உலகச் செய்திகள்

காபூலில் ஐந்து நட்சத்திர விடுதியில் தலிபான் தீவிரவாதிகள் தாக்குதல்: 14 பேர் பலி(காணொளி



29/06/2011
 ஆப்கான் தலைநகரான காபூலில் உள்ள ஐந்து நட்சத்திர விடுதியொன்றில் நேற்றிரவு இடம்பெற்ற மனித வெடிகுண்டுத் தாக்குதல்களில் சுமார் 14 பேர் உயிரிழந்துள்ளனர்.


பிரபல ஐந்து நட்சத்திர விடுதி வலையமைப்பான இண்டர் கொண்டினன்டலின் காபூலில் அமைந்துள்ள விடுதியே இத்தீவிரவாதத் தாக்குதலுக்குள்ளாகியுள்ளது.

தற்கொலை அங்கிகளுடன் விடுதிக்குள் நுழைந்த சுமார் 6 தலிபான்கள் அங்கிருந்தவர்கள் மீது சரமாரியாக துப்பாக்கிப் பிரயோகம் நடத்தியுள்ளனர்.


இவர்களில் ஒருவர் தனது உடலில் கட்டியிருந்த தற்கொலை அங்கியை வெடிக்க வைத்துள்ளார். விடுதியின் மேற்பகுதிக்குச் சென்றிருந்த தீவிரவாதிகள் சிலர் அங்கிருந்து தாக்குதல் நடத்தியுள்ளனர். இதனைத் தொடர்ந்து அவ்விடத்திற்கு விரைந்த நேட்டோ ஹெலிகொப்டர்கள் மற்றும் ஆப்கான் படைகள் நடத்திய எதிர் தாக்குதலில் தலிபான்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

சுமார் 5 மணித்தியாலங்களுக்கு இம்மோதல்கள் நீடித்துள்ளன. இத்தாக்குதல்களில் தலிபான்கள் அனைவரும் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
வீரகேசரி இணையம்

எகிப்து மோதல்களில் 1000 பேர் காயம்

Thursday, 30 June 2011

எகிப்தில் பொலிஸார் ஆர்ப்பாட்டக்காரர்கள் இடையேயான மோதல்களில் 1000 இற்கும் அதிகமானோர் காயமடைந்திருப்பதாக சிரேஷ்ட அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி ஹொஸ்னி முபாரக்கிற்கு எதிராக இவ்வருட முற்பகுதியில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்களின் போது அதிகளவான ஆர்ப்பாட்டக்காரர்கள் கொல்லப்பட்டனர்.

இவர்களின் கொலைக்கு காரணமான பொலிஸ் அதிகாரிகளுக்கெதிரான விசாரணைகளை துரிதப்படுத்தக் கோரி கெய்ரோவிலுள்ள தாஹீர் சதுக்கத்தை கடந்த இரு நாட்களாக ஆர்ப்பாட்டக்காரர்கள் முற்றுகையிட்டுள்ளனர்.

இந்நிலையில் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் பொலிஸாருக்குமிடையில் எழுந்த மோதல்களில் 1000 இற்கும் அதிகமானோர் காயமடைந்திருப்பதாகவும் இதில் 120 இற்கும் அதிகமானோர் மருத்துவமவையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

ரைம்ஸ் ஒவ் இந்தியா

நன்றி தினக்குரல்

உலகின் அதி நீளமான பாலம் சீனாவில் இன்று திறந்துவைப்பு _

30/06/2011




சீனாவில் கடலுக்கு மேலாக கட்டப்பட்ட உலகின் அதி நீளமான பாலம் பொதுமக்கள் பாவனைக்கென இன்று வியழக்கிழமை திறந்து வைக்கப்பட்டது.

குயிங்டாஹோ ஹய்வான் எனப் பெயரிடப்பட்டுள்ள 42.4 கிலோமீற்றர் நீளமான இப்பாலம் சீனாவின் கிழக்குக் கரையோர நகரான குயிங்டாஹோவில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

இப் பாலமானது இதுவரைகாலமும் உலகின் நீளமான பாலம் என்ற பெருமையைப் பெற்றிருந்த அமெரிக்க லூசியான மாநிலத்தில் அமைந்துள்ள பாலத்தினை விட 3 மைல்கள் நீளம் கூடியதாகும்.

வெறும் 4 வருடங்களில் சுமார் 960 மில்லியன் பவுண்கள் செலவில் இப்பாலம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.

இப்பாலமானது 5,200 இற்கும் அதிகமான தூண்களை கொண்டுள்ளது.

தினசரி 30 ஆயிரம் கார்கள் இப்பாலத்தில் பயணிக்கக் கூடியதாகவிருக்குமென தெரிவிக்கப்படுகிறது.

நன்றி வீரகேசரி


போர்க் குற்றச்சாட்டுக்கள் குறித்து விசாரணை நடத்துமாறு அமெரிக்கா மீண்டும் வலியுறுத்தல்

30/06/2011
போர்க் குற்றச்சாட்டுக்கள் குறித்து விரைவாக விசாரணை நடத்துமாறு இலங்கையை அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது. உரிய விசாரணை நடாத்தாவிடின் சர்வதேச அழுத்தங்கள் அதிகரிக்கும் எனவும் அமெரிக்கா எச்சரித்துள்ளது. ஆனால் சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டுமென அமெரிக்க இராஜாங்க திணைக்களம் கோரவில்லை. பொறுப்புடைமையை உறுதிப்படுத்துவதற்கான அடிப்படை பொறுப்பு உள்ளூர் அதிகாரிகளுக்கு உள்ளது என அத்திணைக்களம் கூறியுள்ளது.

நல்லிணக்கத்தை எதிர்பார்க்கும் நிலையில் இக்கடப்பாடுகளை நிறைவேற்றுவதற்காக தனது ஆற்றலை வெளிப்படுத்துமாறு இலங்கை அரசாங்கத்தை நாம் தொடர்ச்சியாக வலியுறுத்துகிறோம் என அமெரிக்க ராஜாங்கத் திணைக்களம் செவ்வாய்க்கிழமை விடுத்த அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளது.

இலங்கையர்கள் தாமாகவே இதை செய்ய முடியும் என்ற நம்பிக்கை எமக்கு உள்ளது. ஆனால் அவர்கள் அதை செய்யாவிட்டால் வேறு தெரிவுகளை ஆராய்வதற்கான சர்வதேச சமூகத்தின் அழுத்தம் அதிகரிக்கலாம் எனவும் அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரிட்டனில் சனல் 4 அலைவரிசை ஒளிபரப்பிய இலங்கை தொடர்பான ஆவணப்படத்தை தொடர்ந்து இலங்கை மீதான அழுத்தங்கள் அதிகரித்துள்ளன. கைதிகள் கொல்லப்படுதல், பாலியல் வன்முறைக்குள்ளானதாக கருதத் தோன்றும் பெண் போராளிகளின் உடல்கள் அதில் காணப்பட்டன.

யுத்தத்தின் கடைசி மாதங்களில் சுமார் 7000 பொது மக்கள் கொல்லப்பட்டதாக ஐ.நா. தெரிவித்துள்ளது. சரணடைய முற்பட்டதாக கூறப்படும் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர்களை இலங்கை படையினர் கொலை செய்ததாக ஐ.நா.அறிக்கையொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 1972 ஆம் ஆண்டு ஆரம்பமான பிரிவிணைப் போரில் சுமார் 100,000 பேர் கொல்லப்பட்டதாக மதிப்பிடப்பட்டுள்ளது

நன்றி வீரகேசரி

No comments: