போர்க் குற்றச்சாட்டு தொடர்பாக கடும் தொனியில் அமெரிக்கா கருத்து சுயாதீன விசாரணைக்கு மீண்டும் வலியுறுத்தல்

Thursday, 30 June 2011
obamaலங்கை அரசாங்கத்துக்கு எதிரான தனது நிலைப்பாட்டை நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை கடுமையாக்கிக் கொண்டிருக்கும் அமெரிக்கா, போர்க் குற்றச்சாட்டு சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிரான சட்ட நடவடிக்கையெடுப்பதற்குத் தேவையானவற்றை இலங்கை மேற்கொள்ள வேண்டுமென எச்சரித்துள்ளது.

இலங்கையின் பதிலளிக்கும் கடப்பாடுகள் தொடர்பாக ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்வியொன்றுக்கு மின்னஞ்சல் மூலம் பதிலளித்துள்ள அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் பெண் பேச்சாளர் விக்டோரியா நூலான்ட் கூறுகையில்;


சர்வதேச மனிதாபிமான மனித உரிமைகள் சட்டமீறல்களுக்குப் பொறுப்பானவர்கள்,பதிலளிக்கும் கடப்பாட்டைக் கொண்டவர்களாக இருப்பதை உறுதிப்படுத்துவதற்கான தலையாய பொறுப்பு உள்நாட்டு அதிகாரிகளிடம் உள்ளது என்றும் தனது கடப்பாடுகளை நிறைவேற்ற அரசாங்கம் இயலாமலோ அல்லது விருப்பம் இல்லாமலோ இருக்கின்ற சூழ்நிலைகளில் சர்வதேச பதிலளிக்கும் கடப்பாட்டுப் பொறிமுறையானது பொருத்தமாக அமையுமென்று கூறியுள்ளார்.

கொழும்பானது நடவடிக்கையெடுப்பதற்கு கால அவகாசத்தை எடுக்க வேண்டுமெனக் குறிப்பிட்டுள்ள நூலான்ட்,அமெரிக்காவானது முழுமையாகவும் நம்பகரமானதும் சுயாதீனமானதுமான விசாரணைக்கு ஆதரவளிப்பதாகத் தெரிவித்துள்ளார். சர்வதேச மனிதாபிமான மனித உரிமைகள் சட்டமும் அந்த மீறல்கள் தொடர்பான பதிலளிக்கும் கடப்பாடுகளும் குறித்து சுயாதீனமான விசாரணையை மேற்கொள்ள வேண்டுமென அவர் கூறியுள்ளார். இந்தக் கடப்பாடுகளை நிறைவேற்றுவதற்கான விருப்பத்தையும் ஆற்றலையும் இலங்கை அரசாங்கம் துரிதமாக வெளிப்படுத்த வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கையர்கள் தாமாகவே இதனைச் செய்வார்களென நாம் கருதுகிறோம். அவர்கள் அவ்வாறு செய்யாவிடின், ஏனைய தெரிவுகளை பரிசீலனை செய்வது தொடர்பாக சர்வதேச சமூகத்திடமிருந்து அழுத்தங்கள் அதிகரிக்கக் கூடியதை நாம் பார்க்கக்கூடியதாகவிருக்கும் என்றும் அவர் மேலும் கூறியுள்ளார். யுத்தத்தின்போது இழைக்கப்பட்டதாக குற்றச்சாட்டுத் தெரிவிக்கப்பட்டவை தொடர்பாக சில வார்த்தைகள் கூறுவதற்கப்பால் அமெரிக்கா எதனையும் செய்திருக்கவில்லையென்று கடந்த வாரம் விமர்சனங்கள் வெளியாகியிருந்தன. ஒரு வாரத்திற்கு முன்னர் இதேபோன்ற கேள்விகள் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் செய்தியாளர் மாநாட்டின்போது எழுப்பப்பட்டிருந்தன. வாஷிங்டன் டிசியில் புத்திஜீவிகளின் அனுசரணையுடன் நிகழ்வொன்று இடம்பெற்ற பின்னர் இதேபோன்ற கேள்விகள் அமெரிக்காவின் இராஜாங்கத் திணைக்களத்திடம் கேட்கப்பட்டிருந்தன. இலங்கைக்கான தற்போதைய அமெரிக்கத் தூதுவர் 3 முன்னாள் தூதுவர்களுடன் இணைந்து இலங்கை தொடர்பாகப் பேசியிருந்தனர். அதன் பின்னர் ஊடகவியலாளர் மத்தியில் கருத்துத் தெரிவித்திருந்த நூலான்ட், அமெரிக்க அதிகாரிகள் அந்த ஆவணப்படத்தைப் பார்த்திருந்தனர். அவற்றில் மிகவும் கவலையான பிரதிமைகளும் காணப்பட்டன. சர்வதேச மனிதாபிமானச் சட்டம் மற்றும் மனித உரிமைகள் இலங்கையில் மீறப்பட்டவை தொடர்பாக நம்பகரமான குற்றச்சாட்டுகள் காணப்படுகின்றன. இவற்றையிட்டு நாம் மிகவும் கவலையடைந்துள்ளோம் என்று தெரிவித்துள்ளார்.

இலங்கையின் பதிலளிக்கும் கடப்பாடு தொடர்பாக நாங்கள் முழுமையான ஆதரவைத் தெரிவித்து வருகின்றோம். வெளிவிவகார உதவி அமைச்சர் பிளேக்கும் ஏனைய சிரேஷ்ட அதிகாரிகளும் இந்தக் கவலைகளை கிரமமான முறையில் எழுப்பி வருகின்றனர் என்றும் அவர் கூறியுள்ளார்.
Thinakkural


No comments: