தமிழ் சினிமா

வேலாயுதம்
க்கள் பிரச்சினையையும், அண்ணன், தங்கை பாசத்தையும் கருவாக கொண்ட படம் தான் வேலாயுதம்.

தமிழகத்தை சீர்குலைக்க நினைக்கும் தீவிரவாதிகள், தமிழக உள்துறை அமைச்சரின் உதவியுடன் தமிழகத்தில் ஊடுருவி நாச வேலைகளில் ஈடுபடுகிறார்கள்.

அதன்படி பள்ளி பேருந்து ஒன்றில் வெடிகுண்டு வைத்து அதிர்ச்சியுண்டாக்குகிறார்கள். இந்த வெடிகுண்டு ஆசாமிகளை கண்டறிய பத்திரிகையாளர்களான ஜெனிலியாவும் அவருடைய நண்பர்களும் தீவிரம் காட்ட, சிக்கலில் மாட்டிக்கொள்கிறார்கள். வில்லன்களின் அட்டாக்கில் இரண்டு நண்பர்களையும் பறிகொடுத்து விட்ட ஜெனிலியாவையும் கத்தியால் குத்திவிடுகிறார்கள். இதற்கிடையில் பள்ளி பேருந்தில் வெடித்த வெடிகுண்டை வைத்தது நாங்கள்தான். வரும் வெள்ளிக்கிழமையன்றும் ஒரு வெடிகுண்டு வெடிக்கும் என்று ஜெனிலியாவிடம் கூறிவிட்டு சென்றுவிடுகிறார்கள்.

வில்லன்கள் போகும் வாகனம் விபத்துக்குள்ளாகி தீ பிடித்து எரிந்து விடுகிறது. கத்தி குத்து வாங்கி உயிருக்கு போராடிகொண்டிருக்கும் ஜெனிலியா, அவர்கள் சொன்ன வெடிகுண்டு விஷயத்தை மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்பதற்காக, பள்ளி வாகனத்தில் வெடிகுண்டு வைத்த இந்த மூவரையும் நான் தான் கொலை செய்தேன். இவர்கள் வைக்கப்போகும் மற்றொரு வெடிகுண்டையும் எடுத்து மக்களை காப்பாற்றுவேன் என்று எழுதி அதன் கீழ் வேலாயுதம் என்ற பெயரை எழுதிவிடுகிறார்.

பவுனூர் என்ற கிராமத்தில் பால் வியாபாரம் செய்து வரும் விஜய்யும், அவருடைய தங்கை சரண்யா மோகனும், அண்ணன் - தங்கை பாசத்திற்கு இலக்கணமாக வாழ்ந்து வருகிறார்கள். தங்கையின் திருமணத்திற்காக சீட்டு கம்பெனியில் பணம் போட்டு வைத்திருந்த விஜய், தனது தங்கை மற்றும் நண்பர்களுடன் சென்னைக்கு வருகிறார். சென்னையில் விஜய்யின் தங்கையுடைய பை திருடர்களால் பறிக்கப்பட, அதை பிடிப்பதற்காக அங்கு நிற்கும் பைக்கை எடுத்துகொண்டு விஜய் புறப்படுகிறார். ஆள் இல்லாத இடத்தில் அந்த பைக்கை நிறுத்திவிட்டு விஜய் ஓட, பைக் திடீரென்று வெடிக்கிறது. அந்த இடத்தில் வரும் பொலிஸ் ஒருவர் விஜய்யை நீ யார் என்று கேட்க, வேலாயுதம் என்று தனது பெயரை சொல்கிறார். அந்த சம்பவத்தில் வெடிகுண்டை எடுத்து மக்களை வேலாயுதம் காப்பாற்றிவிட்டார் என்று கூறி, வேலாயுதம் மீது மக்கள் நம்பிக்கை வைக்கிறார்கள். இப்படி தொடர்ந்து சில சம்பவங்கள் நடைபெற, தான் உருவாக்கிய கற்பனை நிஜமாகிவிட்டதா என்று நினைக்கும் ஜெனிலியா, விஜய்யை உண்மையிலே வேலாயுதமாக மாற்ற முயற்சிக்கிறார். முதலில் இதற்கு மறுக்கும் விஜய், பிறகு சம்மதித்து வேலாயுதமாக மாறி, பிறகு என்ன செய்கிறார் என்பது மீதிக்கதை.

வழக்கத்தைவிட அதிக உற்சாகம் தெரிகிறது விஜய்யிடம். கிராமத்தில் தங்கை சரண்யா மோகனுடன் சேர்ந்து கொண்டு விஜய் அடிக்கும் லூட்டியில் கிராமமே ஆடிப்போய் கிடக்கிறது. அதேசமயம் தங்கை மேல் அவர் வைத்துள்ள பாசத்தை ஊரே மெச்சுகிறது. தங்கைக்காகவே வாழும் அண்ணனாக வந்து கடைசியில் நாட்டுக்காக வாழும் நிலைக்கு தள்ளப்படும்போது விஜய்யின் கெட்டப்பும், நடிப்பும் அதிரடியாக இருக்கிறது. வெறி கொண்டு வில்லன்களை தாக்கும் காட்சிகளில் ஆவேச நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார் விஜய். விஜய்யின் முறைப்பெண்ணாக நடித்துள்ள ஹன்சிகா பாவாடை தாவணி கெட்டப்பில் பளிச்சிடுகிறார். இடைவெளியில் தெரியும் கவர்ச்சி கண்களை பறிக்கிறது என்றாலும் ஜெனிலியாவுக்கு கதையில் இருக்கிற முக்கியத்துவம் அவருக்கு இல்லை. பாடல் காட்சிகளுக்கு மட்டுமே பயன்பட்டிருக்கிறார். கவுண்டமணி பாணியில் சில அதிர்வேட்டு காமெடிகளை அள்ளிவிட்டு கலக்கல் பண்ணுகிறார் சந்தானம். கூடவே விஜய்யும் சேர்ந்து கொள்வதால் கொமெடி களைகட்டுகிறது.

முதல் பாதியில் வேலாயுதத்தை விட சந்தானத்தின் கொமெடி அதிரடியாக உள்ளது. இரண்டாவது பாதியில் வேலாயுதத்தின் வேட்டை ஸ்பீடு. வேலு, வேலாயுதமாக மாற இளவரசுவின் மரணமும் ராகவ்வின் கதறலும் ஒரு காரணமாகிவிடுகிறது. நகைச்சுவைக்கு கியாரண்டி கொடுத்திருக்கும் சந்தானத்தின் கொமெடி கலகலப்புதான் என்றாலும், இரட்டை அர்த்தம் உள்ள நகைச்சுவை வசனங்களை தவிர்த்திருக்கலாம். எம்.எஸ்.பாஸ்கர், மணிவண்ணன், ஷாயாஜி ஷிண்டே, சூரி, இளவரசு என்று பெரிய நடிகர்களின் பட்டாளம் இருந்தாலும், அத்தனை பேரும் மனதில் நிற்கிறார்கள். வில்லன் கோஷ்டியில் வின்சென்ட் அசோகனைத் தவிர்த்து மற்றவர்கள் தமிழ்ப் படங்களில் பார்க்காத முகங்களாக இருப்பதால் மனதில் நிற்கவில்லை. தங்கை சரண்யா மோகன் வரும் காட்சிகள் 'திருப்பாச்சி'யை நினைவுபடுத்துகின்றன.

தமிழ் சினிமாவுல கதாநாயகன் பொலிஸ் ஆபிசரா இருந்தா மட்டும்தான் தீவிரவாதிகளை பொலிஸ் வேட்டையாடுது. கதாநாயகன் பால்காரனாகவோ, ஐஸ்கிரீம் விற்பவராகவோ இருந்தாலும் தீவிரவாதிகளை அவர் வேட்டையாடும் போது பொலிஸ் வேடிக்கை மட்டும் பார்க்குது. இது தமிழக பொலிஸின் வரமா..? சாபமா..? ஒரு பட்டிமன்றமே வைக்கலாம். நேரு ஸ்டேடியம், ஆயிரக்கணக்கில் துணை நடிகர்கள் என்று பிரம்மாண்டமாகப் படம் பிடித்திருக்கிறார்கள் தயாரிப்பாளர் ஆஸ்கர் ரவிச்சந்திரன். அவரால்தான் அது சாத்தியப்பட்டிருக்கிறது. விஜய் ஆண்டனியின் துள்ளல் பாடல்கள், ப்ரியனின் ஒளிப்பதிவு என அனைத்தும் படத்திற்கு ஏற்ப பொருத்தமாக அமைந்திருக்கிறது. சுபாவின் வசனங்களில் சில இடங்களில் அரசியல் வாடை வந்தாலும், பல இடங்களில் அப்ளாஸை அள்ளிச்செல்கிறது. குறிப்பாக "நீயும் ஒரு முஸ்லீம் தானே, உனக்காவும்தான் நான் போராடுகிறேன், அதனால் நீ என்னை விட்டுவிடு" என்று தீவிரவாதி ஒருவன் ஷாயாஜி ஷிண்டேவிடம் கூறும்போது, "உங்க நாட்ல இருக்கிற முஸ்லீம்களை விட இங்கே நாங்கள் சந்தோஷமாகவும், பாதுகாப்பாகவும் இருக்கிறோம். உங்களுக்கு தேவையான பின்லேடனின் உயிரையே உங்களால காப்பாற்ற முடியல, ஆனா எங்களுக்கு தேவையில்லாத கசாப்பையே நாங்கள் பத்திரமாகத்தான் வைத்திருக்கிறோம்" இது போன்ற பல வசனங்களில் முத்திரை பதித்திருக்கிறார்கள் இந்த இரட்டையர் வசனகர்த்தாக்கள்.

கடைசி பத்து நிமிடம் வழக்கம் போல விஜய் பேசிக் கொண்டே போகிறார். இந்த மாதிரி காட்சிகள்தான் அவர் மீது மற்ற ரசிகர்களுக்கு கடுப்பை வரவழைப்பவை. மற்றபடி இரண்டாம் பாதியில் ஆக்சன் காட்சிகளைக் குறைத்து, இரண்டு பாடல்களை வெட்டி, நறுக்குத் தெரித்த மாதிரி வசனங்களை வைத்திருந்தால், விஜய் படங்களில் வித்தியாசமானதாக வந்திருக்கும் 'வேலாயுதம்'.

சென்டிமெண்ட், காதல், கொமெடி, சண்டை என்று சரியான மசாலா மிக்ஸ் இயக்குநர் ராஜாவுக்கு வேலாயுதம் கிளாஸ் படம் என்று சொல்ல முடியாவிட்டாலும் ஒரு மாஸ் படமாக அமைந்திருக்கிறது. விஜய்தான் அந்த வேலாயுதம் என்று பொதுமக்களுக்குத் தெரியப்படுத்தாமல் உங்கள் ஒவ்வொருவரின் உள் இருக்கும் தைரியம்தான் வேலாயுதம் என்று சொல்லிய விதம் அருமை.

நன்றி விடுப்பு

No comments: