''உச்சிதனை முகர்ந்தால்''


.
''உச்சிதனை முகர்ந்தால்'' படம் பற்றி அழுதபடியே தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்
முதலில் ஒன்றை கூறிவிடுகிறேன்....நான் வழக்கமாக திரைப்படம் பார்ப்பவனோ, அல்லது பார்த்த திரைப்படங்களை விமர்சித்துக்கொண்டு காலம் கழிப்பவனோ அல்ல. பெரும் தலைவர் காமராஜரின் தலைமையில் களம் கண்ட சுத்தமான ஒரு காங்கிரஸ்காரனாக இருப்பவன். இன்றைய காங்கிரஸ் 'தலை'களுக்கும் எனக்கும் மிக நீண்ட தூரம். இங்கு அதுவல்ல முக்கியம்.
என் நீண்டகால நண்பரான புகழேந்தி தஙகராஜ் அழைத்தார். அதன் பேரில் திரைப்படத்தின் சிறப்புக் காட்சிக்கு சென்றேன்....பார்த்துவிட்டு வந்த பிறகு என் மனம் துடித்து அழுததை பதிவு செய்தே ஆகவேண்டும் என்கிற ஆதங்கத்தோடு இதை எழுதுகிறேன்...


"உச்சிதனை முகர்ந்தால்" என்கிற மயிலிறகால் மனதை வருடுகிற பெயரில் திரைப்படம். ஆனால் திரையரங்கைவிட்டு வெளியே வருகின்ற போது துக்கமும் வேதனையும் நெஞ்சை அடைக்கிறது. மனம் வெதும்பி இயலாமையை எண்ணி கண்களில் கண்ணீர் வழியத்தான் ஒவ்வொருவரும் வெளியேறினார்கள். கண்கூடாக பார்த்தேன். என்னைப் போன்ற பெண் பிள்ளையைப் பெற்றவர்களை இந்த திரைப்படம் குறைந்தபட்சம் ஒருவார காலத்திற்காவது தூக்கத்தை கெடுத்துவிடும்.


கதை என்கிற பெயரில் கற்பனைகளை மட்டுமே கட்டவிழ்த்துவிட்டு 'காசு' பார்க்க துடிக்கிறவர்கள் மத்தியில்...
மனிதநேய வரலாற்றிலேயே மறக்க முடியாத, மறைக்க முடியாத கொடுமைக்குள்ளான ஈழத்துச் சொந்தங்களின் துயர வரலாற்றில் ஒரு துளியை, அதுவும் உண்மையில் நடந்ததை எடுத்துக்கொண்டுள்ளார்.
அதையே குடும்பப்பாங்கோடு திரைக்கதை அமைத்து, இலங்கை இனவெறி அரசு நடத்திய தமிழின அழிப்பின் உச்சத்திற்கு இதோ ஒரு எடுத்துக்காட்டு என உலகின் முகத்திற்கு முன்பே வெளிச்சம் போட்டு காட்டிய திரைப்படமாக, பார்ப்போர் மனதை உலுக்கும் திரைப்படமாக சாத்தியப்படுத்தியிருக்கிறார் இயக்குனர் புகழேந்தி தங்கராஜ்.
ஆறாக் காயத்தோடும் துயரத்தோடும் உள்ள புலம்பெயர்ந்த ஈழத் தமிழின மக்களின் துயரை உலகின் பார்வைக்கு வைத்ததில் உயர்வுள்ள தமிழினத்தின் மன சிம்மாசனத்தில் அமர்ந்துவிட்டார் என் நண்பர் புகழேந்தி தங்கராஜ்.
சிங்கள இனவெறி நம் தமிழினத்தை எப்படியெல்லாம் சிதைத்தது என்பதற்கான ஒரு துளி சாட்சிதான் இந்த ''உச்சிதனை முகர்ந்தால்'' திரைப்படம். படத்தை பார்க்கும்போதே நம்மை உலுக்கி எடுத்துவிடுகிறது.
கண்களுக்கெட்டும் தூரத்தில் நடந்த அந்த அவலங்களை எல்லாம் வேடிக்கை பார்த்தபடி இருந்த தாய்தமிழ் உறவுகளின் கன்னத்தில் அல்ல இதயத்தில் ஒங்கி அறைந்திருக்கிறார் புகழேந்தி தங்கராஜ்.
இனிவரும் காலத்திலாவது இதற்கு நாம் என்ன செய்யப்போகிறோம் என்ற பெரும் கவலையை, மன உலைச்சலை இத்திரைப்படத்தின் வழியாக எற்படுத்தியிருக்கிறார்.
அதேபோன்று தன் சொந்த அடையாளங்கள் எந்த இடத்திலும் தெரியாமல், படத்தின் கதைக்கு எது தேவையோ அந்த நடையில் நறுக்குத் தெரித்தார் போல் வசனங்களை எழுதி பார்ப்போர் மனதில் பாதிப்பை ஏற்படுத்தி பாராட்டுக்களை வாரிக்கொண்டிருக்கிறார் எனது இளையகால நண்பரான தமிழருவி மணியன்.
அந்த மட்டக்களப்பு மண்ணோடு வாழ்ந்தவராகவே தன்னை திரைப்பட கதையினுள்ளும் வசனங்களாக விட்டிருக்கிறார் மணியன். நகைச்சுவை என்கிற பெயரில் விரசங்களை விலையாக்குபவர்கள் மத்தியில், சிரிக்கவும் அதோடு ஆழமாக சிந்திக்கவும் அவருடைய வசனங்கள் நம்மை தூண்டுகின்றன. உதாரணத்திற்கு ஒன்றை மட்டும் இங்கே கூறலாம்....
காவல் நிலையத்தில் தனக்கு குடிக்க சூடானறுபானம் கொண்டு வருகிற காவலரை பார்த்து அந்த ஈழத்து சிறுமி ''ஐயா தேத்தண்ணீரா?'' என்று கேட்க, அந்த காவலரோ 'இல்லை இல்லை டீ' என்று மறுத்து கூறும்போது சிரிக்காதவர்களும் இல்லை.
அந்த சிறுமியின் சவுக்கடியால் சிந்திக்காதவர்களும் இருக்க முடியாது. திரைத்துறைக்கே போகக்கூடாது என்கிற விரதத்தை மணியன் போன்றவர்கள் எடுக்காமல் இருந்திருந்தால் திரைத்துறையால் ஈர்க்கப்பட்டவர்களில் சில ஆயிரம் இளைஞர்களாவது சரியான பாதையில் பயணிக்கக் காரணமாக இருந்திருப்பார்.
தனது வசனங்களால் ஆங்காங்கே அழுதும் இருக்கிறார். தேவையான இடத்தில் சுளீரென சவுக்கையும் வீசியிருக்கிறார். மற்றொன்று. இந்த திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகத்திற்கு கிடைத்திருக்கின்ற மிகப் பெரிய கொடை, பாதிப்புக்குள்ளான ஈழத்துச் சிறுமியாக நடித்திருக்கும் 'நீநிகா' என்றால் மிகையாகாது.
ஒரு காட்சியில்கூட நடிப்பு என்று நாம் நினைக்க முடியாத அளவிற்கு அந்த பாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார் நீநிகா. அவருடைய பேச்சும், சிரிப்பும், அழுகையும் நம் உள்ளத்தை ஊடுருவி நிலைகுலைய வைக்கிறது. அந்தக் காலத்து 'முள்ளும் மலரும்' ஷோபாவை நினைவுபடுத்துகிறார். மிகச் சிறந்த நடிகையாக வருவார் என்று நம்பலாம்.
வழக்கமாக தமிழ்த்படங்களில் திருநங்கையர் என்றால் வக்கிரத்தை தூண்டும் அங்க அசைவுகள், பேச்சுக்கள் என்ற இலக்கணத்தை இந்த படம் உடைத்து நொறுக்கியிருக்கிறது. திருநங்கையாக நடிப்பவரின் பேச்சும், தோற்றமும் காட்சிகளின் அழுத்தமும் அந்த பாலினத்தவரின் மீது பெரிய மரியாதையை உருவாக்கியிருக்கிறது.
பேராசிரியர் நடேசனாக சத்யராஜ், பொலிஸ் இன்ஸ்பெக்டராக சீமான், பிரபல மருத்துவராக நாசர், சங்கீதா..அந்த பெண் மருத்துவர்..இப்படி பலரும் நடித்திருக்கிறார்கள் என்ற பெயரில் அந்த ஈழத்துச் சிறுமி ஒய்.புனிதாவோடு சேர்ந்து வாழ்ந்திருக்கிறார்கள் என்றே கூறவேண்டும். கதைப்போக்கை புரிந்துகொண்டு அந்த கருப்பு 'நாய்' நடிகர்கூட அற்புதமாய் நடித்திருக்கிறார்.
அதேபோன்று இசையமைப்பாளர் இமான்....
அந்த மட்டக்களப்பு நிஜக்கதையில் இருந்து நம்மை வெளியேறவிடாமல் இழுத்துப் பிடித்து வைத்துவிட்டார் என்றே கூறலாம். படத்தின் பின்னணி இசையும் பாடலும் படத்தின் வெற்றிக்கு காரணமாகியிருக்கிறது. 'உச்சிதனை முகர்ந்தால்' என்ற பாடலில் தென்றலாய் தழுவிச்செல்லும் இமானின் இசை, உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தனின் 'இருப்பாய் தமிழா நெருப்பாய்' என்ற பாடலில் எரிமலையாய் வெடிக்கவும் செய்கிறார்.
அதுவும் அவரது குரலிலேயே பாடி. அதுதான் இமான் போலும். படத்தின் இறுதியில் வரும் காட்சிகளும் அதற்கான பின்னணி இசையும் நம் உணர்வை கட்டுப்படுத்த முடியாமல் கண்ணீரோடு வெளியேற வைத்துவிடுகிறது. ஈழத் தமிழின அழிப்பை கிங்கள பேரினவாதம் 'இப்படியெல்லாமா சிதைத்தது' என்ற ஆதங்கம் துடிதுடித்தபடியே இருக்கிறது.
இதயத்தைப் போல். அறிவுப்பூர்வமான ஈழத் தமிழினத்தின் சோக வரலாற்றை, சரியான பாதையில் இன உணர்வோடு பதிவு செய்து கொடுத்திருக்கிறார்கள். அதில் பங்கெடுத்துக்கொண்ட அனைவரையும் பாராட்டவேண்டும்.
குறிப்பாக இப்படியான படத்தை தயாரிக்க பலரும் தயங்கியபோது துணிவோடு முன்வந்த அந்த புலம்பெயர்ந்த நோர்வே தமிழர்கள் நான்கு பேருக்கும் நன்றி கூறவேண்டும். கூடவே தாய் தமிழகத்து உறவான அந்த தம்பிக்கும் கூறவேண்டும். உலகில் நடந்த பல இனப்படுகொலைகளை, அழிப்புகளை எல்லாம் திரைப்படங்கள்தான் வெளிக்கொண்டு வந்தது. அந்த வகையில் ஒரு ஆதங்கம் இருந்தது.
இவ்வளவு பெரிய இன அழிப்பு நடந்தும், உலகில் எந்த இயக்குனரும் தயாரிப்பாளர்களும் இதுவரை முன்வரவில்லையே. மூன்றாண்டுகள் கடந்துவிட்ட நிலையிலும் அப்படியான முயற்சி இல்லையே என்ற தவிப்பு. இப்போது தமிழக மண்ணில் இருந்தே அந்த ஆதங்கத்திற்கு விடிவு கிடைத்திருக்கிறது.
எதிர்காலத்தில் இப்படியான திரைப்படங்கள் வெளிவரவேண்டும். அதற்கு ''உச்சிதனை முகர்ந்தால்' திரைப்படம் வழிவகுக்கும். நம் பங்கிற்கு என்ன செய்ய வேண்டும்? இந்த படம் வெற்றியடைய நாம் அனைவரும் திரை அரங்கிற்கு சென்று படத்தை பார்க்கவேண்டும். ஆதரவு தரவேண்டும்.
அதுதான் நம் பங்களிப்பாக இருக்கும். எதிர்காலத்தில் மட்டக்களப்பு சிறுமி ஒய். புனிதவதியைப் போன்று பாதிக்கப்பட்ட பல்லாயிரம் அவலங்களை வெளிக்கொண்டுவர உதவியாய் இருக்கும். அதற்கான ஆதரவை நீங்கள் இந்த திரைப்படத்திலிருந்தே தருவீர்கள் என நான் நம்புகிறேன்.
கடைசியாக ஒன்று.... ''உச்சிதனை முகர்ந்தால்'' திரைப்படத்தை பார்த்துவிட்டு வந்து மூன்று நாட்கள் கடந்துவிட்டது. ஆனால் என் மனம் மட்டும் இன்னும் அங்கேயே இருக்கிறது. அழுதபடியே....
என்றும் உங்கள்
திருச்சி வேலுசாமி.
காங்கிரஸ் கட்சி- மூத்த தலைவர். 
Nantri:tamilwin

No comments: