பாபாவின் அவதார தினச் செய்தி


.
 Wednesday, 23 November 2011


தொடக்கமும் முடிவுமற்ற கால ஓட்டத்தில் இரவும், பகலும், கோடையும், குளிரும் முடிவற்று சுழன்றபடி இருக்கின்றன. கால வெள்ளப் பெருக்கினால் இந்த அகண்டத்தின் மீது விடாது அவை ஏற்பட்டபடி இருக்கின்றன. உயிரினங்களின் வாழ்வு ஒவ்வொரு நாளும் சுருங்கிக்கொண்டே வருகின்றது. வெள்ளத்தினால் முன்னே எடுத்துச் செல்லப்படும் பொழுது, அதிசயமாக மனிதன் தனது விதியினைப் பற்றி அறியாது இருக்கிறான். வேகமாகக் குறைந்து கொண்டிருக்கும் அவனது வாழ்நாளைப் பற்றி சிறிதும் எண்ணாது இருக்கிறான். அவனது அறியாமையால் அவன் குருடனாக இருக்கிறான். வளங்களும், செல்வங்களும் குறுகிய கால அளவினையே கொண்டுள்ளது. அதிகாரமும்கூட தற்காலிகமானவையே. வாழ்வின் சுவாசமானது காற்றில் அலைபாயும் சுடரைப் போன்றது. இளமை என்பது மூன்று நாளைய சந்தை. இன்பங்களும், செல்வங்களும் துயரத்தின் மூட்டைகளே. இதனை அறிந்து கொண்டு, மனிதன் இந்தக் குறுகிய கால வாழ்வினை, இறைவனது சேவைக்கு அர்ப்பணித்தால், அவன் உண்மையில் ஆசீர்வதிக்கப்பட்டவன் ஆகின்றான்.

இந்த உடல் என்னும் கூட்டிலிருந்து உயிர்ப்பறவை பறந்திடும் முன்பே இறைவனது பாதங்களில் அடைக்கலம் அடைந்திடுங்கள். அது ஒரு திறந்த கூடு. எந்த வேளையிலும் பறவையானது, வெளிப்பிரதேசத்திற்குப் பறந்து சென்றுவிடலாம். இதுவே உண்மை நிலை. அறியாமையில் உள்ளோர் இதனை உணர்வதில்லை. தாங்கள் எவ்வளவு பெரிய பணக்காரர்கள் எனப் பெருமிதம் கொண்டும், எவ்வளவு மகிழ்ச்சியாக அவர்கள் உள்ளனர், எனவும் தங்களது மகன்கள் மற்றும் பேரக்குழந்தைகளால் சூழப்பட்டு, எவ்வளவு சுகமாக உள்ளனர் எனவும் தங்களது முரசினைத் தாமே கொட்டிக்கொண்டு, பறைசாற்றுகின்றனர். ஐயகோ! சிறுவயது முதலாக கருத்துடன் போஷித்துக் கவனிக்கப்பட்ட இப்புற உடலே, அழுகிக்கீழே வீழ்ந்து விடுகின்றது. இதர பொருட்கள் அனைத்தும் என்னுடையது எனக் கூறுவோரைப்பற்றி நாம் என்னதான் சொல்வது? பத்தும் படித்த மனதின் மாயை தான் தன்னுடையது எனச் சொந்தம் பாராட்ட வைக்கிறது. ஒவ்வொன்றும் உண்மையற்றவை. காற்றில் மாளிகைகளும், கனவில் கட்டிய அமைப்புகளுமே அவை.

இந்த உண்மையைச் சிந்தனை செய்திடுங்கள். ஸ்ரீ ஹரியினை அணுகி அவரைப் போற்றிடுங்கள். அது மட்டுமே உங்களுக்கு நிரந்தரமான ஆனந்தத்தினை அளித்திடும். உடல் என அழைக்கப்படும் அறையினுள், இதயம் என்ற உறுதியான பெட்டி உள்ளது. ஞானம் என்னும் மதிப்புமிக்க கல் அதனுள் இருக்கின்றது. நான்கு வஞ்சகத் திருடர்களாகிய காமம், குரோதம், லோபம் மற்றும் ஆசை, கோபம், பேரவா, பொறாமை என்பவைகள் அதனைத் திருடுவதற்காக காத்திருக்கின்றனர். மிகவும் தாமதம் ஆகும் முன்பு, ஆபத்தினை அறிந்து எதிர்த்து நில்லுங்கள். இப்பிரபஞ்சத்தினை வழிநடத்துபவனான இறைவனின் ஆதாரத்தினைப் பெற்ற வலிமையுடன் நின்று, அந்த விலை மதிப்பற்ற கல்லினைப் பாதுகாத்திடுங்கள். அது பிரேமையிலும், சாந்தியிலும் உங்களைச் செல்வந்தன் ஆக்கிவிடும்.

சந்திரனின் முகத்தை மறைத்திடும் மேகங்கள் காற்றினால் விலகிடும் பொழுது, நிலவு தெளிவுடனும், குழுமையுடனும் ஒளிர்கின்றது. அதனைப் போலவே செருக்கு என்னும் மேகங்கள் அடித்துச் செல்லப்படும் பொழுது, மனிதனுடைய மனமானது தூய்மையாகவும், முழு வடிவுடனும் திகழ்ந்திடும். அதனுடைய சுய இயல்புடன் ஒளிபெற்றிடும். அதுவே பேரானந்தத்தின் நிலையாகும். அதனை அடைந்து விட்டால், அதற்கு மேல் வேறு எந்தத் துயரமும் இல்லை. விளக்கு இருக்கும் பொழுது, இருள் இருந்திட வழியில்லை. ஒருமுறை ஏற்பட்ட ஞானம் என்னும் விளக்கானது ஒரு போதும் அணையாது. மங்காது, அலைபாயாது. மனிதர்கள், இந்த உலகில் உள்ள பொருட்களிலிருந்து தங்கள் புலன்களால் உந்தப்பட்டு பெற விளைகின்ற ஆனந்தமும், சாந்தியும் விரைவாக அலைபாய்ந்து மங்கி, மறைந்து விடுகின்றன. முட்டாள்தனமான ஆசையினை ஒரு கணம் தீர்த்து வைக்கின்றது. அவை ஆசை, கோபம், வெறுப்பு, மற்றும் பொறாமை ஆகியவற்றால் அடையப்படுகின்றன. ஆகவே அவை பொய்யானதும், நிலையற்றதும் ஆகும். இவற்றைக் கட்டுப்படுத்தி, வென்றிடுங்கள். அப்பொழுது மட்டுமே உங்களால் உண்மையான ஆனந்தத்தினையும், சாந்தியினையும் பெற்றிட இயலும். இவற்றைப் பெறுவது மட்டுமல்ல, நீங்கள் இவைகளாகவே மாறியும் விடலாம்.

மனித குலத்திற்குப் போர்கள் இவற்றைத் தவிர வேறு எதனை போதிக்கின்றன? மோகம், கோபம், வெறுப்பு மற்றும் பொறாமை ஆகியவையே தீய சக்திகளாக மனிதனை ஆட்கொள்கின்றன. இன்றைய உலகில் எழுந்துள்ள அராஜகம், நீதியற்ற நிலை, குழப்பங்கள் மற்றும் கொலைகள் ஆகியவற்றை ஆராய்ந்து பாருங்கள். இவை இந்த சக்திகளின் விளைவுகளே ஆகின்றன. ஏன் உங்களது உடலின் நோய்களும், உங்களது இல்லங்களின் தீமைகளும்கூட இந்த தீய சக்திகளின் விளைவுகளே ஆகும். ஒருவரிடம் உள்ள இந்தத் தவறுகளையும், தோல்விகளையும் பற்றி அறிந்திடாது மனிதன் மற்றவர்களின் மீது குறைகளைச் சுமத்துகிறான். பழிகளைத் தலையில் கட்டுகிறான். அவர்களைப் பழித்து, வருத்துகிறான். இது ஒரு பாபமே. இது கொஞ்ச நேரத்திற்கு களிப்பினையும் குற்றமற்ற உணர்வினையும் உங்களுக்கு அளித்திடும். ஆனால் கவலை, துயரம், வலி இவற்றினைத் தவிர வேறு எதனையும் அவை உங்களுக்கு அளித்திடாது.

வெறுப்பும், பொறாமையும் மனிதனுடைய உண்மையான எழிலினை வேறுவிதமாக மாற்றி விடும். அனைத்து வகையான பாவச் செயல்களுக்கும் கோபமே எரிபொருள் ஆகும். நீங்கள் கோபத்தினால் தாக்குண்ட பொழுது கண்ணாடியின் முன்பு நின்று உங்களைக் காணுங்கள். பழங்கால சூர்ப்பனைக்கு அல்லது லங்கிணிக்கு நீங்கள் உறவினராகத் தோன்றும். அப்பொழுது உங்களை ஆட்கொண்டிருக்கும் ரஜோ குணமே நீங்கள் தவிர்க்கக் கற்றுக் கொள்ள வேண்டிய ராட்சஸ குணமாகும். ஆகவே ஆன்மீகத் துறையில் வெற்றிகாண விழைபவர்கள், கோபத்தை அடக்கி, மனதின் அலைபாயும் தன்மைகளான செயல்களை புரிய தீர்மானம் செய்வது, புரிய வேண்டாம் எனத் தீர்மானம் செய்வது போன்ற சஞ்சலத் தன்மைகளை அடக்கலாம். அவர்கள் தங்களது மன எழுச்சிகளையும், கவலைகளையும் விட்டொழித்து ஒவ்வொருவரிடமும் சிவம் சுவாசமாக உள்ளது என்பதில் அவர்கள் நம்பிக்கை கொள்ள வேண்டும். அவர்கள் விஸ்வப்பிரேமையை (பிரபஞ்ச அளவிலான அன்பு) வளர்த்துக் கொள்ள வேண்டும். அதனை அவர்கள் தங்களுடைய வார்த்தைகளிலும், செயல்களிலும் எடுத்துக்காட்டிட வேண்டும். நீங்கள் அனைவரும் சத்தியம், சாந்தி, சுகம் ஆகியவற்றை இவைகளின் வாயிலாக வென்றிட வாழ்த்துகிறேன்.

மற்றுமொரு கருத்தும் உள்ளது. பொறாமை, பேராசை, காமம் மற்றும் கோபம் ஆகிய அனைத்தும், வியாதி காரணம் (நோய்களுக்கான காரணங்கள்) என ஸாஸ்திரங்கள் கூறுகின்றன. இந்த குணாதிசயங்களால் தாக்கப்பட்டவர்கள் மிகுந்த ஆரோக்கியமான உணவை உட்கொள்ளலாம். ஆனால் அது அவர்களுக்கு ஆரோக்கியத்தினை அளித்திடாது. அவர்கள் பலவித செரிமான மற்றும் நரம்புக் கோளாறுகளால் அவதியுறுவர். ஆகவே, பக்தர்களும், வீடுபேறு பெற விளைந்திடுபவர்களும், இத்தகு தீய போக்குகளை ஞானம் (ஆன்மீக அறிவு) எனும் கூரிய வாளினால் வெட்டி எறிந்து தப்பத்திடல் வேண்டும். அவர்கள் இறைவனிடம், இத்தகைய தீய குணங்களிலிருந்து தங்களைக் காத்திட பிரார்த்தனை செய்திடல் வேண்டும். இந்தக் கணம் முதல் அவற்றை நீங்கள் அடக்கி, ஆட்கொண்டிட இறைவனது அருளுக்காக பிரார்த்தனை செய்திடுங்கள். இறைவன் மீதான உங்களுடைய நம்பிக்கையை ஆழப்படுத்துங்கள்.

உங்களுடைய பிரேமையை விரிவடையச் செய்து, அதனுள் இம்மனிதகுலம் முழுவதையும் கொண்டு செல்லுங்கள். பக்தனுக்கு வேறு எந்த மாற்றுப் பாதையும் இல்லை.

தொகுப்பு: எஸ்.ஆர்.லோகீஸ்வரன்.

நன்றி தினக்குரல்

No comments: