மெல்லுகின்றவாய்க்கு அவலாகும் அபலைப் பெண்கள் !

.
தென்னிலங்கையில் தொழில் வாய்ப்பைக் காட்டி தமிழ் பெண்கள் துஸ்பிரயோகம் செய்யப்படுவதாக வெளிவந்த செய்தி : மெல்லுகின்றவாய்க்கு அவலாகும் அபலைப் பெண்கள் !
                                                                                                              - நமது யாழ் நிருபர்
படம் - மருதானையில் பொலிசாரால் இளம் பெண்கள் விடுவிக்கப்பட்ட விடுதி
வடக்கு கிழக்கைச் சேர்ந்த 7 பெண்கள் உட்பட 9 பெண்கள் கொழும்பில் மருதானைப்பகுதியிலிருந்த விடுதியொன்றில் வைத்து விபச்சாரத்தில் ஈடுபடுத்தப்பட்ட பரிதாபச் செய்தி இவ்வார யாழ் பத்திரிகைகளில் பிரதான செய்தியாக வெளிவந்திருந்தது. இவர்களுள் 8 பெண்கள் 16-24 வயதிற்குட்பட்டவர்களெனவும் அவர்களுள் இருவர் 18 வயதிற்குக் குறைந்தவர்களெனவும் பொலிஸ் தகவல்கள் தெரிவிப்பதாக பத்திரிகைகள் தெரிவித்திருந்தன.

அத்துடன் பொலிஸ் தகவல்களை மேற்கோள்காட்டி, இவர்களுள் இருவரைப்பற்றி மட்டும் மேலதிக விபரங்களையும் பத்திரிகைகள் தெரிவித்திருந்தன. இதன்படி இவர்கள் இருவரும் வவுனியா மற்றும் முல்லைத்தீவு பகுதிகளைச் சேர்ந்தவர்களெனவும் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட அபலைகள் எனவும், முகவர் ஒருவரினால் வேலைவாய்ப்புப் பெற்றுத் தருவதாக மோசடி செய்யப்பட்டு கொழும்பிற்குக் கூட்டிவரப்பட்டு ஏமாற்றப்பட்டவர்களெனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இச் செய்தி, சமூக ஆர்வலர்களினால் ஒரு அபாய அறிவிப்பாகக்கருதப்பட்டு; இந்நிலைமைகளைக் கட்டுப்படுத்தி களைந்தெறிவதற்கான நடவடிக்கைகளில் கவனம்கொள்ள வைத்துள்ளது.இதற்கிடையில் இந்தச் செய்தியுடன் கொழும்பிற்கோ அல்லது வெளிநாடுகளுக்கோ சட்டப்படியாக வேலைவாய்ப்புகளைத் தேடிச்செல்லும் பெண்களின் நிலைமைகளை பொதுமைப்படுத்தும் இன்னொரு அபாய நிலைமை இப்போது தோன்றியுள்ளதாக மகளிர் மற்றும் இளம் மகளிர் முன்னணி அமைப்பாளர் திருமதி அகலியா சுட்டிக்காட்டியுள்ளார். இதுபற்றி அவர் தெரிவிக்கையில், இந்தச் செய்தி பத்திரிகைகளில் பிரபலமாக்கப்பட்டதைத் தொடர்ந்து வெளிநாடுகளில் வேலைவாய்ப்புகளைப் பெறுவதற்காக தொழில் முகவர்கள் ஊடாக முயற்சிகள் செய்து தோல்வியடைந்து தமது வீடுகளுக்குத் திரும்பிவந்த பெண்கள் சிலர் தமது ஊரவர்களினால் சொல்லொணா மன உழைச்சலுக்கு உள்ளாகிவருவதாகவும், இது மிகவும் கொடூரமானது எனவும் குறிப்பிட்டார். இவர்களது நிலைமைகளே இப்படியிருக்கையில், உண்மையில் பாதிக்கப்பட்ட அப்பாவிப்; பெண்கள் தமது ஊர்களுக்குத் திரும்பிவரும்போது எதிர்கொள்ளப்போகும் பரிதாப நிலைமைகளை எண்ணிப்பார்ப்பது அச்ச மூட்டுவதாக உள்ளதாக அவர் ஆதங்கப்பட்டார்.எமது சமூகத்தின் இந்த அவல நிலைமையை மாற்ற சமூக அக்கறையுள்ள அனைவரும் முன்வரவேண்டுமெனவும், இதற்குக் காரணமான எமது சமூகப் பிரகிருதிகளை மகளிர் மற்றும் இளம் மகளிர் முன்னணி வன்மையாகக் கண்டிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.அத்துடன் இவ்விடயம்பற்றி மேலும் கருத்துத் தெரிவித்த அவர், வன்னியிலிருந்த அப்பாவி மக்களின் அவலங்களை தமிழ் அரசியல்வாதிகளும் தமிழ் ஊடகங்களும் வெறும் அரசியல் பிரச்சாரத்திற்காகப் பயன்படுத்துவதைத் தவிர்த்து அக்கறையுடன் அணுகி அவை உருவாவதற்கான ஊற்றுமூலங்களைக் கண்டுபிடித்து அவற்றை களைவதற்கான நடவடிக்கைகளை எடுக்க முன்வரவேண்டுமென தெரிவித்தார். குறிப்பாக யாழ்ப்பாணத்தில் பிரபல பாடசாலைகளில் கல்விகற்கும் சில மாணவிகள் கருக்கலைப்புச் செய்துகொண்டதாக பொதுக் கூட்டங்களில் பகிரங்கமாகவே பேசப்பட்டவை பிரசுரமாவதை மிகவும் பொறுப்புணர்வுடன் தவிர்த்த ஊடகங்கள், இச் சம்பவத்தைமட்டும் பெட்டிச் செய்திகளாக்கி வெறும் பிரச்சாரத்திற்காகப் பயன்படுத்துவது தவறு எனக் குறிப்பிட்டார். இயக்கத்தில் சேர்ந்திருந்து தற்போது இலங்கை அரசினால் புனர்வாழ்வளிக்கப்பட்ட பல இளம் பெண்களை அவர்களது குடும்பங்களோ அல்லது தமிழ் சமூகமோ அரவணைக்காத அவலநிலை தொடர்ந்து இருந்துவருகிறது. இவைபற்றி இப் பிரதிநிதிகள் கவலைப்பட்டதில்லை. இது தவிர பொருளாதார நீதியாக அவலநிலையிலுள்ள இந்தப் பெண்களின் அபாயகரமான நிலைமையையிட்டு பல அறிக்கைகள் வெளிவந்தும், இந்த அரசியல்வாதிகளோ அல்லது ஊடகங்களோ இவர்கள்பற்றி பெரிதும் அலட்டிக் கொண்டதில்லை. இந் நிலையில் இச் செய்தியைமட்டும் வெறும் பிரச்சாரத்திற்காகப் பிரசுரித்து சமூக மட்டத்தில் கீழ் நிலையிலுள்ள சகல பெண்களின் எதிர்காலத்தையும் கேள்விக்குறியாக்குவது கண்டிக்கத் தக்கது எனக் குறிப்பிட்டார்.

Nantri:thenee

No comments: