பென்டகன், செனட் இணைய தளங்களுக்குள் ஊடுருவிய 19 வயது இளைஞன் கைது

.

அமெரிக்காவின் பாதுகாப்பு தலைமையகமான பென்டகன், உளவுப் பிரிவான சி. ஐ. ஏ. உட்பட சர்வதேச அளவில் முக்கிய இணையத் தளங்களுக்குள் ஊடுருவிய குற்றச்சாட்டில் பிரிட்டனின் 19 வயது இளைஞன் ஒருவன் கைது செய்யப்பட்டுள்ளான். கடந்த மே 7ஆம் திகதி தொடக்கம் சர்வதேச அளவில் முக்கிய இணைய தளங்களுக்குள் ஊடுருவி தகவல் சேகரித்தது மற்றும் அதனை முடக்கிய சம்பவங்கள் சர்ச்சையை கிளப்பி வந்தது. இதில் அமெரிக்க உளவு அமைப்பான சி. ஐ. ஏ. மற்றும் பிரித்தானிய உளவு அமைப்பான சொகா இணையத்தளங்கள் தாக்கப்பட்டன. தவிர அமெரிக்க செனட் சபையின் இணையத் தளம், பென்டகன் தளம் ஆகியவைக்குள் ஊடுருவி தகவல்கள் பெறப்பட்டிருந்தன. இதுதவிர, பொக்ஸ் செய்திச் சேவை, ஜப்பான் சோனி மியூசிக் போன்ற இணைய தளங்களுக்குள்ளும் ஊடுருவல் இடம்பெற்றுள்ளது. இவ்வாறு இணையத் தளங்களை குழப்புவோர் தம்மை ‘லுல்ஸ் செகியுரிட்டி’ என அடையாளப்படுத்தியிருந்தனர்.

இந்நிலையில் இந்த ஊடுருவல் செயற்பாட்டுடன் தொடர்புடையதாக குற்றம்சாட்டப்பட்ட 19 வயது ரியான் கிலிபரி என்ற இளைஞனை ஸ்கொட்லாந்து யார்ட் பொலிஸார் மற்றும் அமெரிக்காவின் எப்.பி. ஐ. பிரிவு இணைந்து கைது செய்துள்ளனர். எசெக்ஸிலுள்ள அவரது வீட்டில் வைத்தே மேற்படி இளைஞன் கைது செய்யப் பட்டுள்ளான்.இதனை அவரது தாய் ரிடா உறுதிசெய்தார். நோய்வாய்ப்பட்டுள்ள தனது மகன் கடந்த 4 ஆண்டுகளாக வீட்டைவிட்டு வெளியே செல்லவில்லை என்றும், எப்போதும் தனது அறையில் மந்தமான வெளிச்சத்தில் கணனியில் இருப்பார் எனவும் குறிப்பிட்டார். அத்துடன் தனது மகன் பலமுறை தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாகவும் அந்த தாய் குறிப்பிட்டுள்ளார்

No comments: