யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் தோற்றமும் வளர்ச்சியும்

.

(பேராசிரியர் தி. வேல்நம்பி, தலைவர், கணக்கியல் துறை, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்)

இலங்கை பல்கலைக்கழகத்தின் ஆரம்பம்



19 ஆம் நூற்றாண்டின் இறுதிக் காலப்பகுதியில் பிரித்தானியக் குடியாட்சியில் இருந்த இலங்கையில் ஆரம்ப இடைநிலைப் பாடசாலைகள் சிறப்பான அபிவிருத்தியை அடைந்திருந்த போதிலும் பிரித்தானியா இந்தியாவைப் போன்று பல்கலைக்கழகங்கள் எதுவும் இருந்திருக்கவில்லை. இக்காலப்பகுதியில் இலங்கைத் தீவின் சிறந்த இடைநிலைப் பாடசாலையானது கொழும்பை முக்கியமாக கொண்டு அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.



1859 ஆம் ஆண்டின் முன்னர் அமைக்கப்பட்டிருந்த இராணியின் கல்லூரி ஆனது கல்கத்தாப் பல்கலைக்கழகத்தின் இணைந்த பல்கலைக்கல்லூரியாக இருந்தது. இது பின்னர் றோயல் கல்லூரி எனப் பெயரிடப்பட்டது. இது முதலில் மற்றிக்குலேசனுக்கு பின்னைய கல்வியை வழங்கியதுடன் இலண்டன் பல்கலைக்கழகத்துடன் தொடர்பு கொண்டு வெளிவாரிப் பரீட்சைக்கு மாணவர்களைத் தயார் படுத்தியது.





இடைக்காலப் பரீட்சைகளில் சிறந்த பெறுபேறு எடுத்த மாணவர்கள் அவர்களது உயர் கல்விக்காகப் பிரித்தானியாப் பல்கலைக்கழகத்துக்கு அனுப்பப்பட்டதுடன் வசதி குறைந்த மாணவர்கள் இந்தியப் பல்கலைக்கழகங்களுக்குச் சென்றனர். காலப்போக்கில் உயர்கல்வி கற்கும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துச் சென்றது. இந்நிலையில் இலங்கை மக்களுக்குப் பல்கலைக்கழகம் தேவை என்பதையுணர்ந்து இலங்கையில் புகழ் பூத்த பெருமக்களான கலாநிதி ஆனந்தக்குமாரசாமி, சேர் பொன் இராமநாதன் ஆகியோர் பல்கலைக்கழக இயக்கம் என இயக்கமொன்றையே ஆரம்பித்து போராடினார்கள். இவ்வாறு உயர் கல்விக்கான கோரிக்கை வலுப்பெற்றதன் காரணமாக 1870 இல் மருத்துவக் கல்லூரியும், 1874 ஆம் ஆண்டு சட்டக்கல்லூரிக்கான கல்வியும், 1893 ஆம் ஆண்டு தொழில்நுட்பக் கல்லூரியொன்றும் தாபிக்கப்பட்டன.



பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதிக் காலப்பகுதியில் மாணவர்களின் சிறந்த கல்விக்காக இலங்கையில் பல்கலைக்கழகம் தாபிப்பதற்கென கூடுதலான அழுத்தம் கொடுத்ததுடன் இருபதாம் நூற்றாண்டின் முதல் பத்தாண்டில் இப்புரட்சி பல்கலைக் கழக அமைப்பினால் அபிவிருத்தி செய்யப்பட்டது. 1942 ஆம் ஆண்டின் 20 ஆம் இலக்க இலங்கைப் பல்கலைக்கழக விதியின் கீழ் தாபிக்கப்பட்ட இலங்கை பல்கலைக் கழகமானது சுயமாக இயங்கும் தனியான வதிவிட நிறுவனமாகக் கருதப்பட்டது. புதிய பல்கலைக்கழகத்தின் முக்கியப் பகுதியாகப் பல்கலைக்கழக கல்லூரியும் மருத்துவக் கல்லூரியும் விளங்கின. மேலும் பல்கலைக்கழகம் தொடர்பான நிறைவேற்று அதிகாரம் கவுன்சிலிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது. கல்வி சம்மந்தமான விடயங்கள் பீடங்களினாலும் மூதவையாலும் நிர்வகிக்கப்பட்டன. பல்கலைக்கழகத்தின் தலைவராக வேந்தர் இருந்தார். அதேவேளை கல்வித்துறைக்கும் நிறைவேற்றுக் கடமைகளுக்கும் உபவேந்தர் தலைவராகவிருந்தார். இவ்வடிப்படையில் தற்போது இலங்கையில் திறந்த பல்கலைக்கழகம் உட்பட மொத்தம் பதினைந்து பல்கலைக்கழகங்கள் காணப்படுகின்றன.







யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் தோற்றமும் வளர்ச்சியும்



இற்றைக்கு சுமார் எழுபது வருடங்களுக்கு முன்னர் நம் நாட்டின் பேரறிஞரும் ஞானியுமாகிய சுவாமி விபுலானந்தர் அவர்கள் யாழ்ப்பாணத்துக்கு ஒரு பல்கலைக் கழகம் வேண்டும் என்ற வேண்டுகோளை விடுத்திருந்தார். இவ்வாறு வேண்டுகோள் விடுத்த சுவாமிகள் ஒரு பல்கலைக் கழகமானது சனப்பெருக்கம் கூடியதும் மாணவர் எண்ணிக்கை அதிகரித்ததும் பாரம்பரியக் கல்வி வளர்ச்சியடைந்ததுமான ஓர் இடத்தில் அமைய வேண்டும் என்றார்.



இத்தகையதொரு பிரதேசமே ஒரு சிறந்த பல்கலைக்கழகம் அமைவதற்கு சிறந்த இடம் எனக் குறிப்பிட்டார். இத்தகையதொரு பிரதேசம் யாழ்ப்பாணம் என்பதையும் அவர் சுட்டிக் காட்டத் தவறவில்லை. காலஞ்சென்ற பிரதமர் எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்டாரநாயக்க அவர்கள் வித்தியோதய, வித்தியலங்கார பிரிவேனாக்களுக்குப் பல்கலைக்கழக அந்தஸ்துக் கொடுக்கவுதவிய போது அவற்றையொத்த நிறுவனமொன்றை வடக்கிலே அமைக்க வேண்டுமென்று கருதினார் என்றும் அக்கருத்தினை அப்பிரதேசத்தின் அக்காலத் தலைவர்கள் ஏற்றுக் கொள்ளவில்லையென்றும் நம்பகரமான முறையிலே அறிய முடிகிறது. அதற்குப் பின்னர் போராசிரியர் யோசேப் நீடம், போராசிரியர் ஜீ.சி சட்டர்ஜி ஆகியோரைக் கொண்ட நீடம் ஆணைக்குழுவானது யாழ்ப்பாணத்திலும், கொழும்பிலும் கூடிய விரைவில் இலங்கைப் பல்கலைக்கழகத்தின் புதிய வளாகங்கள் அமைக்கப்பட வேண்டும் என்றும் பேராதனை, கொழும்பு, யாழ்ப்பாணம் ஆகிய மூன்று வளாகங்களிலும் சிங்களம், தமிழ், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் போதனைகள் நடாத்துவதற்கு வசதிகள் செய்யப்பட வேண்டும் என்றும் சிபார்சு செய்தது.



இதன் பிரகாரம் 1974 ஆண்டு யூலை மாதத்துக்கு முன்னரே யாழ்ப்பாணத்தில் இலங்கைப் பல்கலைக்கழக வளாகமொன்றை அமைப்பதற்கான திட்டமொன்று அமைச்சரவை மட்டத்தில் மேற்கொள்ளப்பட்டிருந்தது. 1974 ஆம் ஆண்டு யூலை மாதம் 10 ஆம் திகதி இலங்கைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகிய L.H.சுமணதாச கொழும்பில் அவருடைய அதிகாரிகளுடன் சேர்ந்து 1974 ஆம் ஆண்டில் யாழ்ப்பாணத்தில் இலங்கைப் பல்கலைக்கழகத்தின் வளாகம் ஒன்றைத் திறந்து வைப்பது தொடர்பாக அடிப்படை தீர்மானங்கள் பற்றிக் கலந்தாலோசித்தார்.



யாழ்ப்பாணக் கல்லூரி வளவிலமைந்துள்ள பட்டதாரி மாணவப் பிரிவையும் 1921 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் சேர்.பொன்னம்பலம் இராமநாதன் அவர்களால் திருநெல்வேலியில் அமைக்கப்பட்டிருந்த பரமேஸ்வராக் கல்லூரியையும் இணைப்பதன் மூலம் 1974 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் முதலாம் நாள் இலங்கை பல்கலைக்கழகத்தின் யாழ்ப்பாண வளாகம் நிறுவப்பட்டது. 1974 ஆம் ஆண்டு யூலை 19 இல் இலங்கை பல்கலைக்கழகத்தின் துணை வேந்தரான L.H.சுமணதாச வித்தியாலங்காரப் பல்கலைக்கழகத்தின் இந்துக் கற்கை தமிழ் ஆகிய துறைகளின் தலைவரான கலாநிதி கே.கைலாசபதி அவர்களை யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் முதல் தலைவராக நியமிக்கப்பட்டதை வெளிப்படுத்தினார்.







இவ்வாறு 1974 யூலை மாதம் 25 ஆம் நாள் வியாழக்கிழமை வெளியிடப்பட்ட 121/5 இலக்க அதிவிசேட வர்த்தகமானியில் வெளியாகிய பிரகடனத்தின் மூலம் 1974 ஓகஸ்ட் முதலாம் நாள் நிறுவப்பட்ட யாழ்ப்பாண பல்கலைக்கழக வளகமானது சட்டபீடம், உடற்கல்விப்பீடம் என்பவற்றை நிறுவுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த போதும் ஆரம்பத்தில் விஞ்ஞான பீடம், மனிதப் பண்பியற் பீடம் என்பவற்றுடன் மாத்திரம் ஆரம்பிக்கப்பட்டது. யாழ்ப்பாண வளாகத்தின் முதல் போதனைசார் ஊழியர்களாக 1974 செப்டெம்பர் 01 ஆம் திகதியன்று வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியில் பணியாற்றிய சில ஆசிரியர்கள் சேர்த்துக் கொள்ளப்பட்டனர். இந்நிலைமைகளைத் தொடர்ந்து இலங்கையின் அப்போதைய பிரதம மந்திரியான சிறிமாவோ பண்டாரநாயக்கா அவர்களால் 1974.10.06 அன்று பிற்பகல் 2.25 மணியளவில் யாழ்ப்பாண வளாகம் வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.



அன்றைய தினம் யாழ்ப்பாண வளாகத்தின் முதல் 14 மாணவர்களுக்கான மாணவர் பதிவுப் புத்தகம் பிரதமர் அவர்களால் வழங்கப்பட்டது. 1978 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்கப் பல்கலைக்கழகங்கள் சட்டம் பிரகடனப்படுத்தப் பட்டதன் விளைவாக உயர்கல்வி நிர்வாக அமைப்பில் மாற்றங்கள் ஏற்பட்டு இலங்கை பல்கலைக்கழகத்தின் யாழ்ப்பாண வளாகம் 1979 ஜனவரி முதலாம் நாள் தன்னாதிக்கமுள்ள பல்கலைக்கழகமாகியது. புகழ்பெற்ற தமிழறிஞரான காலஞ் சென்ற பேராசிரியர் சு.வித்தியானந்தன் தன்னாதிக்கமுள்ள யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் முதலாவது துணைவேந்தராக நியமிக்கப்பட்டார்.



யாழ்ப்பாண பல்கலைக்கழக பீடங்களும், பட்டதாரி மாணவ திட்டங்களும்



யாழ்ப்பாண பல்கலைக்கழகமானது இன்று பின்வரும் பீடங்களை கொண்டு இயங்கி வருகின்றது. அவையாவன கலைப்பீடம், விஞ்ஞான பீடம், மருத்துவ பீடம், விவசாய பீடம்,முகாமைத்துவ கற்கைகள் வணிக பீடம், உயர்பட்ட படிப்புகள் பீடம். மேலும் சித்த மருத்துவத் துறை துணைவேந்தரின் நேரடியான கண்காணிப்பின் கீழ் தனி அலகாகச் செயற்படுகின்றது. மேலும் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் வளாகம் ஒன்று வவுனியாவில் இயங்குவதுடன் அங்கு இரண்டு பீடங்கள் செயற்படுகின்றன. அவையாவன, பிரயோக விஞ்ஞான பீடம், வணிகக் கற்கைகள் பீடம் என்பனவாம்.



மேற்குறிப்பிட்ட பல்வேறு துறைகளிலும் ஆண்டுதோறும் பலநூற்றுக் கணக்கான மாணவர்கள் அனுமதிக்கப்பட்டு அவர்களது கல்வியை தொடர்வதற்கு வாய்ப்பளிக்கப்படுகின்றது. இதன் பிரகாரம் யாழ்ப்பாண பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்பட்ட ஆரம்ப காலப்பகுதியின் முதல் வருடங்களில் சேர்த்துக் கொள்ளப்பட்ட மாணவர்களின் விபரங்களும் அண்மைக்காலத்தில் சேர்த்துக் கொள்ளப்பட்ட மாணவர்களின் விபரங்களும் ஆராயப்படுவதன் மூலம் உயர் கல்வி விருத்தியில் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் செயற்பாட்டை மதிப்பீடு செய்து கொள்ள முடியும்.







இவ்வாறு உள்வாரி வெளிவாரிப் பட்டப்படிப்புக்களில் பெருமளவு மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி வரும் இப் பல்கலைக்கழகமானது பட்டப்பின் படிப்புக்களையும் கொண்டு விளங்கின்றமை குறிப்பிடதக்கதாகும். குறிப்பாக முதுகலைமாணி, முதுதத்துவமாணி, முதுவிஞ்ஞானமாணி, டிப்ளோமா, கலாநிதி முதலான பட்டங்களை வழங்கிவரும் இப் பல்கலைக்கழகத்தில் தொழில் புரிபவர்களின் செயற்பாடுகள் தொடர்பிலான சில கற்கைநெறிகளையும் காலத்துக்கு காலம் வழங்கி வருகிறார்கள்.



2010 ஆம் ஆண்டுக்குரிய தரவுகளின்படி யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில் (வவுனியா வளாகம் உட்பட) 67 துறைகளும், 4,398 மாணவர்களும், பட்டப்பின் படிப்பு நெறிகளில் 396 மாணவர்களும் உள்ளனர். 313 கல்வி சார் ஊழியர்களும், 504 கல்வி சாரா ஊழியர்களும் கடமையாற்றுகின்றனர். யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வெளிவாரி பட்டப்படிப்புகள் அலகின் மூலம் இதுவரை 2643 பேர் பட்டங்களைப் பெற்றுள்ளனர். கலை, வர்த்தகம் ஆகிய துறைகளில் இங்கு பட்டங்கள் வழங்கப்படுகின்றன.



வெளிவாரி தேர்வில் பட்டம்பெற்ற மாணவர்கள்







இதனை விட புறநிலைப் படிப்புக்கள் அலகு என்ற ஒன்று உருவாக்கப்பட்டு புறநிலைக் கற்கை நெறிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இத்துறையானது 1992 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் ஆரம்பிக்கப்பட்டது. ஆங்கிலத்தில் Extra-Mutral Studies என்பதற்கு பல்கலைக் கழகத்துக்கு புறத்தேயுள்ள படிப்புகள் அல்லது கற்கைநெறிகள் பல்கலைக்கழகமெனும் இறுக்கமான சுவர்களைத் தாண்டி வெளியே சென்று சமுதாயத்துக்கு கற்பித்தல் பல்கலைக் கழகத்தின் பட்டம் வழங்கும் பொதுவான கற்கைநெறிகளுக்கு உட்படாததும் சமூகத்தின் தேவைகளை ஒட்டியதுமான மேலதிகப் படிப்புகள் என பல்வேறு விளக்கங்கள் கொடுக்கப்படுகின்றன.



இப் பல்கலைக்கழகத்தின் நிர்வாகக் கட்டமைப்பை நோக்கும் பொழுது துணைவேந்தர், பீடாதிபதிகள், துறைத்தலைவர்கள் ஆகியோருக்கிடையில் வரிசையதிகாரம் இருக்கின்ற அதேவேளை துறைத் தலைவர்கள், பீடாதிபதிக்கும் பீடாதிபதிகள் துணைவேந்தருக்கும், ஆலோசனை வழங்கும் இயல்பு காணப்படுகின்றது. பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர்கள்







மேலும் நிர்வாக பீடத்தின் அதியுயர் அதிகாரியாக வேந்தரும் அவருக்கு அடுத்தபடியாக துணைவேந்தரும் காணப்படுகின்றனர். பல்கலைக் கழகத்தின் நிர்வாக வேலைகளை பொறுத்தவரை துணைவேந்தரே பெருமளவு முக்கியதுவம் பெறுகின்றார். இந்த வகையில் துணைவேந்தரால் நியமிக்கப்படும் பல்கலைக்கழக நிர்வாக முறையானது பின்வரும் இரு வழிகளில் மேற்கொள்ளப்படுகின்றது.



1. கல்வி சார்ந்த நடவடிக்கைகளின் நிர்வாகம்

2. கல்வி சாராத நடவடிக்கைகளின் நிர்வாகம்



இவ்வாறு பல்கலைக்கழகத்தில் இடம்பெறும் இரண்டு வகையான நிர்வாக நடவடிக்கைகளுக்கும் பொறுப்பாக விளங்கும் துணைவேந்தருக்கு அடுத்தபடியாக பொறுப்பு வாய்ந்த அதிகாரிகள் பலர் நியமிக்கப்படுகின்றனர். இந்த வகையில் கல்வி சார்ந்த நடவடிக்கைகளை நிர்வகிக்கும் பொறுப்பு துணைவேந்தரிடம் காணப்பட்ட போதும் நிர்வாக முறையினை இலகுபடுத்தும் பொருட்டு அதிகாரங்கள் பொறுப்புக்கள் கையளிக்கப்பட்ட முறையில் பீடாதிபதிகள் நியமிக்கப்பட்டுள்ளார்கள். பீடாதிபதிகளுக்கு அடுத்தபடியாக கல்விசார்ந்த நிர்வாகங்களை மேற்கொள்ளும் அதிகாரிகளாக துறைத் தலைவர்கள் காணப்படுகின்றனர்.



பல்கலைக்கழகத்தின் கல்வி சாராத நடவடிக்கைகளுக்குப் பொறுப்பாக பதிவாளர் நியமிக்கப்பட்டுள்ளார். துணைவேந்தரைத் தலைமையாகக் கொண்ட தெரிவுக் குழு ஒன்றின் மூலம் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவால் இவர் நியமிக்கப்படுகின்றார். இவர் துணைவேந்தருக்கடுத்தபடியாக கல்விசாராத நடவடிக்கைகளுக்கு நிர்வாக பொறுப்பாளராக செயற்படுகின்றார். இங்கு பல கல்வி சாராத நடவடிக்கைப் பகுதிகள் காணப்படுகின்றன. அவையாவன திட்டமிடலும் மூலதன கிளையும் பராமரிப்பு பகுதி, தாபனக் கிளை, பரீட்சைக் கிளை, நிதிக் கிளை, நலசேவைகள் கிளை, கல்விக் கிளை, நிர்வாகக் கிளை, மருத்துவ நிலையம் என்பனவாகும்.



இவ்வாறான பல கட்டமைப்புக்களுடன் யாழ்ப்பாண பல்கலைக்கழகமானது சமூகத்துடன் இணைந்த பல புத்தீஜீவிகளை நாட்டுக்கு வழங்கி வருகின்றது. யாழ்ப்பாண பல்கலைக்கழத்திலிருந்து பயின்று வெளியேறும் மாணவர்கள் பல தேசங்களில் பரந்துபட்டு அப்பிரதேசங்களின் அபிவிருத்திக்கும் பொருளாதார வளர்ச்சிக்கும் தூண்களாக செயற்படுகிறார்கள் என்பது யதார்த்தமாகும். _

No comments: