.
எப்போதும்
சிரித்த முகத்தோடு இருக்க வேண்டும்
காலைஉணவை மறந்ததில் வந்த
களைப்பானாலும்
காய்ச்சலில் கிடக்கும் குழந்தையின்
நினைப்பானாலும்
காரணமேயின்றி மேலாளர்
சீறினாலும்
வாடிக்கையாளர் வரம்புமீறிப்
பேசினாலும்
வாட்டமிலா
சற்றுங்கோணா
முகங்காட்ட வேண்டும்
இயந்திரத்தனமாய் இன்றி
சிந்தும் புன்னகை
இயல்பாய் இருந்து தொலைக்க
தூங்கும் போது கனவில் சுமந்தும்
போகுமிடமெங்கும் ஏந்தித் திரிந்தும்
பழக வேண்டும்
தசைகளை
இழுத்துத் தைத்துக் கொண்டால்
தேவலாமெனும் சிந்தனை
தந்த சிரிப்புடன் கிளம்பிய
ஒரு காலையில்..
திசைமாறி வீசிய பருவக்காற்று
திரட்டி வந்த கருமேகங்கள்
தூறலைப் பெரிய பெரிய பொட்டாகச்
சாலையில் எட்டி எட்டிப் போட
அண்ணாந்து ஆகாயம் பார்த்தவள்
பொறாமையுடன் புன்னகைக்கிறாள்
இதயம் வெடித்து விடாதிருக்க
இரண்டு சொட்டு கண்ணீர் விடுவது கூட
ஆடம்பரமென மறுக்கப்பட்ட வாழ்வில்.
நன்றி பண்புடன்
No comments:
Post a Comment