இலங்கைச் செய்திகள்


* நாவாந்துறை சம்பவம்; பிரேரணைக்கு சபையில் அனுமதி மறுப்பு அரச தரப்புடன் விநாயகமூர்த்தி வாதம்

boat* அவுஸ்திரேலியாவிற்கு படகில் செல்ல முயற்சித்த 44 பேர் கைது கல்முனைக் கடலில் பிடிபட்டனர்

*   எப்படியிருந்த யாழ்ப்பாணம் இப்படியாகிவிட்டது  பெற்றோரிடையே விழிப்பு அவசியம்
jaffna1105-1

* யுத்த சூனிய பிரதேசத்தில் நிகழ்ந்த கொலைகளை இந்தியா, அமெரிக்கா செய்மதியில் பார்த்தன: விக்கிலீக்ஸ்

flee-25
* நான் யாழ்ப்பாணத்தில் இருந்தபோது, ஈபிடிபியின் வலிமையை எதிர்கொண்டேன். பல்கலைக்கழக மாணவர்களை நான் சந்திப்பதை அவர்கள் தடுத்தனர்  - ரொபட் பிளெக்

ஒளிந்திருந்த இராணுவ வீரர் பொலிஸாரிடம் ஒப்படைப்புநாவாந்துறை சம்பவம்; பிரேரணைக்கு சபையில் அனுமதி மறுப்பு அரச தரப்புடன் விநாயகமூர்த்தி வாதம்
Friday, 09 September 2011

யாழ்ப்பாணம் நாவாந்துறையில் இராணுவத்தினரால் பொதுமக்கள் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் அப்பாத்துரை விநாயக மூர்த்தி எம்.பி.யினால் கொண்டு வரப்பட்ட சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணைக்கு அரச தரப்பு கடும் எதிர்ப்புத்தெரிவித்ததனால் அதனை தொடர்ந்து முன்னெடுக்க முடியாதெனக் கூறி சபைக்குத் தலைமை தாங்கிய பாராளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவர் முருகேசு சந்திரகுமார் அனுமதி மறுத்ததையடுத்து கடும் சர்ச்சை ஏற்பட்டது.

பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை மர்ம மனிதன் பிரச்சினை தொடர்பில் யாழ்ப்பாணம், நாவாந்துறைப் பகுதியில் பொதுமக்கள் இராணுவத்தினரால் மோசமாகத் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட எம்.பி. அப்பாத்துறை விநாயகமூர்த்தி சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையைக் கொண்டு வந்தார்.

அவர் தனது பிரேரணையைச் சமர்ப்பிக்க முற்பட்ட போது ஒழுங்குப் பிரச்சிøனயை எழுப்பிய அரச தரப்பு பிரதம கொறடாவும் அமைச்சருமான தினேஸ் குணவர்தன, நாவாந்துறை சம்பவம் நீதிமன்ற விசாரணையில் இருப்பதனால் அது தொடர்பில் பாராளுமன்றத்தில் விவாதிக்க முடியாது. எனவே இதற்கு அனுமதி வழங்கக் கூடாதென வாதிட்டார்.

இதற்கு எதிர்ப்புத் தெரிவித்த விநாயகமூர்த்தி எம்.பி. நான் நீதிமன்றத்தில் உள்ள விடயங்கள் தொடர்பில் பேசமாட்டேன். பொதுமக்கள் தாக்கப்பட்ட விடயம் தொடர்பாக மட்டுமே பேசுவேன் என்றார்.

இதனை ஏற்க மறுத்த தினேஷ் குணவர்தன, அதுதான் நீதிமன்ற விசாரணையில் இருக்கின்றதே என்றார். இந்தப் பிரச்சினைக்கு அரச தரப்பின் தேசியப் பட்டியல் எம்.பி. அஸ்வரும் கடும் எதிர்ப்புத் தெரிவித்தார்.

இதன்போது எழுந்த ஐ.தே.க. எம்.பி. தயாசிறி ஜயசேகர, நாவாந்துறைப் பிரச்சினை நீதிமன்றத்தில் உள்ளதனால் விவாதிக்க முடியாதென்றால் சபாநாயகர் ஏன் விநாயக மூர்த்தி எம்.பி.க்கு அனுமதி கொடுத்தார். அவர் பிரேரணை தொடர்பில் முன்னறிவித்தல் கொடுத்த போதே அதற்கு அனுமதி மறுத்திருக்கலாமே அப்போது அனுமதியைக் கொடுத்து விட்டு இப்போது மறுப்பது அநீதியானது என்றார்.

இதனை ஏற்க மறுத்த அமைச்சர் தினேஷ் குணவர்தன, இப் பிரேரணை தொடர்பில் எமக்கு தெரிவிக்கப்பட்ட பின்னர் தான் நாம் அது தொடர்பில் விபரங்களைத் திரட்ட முயன்ற போது இப்பிரச்சினை நீதிமன்ற விசாரணையில் இருப்பது தெரியவந்தது. நீதிமன்ற விசாரணையில் உள்ளதொரு விடயத்தை பாராளுமன்றத்தில் விவாதிக்க முடியாது. அதனால் தான் எதிர்க்கின்றோம். இப்பிரேரணையை அனுமதிக்க மாட்டோம் என்றார்.

இதனையடுத்து அரச தரப்பினருக்கும் எதிர்க்கட்சியினருக்குமிடையே கடும் தர்க்கம் ஏற்பட்டது. அப்போது சபைக்கு தலைமை தாங்கிய யாழ்.மாவட்ட எம்.பி.யும் பாராளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவருமான முருகேசு சந்திரகுமார், இவ்விடயம் நீதிமன்ற விசாரணையில் இருப்பதனால் விவாதிக்க அனுமதி வழங்க முடியாதெனக் கூறிவிட்டு எழுந்தார்.

இதனால் கடும் சீற்றமடைந்த ஐ.தே.க. எம்.பி.க்களான தயாசிறி ஜயசேகர, அஜித் பெரேரா, சுஜீவ சேனசிங்க, ஜோன் அமரதுங்க ஆகியோர் முருகேசு சந்திரகுமாரைப் பார்த்து "வெட்கம்', "வெட்கம்' எனக் கூச்சலிட்டனர். அரச தரப்பினரும் பதிலுக்கு எதிர்க்கட்சியினருக்கு எதிராகக் கூச்சலிட்டனர்.

அப்போது தம்மால் முடியாதவற்றை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மூலம் நிறைவேற்ற ஐ.தே.க. முயற்சிப்பதாக அமைச்சர் தினேஷ் குணவர்தன குற்றம்சாட்டினார்.

பிரேரணை விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட அனுமதி மறுக்கப்பட்டதால் கூச்சல் குழப்பத்துடன் சபை கலைந்தது.

நன்றி தினக்குரல்


அவுஸ்திரேலியாவிற்கு படகில் செல்ல முயற்சித்த 44 பேர் கைது கல்முனைக் கடலில் பிடிபட்டனர்
Monday, 12 September 2011

boatஅவுஸ்திரேலியாவுக்கு படகில் பயணம் செய்ய முயற்சித்த 44 பேரை இலங்கைக் கடற்படையினர் கைதுசெய்துள்ளதாக கடற்படைப் பேச்சாளர் கொமாண்டர் கோசல வர்ணகுலசூரிய தெரிவித்துள்ளார்.


கல்முனைக் கடற்பகுதியில் வைத்து இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இந்த றோலர் நீர்கொழும்பிலிருந்து புறப்பட்டுள்ளது. ஆனால், அதில் ஆட்கள் எங்கிருந்து ஏறினார்கள் என்பது இன்னரும் நிரூபிக்கப்படவில்லை. அவர்களை திருகோணமலைக்குக் கொண்டு சென்று மேலதிக விசாரணைகளை மேற்கொள்ளவுள்ளோம் என்று அவர் தெரிவித்துள்ளார்.

இந்த 44 பேரில் 4 பிள்ளைகளும் பெண்ணொருவரும் இருந்தனர். படகில் உலர் உணவுப் பொருட்கள்,குடிநீர் என்பனவும் வைக்கப்பட்டிருந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஆட்கடத்தல்காரர்களின் வலைக்குள் வீழ்ந்துவிட வேண்டாமென அண்மைக் காலமாக கடற்படையினர் இலங்கையர்களுக்கு ஆலோசனை கூறிவருகின்றனர். சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவுக்குக் கடலில் ஆபத்தான பயணத்தை மேற்கொண்டு செல்வது தொடர்பாக எச்சரிக்கப்பட்டிருந்தது. கடல் மார்க்கமாக அவுஸ்திரேலியாவுக்குச் செல்வது பிரயோசனமற்ற முயற்சியெனவும் குடியேற்றவாசிகள் மலேசியாவுக்கு அனுப்பப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

நன்றி தினக்குரல்

எப்படியிருந்த யாழ்ப்பாணம் இப்படியாகிவிட்டது

பெற்றோரிடையே விழிப்பு அவசியம்

jaffna1105-1யாழ்ப்பாணம் நன்றாகக் கெட்டுவிட்டது! இளைஞர்கள் கெட்டுப்போய்விட்டனர். கலாசாரம் சீரழிந்துவிட்டது என சில ஊடகங்களும், இணையத்தளங்களும் அடிக்கடி யாழ்ப்பாணத்தை இப்படிச் சித்திரித்து வருகின்றன.

உண்மையில் என்ன நடக்கிறது? அந்தளவுக்கு யாழ்ப்பாணம் கெட்டுப்போய்க் கிடக்கிறதா...? இந்தக் குற்றச்சாட்டுக்களில் பிரதானமாக முன்வைக்கப்படும் வாதங்கள் இவைதான். இளைஞர்கள் பள்சரில் பறக்கிறார்கள். கைத்தொலைபேசி, நெட் கஃபே பாவனை அதிகரித்துவிட்டது. பாடசாலைப் பெண்கள் காதலிக்கிறார்கள்.

கர்ப்பமடைகிறார்கள். இளைஞர்கள் மது அருந்துகிறார்கள். இவையொன்றும் யாழ்ப்பாணத்தில் நடக்காத விவகாரங்களில்லைதான். உலகில் வேறெங்கும் நடக்காத விடயங்களும் இல்லைதான்.

ஏதோ, இப்போதுதான் இவை இங்கு நடக்கின்றன என்றும் சொல்ல முடியாது.

அங்கொன்றும் இங்கொன்றுமாக நடக்கும் சில சம்பவங்களைக் கோர்த்துப் பார்த்து ஒரேயடியாக முழு யாழ்ப்பாணமும் சீரழிந்துவிட்டதாகக் கூறுவது சரியானதா?

கட்டுப்பாடிழந்து இவ்வாறான விடயங்கள் நடக்கக்கூடாது என்ற அக்கறை நியாயமானது.

என்றாலும், நிலைமையைக் கட்டுப்படுத்துகிறோம் என்று சொல்லி, அதைப் படம்போட்டுக் காட்டிக் கைகொட்டிச் சிரிப்பதா? போர் முடிவடைந்த பின்னர்தான் இப்படியெல்லாம் நடக்கிறது என்பது பொதுவாக இந்த வாதங்களில் அடிக்கடி தொனிக்கும் ஒரு கருத்து.

போர் நடைபெற்ற காலங்களில் இவையெல்லாம் நடக்கவே இல்லையா என்ற வாதம் ஒருபுறமிருக்க அப்போ என்னதான் செய்வதாம்? போர் முடிந்திருக்கக்கூடாதா? ஏ 9 பாதையைத் திறந்திருக்கக்கூடாதா?

யாழ்ப்பாணத்துக்கு நவீன தொலைபேசி வசதிகளும், இணையப் பாவனையும் வந்திருக்கவே கூடாதா? நாகரீக உடைகளை நம்மவர்கள் அணிவது பெருங்குற்றமா?

மீண்டும் போர்க்கலம்போல் பாதைகள் மூடி, தனிமைப்பட்ட ஒரு இருண்ட யுகத்துக்குள் யாழ்ப்பாணச் சமூகம் தள்ளப்பட வேண்டும். நவீன உலகின் எந்த வசதிகளையும் நுகர முடியாதவர்களாக இளைஞர்கள் கட்டுப்பெட்டிகள் ஆகவேண்டும்.

இதுதானா நாம் எதிர்பார்ப்பது? கிட்டத்தட்ட மூன்று தசாப்தகால யுத்தத்துக்குள் மூழ்கிக் கிடந்த நமது பிரதேசங்களில் இப்போதுதான் கொஞ்சம் இயல்புச் சூழல் கனிந்திருக்கிறது.

இது பூரண சுதந்திரமா இல்லையா என்ற வாதங்களைவிட, கிடைத்திருக்கும் இந்தக் கொஞ்ச வாய்ப்பையேனும் நம்மவர்கள் பயன்படுத்தக்கூடாது என்று சொல்வது சரியா? இன்றைய இளம் சந்ததி பிறந்ததே இந்த யுத்தச் சூழலுக்குள்தான். ரயில் வண்டியைக் கூடக் கண்ணாலும் காணாதவர்களாகப் பலர் உள்ளனர்.

யுத்தக் கெடுபிடிகளுக்கஞ்சி வீடுகளுக்குள்ளேயே முடங்கியிருக்க நிர்ப்பந்திக்கப்பட்டவர்கள், இப் போதுதான் வெளிச்சத்துக்கு வந்து கை, கால்களை நீட்டி, கொஞ்சம் காற்று வாங்கத் தொடங்கியிருக்கிறார்கள்.

காற்றில் கொஞ்சம் விஷக் கிருமிகள் கலந்திருந் தால் நோய், நொடிகள் பிடிக்கச் செய்யும்தான்.

உடனே, அந்த விஷக்காற்றைச் சுவாசித்துவிட்டான் நோயாளி என்று யுத்தப் பிரகடனம் செய்து மீண்டும் இருண்ட குகைகளுக்குள் இளைஞர்களைத் தள்ளிவிட எத்தனிப்பதா? நோய் வருமென்றால், நோய்க்காப்பு அவசியம். பிள்ளைகளுக்கு நோய் வராமல் காக்க வேண்டியது யாருடைய கடமை? வீட்டிலும், பாடசாலைகளிலும், பொதுச் சூழலிலும் நோய்த்தொற்றைத் தடுக்க வேண்டியது பெற்றோர், அதிபர், ஆசிரியர்களினதும், சமூகத்தினதும் கடமையல்லவா?

அதை எப்படிச் செய்து, பிள்ளைகளைக் காப்பது என்று திட்டமிடாமல், யார் யார் காதலிக்கிறார்கள்? எந்தக் குப்பைக்குள் எவர் பிள்ளையைப் போடுகிறார்கள்?

எந்தப் பையன் எந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுகிறான்? எத்தனை பேர் கைத்தொலைபேசி பாவிக்கிறார்கள் என்று கணக்கெடுப்பு நடத்திப் புள்ளி விபர அறிக்கையிட்டுப் பரபரப்பு வியாபாரம் செய்வதா?

பொறுப்புடன் கையாளப்பட வேண்டிய விடயத்தை, வெறும் பரபரப்பு வியாபாரச் சரக்காக்கிக் கொச்சைப்படுத்துவது சரியல்ல. பொறுப்புள்ளவர்கள் அனைவரும் கூடிச் சிந்திக்க வேண்டிய விடயமிது.

-நன்றி  தினகரன் -


யுத்த சூனிய பிரதேசத்தில் நிகழ்ந்த கொலைகளை இந்தியா, அமெரிக்கா செய்மதியில் பார்த்தன: விக்கிலீக்ஸ்


flee-25யுத்த சூனியப் பிரதேசத்தில் ஆயிரக்கணக்கான தமிழ் சிவிலியன்கள் விமானத் தாக்குதல் மூலமாகவும் நீண்ட தூர ஆட்டிலெறி மற்றும் ஷெல்களின் தாக்குதல் மூலமாகவும் படுகொலை செய்யப்பட்டதை இந்தியாவும் அமெரிக்காவும் செய்மதி மூலம் அவதானமாக பார்த்துக் கொண்டிருந்ததாக திடுக்கிடும் தகவல் ஒன்றை விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ளது.

இலங்கை அரசு விடுதலைப் புலிகளை வெற்றி கொள்வதற்கு 2 கிழமைகளுக்கு முன்பு அமெரிக்க பிரதித் தூதுவராகக் கடமையாற்றிய ஆர்.மூரே ஒரு தூதரகச் செய்தியை அமெரிக்க இராஜாங்க செயலாளருக்கும் வெள்ளை மாளிகைக்கும் அனுப்பினார். அதில் யுத்த சூனியப் பகுதியில் நிலவிய சம்பவங்கள் பற்றிய செய்மதிப் படங்களைப் பற்றி ஜனாதிபதி ராஜபக்ஷவோடும் அப்போதைய வெளிநாட்டு செயலர் பாலித கொஹனவோடும் பகிர்ந்து கொண்டதாகக் கூறியிருந்தார். அந்த நேரத்தில் ஜனாதிபதி ராஜபக்ஷவும் பதிலுக்கு இந்தியாவும் இலங்கை இராணுவத்திற்கு செய்மதி மூலம் உதவிகளை செய்து வருவதாக அமெரிக்க இராஜதந்திரிக்குக் கூறினாராம்.

இலங்கை அரசு ஏப்ரல் 27க்குப் பின் அறிவித்த யுத்த சூனியப் பிரதேசத்தில் புதிய ஷெல் தாக்குதல்கள் ஏற்படுத்திய சேதத்தை பற்றிய செய்மதிப் படங்களை மே 5 ஆம் திகதி ராஜபக்ஷவுடனும் வெளியுறவு செயலர் பாலித கொஹனவுடனும் நடந்த கூட்டத்தில் சமர்ப்பித்ததாகவும் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி உதவி வழங்கும் நாடுகளின் இராஜதந்திரிகளின் கூட்டத்தில் வைத்து கொள்வதன் நிமித்தம் தாம் தனிப்பட்ட ரீதியில் இதைச் செய்ததாகவும் மூரே தெரிவித்திருக்கிறார்.

ஏப்ரல் 27 ஆம் திகதிக்கு பின்பு பெரிய ஆயுதங்கள் மூலம் யுத்த சூனியப் பகுதியில் தாக்குதல் ஒன்றும் இடம்பெறவில்லையென முன்னர் ஜனாதிபதி கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது. ஏப்ரல் 27 ஆம் திகதிக்கு முன்பும் பின்பும் யுத்த சூனியப் பகுதியில் இடம்பெற்ற சேதம் குறித்த படங்களை ஜனாதிபதிக்கும் வெளியுறவு செயலருக்கும் காட்டுமாறும் தமக்கு பணிக்கப்பட்டுள்ளதாகவும் மூரேகூறியிருந்தார்.

நாடுகளின் தூதுவர்களின் மாநாட்டுக்கு முன்பதாக தற்போதைய நிலைவரம் பற்றி தன்னிலும் பார்க்க உங்களுக்கு களநிலைமை பற்றி அதிகம் தெரியுமென தன்னிடம் ஜனாதிபதி ராஜபக்ஷ கூறினார் எனவும் மூரே தெரிவித்துள்ளார்.

இதற்கு முன்பாக ஜனாதிபதி தனது களத் தளபதிகளிடம் அடிக்கடி தொடர்பு கொண்டு கள நிலைவரங்களைக் கேட்டறிந்தாராம். இந்தியாவிடம் செய்மதிகள் இருப்பதால், கள நிலைவரங்களைப் பார்க்க முடிகிறது என ராஜபக்ஷ பெருமை கொண்டாராம். நாங்களும் இதைப் பார்த்துக் கொண்டிருந்தோம் என்பதை இப்போது இலங்கை அரசுக்கு தெரிய வேண்டுமென மூரே பதிலுக்கு கூறியதாக விக்கிலீக்ஸ் செய்தியில் கூறியுள்ளது.

ஜனவரிக்கு பின்பு ஆயிரக்கணக்கான தமிழ் சிவிலியன்கள் கொல்லப்பட்டுள்ளதையும் காயப்பட்டுள்ளதையும் அதிகாரபூர்வமற்ற செய்திகள் தெரிவிக்கின்றபோதும் அமெரிக்காவினால் சேதங்களை சரியாகக் கணிக்க முடியாது என்றும் ஆனால் சேதங்கள் இடம்பெற்றுள்ளதை உறுதியாகக் கூற முடியும் என்றும் கூறும் மூரேரயின் தகவலின்படி, அப்போது ஜனாதிபதி இனி அரச படைகள் சிவிலியன்களைத் தாக்க மாட்டார்ளென்றும் ஆனால் யுத்த சூனியப் பகுதியில் ஆழ ஊடுருவும் படைப்பிரிவு இயங்குவதாகவும் இவர்கள் மண் அணைகளை மக்களைக் கொண்டு இடித்து சிவிலியன்களை பாதுகாப்பாக வெளியேற உதவுவார்களெனவும் கூறியிருந்தார்.

இதன் மூலம் யுத்த சூனிய பகுதிக்குள் அரசின் ஆழ ஊடுருவும் படை இயங்குவதை ஜனாதிபதி ஒப்புக் கொண்டுள்ளார். இங்கு அதிக மக்களும் அகப்பட்டுக் கொண்டனர். இதன் மூலம் உலக அரங்கில் ஆதிக்கங்களை கொண்டுள்ளவர்களின் அரசியல், இராஜதந்திர இரட்டை வேடங்கள் வெளிவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

யுத்தக் குற்றங்கள் மனிதாபிமானத்திற்கு எதிரான குற்றங்கள் புரிந்தவர்களைப் பற்றிய செய்திகளை உலக வல்லரசுகள் அறிந்தும் செய்திகளை பரிமாறியும் வந்துள்ளன என்பது இதன் மூலம் தெரிகிறது.

மனித உரிமைகளைப் பாதுகாக்குமாறு சர்வதேச மனித உரிமைகளைப் பேணுமாறு கோரும் அறிக்கைகளையும் இவை வெளியிட்டு வந்தமை இங்கே கவனிக்கத்தக்கது.

இந்த நாடுகளே இன்று மனித உரிமை மீறலுக்காக நீதியான சுதந்திர விசாரணைகளைக் கோருவது புதுமையானது. இவர்களிடம் இருக்கும் மிகவும் நுட்பமான செய்மதிப் படங்கள் சர்வதேச நீதிமன்றத்தில் யுத்தக் குற்றம் புரிந்தோரை நிறுத்துவதற்கு தாராளமாக உதவும். இதைத்தான் ஐ.நா. செயலர் அறிக்கையும் புலப்படுத்துகிறது. ஐ.நா. வின் அரசியல் அமைப்புகளும் சபைகளும் சிவிலியன்களைப் பாதுகாப்பதற்கு தவறி விட்டதாக இதன் மூலம் உறுதிபடக் கூறலாம்.

தாங்கள் சிவிலியன்களைப் பாதுகாப்பதாகவும் ஐ.நா. சர்வதேச செஞ்சிலுவைச் சங்க காரியாலயங்களைப் பாதுகாத்துள்ளதாகவும் பகிரங்கமாகவும் தனியாகவும் கருத்துக் கூறும் மூத்த சர்வதேச அதிகாரிகள் அன்று பகிரங்கமாக சிவிலியன்களின் சேதங்களைத் தெரிவித்திருந்தால் வன்னியின் நிலைமை உலகுக்கு வெளிவரும்போது பொது மக்களைப் பாதுகாப்பதற்கான கோரிக்கை வலுப் பெற்றிருக்கும் இதை ஐ.நா. நிபுணர் குழு அறிக்கை வலியுறுத்திக் கூறுகிறது.

சர்வதேச மனித உரிமை மீறலுக்கோ அல்லது மனித உரிமைகள் மீறப்படுவதற்கோ கணக்கீட்டைக் கோருவது ஓர் அரசின் கொள்கையோ அல்லது தெரிவோ அல்ல. ஆனால், இது உள்நாட்டினதும் சர்வதேசத்தினதும் கடமையாகும். ஐ.நா. நிபுணர் குழு அறிக்கை மார்ச் 2011இல் வெளியிடப்பட்டமை இங்கு குறிப்பிடத்தக்கதாகும். _

நன்றி தேனீ

நான் யாழ்ப்பாணத்தில் இருந்தபோது, ஈபிடிபியின் வலிமையை எதிர்கொண்டேன். பல்கலைக்கழக மாணவர்களை நான் சந்திப்பதை அவர்கள் தடுத்தனர்- ரொபட் பிளெக்

Robert_Blakeஇலங்கையின் மனித உரிமைகள் நிலைவரம் குறித்து கவலை தெரிவித்துள்ள அமெரிக்கா, வடக்கில் துணை இராணுவ குழுக்களின் செயற்பாடுகள் கட்டுப்படுத்தப்பட வேண்டும் எனவும் கூறியுள்ளது.

இலங்கைக்கு 3 நாள் விஜயம் மேற்கொண்ட தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்கக்கான அமெரிக்க உதவி ராஜாங்கச்செயலர் ரொபட் ஓ பிளெக் இன்று புதன்கிழமை கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் இதைத் தெரிவித்தார்.

வடக்கில் வலுவான துணை இராணுவ பிரசன்னத்தைக் கொண்ட அமைப்பாக ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியை (ஈபிடிபி) ரொபட் பிளேக் குறிப்பிட்டார். 'துணை இராணுவக் குழுக்கள் பகிரங்கமாக ஆயுதங்களை வைத்திருக்க அனுமதிக்கப்படவில்லை. நான் யாழ்ப்பாணத்தில் இருந்தபோது, ஈபிடிபியின் வலிமையை எதிர்கொண்டேன். பல்கலைக்கழக மாணவர்களை நான் சந்திப்பதை அவர்கள் தடுத்தனர்' என அவர் கூறினார்.

'மனித உரிமைகள் குறித்து நான் கரிசனை கொண்டுள்ளேன். துணை இராணுவக் குழுக்களை நிராயுதபாணியாக்குவதன் அவசியம், இதில் ஏற்பட்ட முன்னேற்றம் தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் நான் கலந்துரையாடினேன். வடக்கில் தமிழ் பொலிஸாரை பணியில் ஈடுபடுத்துவது அவசியம். அதனால் இராணுவம் இப்பணிகளை செய்ய வேண்டியிருக்காது' என அவர் கூறினார்.

பொதுமக்கள் பாதுகாப்பு ஒழுங்குவிதிகள் மற்றும் பயங்கரவாத தடைச்சட்டம் என்பன இன்னும் அமுலில் உள்ளதால் அவசரகாலச் சட்டம் நீக்கப்பட்டமை நடைமுறையில் குறைந்தளவு விளைவையே ஏற்படுத்தும் என தனக்கு தெரிவிக்கப்பட்டப்பட்டதாகவும் ரொபர்ட் பிளெக் தெரிவித்தார்.

அரசாங்கத்திற்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையிலான பேச்சுவார்த்தையை இரு தரப்பினரும் தீவிரமாக கருத்திற்கொள்வது தமக்கு ஊக்கமளிப்பதாக ரொபட் பிளெக் கூறினார்.

அபிவிருத்தி மற்றும் ஏனைய விடயங்கள் குறித்த தமது முக்கிய பேச்சுவார்த்தையை தாம் மீள ஆரம்பிப்பகவுள்ளதாக அரசாங்கம், த.தே.கூ. ஆகிய இருதரப்பினரும் கூறியதில் நான் மிக மகிழ்வடைந்தேன்' என அவர் தெரிவித்தார்.

கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு குறித்து கருத்துத்தெரிவிக்கையில் , அதன் அறிக்கை வெளிவருதற்குமுன் அந்த ஆணைக்குழு தொடர்பில் தீர்ப்புகூறுவது காலத்திற்கு முந்திய நடவடிக்கையாக அமையும் என்றார்.

எனினும் அந்த ஆணைக்குழுவின் அறிக்கை போதாததாக இருந்தால் சர்வதேச அழுத்தம் அதிகரிப்பதற்கான வாய்ப்பை அவர் நிராகரிக்கவில்லை.

'நாம் நண்பர்களை அச்சுறுத்தும் நடவடிக்கையில் ஈடுபடவில்லை. சர்வதேச மனிதாபிமானச் சட்டங்களை மீறியவர்களுக்காக நம்பகமான பொறுப்புடைமை செயன்முறையொன்று அவசியம். அது நடைபெறுவதை உறுதிப்படுத்துவத்றகான சில பொறிமுறைகளுக்கான அழுத்தம் இருக்கலாம். ஆனால் அது (அத்தகைய அழுத்தம்) தேவையில்லை என நான் எண்ணுகிறேன்' என அவர் கூறினார்.

அதேவேளை கிறீஸ் பூத சம்பவங்களுக்கு முடிவு காண வேண்டும் எனவும் ரொபட் பிளெக் கூறினார். இவ்விடயம் ' பாதுகாப்பற்ற உணர்வையை புதிய மட்டத்திற்கு அதிகரித்துள்ளது' எனவும் அவர் தெரிவித்தார்.

- தமிழ்மிரர்

ஒளிந்திருந்த இராணுவ வீரர் பொலிஸாரிடம் ஒப்படைப்பு15/9/2011

சந்தேகத்திற்கு இடமான முறையில் மலசலகூடத்தில் ஒளிந்திருந்த இராணுவவீரர் பொதுமக்களால் நையப்புடைக்கப்பட்டு பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டார்.

இச் சம்பவம் நேற்று இரவு 7.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

யாழ். கொட்டடி கோணாந்தோட்டம் பகுதி வீடொன்றில் வீட்டின் உரிமையாளர் பார்த்துக் கொண்டிருந்தபோது இராணுவ வீரர் ஒருவர் அங்குள்ள மலசலகூடத்தினுள் மறைந்து கொண்டதை அவதானித்தார்.

இதனையடுத்து அருகில் உள்ளவர்களிடம் தெரிவித்ததை அடுத்து ஒன்றிணைந்த மக்கள் அவரைப் பிடித்து யாழ். பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

குறித்த இராணுவ வீரர் யாழ்நகரப் பகுதியிலுள்ள 512 ஆவது படைப்பிரிவைச் சேர்ந்தவர் எனவும் மகியங்கனையைச் சொந்த இடமாகக் கொண்டவர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

நன்றி வீரகேசரி

No comments: