தமிழ் சினிமா

.
* களைகட்டும் பொங்கல் வெளியீடுகள்

* தீபாவளி படங்கள் ஒரு பார்வைகளைகட்டும் பொங்கல் வெளியீடுகள்

ஏ.எம். றிஷாத்

பொங்கல் தினத்தை குறிவைத்து இப்போதிருந்தே தயாராகிவருகிறது கொலிவூட். தீபாவளியில் விட்டதையெல்லாம் எதிர்வரும பொங்கலில் வட்டியும் முதலுமாக அள்ளிவிடும் போலுள்ளது.

கடந்த தீபாவளிக்கு இரண்டு படங்கள் வெளியாகி இரண்டும் பெரிதாக களைகட்டவில்லை என்பதலோ என்னவோ பொங்கல் வெளியீடாக வெளிவர பல படங்கள் முட்டிக்கொண்டிருக்கிறது. ஏற்கனவே பொங்கல் வெளியீடாக விஜயின் நண்பன் மற்றும் கார்த்தியின் சகுனி உறுதிசெய்யப்பட்ட நிலையில் மேலும் பல படங்கள் வெளியாவுள்ளதாக கொலிவூட் வட்டாராம் தெரிவிக்கின்றது.

இம்முறை பொங்கலுக்கு சுமார் 10 படங்கள் வரை வெளியாகலாம். இருப்பினும் தீபாவளி போல பொங்கலிலும் ரஜினி-கமல், அஜித்-விஜய் மோதல் இடம்பெறமாட்டாது என்பது உறுதியாகிவிட்ட நிலையில் இந்த பொங்கல் பந்தயம் அனேகமாக விக்ரம், விஜய், கார்த்தி ஆகியோரிடையேயான மும்முனை போட்டியாக அமையலாம்.

விக்ரமின் ராஜபாட்டை படம் இம்மாத இறுதியில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டபோதும் தற்போதைய தகவல்களின்படி பொங்கல் வெளியீடாகவே வந்து சேரும் என தெரிவிக்கப்படுகிறது. மேலும் மேலும் தனுஸின் '3' திரைப்படமும், ஆர்யா, மாதவன் இணைந்து நடித்துள்ள வேட்டை படமும் பொங்கல் வெளியீடாக வெளிவரவுள்ளது.

மம்பட்டியான், களவாடிய பொழுதுகள் போன்ற படங்களும் போட்டியில் களமிறங்க வாய்ப்புக்கள் இருக்கிறது. அத்துடன் வழமைபோல சில சிறிய பட்ஜெட் படங்களும் களமிறங்கும். கொலிவூட்டை பொறுத்தவரை எதுவும் நிரந்தரமில்லை. எனவே இவற்றில் சில படங்கள் இறுதி நேரத்தில் பின்வாங்லாம் எதிர்பாராத சில திரைப்படங்கள் களத்தில் குதிக்கலாம்.

தீபாவளிதான் களைகட்டவில்லை பொங்கலாவது களைகட்டுமா?
நன்றி வீரகேசரி

தீபாவளி படங்கள் ஒரு பார்வை


ஏ.எம். றிஷாத்

தீபாவளி என்றால் பல படங்கள் வெளியாகி கொலிவூட்டே களைகட்டும் ஆனால் இம்முறை வழக்கத்துக்கு மாறாக இரண்டு நேரடி தமிழ் படங்கள் மட்டுமே வெளியானது. இவற்றுடன் ரஜினி சிறப்புத் தோற்றத்தில் நடித்த ஷாருக்கானின் "ரா ஒன்" திரைப்படமும் தமிழில் மொழி மாற்றம் செய்து வெளியானது.

தீபாவளி தினத்தில் வெளியானால் வழக்கமான நாட்களில் வெளியாகும் படங்களை விட அதிகமான வசூலினை அடையலாம் என்பதால் சிறிய பட்ஜெட் படங்களும் வெளியாவது வழக்கம் ஆனால் இம்முறை 7ஆம் அறிவு, வேலாயுதம் படங்களின் ஆதிக்கத்தால் சிம்புவின் "ஒஸ்தி" மற்றும் தனுஸின் "மயக்கம் என்ன" படங்களுக்கே திரையரங்குகளில் இடமில்லை இதில் சிறிய பட்ஜெட் படங்கள் எங்கே நுழைவது.

தீபாவளிப் பந்தயத்தில் தற்போது வரை சூர்யாவின் 7ஆம் அறிவு திரைப்படமே வசூல் ரீதியாக முன்னணியில் இருக்கிறது. இருப்பினும் வேலாயுதம் படமும் 7ஆம் அறிவுக்கு போட்டியாக உள்ளதாம்.

இந்த தீபாவளி ரசிகர்களை மிகவும் குழப்பமடையச் செய்துள்ளது. இரண்டு படங்களுக்குமே எதிர்மறையான விமர்சனங்களே அதிமாக எழுந்துள்ளது. ஆனால் இரு படக்குழுவினரும் தங்களது படங்கள் வென்றுவிட்டதாக படம் வெளியாகிய 2ஆவது தினத்திலிருந்தே கொண்டாட்டங்களை ஆரம்பித்தனர்.

இந்த கொண்டாட்டங்கள் அனைத்தும் வியாபார யுக்தியாக இருக்கலாம் என கூறப்படுகிறது. இப்படங்களின் தயாரிப்பாளர்கள் இதுவரையில் படத்தின் வசூல் தொடர்பில் முறையாக எதுவும் தெரிவிக்கவில்லை. ஆனால் சூர்யா, விஜய் இருவரும் தங்களது முந்தைய படங்களின் வசூலினை முறியடித்து வெற்றிகரமாக இப்படங்கள் ஓடுவதாக மாறி மாறி பேட்டி கொடுத்து வருகின்றனர். இதனால் குழம்பியது அப்பாவி ரசிகர்களே என்பது நிதர்சனம்.

7ஆம் அறிவு படத்தின் தயாரிப்பாளர் உதயநிதி ஸ்டாலின் அவ்வப்போது சில வசூல் விபரங்களை வெளியிட்டார். ஆனால் வேலாயுதம் பற்றி இதுவரை உத்தியோகபூர்வமான வசூல் விபரங்கள் எதுவும் வெளிவரவில்லை.

வேலாயுதம் வெற்றி விழாக்களின் போது வசூல் தொடர்பில் விஜயிடம் வினவியபோது, எனது படங்களிலேயே அதிக வசூலான படமாக இது மாறியுள்ளதாக சிலர் கூறுகையில் எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது என மளுப்பலாக பதில் கூறினார் விஜய். இதே போலவே சூர்யாவும், சிங்கம் படத்தின் வசூலினை முறியடித்துவிட்டதாக தெரிவத்தார் ஆனால் வசூலினை சரியாக குறிப்பிடவில்லை. வரும் நாட்களில் இது தொடர்பில் முறையாக அறிவிப்பார்கள் என நம்பலாம்.

தமிழ் சினிமா பொக்ஸ் ஒபீஸ் ஆய்வாளர்களின் ஊடாக தெரியவருவது, அதிக திரையரங்குகள் மற்றும் விளம்பரம் என்பவற்றால் இதுவரை 7ஆம் அறிவு மொத்தமாக சுமார் 70 கோடியினை வசூலாக பெற்றுள்ளதாம். அதே வேளை வேலாயுதம் திரைப்படம் சுமார் 40 கோடி வரை வசூல் ஈட்டியுள்ளதா கூறப்படுகிறது. இதனால் இவ்விரு படங்களும் தயாரிப்பாளர்களிள் கையை கடிக்கவில்லை என்பது தெளிவாகிறது.

தீபாவளி மற்றும் அதிக திரையரங்குகள் என ஆரம்பத்தில் இப்படங்களின் வசூல் நிலைமைகள் சிறப்பாக இருந்தாலும் தற்போது நிலைமை மோசமாகவே உள்ளது.

ஒஸ்தி, மயக்கம் என்ன, வித்தகன் என வரிசையாக இம்மாதம் பல படங்கள் வெளிவரவுள்ளதால் தீபாவளி படங்களின் வசூல் நிலைமைகள் மேலும் பாதிப்படையலாம் எனவே இம்முறை தீபாவளிப் படங்கள் இரண்டுமே உண்மையில் புஸ்வாணமாக மாறியதாகவே தெரிகிறது.

நன்றி வீரகேசரி

No comments: