உலகச் செய்திகள்

.
* சிரியாவில் மீண்டும் உக்கிர வன்முறை: 90 பேர் பலி

* பேஸ்புக்கிற்குச் சவால் விடுத்த சமூக வலையமைப்பின் உருவாக்குனர் மர்மமான முறையில் மரணம்


சிரியாவில் மீண்டும் உக்கிர வன்முறை: 90 பேர் பலி

15/11//2011

சிரிய ஜனாதிபதி பஷார் அல்அஸாத் பதவி விலக வேண்டுமென ஜோர்தானின் மன்னர் வலியுறுத்தியதையடுத்து அங்கு இடம்பெற்ற வன்முறைகளில் 90 பேர் வரை உயிரிழந்துள்ளனர்.

ஜோர்தானிய எல்லைக்குரிய சிரிய நகரான கிரிபெட் கஸலெஹ்ஹில் படையினருக்கும் இராணுவத்திலிருந்து வெளியேறியவர்களுக்குமிடையில் இடம்பெற்ற மோதலில் சுமார் 20 படை வீரர்கள் உட்பட 50 பேர் வரை பலியாகியுள்ளனர்.

அஸாத் பதவி விலக வேண்டுமென பகிரங்க அழைப்பு விடுத்த முதல் அரபு நாடொன்றின் தலைவராக மன்னர் அப்துல்லாஹ் விளங்குகிறார். அவர் "பிபிசி' செய்திச் சேவைக்கு அளித்த பேட்டியில், அஸாத்தின் நிலையிலிருந்தால் தான் அதிகாரத்தை கைமாற்றுவதை உறுதிப்படுத்தும் முகமாக பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டிருப்பதாக கூறினார்.


""பஷாருக்கு (அல்அஸாத்) தனது நாட்டின் மீது அக்கறை இருக்குமானால் அவர் பதவி விலக வேண்டும்'' என ஜோர்தான் மன்னர் வலியுறுத்தினார்.

""நீங்கள் உங்கள் சொந்த மக்கள் மீது வன்முறைகளை கட்டவிழ்த்து விடுவீர்களாயின் அது நல்ல முடிவைத் தேடித் தரப் போவதில்லை'' என அவர் எச்சரிக்கை விடுத்தார்.

அரபு லீக்கானது கடந்த சனிக்கிழமை சிரியாவை தனது அமைப்பிலிருந்து இடைநிறுத்தம் செய்திருந்தது. சிரியாவில் கடந்த மார்ச் மாதம் முதல் இடம்பெற்று வரும் வன்முறைகளில் 3500 பேருக்கும் அதிகமானோர் பலியானார்கள். ஐரோப்பிய ஒன்றியமானது திங்கட்கிழமை சிரியாவுக்கு எதிரான தடைகளை அதிகரித்துள்ளது.

புருஸல்ஸில் இடம்பெற்ற ஐரோப்பிய ஒன்றிய வெளிநாட்டு அமைச்சர்களின் கூட்டத்தின்போது 18 சிரிய அதிகாரிகளுக்கு பயணத் தடை விதிக்கவும் அவர்களது சொத்துக்களை முடக்கவும் இணக்கம் காணப்பட்டது.

இதன் பிரகாரம் அஸாத்தின் உள்வட்டாரத்தை சேர்ந்தவர்களில் ஐரோப்பிய ஒன்றிய தடை விதிப்புக்கு உள்ளானவர்கள் தொகை 74 ஆக உயர்ந்துள்ளது.

அத்துடன் ஐரோப்பிய முதலீட்டு வங்கியிலிருந்தான சிரியாவுக்கான கடன்களை முடக்கவும் ஐரோப்பிய ஒன்றிய அமைச்சர்கள் இணக்கம் கண்டனர்.

நன்றி வீரகேசரி

பேஸ்புக்கிற்குச் சவால் விடுத்த சமூக வலையமைப்பின் உருவாக்குனர் மர்மமான முறையில் மரணம்


கவின்  15/11/2011

'டயஸ்போரா' என்ற சமூக வலையமைப்பு தொடர்பில் நாம் உங்களுக்கு ஏற்கனவே செய்திகள் சிலவற்றை வழங்கியிருந்தோம்.

ஒரு காலத்தில் மிகவும் பரபரப்பாக பேசப்பட்ட இதன் உருவாக்குனர்களில் ஒருவரான லியா சிடோமிர்ஸ்கி தனது 22 வயதில் உயிரிழந்துள்ளார்.

நியூயோர்க் பல்கலைக்கழகத்தின் பழைய மாணவரான சிடோமிர்ஸ்கி கடந்த 2010 ஆம் ஆண்டில் டயஸ்போரா சமூக வலையமைப்பினை உருவாக்கிய நான்கு மாணவர்களில் ஒருவராவார்.

இவர் தற்கொலைசெய்து கொண்டிருக்கலாம் என இது தொடர்பில் விசாரணை மேற்கொண்டுள்ள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எனினும் இவரது மரணத்தில் மர்மம் நீடிப்பதாகவே கூறப்படுகின்றது.

பெரும் பரப்புடன் எதிர்பார்க்கப்பட்ட 'டயஸ்போரா' பரந்தளவில் நிதி வசூலிப்பிலும் ஈடுபட்டது.

பேஸ்புக்கின் உருவாக்குனர் மார்க் ஸுக்கர்பேர்க்கும் இதற்காக நிதியுதவி வழங்கியிருந்தார் என்பது மேலதிகத் தகவலாகும்.

ஆரம்ப காலத்தில் பேஸ்புக்கினை மிஞ்சுவதே தமது இலக்கென இதன் உருவாக்குனர்கள் தெரிவித்திருந்தனர்.

இதன் சிறப்பம்சம், இது 'ஓப்பன் சோர்ஸ்' என்பதுதான். இதன் காரணமாக, இத்தளத்தின் பாவனையாளர்கள் தங்களின் அனைத்து விதமான தகவல்கள் மற்றும் செயற்பாடுகளைத் தாங்களே நிர்வகிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

நன்றி வீரகேசரி








No comments: