எப்போ தணியும்

.
கூடு சுமந்து ஊரும்
நத்தைகள் போல்-உன்
நினைவு சுமந்து நகரும்-என்
இதயக்கூடு

நத்தை ஊர்ந்த சுவடுகளும்-என்
இதயம் சுமந்த வடுகளும்
இன்னும் ஈரத்துடனே

தீராத போர் உன்னை
தின்று தீர்த்த போதும்
சுனாமி வந்து உன்னை
சுருட்டி அள்ளிய போதும்

இன்னும் நிமிர்ந்து விட- நீ
நிதானத்துடன் எழுவது
ஆறுதல் என்றாலும்-இப்போ
பூதமென்றும் கீறீஸ் மாஜமென்று
வதைபடுத்தும் வல்லாண்மை-என்று
தணியும் எம்மை எதிர்ப்போரின் தாகம்

ஒரே முகம் ஒரே நிறம்
பாசைகளும் ஆசைகளும்
வேறு வேறாக்கி –ஏன்
பிரிதானோ இறைவன்
பிரிந்து வாழ மட்டுமேன்
விரும்பாமல் சிதை படுத்துகிறான்.

தாகம் தணித்து
எல்லோரும் சமமென
மேலை நாட்டவர் போல்
எப்போது மனிதம் சுமப்பமோ
அதுவரையும்........
கூடு சுமந்து ஊரும்
நத்தைகள் போல்.

கவிஞர் ஆவூரான்.

No comments: