கோகிலா மகேந்திரனின் ‘உள்ளத்துள் உறைதல்’

.
படித்தோம் சொல்கிறோம்
முருகபூபதி



ஈழத்து இலக்கிய வளர்ச்சியில் மிகுந்த கவனிப்புக்குள்ளான எழுத்தாளர்களின் வரிசையில் பேசப்படும் படைப்பாளி கோகிலா மகேந்திரன் 1970 களில் இலக்கியப்பிரவேசம் செய்த ஒரு ஆசிரியர். பல்கலைக்கழக மருத்துவபீடத்துக்குத்தெரிவாகி பி;ன்னர் தனது மருத்துவ கற்கைநெறியை விட்டு விலகி கல்விப்பணியில் ஈடுபட்டவர். ஒரு மருத்துவநிபுணராகியிருக்கவேண்டியவர் இலக்கியவாதியாக தோற்றம்பெற்றார். 
சமீபத்தில் அவரது புதிய நூல் உள்ளத்துள் உறைதல் வெளியாகியிருக்கிறது. ஏற்கனவே நாவல், சிறுகதை இலக்கியவரிசையில் சில நூல்களை எழுதியிருக்கும் கோகிலா மகேந்திரனின் இந்தப்புதிய நூலை வாசிக்கும் வாசகர்களுக்கு அவர் ஒரு இலக்கிய மருத்துவர் என்ற சித்திரமும் மனதில் பதியும்.


சில வருடங்களுக்கு முன்னர் ஒரு இதழில் வெளியான கேள்வி-பதில் பகுதியில் 2020 ஆம் ஆண்டளவில் உலகம்பூராவும் ஒரு கொள்ளை நோய் பரவப்போகிறது என்ற தகவல் வெளியாகியிருந்தது.
அது என்ன கொள்ளை நோய்? மனச்சோர்வு என்பது அதன் பெயர். உலகமயமாதல் தந்துள்ள மற்றும் ஒரு வரப்பிரசாதமாகத்தான் இந்த மனச்சோர்வு நோயையும் அவதானிக்க முடிகிறது. ஒருகாலத்தில் பிளேக் நோய் பெரிதாகப்பேசப்பட்டது. பின்னர் காசநோய். அதன்பிறகு புற்றுநோய். புற்றுநோய் ஒரு தொற்றுநோய் அல்ல என்று கண்டுபிடிக்கப்பட்டபோது எயிட்ஸ் வந்துவிட்டது. இனிவரும் நூற்றாண்டுகளில் மேலும் புதிய புதிய நோய்கள் வரலாம். சமயங்களும் பல்கிப்பெருகிவிட்டன. சாமியார்களினதும் சோதிடர்களினதும் எண்ணிக்கையும் அதிகரித்துவருகின்றன.
மனச்சோர்வு நோய் உலகெங்கும் பரவிவருகிறது என்பதற்கு அறிகுறிதான் இந்த சமயங்களின் அதிகரிப்பும் சாமியார்களின் எண்ணிக்கை வளர்ச்சியும் பலமொழி இதழ்களிலும் எண் சாத்திரம் முதல் ராசிபலன் வரையிலான தகவல் பகுதிகளும் என்று எண்ணத்தோன்றுகிறது.


தன்னம்பி;கை குறைந்து நிம்மதி தேடி ஓடிக்கொண்டிருப்பவர்களுக்கு வழிகாட்டுபவர்களாக மனநல மருத்துவர்கள் தொழிற்படுகிறார்கள். 
அத்தகைய மனநலமருத்துவர்கள் இலக்கியம் படைக்கும் படைப்பாளிகளாக இருந்தால் அவர்களின் அனுபவங்கள் நூல்களாக நிச்சயம் பதிவாகும் என நம்பலாம்.
தமிழ் சமூகத்தில் சமகாலத்தில் மனிதர்களுக்கு மருத்துவ சிகிச்சை வழங்கும் மருத்துவர்கள் மற்றும் பறவைகள், விலங்குகள் உயிரினங்களுக்கு சிகிச்சையளிக்கும் மருத்துவர்கள் தமது தொழில்சார் அனுபவங்களை இதழ்களில் எழுதி பின்னர் அவற்றைத்தொகுத்து நூல்களாக பதிவுசெய்து வெளியிட்டுவருகின்றனர்.
அவர்களில் இலங்கையில் டொக்டர் எம்.கே.முருகானந்தன் அவுஸ்திரேலியாவில் டொக்டர் நடேசன் ஆகியோர் குறிப்பிடத்தகுந்தவர்கள். உள்ளத்துள் உறைதல் நூலில் தமது சீர்மியத்தொண்டின் ஊடாக பெற்றுக்கொண்ட அனுபவங்களை ( அனுபவம் என்பதைவிட அவர் அறிந்துகொண்ட ‘கதை’ களை) இலங்கையில் தினக்குரல் ஞாயிறு இதழில் எழுதி, பின்னர் அவற்றைத் தொகுத்து நூலாக்கியிருக்கிறார். கோகிலா மகேந்திரன் இலங்கையில் தெல்லிப்பழையில் வாழ்ந்த காலத்தில் உருவாக்கிய கலை, இலக்கிய களம் என்ற அமைப்பின் வெளியீடாக அவரது இந்நூல் வெளியிடப்பட்டிருக்கிறது. இந்நூலுக்கான பதிப்புரிமையை அவரது ஏகபுதல்வன் கலாநிதி பிரவீணன் மகேந்திரராஜா ஏற்றுள்ளமை ஆறுதல் தருகிறது. இல்லையேல் தமிழ்நாட்டில் ஏதாவது ஒரு பதிப்பகம் தன்னிஷ்டத்திற்கு எடுத்து மறுபதிப்பு செய்து வெளியிட்டுவிடும். ஏனென்றால் இந்நூலின் சமூகப்பெறுமதி அத்தகையது.
இந்தப்பதிப்புரிமை குறித்தும் தமிழ்சமூகத்தில் பல தெளிவீனங்கள் இருக்கின்றன. எப்படி படைப்புகளில் செவ்விதாக்கம் என்பது தொடர்பாக எம்மவர் மத்தியில் மயக்கங்கள் இருந்ததோ அதேபோன்று, எவரும் எவரது நூலையும் வெளியிடலாம். பதிப்புரிமை பற்றி அலட்டிக்கொள்ளத்தேவையில்லை என்ற மனோபாவம் தமிழ் சமூகத்தில் வளர்ந்திருக்கிறது. இதுபற்றி பிரிதொரு சந்தர்ப்பத்தில் விரிவாகப்பேசுவோம்.
 தற்போது கோகிலா மகேந்திரனின் உள்ளுத்துள் உறைதலின் சமூகப்பயன்பாடு பற்றி பார்ப்போம்.
 இந்திய திரைப்படநடிகர் அமிதாப்பச்சன் பலவிதத்திலும் உலகப்புகழ்பெற்றவர். அதேசமயம் கோடீஸ்வரர். எனினும் பல சவால்களை எதிர்ப்புகளை வேதனைகளை சந்தித்தவர். அவருக்கும் அதனால் மனச்சோர்வு கிட்டியிருக்க வாய்ப்புகள் அதிகம். ஒரு பேட்டியில் இவ்வாறு சொல்கிறார்.
 “ நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் மகிழ்ச்சிதான். நினைப்பதெல்லாம் நடக்காவிட்டால் அதனையும் நன்மைக்கென்றே எடுத்துக்கொள்ளவேண்டியதுதான்.”
உள்ளத்துள் உறைதல் நூலில் தான் சந்தித்த உளப்பாதிப்புக்குள்ளானவர்களுக்கு கோகிலா தமது சீர்மிய பயிற்சியின் ஊடாக வழங்கும் சிகிச்சை அல்லது ஆலோசனைகள் அமிதாப்பச்சனின் கருத்துடன் ஒத்துப்போகிறது.
 கவலைவந்தால் என்ன செய்யலாம். வாழ்நாள் பூராவுமே கவலைபட்டு மனநோயாளியாவதா? அதனால் வந்த மனஅழுத்த நோய்க்கு மருந்திலே தஞ்சம் அடைவதா? அல்லது கவலையிலிருந்து முற்றாக விடுதலைபெறுவதற்காக தற்கொலை செய்துகொள்வதா?
 கவலையை கடந்துசெல்லும் கலையை  கற்றுக்கொள்வதை விடுத்து மேற்சொன்ன முடிவுகளுக்கு செல்பவர்கள்தான் எம்மத்தியில் அதிகம்.
 எனவே கோகிலா மகேந்திரன் போன்ற சீர்மிய தொண்டர்களின் சேவை எமது தமிழ் சமூகத்திற்கு அதிகம் தேவைப்படும் காலத்தில் நாம் வாழ்கின்றோம்.
 இலங்கையில் 30 ஆண்டு காலமாக நீடித்த போரினால் ஏற்பட்ட இழப்புகளும் சுனாமி கடற்கோள் அநர்த்தத்தின் விளைவுகளும் பலரை மனஅழுத்தங்களுக்குள்ளாக்கியிருக்கிறது. இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ள 40 அனுபவங்கள் 40 பேரின் வாழ்வை மாத்திரம் சித்திரிக்கின்றது. இதுபோன்று ஆயிரக்கணக்கான ‘கதை’ கள் தமிழ் சமூகத்தில் தொடருகின்றன.
 கோகிலாவை சந்தித்தவர்களில் குழந்தைகள், சிறுவர், மாணவர்கள். பல்கலைக்கழக மாணவர்கள், குடும்பத்தலைவிகள். தலைவர்கள் வஞ்சிக்கப்பட்டவர்கள், தாழ்வுமனப்பான்மையினால் அவதியுறுபவர்கள் வெளிநாடு சென்று வேலை இழந்து மனச்சோர்வினால் சட்டத்துக்குப்புறம்பான செயல் செய்து அதிலிருந்து தப்பிக்க நாடு திரும்பி மன அழுத்தங்களுக்கு ஆளானவர், தினமும் கனவுகள் கண்டு மனம்பேதலித்தவர்கள்.... இப்படியாக பலர் வருகிறார்கள்.
 அவர்களின் கதைகளைக்கேட்க நிதானமும் பொறுமையும் சகிப்புத்தன்மையும் வேண்டும். மொத்தத்தில் அன்புக்கு ஏங்குகின்ற, அங்கீகாரத்துக்கு அலைகின்ற ஆத்மாக்களின் அவலக்குரல் இந்நூலில் சன்னமாக ஒலிக்கின்றன. தான் உள்வாங்கிய ஒலிஅலைகளை (கோகிலா ஒரு இலக்கிய படைப்பாளியாகவும் இருப்பதனால்) எழுத்தில் கவனமாக பதிவுசெய்கிறார்.
 தன்னிடம் சிகிச்சைக்காக வந்தவர்களின் கதைகளை கேட்டுவிட்டு அனுதாபம் தெரிவிக்காமல் சிகிச்சை முறைகளையும் சொல்லிக்கொடுத்து அனுப்புவதுடன் நில்லாமல் அடுத்ததடவை சந்திக்கும்போது என்ன செய்யவேண்டும் என்பதையும் பக்குவமாகச்சொல்லிவிடுகிறார். அதனால் அவரது பதிவுகளில் நாம் இரண்டுவிடயங்களை அவதானிக்கின்றோம்.
 ஒன்று பாதிப்புக்குள்ளானவரின் கதை. இரண்டு அதனைக்கேட்கும் சீர்மியரின் ஆலோசனை.
இந்நூலைப்படிக்கும் எவரேனும் இக்கதைகளுடன் தம்மையும் ஒப்பிட்டுப்பார்த்துக்கொள்ளலாம். சீர்மியரிடம் செல்லாமலேயே தன்னைத்தானே தேற்றி நிமிர்ந்துகொள்ளவும் வாய்ப்புண்டாகலாம். 
 இந்நூலில் இடம்பெறும் ஒவ்வொரு சம்பவங்களையும் அல்லது கதைகளையும் தனித்தனியாக அலசினால் படிக்கவிரும்பும் வாசகருக்கு பயன் அற்றுப்போகும் என்பதனால் சொன்னதைச்சொல்லும் பணிக்கு செல்லவில்லை. 
 இந்நூலுக்கு அணிந்துரை வழங்கியிருப்பவர் கோகிலாவின் முன்னாள் ஆசிரியரும் தெல்லிப்பழை மகாஜனாக்கல்லூரியின் முன்னாள் அதிபருமான கல்விமான் பொ. கனகசபாபதி அவர்கள். தமது ஆசிரியரிடமிருந்து வாழ்த்தும் அணிந்துரையும் பெற்ற பாக்கியசாலிதான் இந்நூலாசிரியர்.  தனது பெருமைக்குரிய மாணவிதான் கோகிலா மகேந்திரன் என்று தான் செல்லும் இடமெங்கும் சொல்லிவருபவர் கனகசபாபதி அவர்கள். 
 கனகசபாபதி அவர்கள் தமது அணிந்துரையில் குறிப்பிட்டுள்ள ஒரு விடயம் வாசகர்களை குறிப்பாக படைப்பாளிகளை வெகுவாகக் கவரலாம்.
 கோகிலாவின் ஒரு கட்டுரையில் அந்த வாக்கியம் இப்படி இடம்பெறுகிறது:-
“ உங்கள் கடிதத்தினை வரி தவறாமல் படித்தேன். வரிகளுக்கு இடையிலும் படித்தேன்.” 
 இவ்வாறு அபூர்வமாகத்தான் படைப்பாளிகளுக்கு எழுதும்போது சொற்கள் வந்துவிழும். ஒருகணம் நின்று மீண்டும் படித்துவிட்டு அடுத்த வரிக்கு கண்கள் நகரும். வரிகளுக்கு இடையிலும் படிக்கலாமா? ஆம் படிக்கலாம். அதுதான் வாசகனின் சிந்தனையில் ஊடுறுவும் ஆற்றல்.
 இந்த ஆற்றல் கைவரப்பெற்றவரின் இந்நூலின் அறிமுகம் மெல்பனில் இந்த ஆண்டு நடந்த 11 ஆவது எழுத்தாளர் விழாவில் மெல்பன் வாசகர்களுக்கு கிட்டியது.  சிட்னி வாசகர்களுக்கும் இந்நூலின் அறிமுகம் விரைவில் கிட்டவிருப்பதனால் சிட்னி தமிழ் வாசகர்கள் அந்த நிகழ்வில் கலந்துகொண்டு ‘சீர்மியம்’ பற்றி அறிந்துகொள்ளலாம்.
                        ---0--- 

.

1 comment:

Anonymous said...

I was doing my Diploma in Education at Peradeniya when Kokila decided to leave the medical school and was much worried as I was expecting her tobecome a very successful Medical practioner. She was such an outstanding student.
When I conveyed to her my unhappiness regarding her decision. this is what she told me, Sir, don't worry. I will establish my name in the field I choose. She has done it not in one but in many fields. I am proud of her
Kanagasabapathy