180
”180” படத்தின் இயக்குனர் ஜெயந்திரா 500 க்கும் மேற்பட்ட விளம்பரப் படங்களை இயக்கியிருக்கிறாராம்.
இந்த படத்தை பார்த்தாலும் ஏதோ ஒரு இரண்டரை மணிநேர விளம்பரப் படத்தை பார்த்தது போலத்தான் இருக்கிறது. ஒவ்வொரு காட்சிகளுக்கும் ரொம்ப முக்கியத்துவம் கொடுத்து எடுத்திருக்கிறார்.
அமெரிக்காவில் இருந்து சென்னைக்கு வரும் சித்தார்த், ஆறுமாதம் தான் இங்கு இருப்பேன் என்று ஒரு வீட்டில் வாடகைக்கு குடியேறுகிறார். அந்த வீட்டின் ஆறு மாத வாடகை தொகையை மொத்தமாக கொடுக்கிறார். அதேபோல அந்த வீட்டின் உரிமையாளரின் பைக்கை வாடகைக்கு எடுக்கும் சித்தார்த், அந்த தொகையையும் ஆறு மாதத்திற்கு சேர்த்து மொத்தமாக கொடுக்கிறார். இப்படி எதை எடுத்தாலும் ஆறு மாதம் தான் என்று சொல்லி கொண்டு, சுண்டல் விற்பது, இஸ்திரி போடுபவருக்கு உதவுவது, பேப்பர் போடும் சிறுவர்களை படிக்க வைக்க முயற்சி செய்வது என்று ரொம்பவே சந்தோஷமாக சுற்றி வருகிறார்.
சித்தார்த்தின் இந்த நடவடிக்கைகளை பார்த்து அவரை காதலிக்கும் நித்யா மேனனின் காதலை, சித்தார்த் ஏற்க மறுக்கிறார். இதற்கு காரணம் ப்ளாஷ் பேக். அமெரிக்காவில் மருத்துவராக இருக்கும் சித்தார்த், ப்ரியா ஆனந்தை காதலித்து திருமணம் செய்து கொள்கிறார். திடீரென்று யாரிடமும் சொல்லாமல், தான் இறந்துவிட்டதை போல ஒரு சூழ்நிலையை உருவாக்கிவிட்டு அமெரிக்காவில் இருந்து சென்னைக்கு வருகிறார்.
அப்படி சித்தார்த் சென்னைக்கு வர என்ன காரணம்? என்பதே படம். படத்தின் மையக்கருவை காட்டிலும், கருவுக்கு திரைக்கதை அமைத்து அதை படமாக்கிய விதம் பாராட்டத்தக்கது. இயக்குனர் ஜெயந்திர ரொம்பவே அமைதியாக இருப்பவர் என்று சொன்னார்கள். அதற்காக அவர் இயக்கிய படத்தையும் இப்படி அமைதியாவா இயக்குவது. ஏழு வருடங்களுக்குப் பிறகு தமிழில் மறுபடியும் சித்தார்த் நடிக்கும் படம்.
முதல் பாதியில் துருதுரு இளைஞனாக நடித்திருக்கும் சித்தார்த், இரண்டாம் பாதியில் ரொம்பவே சீரியஸாக நடித்திருக்கிறார். ப்ரியா ஆனந்த், நித்யா மேனன் என்று இரண்டு நாயகிகளையும் ரொம்பவே அழகாக காட்டியிருக்கிறார் இயக்குனர். அதிலும் படத்தில் இவர்கள் தான் டப்பிங் பேசியிருக்கிறார்கள். நித்யா மேனனின் மலையாளம் கலந்த தமிழ் உச்சரிப்பும், ப்ரியா ஆனந்தின் முரட்டுத்தனமான தமிழ் உச்சரிப்பும், காரமும், இனிப்பும் கலந்த சேட்டு பலகாரம் போல இருக்கிறது.
ஒளிப்பதிவாளர் பாலசுப்பிரமணியம் படத்தின் மற்றொரு நாயகன் என்று சொல்லும் அளவுக்கு தனது திறமையை காட்டியிருக்கிறார். அதுபோல பாலசுப்பிரமணியத்தின் ஒளிப்பதிவுக்கு மெருகேற்றி உச்சத்துக்கு கொண்டு சென்றிருக்கிறது செவிஷாவின் கலர் கரக்ஷன். படத்தொகுப்பாளர் கிஷோரும் தன் பங்கிற்கு காட்சிகளை மெருகேற்றியிருக்கிறார். பின்னணி இசை, பாடல்கள் இரண்டிலும் அசத்தியிருக்கும் இசையமைப்பாளர் ஷரத், ”நியாயம் தானா காயம் தானா” என்ற பாடலை வித்தியாசமாக பாடுகிறேன் என்று வார்த்தைகளை புரிந்துக்கொள்ளாத அளவுக்கு கொலை செய்தது தான் ஏன் என்று புரியவில்லை.
கதை என்னவோ எங்கேயோ, எப்போதோ பார்த்தது போலத்தான் இருக்கும். ஆனாலும், அதை புதிதாக காட்ட ஜெயந்திரா மற்றும் சுபா உருவாக்கியிருக்கும் திரைக்கதையும், அதை இயக்குனர் ஜெயந்திரா படமாக்கிய விதமும் கண்ணுக்கு குளிச்சியளிக்கிறது.
நன்றி விடுப்பு
No comments:
Post a Comment