உலகச் செய்திகள்


* லண்டன் கலவரத்திற்குக் காரணமான டுக்கனின் உடலுக்கு பலர் இறுதி அஞ்சலி

* கென்ய தீ விபத்தில் 80 பேர் உடல் கருகி பலி

தன்சானியா படகு விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 240 ஆக உயர்வு

* பாகிஸ்தான் வெள்ளப்பெருக்கில் 141 பேர் பலி 4 மில்லியன் மக்கள் இடம்பெயர்வு

* ஆப்கானில் 20 மணித்தியாலங்களாக நீடித்த மோதல் நிறைவு

*   அமெரிக்காவில் வறுமை அதிகரிப்பு



லண்டன் கலவரத்திற்குக் காரணமான டுக்கனின் உடலுக்கு பலர் இறுதி அஞ்சலி
Friday, 09 September 2011

லண்டனில் அண்மையில் இடம்பெற்ற கலவரங்களுக்குக் காரணமானவரெனக் கூறப்படும் மார்க் டுக்கனின் இறுதிக் கிரியைகள் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றுள்ளது.


மார்க் டுக்கன் பொலிஸாரால் சுட்டுக்கொல்லப்பட்டதையடுத்தே லண்டனின் பெரும்பாலான பகுதியெங்கும் வன்முறைச் சம்பவங்களும் கலவரங்களும் இடம்பெற்றன.

ஆகஸ்ட் 4 ஆம் திகதி ரொட்டன்ஹமில் பொலிஸாரால் சுட்டுக்கொல்லப்பட்டார் மார்க் டுக்கன்.

அதனைத் தொடர்ந்து இடம்பெற்ற சிறியளவிலான எதிர்ப்பு ஆர்ப்பாட்டமே லண்டன் முழுவதும் வன்முறைச் சம்பவமாக மாறியது.

இதனையடுத்து மார்க் டுக்கனின் மரணம் தொடர்பாக சுயாதீன பொலிஸ் முறைப்பாட்டு ஆணைக்குழு விசாரணை மேற்கொண்டு வருகின்றது.

மார்க் டுக்கனின் பெற்றோரைச் சந்தித்து தகவல்களைப் பெற்றுக்கொண்டதாக மெட்ரோ பொலிரன் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

டுக்கனின் மரணம் தொடர்பாக சுயாதீன பொலிஸ் முறைப்பாட்டு ஆணைக்குழுவினால் மேற்கொள்ளப்படும் விசாரணைகளில் தமக்கு நம்பிக்கை இல்லையென டுக்கனின் பெற்றோர் தெரிவித்துள்ளனர்.

டுக்கனின் மரணம் தொடர்பிலான உயர் நீதிமன்ற விசாரணைகள் டிசம்பர் 12 ஆம் திகதிவரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

பி.பி.சி.
நன்றி தினக்குரல்


கென்ய தீ விபத்தில் 80 பேர் உடல் கருகி பலி


13/9/2011
கென்யாவில் பெற்றோல் குழாய் வெடித்ததால் ஏற்பட்ட தீ விபத்தில், நூற்றுக்கும் அதிகமானோர் உடல் கருகி உயிரிழந்துள்ளனர்.

அந்நாட்டின் தலைநகரிலிருந்து 11 கிலோமீற்றர் தொலைவில் அமைந்துள்ள முகுரு என்ற என்ற சேரிப் பகுதியிலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

குறித்த குழாயில் வெடிப்பு ஏற்பட்டு அதிலிருந்து பெற்றோல் கசியத்துவங்கியுள்ளது இதனையடுத்து அப்பிரதேச வாசிகள் அதனை சேகரிக்கத்துவங்கியுள்ளனர்.

இதன்போது தீடிரென தீப்பற்றியுள்ளது இதனால் சேகரிப்பில் ஈடுபட்டிருந்த பலர் சம்பவ இடத்திலேயே தீயில் கருகி பலியாகியுள்ளனர்.

இதுவரை 80 வரையான உடல்கள் மீட்கப்பட்ட நிலையில் மேலும் பலர் பலியாகியிருக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது.

இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நன்றி வீரகேசரி

தன்சானியா படகு விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 240 ஆக உயர்வு


12/9/2011

தன்சானியாவில் கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற படகு விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 240 ஆக உயர்ந்துள்ளது.

உயிரிழந்தவர்களில் 192 பேரின் உடல்கள் அடையாளங்காணப்பட்டுள்ளன.

அளவுக்கதிகமான பயணிகள் படகில் இருந்தமையே படகு நீரில் மூழ்கி விபத்துக்குள்ளாகக் காரணமென அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சன்ஸிபார் பிராந்தியத்திலுள்ள பிரதான தீவுகளான உங்குஜா மற்றும் பெமா என்பவற்றுக்கிடையில் சேவையில் ஈடுபட்ட படகே இவ்வாறு விபத்துக்குள்ளானது.

இவ்விபத்திலிருந்து சுமார் 600 பேர் காப்பாற்றப்பட்டுள்ளனர்.

இது தொடர்பில் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ்விபத்தையடுத்து தன்சானியாவில் 3 நாட்கள் தேசிய துக்க தினமாகப் பிரகடனப்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
நன்றி வீரகேசரி


பாகிஸ்தான் வெள்ளப்பெருக்கில் 141 பேர் பலி 4 மில்லியன் மக்கள் இடம்பெயர்வு
Tuesday, 13 September 2011

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் தெற்கு பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கினால் 141 பேர் பலியானதுடன் 4 மில்லியன் பேர் வீடுகளை விட்டு இடம்பெயர்ந்திருப்பதாக பிரதமர் யூசுப் ரஸா கிலானி தெரிவித்துள்ளார்.


சிந்து மாகாணத்தில் கடும் மழையினால் ஏற்பட்டுள்ள இழப்புக்கள் முதலில் எதிர்வு கூறப்பட்டதைவிட அதிகமானது என தொலைக்காட்சி உரையில் கூறியுள்ள கிலானி,வெள்ளப் பெருக்கினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சர்வதேச உதவிக்கும் அழைப்பு விடுத்துள்ளார்.

கடும் மழையினால் 21 மாவட்டங்களும் பாதிக்கப்பட்டிருப்பதுடன் 4.1 மில்லியன் ஏக்கர் பரப்பளவுள்ள விளை நிலமும் பாதிக்கப்பட்டுள்ளது.

இடம்பெயர்ந்துள்ள மக்களுக்காக 4000 முகாம்கள் அமைக்கப்பட்டிருப்பதுடன் பாதிக்கப்பட்ட 4 மில்லியன் மக்களில் 1,50,000 பேரிற்கு இருப்பிட வசதி ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது.

ஒரு இலட்சம் கூடாரங்களை வழங்குவதற்கு அரசு ஏற்பாடு செய்துள்ளதுடன், ஒரு இலட்சம் குடும்பங்களுக்கு நிவாரண உதவிப் பைகளும் வழங்கவும் அரசு நடவடிக்கை எடுத்திருப்பதாக பிரதமர் தெரிவித்தார்.

இந்தியன் எக்ஸ்பிரஸ்
நன்றி தினக்குரல்

ஆப்கானில் 20 மணித்தியாலங்களாக நீடித்த மோதல் நிறைவு


14/9/2011

ப்கான் தலைநகர் காபூலில் உள்ள அமெரிக்க தூதரகத்தை குறிவைத்து தலிபான்கள் நேற்று ஆரம்பித்த தாக்குதல் நடவடிக்கை சுமார் 20 மணித்தியாலங்களுக்கு பின்னர் நிறைவடைந்துள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடைசியாக எஞ்சியிருந்த 6 பயங்கரவாதிகளும் கொல்லப்பட்டதன் பின்னர் நிறைவடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இத்தாக்குதல்களில் 13 பேர் வரை கொல்லப்பட்டதுடன் 6 நேட்டோ படை வீரர்கள் காயமடைந்துள்ளனர்.

இச்சம்பவம் பற்றி தெரியவருவது:

காபூலில், வாஜிர் அக்பர் கான் பகுதியில் பல்வேறு நாடுகளின் தூதரகங்கள், உளவுப் பிரிவு அலுவலகங்கள் உள்ளன.

குறிப்பாக அமெரிக்கா, பிரிட்டன், இந்தியா ஆகியவற்றின் தூதரகங்களும் இங்கேயே அமைந்துள்ளன.

அந்நாட்டு அரசாங்கத்தின் பல்வேறு அமைச்சகங்களும் இங்கேயே இயங்குகின்றன.

அமெரிக்கத் தூதரகத்தின் அருகில், "நேட்டோ' படையின், சர்வதேச பாதுகாப்பு உதவிப் படைத் தலைமையகம் அமைந்துள்ளது.

இந்நிலையில் நேற்று நண்பகல், அப்பகுதியுள் நுழைந்த தீவிரவாதிகள், அங்கிருந்த பாதுகாப்பு பிரிவினர் மீது தாக்குதலை நடத்தினர்.

சிறிது நேரத்தில், அருகில் உள்ள கட்டிடங்களில் புகுந்த அவர்கள், அமெரிக்கத் தூதரகத்தைக் குறிவைத்துத் தாக்கினர்.

அதேநேரம், நகரின் மேற்குப் பகுதியில் நுழைந்த தற்கொலை நபர்கள் நடத்திய தாக்குதலில் ஒருவர் பலியானார்.

தீவிரவாதிகளை எதிர்த்து பொலிஸார் நடத்திய தாக்குதலில் இருவர் பலியாயினர்.

அமெரிக்கத் தூதரகத்தில் பணிபுரியும் ஊழியர்கள் எவருக்கும் எதுவித பாதிப்பும் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது.

தூதரகப் பகுதிகளில் பாதுகாப்பில் ஈடுபட்டிருந்த பாதுகாப்புப் படை வீரர்கள், தீவிரவாதிகள் பதுங்கியிருந்த இடங்களை நோக்கித் தாக்குதல் நடத்தினர்.

மேலும் "நேட்டோ' போர் விமானங்கள் வானில் ரோந்து நடவடிக்கைகளில் ஈடுபட்டன.

ஆப்கானிஸ்தானில் பலமுறை தலிபான்கள் தாக்குதல் நடத்திய போதும், இதுதான் திட்டமிட்டு பல முனைகளில் இருந்தும் நடத்தப்பட்ட தாக்குதல் என்பது குறிப்பிடத் தக்கது.

நன்றி வீரகேசரி


அமெரிக்காவில் வறுமை அதிகரிப்பு


வாஷிங்டன், செப்.14: அமெரிக்காவில் ஆறில் ஒருவர் வறுமையில் வாழ்வதாக சமீபத்தில் வெளியாகி உள்ள புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. அமெரிக்காவில் ஏற்பட்ட பொருளாதார மந்தநிலை, சாதாரண மக்களின் வாழ்வில் ஏற்படுத்தியுள்ள பாதிப்பை இந்தப் புள்ளிவிவரம் உறுதி செய்கிறது. "அமெரிக்காவில் வருவாய், வறுமை, மற்றும் சுகாதாரக் காப்பீடு 2010' என்ற தலைப்பில் அமெரிக்க சென்சஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: 2010-ம் ஆண்டு அமெரிக்காவில் 4.62 கோடி பேர் (15.1%) வறுமை கோட்டுக்கு கீழ் இருந்தனர். இதுவே, அதற்கு முந்தைய 2009-ம் ஆண்டில் 4.36 கோடி பேர் (14.3%) வறுமை கோட்டுக்கு கீழ் இருந்தனர். கடந்த 4 ஆண்டுகளில் வறுமை தொடர்ச்சியாக அதிகரித்துள்ளதை இந்தப் புள்ளிவிவரம் காட்டுகிறது. மேலும் வறுமையால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை, கடந்த 52 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 2010-ம் ஆண்டில் சுகாதாரக் காப்பீடு இல்லாத அமெரிக்கர்களின் எண்ணிக்கை 4.9 கோடியாக (16.3%) அதிகரித்துள்ளது. 18 வயதுக்கு குறைந்தவர்களில் 1.6 கோடி (22%) பேரும், 18-லிருந்து 65 வயதுக்குள் உள்ளவர்களில் 2.6 கோடி (13.7%) பேரும் வறுமையில் வாடுகிறார்கள் என்று அந்தப் புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. அமெரிக்க அரசின் வறுமை கணக்கிடும் முறை: 4 பேர் உள்ள குடும்பத்தில் வருவாய் அளவு ஆண்டுக்கு ரூ.10 லட்சமாக (22,314 டாலர்) இருந்தால் அந்தக் குடும்பம் வறுமை கோட்டில் வரும். இதுவே தனிநபரின் வருவாய் ஆண்டுக்கு ரூ.5 லட்சமாக இருந்தால் அவர் வறுமையால் பாதிக்கப்பட்டவர் ஆவார்.

நன்றி தேனீ


No comments: