கலை ஒலி மாலை 2011 ATBC என் பார்வையில் -சேரன் இளங்கோ.

.


வில் வளைவதும், வேங்கை பதுங்குவதும் பணிந்ததாக அர்த்தம் அல்ல. இதற்கு ஒத்தவகையில் பாகம் 1, பாகம் 2 என்று, இரண்டாகப் பிரித்து ATBC யின் கலை ஒலி மாலை 2011 நிகழ்ச்சியில் இரண்டு உன்னத கலைஞர்களின் கலை நிகழ்ச்சிகள்ஓரே மேடையில் நடைபெற்றன. இடம்:
Mt St Benedict Girls High School, Pennants Hills.
பாகம் 1 – நாட்டிய கலாநிதி கார்த்திகா கணேசர் அவர்களின் நெறியாழ்கையோடு, மக்கள் தொகை நிரம்பி வழிந்த மண்டபத்தில், அவரது நாட்டியப்பள்ளி மாணவர்களால் அற்புதமாக நடாத்தப்பட்ட “கடலோரம்” நாட்டிய நாடகம். திருமதி கார்த்திகா கணேசரைப் பற்றி இங்கே அறிமுகம் செய்ய வேண்டிய தேவை அதிகம் கிடையாது.
வந்த நாள் முதல் இந்த நாள் வரை, தன் கலை ஆர்வத்தையும், ஊக்கத்தையும் தன் முழுத் திறமையோடு நாட்டியக்கலைப் பணி;க்கு அவ்வப்போது அர்ப்பணிப்புச் செய்து, பல வேறு கோணங்களில் பல்வேறு நாட்டிய நிகழ்வுகளையும், அரங்கேற்றங்களையும் சிட்னியில் வெற்றிகரமாக நடாத்திய, நடாத்திக கொண்டிருக்கும் பெருமை இந்த நாட்டிய கலாநிதியையே சாரும். கரையோரத்தில் வாழ்ந்து, ஆழ்கடலில் மீன் பிடித்துச் சம்பாதிக்கும் மனிதர்களின் வாழ்வைச் சித்தரிக்கும் நாட்டிய நாடகம் தான் “கடலோரம்”. இதில் பங்கேற்ற அத்தனை மாணவர்களும் எவ்விதத்தில் தங்கள் கலைத்திறமையைக் கையாண்டார்கள் என்பதற்கு, கண்ணால் கண்டவர்களும், காதால் கேட்டவர்களும், மண்டபம் நிறைந்த கைதட்டல்களுமே சாட்சியாகும்.
பாகம் 2 – தமிழிசை ரசிகர்களை ஒரு வற்றாத நதியோடு இணைத்து, அதன் நீரொட்டத்தோடு ஓடச் செய்தமை, நிகழ்ச்சியின் நாயகன் - ஈழத்து சௌந்தரராஜன் என்ற சிறப்புப் பட்டம் பெற்ற திரு நாகமுத்து ரகுநாதனையே சாரும். இவரோடு சேர்ந்து பாடிய அனைத்துப் பாடகர்களும் தங்கள் கானக்குரல்களை ஒலித்துக் காட்டி மண்டபம் நிறைந்த ரசிகர்களின் கைதட்டல்களையும் இடைக்கிடையே, இடைவிடாத விசிலடிகளையும் பாராட்டாகப் பெற்றுக் கொண்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.சிட்னியின் முன்னனி இசைக்குழு “சப்தஸ்வரா” இந்த நிகழ்வுக்கு பின்னணி இசை வழங்கியதும் குறிப்பிடத்தக்கது. மலேசியாவில் இருந்து இதற்காக வருகை தந்த மநலடிழயசன இசைக்கலைஞர் திரு சுப்பிரமணியம் செல்வேந்திரனின் இசையாழம், கையாள்கை ரசிகர்களைப் பிரமிக்க வைத்ததும் உண்மை. நிகழ்ச்சியின் மாபெரும் வெற்றிக்கு இவரது பங்களிப்பு மகத்தானது என்றால் அது நிச்சயம் மிகைப்பட்ட வார்த்தையல்ல. என் மனதில் பட்டதை, என் உள்ளம் ரசித்ததைத் தான் இங்கே குறிப்பிடுகின்றேன்.திரு ரகுநாதன் அவர்களுக்கு சிட்னியில் நிகழ்ச்சியொன்றில் பங்கேற்றமை இதுதான் முதல் தடைவ.ATBC வானொலியின் கலைஒலி மாலை 2011 தான் இந்த சங்கீதரத்தினம் பங்கேற்ற முதல் மேடை சிட்னி நகரில்.

மலருக்கு நறுமணம், மனிதனுக்கு நற்குணம்: இந்த ரகுநாதனின் அடக்கமான பேச்சும், அவரின் தன்னிகரற்ற, சுயமான கலை ஆர்வமும், திறமையும், அவர் பாடிய ஒவ்வொரு பாடலிலும் எதிரொலித்ததை, யாரும் மறுக்க முடியாது. பழம்பெரும் புகழ்பெற்ற தமிழ்த்திரைப் படப் பாடல்கள், முக்கியமாக TMSஅவர்களது தனிப் பாடல்களும் வயோதிகர் வரை, எப்பருவத்தினரையும், எப்பாலாரையும், எம்மதத்தினரையும் மகிழ்ச்சிக் கடலில் நீந்த வைத்தது என்று இங்கே குறிப்பிட்டால், அது நிச்சயம் உண்மைக்கும் புறம்பான ஒன்றல்ல.தான்பாடிய சில பாடல்களில் அவர் தன் சங்கீத இசையின் ஆழத்தால், மூலப் பாடல்களையே மூழ்கடித்து, தன்னுடைய தனித்துவத்தை வெளிக்காட்டிப் பாடியது மிகவும் கௌரவமான பாராட்டுக்குரியது. ஈழத்துக் கலைஞர்கள் யாருக்கும் சளைத்தவர்கள் அல்ல என்பதற்கு இந்த சங்கீதரத்தினம் ரகு ஒரு உன்னதமான எடுத்துக்காட்டு.ஒன்பது வயதிலிருந்தே சங்கீதம் கற்கத் தொடங்கி, இன்று வரை பாடிக்கொண்டு இருக்கும் இந்த ‘கானக்குயில்’ ரகு, “ஒரே கீதம் உரிமை கீதம் பாடுவோம்” என்று MGR இன் ஆயிரத்தில் ஒருவன் படப்பாடல் பாடியபோது, ரசிகர்கள் அதிசயத்தே போனார்கள். கைதட்டல் அதிரவைத்தது மண்டபத்தை.சும்மா சொல்லக் கூடாது சாமி: இதற்குப்பக்க பலமாக “லலாலா, லா, லலாலா, லா” பாடிய திருக்குமார் தான் ஒரு SUPER– பாடகர் என்பதை “மன்றம் வந்த தென்றலுக்கு” பாடல் மூலம் வெளிக்காட்டியது. மூல்பாடகர் S.P. பாலா கூட்டத்தில் இருந்திருந்தால் நிச்சயம் திருக்குமாரைப் பாராட்டி இருப்பார். அந்தளவுக்கு மூலப்பாடலை விடமிக அழகாகப் பாடியிருந்தார்.கூடவே பின்னணி இசைத்த பெண் கானக்குயில்களை எப்படி மற்கமுடியும்!

ALFONSA, இந்துமதி, ரேகா – இந்த மூவரும் ஒவ்வொரு பாடலினதும் முழுமையே அறிந்து, அதற்கேற்ற வகையில் பாடி எங்களை எல்லாம் மகிழ்வித்ததை மறக்க முடியுமா?“சின்னஞ்சிறிய வண்ணப்பறவை” – குங்குமப்படப் பாடலை மிகவும் அழகாகப் பாடி பலத்த கைதட்டலை தொடர்ந்து பெற்றுக் கொண்டிருந்தார்கள். ரகுநாதனும், ரேகாவும் இந்தப்பாடலில் இருவருமே தங்கள் திறமையைக் காட்டிப் பாடியது என்றும் மறக்க முடியாத ஒன்று.ஒரு உன்னதமான அற்புத நிகழ்ச்சியைக் கண்டு களித்த பூரிப்போடு. ரசிகர்கள் 11 மணியளவில் மண்டபத்தைவிட்டு வெளியேறும் போதும் கூட, பலர் அங்கே பாடப்பட்ட பாடல்களை, தாங்களும் பாடிக் கொண்டுதான் போனார்கள்.

“மச்சான் இவன் “அப்ஸராஸ்” இல் இருக்கேக்க பாடின அதே குரலோடை இப்பவும் பாடுறான். HE IS STILL GREAT AFTER ALL THESE YEARS” என்றும் சொல்லிக்கொண்டே நடை போட்டார் ஒருவர் தன் நண்பனுடன்.

எனக்கு ஒரு ஆங்கிலப்பாடலின் நினைவு வந்தது-There is no business like Sow business அதுதான்.

சேரன் இளங்கோ.

2 comments:

கானா பிரபா said...

அது சுப்சரண் அல்ல அப்ஸராஸ்

Tamilmurasu said...

நன்றி கானா. எழுத்துப்பிழை திருத்தப்பட்டுள்ளது. வருகைக்கும் உடனடியாக பார்த்து குறிப்பிட்டதற்கு நன்றி.

ஆசிரியர் குழு