மனதைக் கவரும் மட்டக்களப்பு நாட்டுப்பாடல்கள் -பகுதி 9


.
                                                                                         பாடும்மீன் சு.ஸ்ரீகந்தராசா


அத்தியாயம் 9

செய்தியனுப்பல்

அறுவடைக் காலம். கணவன் அருவி வெட்டுக்காக வெளியூருக்குச் சென்றுவிட்டான். வேலை முடிந்தபின்தான் வீடு திரும்புவான். அதற்கு எத்தனை நாட்களாகும் என்று சொல்லமுடியாது. வீட்டிலே பெண்பிள்ளையொன்று வயதுக்கு வந்துவிட்டது. தாயானவள் தனது கணவனுக்கு அதுபற்றிச் செய்தியனுப்ப நினைக்கிறாள். அதே ஊருக்கு செல்லுகின்ற ஆதம்லெப்பை என்கின்ற பழக்கமுள்ள முஸ்லிம் ஆள் ஒருவரிடம் பின்வருமாறு சொல்லியனுப்புகிறாள்.

ஆதம் காக்கா ஆதம் காக்கா
அவரக் கண்டாச் சொல்லிடுங்க
பூவரசங் கன்னியொன்று
பூமலர்ந்து போச்சுதெண்டுஎன்னதான் பழக்கம் இருந்தாலும் ஆதம் லெப்பை ஓர் அன்னிய மனிதர்;. அவரிடம் பெண் பெரியவளான செய்தியை நேரடியாகச சொல்வதற்குப் பண்பாடு தடுக்கிறது. ஆனால் கணவனுக்குச் சொல்லியனுப்ப அவரையும் விட்டால் வேறு யாரும் இல்லை. பூவரசங் கன்னியொன்று, பூமலர்ந்து விட்டது என்று சொல்லும்போது அது ஆதம் காக்காவுக்கு விளங்கிவிட்டால் அவர் விடயத்தை நேரடியாகவே கணவனிடம் சொல்லிவிடுவார். விளங்காவிட்டால் சொன்னதை அப்படியே போய்ச் சொல்லுவார். தன் கணவனுக்கு அது விளங்கிவிடும். ஆக, எப்படியோ செய்தி சேரவேண்டிய ஆளிடம் போய்ச் சேர்ந்துவிடும்.


செய்திகளைச் சொல்லியனுப்புவது போலமைந்த மேலும் சில பாடல்கள் :

ஆடு துடையிலே
அன்பான மேனியிலே
கட்டு வருத்தமொன்று- என்ர,
கண்மணிக்குச் சொல்லிடுங்க

ஏத்தால வெள்ளாமை
இளங்குடலை பூங்கதிரு
மாட்டா லழியுதென்று- எங்கட,
மன்னருக்குச் சொல்லிடுங்கோ

ஏத்தால வேள்ளாமை
இளங்குடலை பூஞ்சோலை
மாட்டா லழியுதென்று- எங்கட,
மன்னருக்குச் சொல்லிடுங்கோ

வாழைப் பழம் தாறன் எங்க
வாப்பாட்டச் சொல்லிடுங்க
சீனி வெள்ளை நாகு
சீர்குலைந்து போகுதென்று


காசி வரக்காட்டவேண்டாம்
கனதூரம் நடக்கவேண்டாம்
தூதுவரக் காட்டவேண்டாம் - அந்த
துரையை வந்து போகச் சொல்லும்

No comments: