இனப்பிரச்சினைக்கு இணக்கப்பாட்டுடன் தீர்வுகாண கிட்டியுள்ள சந்தர்ப்பம்

இலங்கையில் தேசிய இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு முயற்சிகள் மிகவும் மந்தகதியில் இருப்பதாகவும் அது தொடர்பில் போதிய அக்கறை செலுத்தப்படுவதில்லை எனவும் பரவலாக பேசப்பட்டு வரும் இன்றைய சூழலில் இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு 13ஆவது திருத்தத்துக்கு அதிகபட்சமான அதிகாரங்களுடன் அமையும் எனவும் அதேவேளை மாகாண சபைகளுக்கு பொலிஸ் அதிகாரங்கள் வழங்கப்படமாட்டாது என்றும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷ தெவித்திருக்கிறார்.




அரசியல் கட்சிகள் முன்வைக்கும் யோசனைகளை அடிப்படையாகக்கொண்டு அனைத்துக் கட்சிகளுடனான இணக்கப்பாட்டின் அடிப்படையில் அரசியல் தீர்வு முன்வைக்கப்படும் என்று தெரிவித்துள்ள ஜனாதிபதி, தீர்வுக்கான காலஎல்லையினை கூற முடியாது என்றும் மாகாண அரசாங்கங்களுடன் அதிகமான அதிகாரங்களை பகிர்ந்துகொள்ளும் சாத்தியக்கூறுகளே அதிகமாக இருப்பதாகவும் தெவித்திருக்கிறார்.

அலரிமாளிகையில் கடந்த வெள்ளிக்கிழமை வெளிநாட்டு ஊடகங்களின் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையிலேயே அவர் இவ்வாறு தெவித்துள்ளார். தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளை ஈடுசெய்யக்கூடிய தீர்வு அவசியம் என்று இன்று நேற்றன்று, இலங்கை சுதந்திரம் அடைந்த பின்னர் கடந்த ஆறு தசாப்த கால மாக வலியுறுத்தப்பட்டுவருகின்றது.

தேசிய இனப்பிரச்சினைக்கு உரிய தீர்வை முன்வைக்க வேண்டும் என அகிம்சா வழியில் ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் கால ஓட்டத்தில் ஆயுத ரீதியாக பரிணாமம் அடைந்து இறுதியில் பல்வேறு மனித அவலங்களுக்கு மத்தியில் முடிவுக்கு வந்துள்ள போதிலும், இனப்பிரச்சினைக்கு இதுவரை சாத்தியமான தீர்வு முன் வைக்க முடியாது போனதுடன் அழிவுகளும் அவல வாழ்க்கையுமே எஞ்சியுள்ளன.

சுதந்திரத்துக்கு பின்னர் தமிழ் மக்களின் நியாயமான அரசியல் அபிலாஷைகளை உறுதி செய்யவேண்டும் என்ற அடிப்படையில் அன்றைய தலைமைத்துவங்கள் அகிம்சா போராட்டத்தில் ஈடுபட்டதுடன் அவ்வப்போது மாறிமாறி பதவிக்கு வந்த அர சாங்கங்களுடன் ஒப்பந்தங்களையும் மேற் கொண்டன.

குறிப்பாக தமிழர் பிரச்சினையை தீர்ப்பதற்காக 1957 ஜூலை 26 ஆம் திகதி பண்டார  செல்வா ஒப்பந்தம் செய்யப்பட்டது. பிரதேச சபைகள் மூலம் பிரச்சினைகளை தீர்க்கும் நோக்குடனேயே இவ்வொப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. அதேவேளை இவ்வொப்பந்தமானது நாட்டை பிரிக்கப்போவதாக குற்றம்சாட்டி பாதயாத்திரை ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டது.

எக்சத் பிக்கு பெரனவின் தலைமையில் 200 பிக்குமார் பண்டா செல்வா ஒப்பந்தத்தை எதிர்த்து பிரதமரின் இல்லத்தின் முன் ஆர்ப்பாட்டம் செய்தனர். அதனால் அப் போதைய பிரதமர் எஸ். டப்ளியு.ஆர்.டி. பண்டாரநாயக்க 1958 ஏப்ரல் மாதம் அந்த ஒப்பந்தத்தை கிழித்து எறிந்தார். அதனைத் தொடர்ந்து டட்லி செல்வா ஒப்பந்தம் கைச் சாத்தானது. டட்லி சேனாநாயக்கா அவர்களும் தந்தை செல்வா அவர்களும் பேசி ஓர் கனவான் ஒப்பந்தத்தை செய்தனர்.

இதில் முக்கியமாக வடக்கு, கிழக்கு மாகாணங்களில் நிர்வாக மொழியாக தமிழ் மொழி இருக்கும் எனவும் வடக்கு, கிழக்கு மாகாணங்களின் நீதிமன்றங்கள் தமிழில் கருமமாற்றவும் அவற்றை ஆவணப்படுத்தவும் தமிழ் மொழி பயன்படும் எனவும் ஐக் கிய தேசிய கட்சி வடக்கு, கிழக்கு மாகாணங்களில் குடியேற்ற முயற்சிகளில் ஈடுபடாது எனவும் தமிழ் அரச உத்தியோகத்தர்களது பிரச்சினைகள் நிர்வாக மொழியில் தீர்க்கப்படும் எனவும் இணங்கப் பட்டது.

இதனடிப்படையில் தமிழரசுக் கட்சி தேசிய அரசாங்கத்தோடு இணைந்து ஆதரவளித்தமையும் குறிப்பிடத்தக்கதாகும். பின்னர் ஐக்கிய தேசிய கட்சியின் போக்கில் ஏற்பட்ட மாற்ற நிலையின் காரணமாக 1968 செப்டெம்பர் மாதமளவில் தேசிய அரசைவிட்டு தமிழரசுக் கட்சி வெளியேறவேண்டிய நிலைமை ஏற்பட்டது. இந் நிலையில் டட்லி செல்வா ஒப்பந்தம் செயலிழந்துபோனது.

இவ்வாறான பின்னணியில் ஒப்பந்தங்கள் செயலிழந்து போனதுடன் ஆயுதப் போராட்டம் மெல்ல விஸ்வரூபம் எடுத்தது.

இனப்பிரச்சினைக்கு தீர்வு கõணும் வகையில் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றபோதும் அவை உருப்படியான பயனை தோற்றுவிக்க தவறிவிட்டன. இதனால் நாட்டில் குழப்பமான சூழ்நிலை உருவாகியது. ஒருபுறம் நாட்டில் யுத்தத்தால் அழிவுகளும் அவலங்களும் அன்றாடம் பெருகிவந்த நிலையில் மறுபுறம் சர்வதேச மத்தியஸ் தங்களுடனான தீர்வு முயற்சிகளும் னைப்பு பெற்றன. இவ்வாறு பல்வேறு சந்தர்ப்பங்கள் கைநழுவிய நிலையில் மீண்டும் போர் உச்சக் கட்டத்தை அடைந்தததுடன் பல்வேறு அவலங்களுக்கு மத்தியில் அது முடிவுக்கு வந்தது.

சுமார் 3 தசாப்தகாலம் நீடித்த இந்த விதமான போர்ச் சூழல் இன்று முடிவுக்கு வந்துள்ள நிலையில் தமிழ் பேசும் மக்களின் அரசியல் அபிலாஷைகள் தீர்க்கப்படாத ஒன்றாகவே இருந்துவருகின்றன.

மீண்டும் இன்று தமிழ்க் கட்சிகளின் இணக்கப்பாட்டுடன் பிரச்சினைக்கு தீர்வுகாணக்கூடிய சூழல் அரசுக்கு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும். எனவே கடந்தகால கசப்பான அனுபவங்களை கருத்திற்கொண்டு அதனை சரியான முறையில் அணுகவேண்டிய பாரிய பொறுப்பு தற்போதைய அரசாங்கத்திடம் தமிழ் அரசியல் தலைமைத்துவங்களிடம் உள்ளது என்பதனை மறந்துபோகக் கூடாது.

இவ்விவகாரம் தொடர்பில் மேலும் காலங்களை கடத்துவதை விடுத்து புரையோடிப்போன தேசிய இனப்பிரச்சினைக்கு அதிகாரப் பரவலாக்கலுடன் கூடிய தீர்வை குறித்ததோர் கால வரையறைக்குள் முன்வைக்க முயற்சிக்கவேண்டும் என்பதே தமிழ் மக்களின் விருப்பமாகும். அதன் மூலமே நாட்டின் சிறந்த எதிர்காலத்துக்கும் சுபீட்சத்துக்கும் வழிகோலக்கூடியதாக இருக்கும் என்பதை நினைவு கூர விரும்புகின்றோம்.
 
நன்றி வீரகேசரி

2 comments:

kirrukan said...

[quote]மாகாண சபைகளுக்கு பொலிஸ் அதிகாரங்கள் வழங்கப்படமாட்டாது என்றும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷ தெவித்திருக்கிறார்.[/quote]

மாகணத்திற்க்கு பொலிஸ் அதிகாரத்தை கொடுத்தால்.... எப்படி மத்திய அரசு சண்டித்தனம் பண்ண முடியும்

Paranthaman said...

உண்மையிலேயே தீர்க்கும் எண்ணமிருந்தால் மைந்தா எப்பவோ செய்திருக்கலாம். கடைசியா சந்திரிகா விட்ட தவற இவரும் விட்டுப்போட்டு அடையாளம் தெரியாம போகவேண்டியதுதான். நல்ல தலைவர்கள் அந்த நாட்டுக்கு வரவே மாட்டினம் என்பது சர்வ நிச்சயம். சுய நல தமிழ் அரசியல் தலைவர்கள் பேசிப்பேசி பேக்காட்டினாங்கள். சிங்கள அரசியல் வாதிகள் ஒப்பந்தம் தீர்வெண்டு சொல்லிச் சொல்லி சுயநலம். தமிழ்ப் போராளித் தலைவர்கள் ஈழம் ஈழம் எண்டு சொல்லிச் சொல்லி இடுகாடா மாத்திப் போட்டாங்கள். இனி என்ன தண்ணீர் தண்ணீர் படத்தில கோமல் சாமிநாதன் சொன்னது போல தண்ணி வராது ஆக்கள் தண்ணிய தேடி போகவேண்டியதுதான்.