இலங்கைச் செய்திகள்

உள்நாட்டிலேயே பேசித்தீர்க்கும் உறுதியான நம்பிக்கையாலேயே 13 ஆவது சுற்றிலும் ஏமாற்றம் அரசுடனான பேச்சு குறித்து தமிழ்க் கூட்டமைப்பு எம்.பி. அரியநேத்திரன்

இலங்கை நாணயம் மூன்று வீதத்தினால் மதிப்பிறக்கம்

கொழும்பில் இடம்பெற்ற சாயி பாபா ஜனன தின நிகழ்வு (பட இணைப்பு)

நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கையை பகிரங்கமாக்குமாறு பிரிட்டன் கோரிக்கை
வடக்கு மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் அரசு தீர்வு காண வேண்டும்: வாசுதேவ
"யாழ்ப்பாணத்தில் இராணுவம், பொலிஸாரைத் தவிர வேறு எவரும் ஆயுதங்களை வைத்திருக்க முடியாது"

அப்துல் கலாம் ஜனவரியில் இலங்கை வருகிறார்

தேசிய கீதத்தை சிங்களத்தில் மட்டும் பாடுமாறு கட்டாயப்படுத்துவது சட்டவிரோதம் பாராளுமன்றில் அமைச்சர் வாசுதேவ

மட்டக்களப்பில் கடும் மழையால் வெள்ள அபாயம் குளங்களின் வான் கதவுகள் திறக்கப்படுகின்றன வேளாண்மைக்கு பாதிப்பு ஏற்படலாம்

மும்மொழிச் சமூகத்தை உருவாக்கும் திட்டம்

மோசமான வானிலையால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை உயர்வு

ஆணைக்குழு அறிக்கைகள்; அடுத்து அரசு என்ன செய்யப் போகிறது


உள்நாட்டிலேயே பேசித்தீர்க்கும் உறுதியான நம்பிக்கையாலேயே 13 ஆவது சுற்றிலும் ஏமாற்றம் அரசுடனான பேச்சு குறித்து தமிழ்க் கூட்டமைப்பு எம்.பி. அரியநேத்திரன்
Wednesday, 23 November 2011

தமிழ் மக்களின் பிரச்சினைகளை உள்நாட்டிலேயே பேசித் தீர்க்க வேண்டும் என்பதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மிகவும் உறுதியுடன் இருப்பதனாலேயே 13 ஆவது தடவையாகவும் அரசுடன் பேச்சுக்களை நடத்தி ஏமாந்துள்ளதென அக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட எம்.பி.யான அரியநேத்திரன் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற வரவுசெலவுத் திட்டம் மீதான முதல்நாள் விவாதத்தில் உரையாற்றுகையிலேய இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது;

இலங்கையை ஆசியாவின் ஆச்சரியம் மிக்க நாடாக மாற்ற வேண்டுமென அரசு கூறிவருகின்ற நிலையில் வரவுசெலவுத் திட்டத்தை ஜனாதிபதி சமர்ப்பித்த தினத்தன்று இந்த பாராளுமன்றத்தில் இடம்பெற்ற அராஜகம் இலங்கைப் பாராளுமன்றத்தை உலகத்தின் ஆச்சரியமாக மாற்றியுள்ளது. அரச தரப்பிடம் உள்ள அரசியல் பயங்கரவாதம் பாராளுமன்றத்தில் வெளிப்படுத்தப்பட்டது. எதிர்க்கட்சியினர் ஒரு சுலோக அட்டை மூலம் கூட தமது எதிர்ப்பை வெளிப்படுத்த முடியாதளவுக்கு அரச பயங்கரவாதம் ஏற்பட்டுள்ளது.

இதேவேளை 15 ஆயிரம் முன்னாள் புலிகளுக்கு புனர்வாழ்வளிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி கூறியுள்ளார். பசில் ராஜபக்ஷவோ 12 ஆயிரம் புலிகளுக்கு புனர்வாழ்வளிக்கப்பட்டுள்ளது என்கிறார். புனர்வாழ்வுக்கு பொறுப்பான மேஜர் ஜெனரல் சுசந்தவே 19 ஆயிரம் புலிகளுக்கு புனர்வாழ்வளிக்கப்பட்டுள்ளது என்கிறார். இந்தத் தகவல்கள் ஒன்றுக்கு ஒன்று முரண்பட்டுள்ளதால் புனர்வாழ்வளிக்கப்பட்ட புலிகள் தொடர்பிலும் அவர்களின் பாதுகாப்புத் தொடர்பிலும் எமக்கு சந்தேகமும் அச்சமும் ஏற்பட்டுள்ளது.

எமது நாட்டுப் பிரச்சினைகளை நாம் இங்கேயே பேசித்தீர்க்க வேண்டும். வெளிநாடுகளுக்குக் கொண்டு செல்லக்கூடாதென ஜனாதிபதி தனது வரவு செலவுத்திட்ட உரையில் குறிப்பிட்டிருந்தார். அதனை நாம் வரவேற்கின்றோம். தமிழ் மக்களின் பிரச்சினைகளை உள்நாட்டில் பேசித்தீர்க்க வேண்டுமென்பதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுதியாகவுள்ளது. இதனால் தான் அரசுடன் 13 ஆவது தடவையாகவும் பேச்சு வார்த்தைகளை நடத்தி ஏமாந்துள்ளது. இனியும் பேச்சுவார்த்தைகளைத் தொடரவுள்ளது. பண்டார முதல் மகிந்த வரை நாம் பேச்சுக்களை நடத்திய போதும் அனைத்திலும் அவர்களால் ஏமாற்றப்பட்டோம். தமிழ் மக்களின் பிரச்சினைக்கான தீர்வுக்கான சகல பேச்சுக்களையும் முறித்துக் கொண்டவர்கள் மாறி மாறி ஆட்சிக்கு வந்த அரச தலைவர்களேயன்றி நாமல்ல. 1956 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட சிங்கள சட்டம் குறித்து முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா தற்போது கவலைப்படுகின்றார். ஜனாதிபதியாக இருந்த போது வராத கவலை இப்போது அவருக்கு வந்துள்ளது. இதேபோன்று ஜனாதிபதியாக இருக்கும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு தற்போது வராத கவலைகள் ஜனாதிபதியாக அவர் இல்லாத போது வரலாம்.

75 பொதுமக்கள் கொல்லப்பட் கெப்பிட்டி கொல்லாவ கிராமத்துக்கு 300 மில்லியன் ரூபாவை ஒதுக்கியுள்ளதாக ஜனாதிபதி குறிப்பிடுகின்றார். அவ்வாறெனில் பல நூற்றுக்கணக்கான தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்ட எத்தனையோ கிராமங்கள் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ளன. அவற்றுக்கு ஏன் இவ்வாறான நிதி ஒதுக்கீடுகள் மேற்கொள்ளப்படவில்லை. கெப்பட்டிக்கொல்லாவுக்கு ஒதுக்கப்பட்டதை நாம் எதிர்க்கவில்லை. ஆனால், பாரபட்சம் காட்டப்படக்கூடாது.

வரவுசெலவுத் திட்டத்தினூடாக அரச ஊழியர்களுக்கு சம்பள உயர்வு வழங்கப்பட்டுள்ள அதேவேளை தனியார் துறை ஊழியர்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளனர். வடக்கு, கிழக்கில் மட்டும் 13 ஆயிரத்துக்கும் மேற்பட்டவேலையற்ற பட்டதாரிகள் உள்ளனர். அவர்களுக்கான எந்தவொரு திட்டங்களும் வரவு செலவுத் திட்டத்தில் உள்ளடக்கப்படவில்லை.

நன்றி தினக்குரல்

இலங்கை நாணயம் மூன்று வீதத்தினால் மதிப்பிறக்கம்

23/11/2011
இலங்கை நாணயம் 3 சதவீதத்தினால் மதிப்பிறக்கம் செய்யப்பட்டுள்ளது. மத்திய வங்கி ஆளுனர் அஜித் நிவாட் கப்ரால் நேற்று இந்தத் தகவலை உறுதிப்படுத்தியுள்ளார்.

பாராளுமன்றத்தில் நேற்று முன்தினம் வரவு செலவுத் திட்டத்தை சமர்பித்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நாணய மதிப்பிறக்கம் செய்யும் யோசனையை அறிவித்திருந்தார்.

இதையடுத்து மத்திய வங்கி ஆளுனரிடம் கேள்வி எழுப்பியபோதே ரூபாவின் மதிப்பு நேற்று 3 வீதத்தினால் குறைக்கப்பட்டுள்ளதாக உறுதிப்படுத்தினார்.

ஐரோப்பிய கடன் நெருக்கடியை அடுத்து பிலிப்பைன்ஸ் தொடக்கம் மலேசியா வரையான ஆசிய நாடுகளைப் பின்பற்றி இலங்கையும் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

இலங்கையுடன் போட்டியிடும் நாடுகள் தமது நாணயத்தின் பெறுமதியைக் குறைக்கும் நிலையில் ஏற்றுமதித் துறைக்கு ஏற்படும் பின்னடைவை ஈடு செய்ய இலங்கை ரூபாவின் மதிப்பை 3 வீதத்தினால் குறைக்குமாறு மத்திய வங்கியிடம் கோருவதாக ஜனாதிபதி கூறியிருந்தார்.

இதன் அடிப்படையிலேயே நேற்று தொடக்கம் இலங்கை நாணயம் 3 வீதத்தினால் மதிப்பிறக்கம் செய்யப்பட்டுள்ளதாக அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார்.

நாணய மதிப்பிறக்கத்தை அடுத்து இலங்கையில் நேற்று காலை ஒரு அமெரிக்க டொலரின் மதிப்பு 113.50 ரூபாவாக அதிகரித்துள்ளதாக வங்கிகள் அறிவித்துள்ளன.
நன்றி வீரகேசரி


கொழும்பில் இடம்பெற்ற சாயி பாபா ஜனன தின நிகழ்வு (பட இணைப்பு)
23/11/2011

பகவான் ஸ்ரீ சத்ய சாயிபாபாவின் ஜனன தினம் இன்று சாயி பக்தர்களால் வெகு சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.

இதன் ஓர் அங்கமாக கொழும்பு சத்ய சாயிபாபா மத்திய நிலையத்தில் இன்று ஜனன தின நிகழ்வு இடம்பெற்றது.

இந்நிகழ்வில் மௌலவி மொஹமட் அரபாத், வண. ஞானானந்த தேரர், அருட்தந்தை ஒகஸ்டின் பெர்னாண்டோ, சிவஸ்ரீ சண்முக நாத குருக்கள், ஐக்கிய தேசியக்கட்சியின் யாழ் மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் திருமதி. விஜயகலா மகேஸ்வரன், உட்பட பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர். Pics by:S.M. Surendiran








நன்றி வீரகேசரி
நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கையை பகிரங்கமாக்குமாறு பிரிட்டன் கோரிக்கை
23/11/2011

இலங்கை அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்ட கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு ஜனாதிபதியிடம் சமர்ப்பித்த அறிக்கையைப் பகிரங்கமாக்குமாறு பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் அலிஸ்டயர் பர்ட் கோரியுள்ளார்.

இவ்வறிக்கை கடந்த ஞாயிற்றுக்கிழமை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் கையளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

பிரச்சினையிலிருந்து இலங்கை மீள்வதில் இந்த அறிக்கை குறிப்பிடத்தக்க மைல் கல்லாகும் எனப் பலரும் நம்புகின்றனர். இந்த முக்கியத்துவம் வாய்ந்த சந்தர்ப்பத்தைத் தேசிய நல்லிணக்கத்துக்கும் பொறுப்புடைமைக்கும் பயன்படுத்துமாறு நான் இலங்கை அரசாங்கத்தைக் கோருகிறேன்" என அமைச்சர் அலிஸ்டயர் பர்ட் தெரிவித்துள்ளார்.
நன்றி வீரகேசரி

வடக்கு மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் அரசு தீர்வு காண வேண்டும்: வாசுதேவ


23/11/2011

வடபகுதி மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக கூட்டமைப்பு எம்.பி. சுமந்திரன் பாராளுமன்றத்தில் முன்வைத்த அறிக்கை தொடர்பில் அரசாங்கம் தலையிட்டுத் தீர்வுகளைப் பெற்றுக் கொடுக்க வேண்டுமென அரசாங்கத்தின் பங்காளிக் கட்சியான ஜனநாயக இடது சாரி முன்னணியின் தலைவரும் அமைச்சருமான வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

இதன்போது எம்.பியின் பிரசார ரீதியிலான விடயங்களில் கவனம் செலுத்த வேண்டிய அவசியமில்லையென்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அமைச்சர் வாசுதேவ நாணயக்கார மேலும் தெரிவிக்கையில்,

"பாராளுமன்றத்தில் இரண்டு தடவைகள் சுமந்திரன் எம்பியினால் வட பகுதி நிலைமைகள் தொடர்பாக அறிக்கைகள் முன்வைக்கப்பட்டன.

தமிழ் மக்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்துவதற்கும் வடபகுதியில் மக்களின் ஜனநாயக உரிமைகளைப் பெற்றுக் கொடுப்பதற்கும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கத்தால் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளை எவருக்கும் அநீதி இழைக்கப்படாத வகையில் உடனடியாக மக்களுக்கு கிடைப்பதற்கான சந்தர்ப்பங்களை ஏற்படுத்த வேண்டியதன் பொறுப்பு அரசாங்கத்திற்கு உள்ளது.

எனவே இது தொடர்பில் அரசாங்கம் அதிக கவனம் செலுத்த வேண்டும்" என்றார்.

நன்றி வீரகேசரி




"யாழ்ப்பாணத்தில் இராணுவம், பொலிஸாரைத் தவிர வேறு எவரும் ஆயுதங்களை வைத்திருக்க முடியாது"

24/11/2011

யாழ்ப்பாணத்தில் இராணுவத்தினரையும் பொலிஸாரையும் தவிர எவரும் ஆயுதங்களை வைத்திருக்க முடியாது. இராணுவம் தற்போதைய நிலைமையில் சண்டையிடுபவர்கள் என்ற ஸ்தானத்திலிருந்து பாதுகாப்பாளர்கள் என்ற இடத்தை அடைந்துகொண்டிருக்கிறது. யாழ்ப்பாணத்தில் இராணுவத்தினரின் ஆயுதங்கள் ஒருபோதும் பொதுமக்களுக்கு எதிராகப் பயன்படுத்தப்படமாட்டாது என யாழ்.மாவட்ட கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்க தெரிவித்தார்.

சர்வதேச கற்கை நெறிகளுக்கான லக்ஷ்மன் கதிர்காமர் நிலையத்தில் இன்று வியாழக்கிழமை நடைபெற்ற போருக்குப் பின்னரான நல்லிணக்கம் தொடர்பான மாநாட்டில் கலந்துகொண்டு உயரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

"வடக்கில் இராணுவம் என்ன செய்கிறது எனக் கேட்கிறார்கள். மக்களிடம் இராணுவம் தொடர்பாகக் காணப்பட்ட தோற்றப்பாட்டை மாற்றி வருகிறோம். தற்போதைய நிலைமையில் மக்கள் எம்மை பாதுகாப்பாளர்களாகப் பார்க்கின்றனர். யாழ்ப்பாணத்தில் 99.3 வீதமான பகுதிகளில் நிலக்கண்ணிவெடிகள் அகற்றப்பட்டுள்ளன. பெரும்பாலும் இராணுவமே இந்த நடவடிக்கைகளை முன்னெடுத்தது" என அவர் மேலும் தெரிவித்தார்.

நன்றி வீரகேசரி

அப்துல் கலாம் ஜனவரியில் இலங்கை வருகிறார்


ரொபர்ட் அன்டனி
 24/11/2011

இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி எதிர்வரும் ஜனவரி மாதம் இலங்கைக்கு வருகை தரவுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்தார்.

கொழும்பில் அமைந்துள்ள லக்ஷ்மன் கதிர்காமர் ஞாபகார்த்த நிலையத்தில் நடைபெற் றுவரும் நல்லிணக்கமும் போருக்குப் பின்னரான நிலைமையும் தொடர்பான மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் சற்றுமுன் இத்தகவலை வெளியிட்டார்.

"இலங்கையர்கள் மூன்று மொழிகளிலும் தேர்ச்சி பெற்றிருத்தல் அவசியமாகும். அது தொடர்பான வேலைத்திட்டமொன்றை எதிர்வரும் 2012 ஆம் ஆண்டில் நாம் முன்னெடுக்கவுள்ளோம்.

அந்த செயற்திட்டத்தை ஆரம்பித்து வைப்பதற்காக இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் இலங்கை வரவுள்ளார்" என அமைச்சர் அங்கு தெரிவித்தார்.

நன்றி வீரகேசரி


தேசிய கீதத்தை சிங்களத்தில் மட்டும் பாடுமாறு கட்டாயப்படுத்துவது சட்டவிரோதம் பாராளுமன்றில் அமைச்சர் வாசுதேவ

Thursday, 24 November 2011

 இலங்கையின் தேசிய கீதம் சிங்கள மொழியில் மட்டும் தான் பாடப்படவேண்டுமென கட்டாயப்படுத்தப்படுவது சட்டவிரோதமான செயல் எனத் தெரிவித்த தேசிய மொழிகள் சமூக ஒருங்கிணைப்பு அமைச்சர் வாசுதேவ நாணயக்கார இது சில அதிகாரிகளின் தான் தோன்றித்தனமான செயற்பாடு எனவும் கூறினார்.


பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை காலை இடம்பெற்ற வாய்மூல விடைக்கான வினாவின் போது ஐ.தே.க. எம்.பி. தயாசிறி எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் வாசுதேவ நாணயக்கார இவ்வாறு தெரிவித்தார்.

தயாசிறி ஜயசேகர எம்.பி. இலங்கைத் தேசிய கீதம் சிங்கள மொழியில் மட்டுமே இசைக்கபடல் வேண்டுமென சட்டம் தயாரிக்க நடவடிக்கைள் மேற்கொள்ளப்படுகின்றனவா? ஆமெனில் இத்தகைய சட்டம் தயாரிக்க ஏதுவான விடயங்கள் எவை? தான் விரும்பிய மொழியைப் பாவிக்க அரசியலமைப்பினால் மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள உரிமை மேற்படி நிலைமையின் கீழ் மீறப்படவில்லையா? இதன் காரணமாக சிங்கள மக்களுக்கும் நாட்டின் ஏனைய இன மக்களுக்கும் இடையில் உள்ள பரஸ்பர உறவுக்குத் தாக்கம் ஏற்படுத்துமா? என்பன போன்ற கேள்விகளை அமைச்சர் வாசுதேவ நாணயக்காரவிடம் எழுப்பினார்.

இதற்கு பலதிளித்த அமைச்சர், இலங்கை தேசிய கீதத்தை சிங்கள மொழியில் தான் பாட வேண்டுமென சட்டம் இயற்றுவதற்கு எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இலங்கையின் தேசிய கீதத்தை சிங்கள மொழியில் மட்டும்தான் பாட வேண்டுமென வற்புறுத்துவது சட்டவிரோதமானது. அப்படியாரும் வற்புறுத்த முடியாது.

இது தொடர்பில் யாழ்ப்பாணத்தில் ஒரு குழப்பமான நிலை ஏற்படுத்தப்பட்டது. இது சில அதிகாரிகளின் தான்தோன்றித்தனமான செயற்பாட்டினால் ஏற்படுத்தப்பட்டது. அது தற்போது தீர்த்து வைக்கப்பட்டுள்ளது. இலங்கையின் தேசிய கீதத்தை சிங்கள மொழியில் மட்டும்தான் பாட வேண்டுமென்ற எந்தக் கட்டாயமும் கிடையாது. தாம் விரும்பிய மொழியில் அதனைப் பாட முடியும்.

நன்றி தினக்குரல்

மட்டக்களப்பில் கடும் மழையால் வெள்ள அபாயம் குளங்களின் வான் கதவுகள் திறக்கப்படுகின்றன வேளாண்மைக்கு பாதிப்பு ஏற்படலாம் Friday, 25 November 2011

 மட்டக்களப்பு மாவட்டத்தின் தொடர்ச்சியாக பெய்துவரும் மழை காரணமாக பட்டிப்பளை மற்றும் வவுண தீவு பிரதேச செயலகத்துக்குட்பட்ட சில பகுதிகளில் வேளாண்மை நிலங்கள் நீரில் மூழ்கும் நிலையேற்பட்டுள்ளது.


தொடர்ச்சியாக பெய்துவரும் மழை காரணமாக ஆறுகள் சிறிதளவில் பெருக்கெடுத்துள்ளதன் காரணமாக இந்த நிலையேற்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

பெரும்போக நெற் செய்கை தற்போது ஆரம்பித்து பயிர் வரும் நிலையில் இந்த வெள்ளத்தினால் அவை அழிந்துவருவதாகவும் விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

இதேவேளை, வெள்ளப்பெருக்கை கட்டுப்படுத்தும் நோக்கில் மூன்று குளங்களின் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட நீர்பாசனத்திணைக்களம் தெரிவித்தது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் பெய்துவரும் கடும்மழை காரணமாக குளங்களின் நீர்மட்டம் அதிகரித்ததன் காரணமாக குளங்களின் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட நீர்ப்பாசனத்திணைக்களப் பணிப்பாளர் மோகன்ராஜ் தெரிவித்தார்.

உன்னிச்சைக்குளத்தின் நான்கு வான் கதவுகள் நான்கு அடிகள் திறக்கப்பட்டுள்ளதுடன் ரூகம் குளத்தின் அனைத்து வான்கதவுகளும் எட்டு அடிகள் திறக்கப்பட்டுள்ளன. அத்துடன் நவகிரி குளத்தின் அனைத்து வான்கதவுகளும் மூன்று அடிகள் திறக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இதேபோன்று கட்டுமுறிவுக்குளமும் ஒரு அடி திறக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த அவர் அனைத்துக்குளங்கள் உள்ள பகுதிகளிலும் குறைந்தளவிலேயே வெள்ள நிலைமை காணப்படுவதாகவும் தெரிவித்தார்.

இதேவேளை, இந்த வெள்ள அனர்த்தம் காரணமாக கிரானுக்கும் புலி பாய்ந்தகல்லுக்கும் இடையிலுள்ள மதகு ஊடாக நீர் பாய்வதன் காரணமாக அப்பகுதிகளுடனான போக்குவரத்துக்கள் துண்டிக்கப்பட்டுள்ளன.

நேற்றுக் காலை தொடக்கம் கிரானிலிருந்து புலிபாய்ந்தகல் பிரதேசத்துக்கு கடமைக்குச் செல்வோர் இயந்திரப்படகுகள் மூலம் அப்பகுதிக்கு கொண்டுசெல்லப்பட்டனர்.

இதேவேளை, வெள்ளம் காரணமாக கிரான் பிரதேச செயலகத்துக்குட்பட்ட பூலாக்காடு பிரதேசத்திலிருந்து இடம்பெயர்ந்த 20 குடும்பங்கள் மீண்டும் தமது இருப்பிடங்களுக்குச் சென்றுள்ளதாக கிரான் பிரதேச செயலாளர் எஸ்.தவராசா தெரிவித்தார்.

நன்றி தினக்குரல்


மும்மொழிச் சமூகத்தை உருவாக்கும் திட்டம்

Friday, 25 November 2011

 2012 ஆம் ஆண்டை மும்மொழி ஆண்டாக அரசாங்கம் அறிவித்திருக்கிறது. இலங்கையில் நடைமுறையிலுள்ள சிங்களம், தமிழ், ஆங்கிலம் ஆகிய மும்மொழிகளிலும் மக்கள் குறிப்பாக இளந்தலைமுறையினர் தேர்ச்சி பெறுவதை நோக்கமாகக் கொண்டே இந்த நடவடிக்கைகளை அரசாங்கம் எடுத்திருப்பது வரவேற்கத்தக்க முயற்சி என்பதில் சந்தேகம் இல்லை. மூன்றுமொழிகளிலும் இலங்கை மக்கள் சரளமாகத் தொடர்பாடல்களை மேற்கொள்ளத்தக்கதாகவும் பரஸ்பரப் புரிந்துணர்வின் அடிப்படையில் வேறுபட்ட இனச்சமூகங்கள் மத்தியில் சக வாழ்வை மேம்படுத்தவும் மும்மொழிகளிலும் மக்கள் பாண்டித்தியம் பெற்றிருப்பது அவசியத்தேவை என்ற காரணத்தினால் "மும்மொழி இலங்கையாக நாட்டை முன்னோக்கி கொண்டு செல்லவேண்டியதன் அவசியத்தை வரவு செலவுத் திட்ட உரையின் போதும் ஜனாதிபதி குறிப்பிட்டிருந்தார்.


இந்த அவசியத்தை அங்கீகரித்து 10 வருடத்திட்டமும் வடிவமைக்கப்பட்டிருப்பதுடன் இது தொடர்பாக ஜனாதிபதி சமர்ப்பித்திருந்த யோசனைக்கும் அமைச்சரவை அங்கீகாரமளித்துள்ளது. அதேசமயம் இதனை வெற்றிகரமாக அமுல்படுத்துவதற்காக ஜனாதிபதி செயலகத்தில் ஒருங்கிணைப்பு பிரிவொன்றும் அமைக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எமக்கு அத்தியாவசியமாகத் தேவைப்படுவதை வாய்மொழிமூலம் தெரிவிக்கும் ஆற்றலை மனிதத்துவம் மிக உயர்ந்த மட்டத்தில் விருத்தி செய்துள்ளது.மனிதர்கள் பயன்படுத்தும் மிக வலுவான கருவி "மொழி'யாக மட்டுமே இருக்க முடியும். தகவலைத் தெரிவிக்க, ஒன்றைச் செய்யுமாறு ஊக்குவிக்க, கேள்வி எழுப்ப, உணர்வுகளை வெளிப்படுத்த, சிக்கலான சிந்தனைகளை, கருத்துகளை பரிமாறிக்கொள்ள, விடயங்களை இலவசமாகக் கையாள மொழியே கருவியாக பயன்படுத்தப்படுகிறது.

ஆனால் எண்ணிக்கையில் பெரும்பான்மையானோர் பேசும் மொழிக்கே அரச அரவணைப்பும் போசிப்பும் அதிக அளவில் கிடைப்பதனால் ஏனைய மொழிகளைப் பேசும் சமூகங்கள் ஓரங்கட்டப்படுவதும் அதனால் அதிருப்தியடைந்து தமது மொழி உரிமையை பாதுகாக்க போராடுவதும் போராடிக் கொண்டிருப்பதும் இலங்கைக்கு புதியதொரு விடயமல்ல. ஆங்கிலேயரிடமிருந்து இலங்கை சுதந்திரம் பெற்ற காலம் முதல் பெரும்பான்மை சமூகத்தவரின் மொழியான சிங்களத்துக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டதும் 1956 இல் மறைந்த பிரதமர் எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டார நாயக்கவின் அரசாங்கத்தினால் தனிச்சிங்களச் சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டதும் அதனைத் தொடர்ந்து தமிழ் மக்கள் தமது மொழி, கலாசாரம் உட்பட அடிப்படை உரிமைகளுக்காகப் போராடிக்கொண்டிருப்பதும் இப்போதும் தொடர் கதையாக உள்ளநிலையில் "மும்மொழி இலங்கை' திட்டமானது வரவேற்கத்தக்கதொன்றேயாகும். ஆனால் இத்திட்டம் உரிய முறையில் அமுல்படுத்தப்படுமா? என்பதும் அதற்குத் தேவையான வளங்கள் வழங்கப்படுமா? என்பதும் எம் முன்னால் காணப்படும் பாரிய கேள்வியாகும்.

இலங்கையைப் பொறுத்தவரை தனிச் சிங்களச் சட்டமே தேசிய நல்லிணக்கத்துக்கு குந்தகமாக அமைந்தது என்பதை தனிச் சிங்களச் சட்டத்தை அறிமுகப்படுத்திய அமரர் பண்டாரநாயக்கா வின் இளைய புதல்வியும் முன்னாள் ஜனாதிபதியுமான திருமதி சந்திரிகா குமாரதுங்க அண்மையில் அமெரிக்காவில் வைத்து ஏற்றுக்கொண்டுள்ளார். 1988 இல் ஆட்சியிலிருந்த ஐ.தே.க. அரசாங்கம் சிங்களத்துடன் தமிழும் தேசிய மொழியென்றும் ஆங்கிலம் இணைப்பு மொழியென்றும் அரசியலமைப்பு ரீதியான சட்ட ஏற்பாட்டை மேற்கொண்டிருந்தது. ஆனால் அந்தச் சட்டம் உரிய முறையில் அமுல்படுத்தப்படவில்லை. எந்த வொரு அரச திணைக்களங்களிலோ, அலுவலகங்களிலோ சிறுபான்மை சமூக மக்கள் தமது தாய்மொழியில் அலுவல்களை மேற்கொள்ள முடிந்த அவலநிலை தொடர்ந்தும் இருந்து வருவது மறுக்க முடியாத உண்மையாகும்.

சிங்களம் போன்று தமிழ்மொழிக்கும் உரிய அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது என்றும் மொழிக்கொள்கையை செவ்வனே கடைப்பிடிக்க ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படுகின்றன என்று அறிவிப்புகள் ஏராளமாக வெளியிடப்படுகின்ற போதிலும் நடைமுறையில் எதுவும் இல்லையென்பதே தமிழ் பேசும் மக்களின் அங்கலாய்ப்பாக இருக்கின்றது. அரச அலுவலகங்கள், பொலிஸ் நிலையங்கள், திணைக்களங்களுக்கு தமது தேவைகளை நிறைவேற்ற சிங்கள மொழி தெரிந்த இடைத்தரகர்களை நாடும் விடயங்களும் இல்லாமல் இல்லை. இப்போது இலங்கையர் சமூகத்தை மும்மொழி அறிவை கொண்டவர்களாக மாற்றும் முயற்சிக்கான அறிவிப்பு வரவேற்கத்தக்கதாகும். ஆயினும் இந்த இலக்கை வென்றெடுப்பது இதய சுத்தியுடன் அதனை அமுல்படுத்துவதிலேயே தங்கியுள்ளது.
நன்றி தினக்குரல்

மோசமான வானிலையால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை உயர்வு


கவின் 26/11/2011

நாட்டில் நிலவும் மோசமான வானிலையால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளதாக தேசிய அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவிக்கின்றது.

மேலும் காணமல் போனோரின் எண்ணிக்கையும் 33 ஐத் தொட்டுள்ளது.

இவர்கள் 30 பேர் மீனவர்கள் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

அந்நிலையத்தின் தகவலின் படி 6,496 குடும்பங்களைச் சேர்ந்த 26,011 பேர் இம் மோசமான காலநிலையால் பாதிக்கப்பட்டுள்ளனர்

நன்றி வீரகேசரி


ஆணைக்குழு அறிக்கைகள்; அடுத்து அரசு என்ன செய்யப் போகிறது .


Friday, 25 November 2011

2009 மே மாதத்தில் முற்றுப்பெற்ற 26 வருட கால யுத்தத்தின் இறுதிக் கட்டங்களில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் சர்வதேச மனிதாபிமானச் சட்டங்கள் மீறப்பட்ட சம்பவங்கள் தொடர்பாக விசாரணை நடத்துவதற்கு ஒரு சர்வதேச விசாரணைக் குழு நியமிக்கப்பட வேண்டுமென்று ஐ.நா. மனித உரிமைகள் சபை மற்றும் பல்வேறு வட்டாரங்களிலிருந்து எழுந்த கோரிக்கையை இலங்கை அரசாங்கம் நிராகரித்த வகையிலே ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ ஒரு முன்னாள் சட்ட மா அதிபராகிய சி.ஆர்.டி.சில்வா தலைமையில் கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை (ஃ.ஃ.கீ.இ.) நியமித்தார். 2010 மே மாதம் நியமிக்கப்பட்ட அக்குழுவுக்கு 21.02.2002 முதல் 19.05.2009 வரையான காலத்தில் இடம்பெற்ற சில விடயங்கள் 21.02.2002 முதல் அமுலுக்கு வந்த யுத்த நிறுத்த ஒப்பந்தம் (இஊஅ) தோல்வியடைந்ததற்கான காரணிகள் மற்றும் 19.05.2009 வரை இடம்பெற்ற தொடர்ச்சியான நிகழ்வுகள் தொடர்பாக விசாரணை நடத்துவதற்கே மேற்குறித்த ஆணைக்குழுவுக்கு அதிகாரம் அளிக்கப்பட்டிருந்தது.

அரசாங்கத்திற்கு நற்சான்றிதழ்

ஆணைக்குழுவின் 388 பக்கங்கள் கொண்ட அறிக்கை 21.11.2011 அன்று ஜனாதிபதி ராஜபக்ஷவிடம் கையளிக்கப்பட்டதாயினும் முழு அறிக்கையும் பகிரங்கப்படுத்தப்படவில்லையாயினும் குறிப்பிடத்தக்க அதன் சாராம்சம் வெளியாகியுள்ளது. (த ஐலன்ட் 22.11.2011) நிச்சயமாக நாம் எதிர்பார்த்தது போலவே அது பெரும்பாலும் அரசாங்கத்திற்கு கிடைத்த நற்சான்றிதழாகவே விளங்குகிறது எனலாம்.

அவ் ஆணைக்குழு (ஃ.ஃ.கீ.இ.) முன்னிலையில் பல்வேறு மட்டங்களிலுள்ள நூற்றுக்கணக்கானோர் சாட்சியளித்துள்ளனர். முன்னாள் ஐ.நா.துணைச் செயலாளரும் முன்னாள் இலங்கை சமாதானச் சபையின் செயலாளர் நாயகமாய் விளங்கியவருமாகிய ஜயந்த தனபால, முன்னாள் பிரபல இராஜதந்திரி நந்தா கொடகே, மன்னார் ஆயர் அதி.வண. இராயப்பு யோசப், பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ போன்ற பலபிரமுகர்கள் சாட்சியமளித்தனர். எவ்வாறாயினும் மன்னார், முல்லைத்தீவு போன்ற இடங்களில் ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியமளிக்கச்சென்றவர்கள் விசேடமாக காணாமல்போன உறவினர்களைத் தேடி அலைந்து நொந்துபோன பெண்கள் பலர் சாட்சியமளிக்க இடமளிக்கப்படாமல் ஏமாற்றத்தோடு திரும்பிய சம்பவங்களும் நிகழ்ந்தன. அதே நேரத்தில் சாட்சியமளித்த பெண் ஒருவர் தொடர்பாக வெளியாகிய ஒரு செய்தியைப் பார்ப்போம்.

"கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் தேசிய நல்லிணக்க ஆணைக்குழு (ஃ.ஃ.கீ.இ.) முன்னிலையில் சாட்சியமளித்தவராகிய 4பிள்ளைகளின் தாயார் இரத்தினம் பூங்கோதை ஆவார். அவர் தனது சாட்சியத்தில் கூறிய விடயங்களின் அடிப்படையில் விசாரணை நடத்துவதற்காகப் பொலிஸ் குற்றப் புலன் விசாரணைப் பிரிவுக்கு முன் (இஐஈ) ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டாரென பி.பி.சி. சிங்கள சேவையில் அறிவிக்கப்பட்டது. அது மிகவும் சோகமானதாகும். அது நீதியைக் குழி தோண்டிப் புதைப்பதற்கொப்பானதொரு செயலாகும். உண்மையில் இப்படியான வாக்குமூலம்தான் ஆணைக்குழுவினால் வெளிக் கொணரப்பட வேண்டியதாகும். துன்பக் கடலில் தத்தளித்துக் கொண்டிருக்கும் இப்பேர்ப்பட்டவர்கள் தொடர்பான கோவைகள், ஆவணங்கள் ஆணைக்குழுவினால் எவ்வாறு கையாளப்படும் என்பதைப் பொறுத்து தான் இவ் ஆணைக்குழுவுக்குத் தூய்மையும் யோக்கியத்தையும் என்று உரைத்துப் பார்க்கப்படும்' (சண்டே லீடர் 11.11.2011)

உடலகம ஆணைக்குழுவுக்கு

ஏற்பட்ட கதி

ஆணைக்குழுவின் தலைவர் சீ.ஆர்.டி.சில்வா அடங்கலாக உறுப்பினர்கள் யாவருமே முன்னாள் அரச அதிகாரிகள் ஆவர். தலைவர் சில்வா சட்டமா அதிபர் பதவி வகித்த காலத்தில் திருகோணமலையில் 5 சிரேஷ்ட மாணவர்கள் படுகொலை, மூதூரின் அரச சார்பற்ற விவசாயத்துறை நிறுவனமொன்றில் பலர் கொல்லப்பட்டது போன்ற 16 விடயங்கள் தொடர்பாக முன்னாள் நீதியரசர் உடலகம தலைமையிலான ஆணைக்குழு (உடலகம ஆணைக்குழு) விசாரணைகள் நடத்தி வந்தது. அவ் ஆணைக்குழு முன்னிலையில் சி.ஆர்.டி.சில்வா தோன்றி அது தொடர்பாக முன்னாள் இந்திய நீதியரசர் பகவதி தலைமையில் ஜனாதிபதி ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்டிருந்த சர்வதேச சுயாதீன நிபுணர்கள் கொண்ட குழு (ஐகூஎஉக) ஈடுபடுத்தப்பட்டிருந்த செயற்பாட்டினை சில்வா கடுமையாக ஆட்சேபித்தார். அவ்வாணைக்குழுவானது சர்வதேச தராதரங்கள் மற்றும் நியமங்களுக்கு ஏற்புடையதாக அமையவில்லை என்பதே அந்த நிபுணர்கள் குழுவின் வாதமாயிருந்தது. அதனை சில்வா தன்னிச்சையாக சீண்டியதன் காரணமாக அக்குழுவினர் அதிருப்தியடைந்து இராஜினாமா செய்து விட்டனர். அத்தோடு உடலகம ஆணைக்குழு தனது பணியை இடைநிறுத்த வேண்டிய பரிதாபமான நிர்ப்பந்தம் ஏற்பட்டது.

ஆணைக்குழுவுக்கு ஜயந்த தனபால

புகழாரம்

அத்தகைய ஒருவர் தான் க.கொ.பா.ந.ஆ.குழுவுக்கு (ஃஃகீஇ) தலைவராக ஜனாதிபதி ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்டார். இவ் ஆணைக்குழு சமர்ப்பித்துள்ள அறிக்கையானது ஏலவே வெளியாகியுள்ள சாரம்சத்தை பார்க்குமிடத்து நாட்டுக்கு எதுவித பயனையும் தர வல்லது என்பதற்கில்லை எனலாம். இவ்வாணைக்குழுவுக்கு ஆரம்பத்தில் சாட்சியமளித்தவர்களில் ஒருவராகிய ஜயந்த தனபால ஆணைக்குழு உறுப்பினர்களை வாயாரப் புகழ்ந்தார். "அண்மைக்காலத்தில் நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுக்கள் முற்றிலும் சோபையோ வலுவோ அற்றவகையாகவே காணப்பட்டன. உடலகம ஆணைக்குழு கருச்சிதைவுற்றது. எத்தனையோ ஆணைக்குழுக்களின் அறிக்கைகள் நிறைவேற்றப்படாமல் உள்ளன. எவ்வாறெனினும் இங்கே கொலு வீற்றிருக்கும் ஆணையாளர்களாகிய நீங்கள் தனிப்பட்ட அந்தஸ்து உடையவர்கள் மற்றும் பரவலாக நன்கறியப்பட்ட நேர்மைத்திறன் உடையவர்கள் என்பதால் நாட்டின் எதிர்கால நல்லிணக்கம் மற்றும் சமாதானம் கருதி உங்கள் முன்னிலையில் எனது கருத்துகளைத் தெரிவிப்பதற்கு உற்சாகம் ஊட்டப்பட்டேன்' என்று கூறித்தான் தனபால தனது சாட்சியத்தினை ஆரம்பித்தார்.

ஆணைக்குழு விடுத்த விதந்துரைகள்/

குறிப்புகள்

ஆணைக்குழுவினால் வெளிப்படுத்தப்பட்ட சில விதந்துரைகளும் குறிப்புகளும் வருமாறு;

அ) பெருமளவில் ஆயுதந்தரித்த பயங்கரவாதிகளின் பிடியிலிருந்து பொது மக்களை மீட்பதற்கான இராணுவ நடவடிக்கைகளை நிறுத்துமாறு அரசைக் கேட்கக்கூடாது.

ஆ) அரசு அவ்வாறு நடவடிக்கை எடுக்கத் தவறினால் பயங்கரவாதிகள் கட்டுக்கடங்காமல் செயற்பட வாய்ப்பாக இருந்திருக்கும்.

இ) காணாமல் போனவர்கள் தொடர்பாக முற்றுமுழுதான விசாரணைகள் நடத்தப்பட வேண்டும். பாதுகாப்புப் படையினரால் கைது செய்வதைக் கண்ணுற்றும் பின்பு காணாமல் போனவர்கள் தொடர்பில் அரசாங்கம் அலட்சியமாயிருக்கக்கூடாது.

