 5 மடங்கு வேகத்தில் பயணிக்கும் வல்லமை கொண்டது. இந்த பறக்கும் ஏவுகணை பரிசோதனை கடந்த வாரம் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது.
ஹவாயிலிருந்து ரொக்கட் ஒன்றின் மூலம் ஏவப்பட்ட இந்த ஏவுகணை சத்தமின்றி வாயுமண்டலத்தினூடு பயணித்து 2500 கிலோ மீற்றர் தொலைவிலிருந்த மார்ஷல் தீவுகளிலிருந்த இலக்கை வெற்றிகரமாகத் தாக்கியது.
200 அடி நீளமான கொங்கிறீற்றை ஊடறுத்துச் சென்று தாக்கும் வல்லமையுடைய 15 தொன் நிறையுடைய நிலத்தவி குண்டுகள் குறித்து அமெரிக்கா தகவல்களை வெளியிடும் நிலையில் இப்புதிய கண்டுபிடிப்பு குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன.
வெளிநாடுகள் மீது இலகுவில் தாக்குதல் தொடுக்கும் வல்லமையை தாம் கொண்டிருப்பதாக அமெரிக்கா வெளிநாடுகளுக்கு விடுக்கும் செய்தியாகவே இது அமைந்துள்ளது.
ஆனால் இந்த ஏவுகணையின் மேலதிக தகவல் எதனையும் பென்டகன் வெளியிடவில்லை.
பாரம்பரிய ஏவுகணைகளிலும் பார்க்க சற்று வித்தியாசமான ஏவுகணையாகவே இது உள்ளது.
நன்றி தினக்குரல்
இராணுவஅரசுக்கு எதிராக எகிப்தில் ஆர்ப்பாட்டங்கள்; 670 பேர் காயம்
Monday, 21 November 2011
எகிப்தின் தலைநகர் கெய்ரோவிலும் அலெக்சான்டர் பகுதியிலும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் பாதுகாப்புப் படையினருக்கு இடையில் நடைபெற்ற மோதலில் இருவர் பலியானதுடன் 670 பேர் காயமடைந்துள்ளனர்.
இராணுவத் தலைமைத்துவத்துக்கு எதிராக நடைபெற்றுவரும் ஆர்ப்பாட்டங்களுக்கு எதிராக பொலிஸார் நடவடிக்கை எடுக்க ஆரம்பித்த நிலையிலேயே இம் மோதல்கள் இடம்பெற்றுள்ளன.
சில ஆர்ப்பாட்டக்காரர்கள் கற்களை வீசி எறிந்துள்ளதுடன் பொலிஸாரின் வாகனங்களுக்குக் தீ மூட்டியுமுள்ளனர்.
பாராளுமன்ற தேர்தல்கள் நடைபெறுவதற்கு ஒரு வாரமே இன்னமும் உள்ள நிலையில் இவ்வன்முறைச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. இஸ்லாமிய இளைஞர்களே பெருமளவில் கூடி இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதுடன் புதிய சிவில் ஆட்சி முறையானது இராணுவ அதிகாரிகளுக்கு அதிகளவான அதிகாரங்களை வழங்குவதாகவும் அதனைத் தடுத்து நிறுத்த வேண்டுமெனவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் வலியுறுத்துகின்றனர்.
ஆர்ப்பாட்டக்காரர்களின் கூடாரங்களை அகற்றுவதற்கு பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்ட நிலையிலேயே இருதரப்பினரிடையேயும் மோதல்கள் நடைபெற ஆரம்பித்துள்ளன.
தாஹிர் சதுக்கத்தில் கூடியுள்ள ஆர்ப்பாட்டக்காரர்களை அங்கிருந்து வெளியேறுமாறு பிரதமர் எசாம் ஹகீபும் பகிரங்க அழைப்பு விடுத்துள்ளார்.
தாஹீர் சதுக்கத்தில் நடைபெறுபவை மிகவும் பயங்கரமானவையாக உள்ளதெனவும் நாட்டிற்கு அச்சுறுத்தலாக அமைந்துள்ளதெனவும் அமைச்சரவை விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
பாதுகாப்புப் படையினருக்கும் பொலிஸாருக்குமிடையில் நடைபெற்ற மோதலில் இதுவரை 670 பேர் காயமடைந்துள்ளனர்.
நன்றி தினக்குரல்
24/11/2011
ஈராக்கின் தெற்கு நகரான பாஸ்ராவில் நேற்று வியாழக் கிழமை மாலை இடம்பெற்ற மூன்று குண்டு வெடிப்புச் சம்பவங்களில் 10 பேர் பலியாகியுள்ளதாக பொலிஸ் மற்றும் வைத்திய அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
துறைமுக நகரின் கடைகள் மற்றும் உணவகங்கள் உள்ள வர்த்தகப் பகுதியில் இடம்பெற்ற மற்றொரு குண்டுவெடிப்பில் 45க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர். வீதியோர மற்றும் மோட்டார் சைக்கிள் குண்டுகள் ஒரே நேரத்தில் வெடித்ததாக அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது.
கடந்த ஒக்டோபர் 27இல் பாக்தாத்தில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 36 பேர் பலியானமை குறிப்பிடத்தக்கது.
கடைசி அமெரிக்க இராணுவப் படையணி இவ்வருட இறுதிக்குள் ஈராக்கை விட்டு வெளியேறத் தயாராகும் நிலையில் இத்தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன. மேலும் தாக்குதல்கள் அதிகரிக்கக் கூடும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.
நன்றி வீரகேசரி
பாகிஸ்தான் இராணுவத்தினர் 20 பேர் நேட்டோ படையினரின் தாக்குதலில் பலி
கவின் 26/11/2011
பாகிஸ்தானில் சோதனைச் சாவடியொன்றில் கடமையில் ஈடுபட்டிருந்த இராணுவத்தினர் மீது நேட்டோ படையினர் நடத்திய தாக்குதலில் 20 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
இச்சம்பவமானது இன்று அதிகாலை நடைபெற்றுள்ளது. எனினும் இது தொடர்பான தகவல் தற்போதே ஊடகங்களில் வெளியாகியுள்ளன.
மேலும் இத்தாக்குதலில் 12 பேர் காயமடைந்துள்ளனர்.
பாகிஸ்தான் மற்றும் ஆப்கான் எல்லைப் பகுதியிலேயே இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இதனையடுத்து ஆப்கானுக்கான நேட்டோவின் விநியோகப்பாதையினை பாகிஸ்தான் மூடியுள்ளது.
குறித்த சம்பவத்திற்கு பாகிஸ்தான் கடும் கண்டனத்தினைத் தெரிவித்துள்ளது. .
நன்றி வீரகேசரி
No comments:
Post a Comment