ஈ) ஆயுதக்குழுக்களை நிராயுதபாணிகளாக்குவதற்கு நடவடிக்கை எடுத்திருந்தால் கொலைச் சம்பவங்கள் நடந்திருக்கமாட்டா. (ஆணையாளர்கள் மனதில் முல்லேரியாவில் நடந்த சம்பவம் இருந்திருக்கலாம்)

உ) அளிக்கப்பட்ட சாட்சியங்களின் படி பார்த்தால் சந்தர்ப்பவாதம் அல்லது அரசியல் சுயலாபம்தான் நாட்டின் சாபக்கேடாயுள்ளது. சில அரசியல்வாதிகள் நாட்டு நலனைத் தொலைத்து தமது சொந்த நலன்களையே முன்நகர்த்துகின்றனர்.

ஊ)எல்லா சமூககங்களுக்கும் ஒரே மாதிரியான உரிமைகளும் சலுகைகளும் இருக்க வேண்டிய முக்கியத்துவத்தை ஆணைக்குழு வலியுறுத்துகிறது.

எ) நாட்டின் வடபகுதி உட்பட எவரும் எப்பகுதியிலும் காணி வாங்கும் உரிமை இருக்க வேண்டும். வடபகுதியில் வெளியார் காணிகள் வாங்க முடியாதென்ற சட்டம் தள்ளுபடி செய்யப்படுகிறது.

ஏ) மொழிப் பிரச்சினையைப் பொறுத்தவரை அரசாங்கம்

)இலங்கையை ஒரு மும்மொழி நாடாகவும் அதற்கென ஆங்கிலத்தை இணைப்பு மொழியாக்கவும் வேண்டும். தேசிய நல்லிணக்கத்தினை உருவாக்குவதற்கு மொழிப் பிரச்சினையைத் தீர்ப்பதை விட வேறு எதுவும் முக்கியமானதல்ல. அத்தோடு (எல்லோரும்) "இலங்கையர்' என்ற பொது அடையாளம் கொண்டு வரப்பட வேண்டும்.

ஆணைக்குழுவின் சில கருத்துகள்

நகைப்புக்குரியனவையாகும்

இங்கே உற்று நோக்கப்பட வேண்டிய சில அம்சங்களைப் பார்ப்போம். அதாவது (1) காணாமல் போனோர் தொடர்பாக சம்பூரண விசாரணை நடத்துவதை அரசாங்கம் அலட்சியப்படுத்தக்கூடாது என்றாலும் அரசுக்கு அவற்றில் ஈடுபாடு உண்டு என்பதை ஆணைக்குழு ஏற்றுக் கொள்ளவில்லை. (2) நிராயுதபாணியாக்க வேண்டியது ஆயுதக்குழுக்களை மட்டுமல்ல. பிரபல அரசியல்வாதிகள் வசமுள்ள தனிப்பட்ட ஆயுதக் கும்பல்களும் உடனடியாகக் கலைக்கப்பட வேண்டிய தேவை உண்டு. (3) நாட்டு நலனைத் தொலைத்து விடும் சந்தர்ப்பவாத அரசியல் சிலருக்கு மட்டுமல்ல நம்மை மாறி மாறி ஆளும் எல்லா அரசியல்வாதிகளுக்கும் கைவந்த கலையாகும். (4) வடபகுதியில் தேசவழமைச் சட்டத்தைப்புரிந்து கொள்ளாதவர்கள் அங்கே வெளியார் காணிவாங்க முடியாதது என்ற பூச்சாண்டியானது ஆணைக்குழுவினரின் மனதிலும் உள்ளது. (5) தேசிய நல்லிணக்கத்தை உருவாக்குவதற்கு தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வு என்பதை மறந்து மொழிப் பிரச்சினையைத் தீர்த்து வைத்தால் போதும் என்று ஆணைக்குழு சிந்திப்பது நகைப்புக்குரியதாகும்.

பாதுகாப்பு செயலாளரின் சாட்சியம்

இறுதியாக ஆணைக்குழு கொழும்பில் நடத்திய பல அமர்வுகளில் மிகப்பிரதானமாக ஆணைக்குழு கருதியது பாதுகாப்பு செயலாளர் கோதாபய ராஜபக்ஷ சாட்சியமளித்த அமர்வாகும். வெளியாகிய அறிக்கைகளின் படி அவரை ஆணைக்குழு ஒரு கௌரவ விருந்தாளியாக மதிப்பளித்து ஆணைக்குழுவினர் துதிபாடினர். அவர் அளித்த சாட்சியத்தில் "மிக மூர்க்கத்தனமான பயங்கரவாத இயக்கத்தினை அரசாங்கம் தோற்கடித்து விட்டது என்பதைப் பலர் மறந்துவிட்டனர். அதுதான் வரலாறு. இது ஒரு மனிதாபிமான நடவடிக்கை என்றழைக்குமாறு ஜனாதிபதி கூறியுள்ளார்' என்று கூறினார். ஏதாவது காணொளி உள்ளதா? இராணுவத்தினர் பொது மக்களை மிதிவெடிகளைச் சுற்றி வழிகாட்டிச் சென்றனரா? என்று ஆணைக்குழுவினர் அவரைக் கேட்டதோடு அது உலகிற்கு நல்லதொரு எடுத்துக்காட்டு மாதிரி என்றும் அவர்கள் கூறியதாகவும் அறியக்கிடக்கிறது. அதேநேரத்தில் தமிழர் தேசிய இனப்பிரச்சினை தீர்க்கப்படாமையால்"சிங்களவர்களாகிய எம்மாலேயே விடுதலைப்புலிகள் இயக்கம் உருவாக்கப்பட்டதென' ஆணைக்குழு முன் சாட்சியமளித்த முன்னாள் இராஜதந்திரி நன்தா கொடகே கூறியது குறிப்பிடத்தக்கதாகும்.
நன்றி தினக்குரல்































No comments: