செல்வி-------- சிறுகதை எம்.ஆர்.நடராஜ‎ன்-

.
இரண்டு சின்ன தோள்களிலும் ஈரத்துணிகளை பெருமாளுக்கு சாத்திய துளசி மாலைகள் மாதிரி நிறைத்துக் கொண்டு செல்வி பால்கனிக்கு மூச்சு முட்ட வந்தபோது கிட்ட தட்ட விடிந்தேவிட்டது. லேட். அரை மணிக்கும் மேல் லேட்.

துணிகளை வீசி வீசி கொடிகளில் போட்டு வேகம் வேகமாக கிளிப்புகள் போட்டாள். இன்னும் ஐந்தே நிமிடங்களில் குழந்தைகள் எழுந்துவிடும். அப்புறம் திண்டாட்டம்தான். வேலை செய்ய பத்து கைகள் வேண்டும்.



பனி கொட்டிக்கொண்டு இருந்தாலும் செல்விக்கு வியர்த்துக் கொட்டியது. கடைசியாக பெரிய சைஸ் போர்வையை பால்கனி கட்டையில் தொங்கவிட்டுவிட்டு நிமிர்ந்து, வலது பக்கம் பார்த்தபோது....

அப்பா வந்து கொண்டிருந்தார்.
'அப்பா'.

சந்தோஷ உச்சத்தில் செல்வி துள்ளளோடு திரும்பியதில், கீழே இருந்த பூந்தொட்டியை கவனிக்கவில்லை. கால் இடறியதில், அது நிலை தடுமாறி ஒரு பக்கமாக உருண்டு எதிர் சுவரில் முட்டி உடைந்தது.

ஹாலில் டி.வியும் ரிமோட்டுமாய் செல்வியையே கண்கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்த கிழவி டிவி சத்தத்துக்கும் மேலாக கத்த ஆரம்பிக்க அந்த வீடே களேபரம் ஆனது.

செல்வியின் சின்ன பாதங்கள் ஈரமண்ணோடு இருந்த பூந்தொட்டியை மோதியதில் உயிரே போகிற மாதிரி வலித்தது. இரண்டு கைகளாலும் பாதத்தை பிடித்துக் கொண்டு முட்டியை அணைத்தபடி உட்கார்ந்துவிட்டாள். கட்டைவிரல் நுனியில் லேசாக ரத்தம் எட்டிப் பார்த்தது.

தூக்கக் கலக்கத்தோடு புயல் மாதிரி வந்த சுமதி மண் குவியலுக்கு மத்தியில் சோகமாய் சரிந்து கிடந்த ரோஜா செடியைப் பார்த்தாள். சுறுசுறுவென ஆத்திரம் கொப்பளிக்க செல்வியின் கன்னத்தில் ஓங்கி அறைய, காலிங் பெல் ஒலித்தது.

ஆறுமுகத்துக்கு வரவேற்பே பிரமாதமாக இருந்தது. கிழவி ஓயாமல் கத்திக் கொண்டே இருந்தது. சுமதி ஆறுமுகத்தை இழுக்காத குறையாக பால்கனிக்கு அழைத்துப் போனாள்.

"வாங்க. வந்து பாருங்க. உங்க பொண்ணு செஞ்சிருக்கும் அக்கிரமத்தை. கொஞ்சமாவது பொறுப்பு இருக்கா? நேத்து ஒரு லிட்டர் நல்லெண்ணைய கொட்டினாள். இன்னிக்கி ஒரு பூந்தொட்டி போச்சு. பால்கனி முழுக்க மண்ணு. போச்சு. எல்லாம் போச்சு."

முதலில் ஆறுமுகத்துக்கு ஒன்றுமே புரியவில்லை. அரண்டு போய் நிற்கும் செல்வியைத் தேற்றுவதா? பொருள் நஷ்டத்தைச் சொல்லி சொல்லி புலம்பும் வீட்டுக்கார அம்மாவுக்கு பதில் சொல்வதா என்று தெரியாமல் குழம்பினார்.

அவருக்கு பூந்தமல்லியில் உள்ள ஒரு ஃபாக்டரியில் வாட்ச்மேன் வேலை. அதன் முதலாளி பெரிய மனது பண்ணியதில் அவர் குடும்பம் ஒண்டுவதற்கு அங்கேயே இடம் கிடைத்தது.

அதை வசிக்கும் இடம் என்று சொல்லுவதே கடினம். வெயில் காலத்தில் சுட்டுப் பொசுக்கும். மழை காலத்தில் நாலா பக்கமும் ஒழுகிக் கொட்டும். இந்த அழகில் அவர் மனைவி வடிவு ஆறு மாதமாக படுத்த படுக்கையாக இருக்கிறாள். என்ன வியாதி என்றே தெரியவில்லை. அவள் சம்பாத்தியமும் நின்று போனதில் பண கஷ்டத்தில் குடும்பம் நிலை தடுமாறியது.

வேறு வழி இல்லாமல் கனத்த மனசோடுதான் பதிமூன்றே வயதான செல்வியை வீட்டு வேலைக்கு அனுப்பினார். செல்வி வண்டி மாடு மாதிரி முரண்டு பிடித்துக் கொண்டிருக்கிறாள். வேலைக்கு சேர்த்துவிட்ட மூன்றே மாதத்தில் பத்து தடவைக்கு மேல் வந்து பஞ்சாயத்து செய்தாகிவிட்டது. நேற்று எல்லாவற்றுக்கும் சிகரம் வைத்தால் போல ஃபோனில் பிழிய பிழிய அழ, ஒரு தீர்மானத்தோடு விடிகாலையிலேயே புறப்பட்டு வந்தால்...

"இங்க பாருங்க ஆறுமுகம். போறும். பேசாம உங்க பொண்ணைக் கூட்டிக்கிட்டுப் போயிடுங்க. ரொம்ப தாங்க்ஸ். நான் வேற ஆள் பார்த்துக்கறேன். இவ கொடுக்கற டார்ச்சர்ல என்னால ஆபீஸ்ல நிம்மதியா வேலை பார்க்க முடியலை. நேத்திக்கி டயர்டா ஆபீஸ் விட்டு வீடு வந்தா.... கிச்சன் முழுக்க எண்ணெயை கொட்டி... நாலு மணி நேரம் ஆச்சு, எல்லாத்தையும் சரி செய்ய. இவளால ஏற்படற நஷ்டம் இவளுக்கு கொடுக்கபோற சம்பளத்தை விட அதிகம். எத்தனை தடவை சொல்லியாச்சு? ஒழுங்கா வேலையப் பாருன்னு. ஏதாவது அவசர வேலையா ஆள் தேடினா எங்கையாவது ஒரு மூலையில நின்னுகிட்டு அழுதுகிட்டு இருப்பா. வேணாம்.... போதும்.... கூட்டிக்கிட்டுப் போங்க."

"அம்மா. கொஞ்சம் பொறுங்க. செல்வி சின்னப் பொண்ணு. அவ்வளவு விவரம் பத்தாது. நான் இன்னிக்கு தெளிவா எடுத்து சொல்லிடறேங்க. அரை மணி நேரம் செல்விய வெளில கூட்டிக்கிட்டுப் போறேங்க. எல்லாம் சரியாயிடும். அம்மா, நீங்க செய்யற தயவாலத்தான் அங்க என் குடும்பத்துல அரை வயிராவது சாப்பிட முடியுதுங்க. கொஞ்சம் தயவு செஞ்சி...."

ஒரு வழியாக செல்வியை பக்கத்தில் உள்ள பார்க்குக்கு அழைத்துப் போனார். பாவம். செல்வியால் நடக்கக்கூட முடியவில்லை. விந்தி விந்திதான் நடக்க முடிந்தது.

மூன்றே மாதத்தில் உதிர்ந்து விழுந்த கருவேலங் குச்சி மாதிரி... ஆறுமுகத்துக்கு நெஞ்சு வலித்தது.

"என்னம்மா. உன்னால அங்க இருந்து வேல செய்ய முடியலயா?"

செல்வியால் நேரடியாக அப்பாவைப் பார்க்க முடியவில்லை.

"இல்லப்பா. அம்மாவையும் தம்பிப் பயலையும் விட்டுட்டு இங்க என்னால இருக்க முடியல. அவங்க வீட்டு ஐயா குழந்தைகளோடு விளையாடுவாரு. உப்பு மூட்டை தூக்குவாரு. அதையெல்லாம் பார்க்கும் போது எனக்கு தம்பி ஞாபகம் வருதுப்பா. அந்த கெளவி வேற ஏதாவது சொல்லிக்கிட்டே இருக்கு."

"செல்வி. இங்க பாரு. பொறுமையா இரு. உனக்கு பதிமூனு வயசு ஆயிட்டு. இன்னமும் நீ சின்னப் புள்ள இல்லே. அம்மா சீக்காளியா படுத்திருக்கு. என் சம்பளமும் பத்தல. சின்னப் பயலுக்கு போன வாரம் ஒரேயடியா பேதியாகி கிளிச்சு போட்ட நாரு மாதிரி கெடக்கு. நீயும் அங்க வந்திட்டா என்னால எப்படிப்பா சமாளிக்க முடியும்?"

செல்விக்கு பதில் சொல்ல வார்த்தைகள் வரவில்லை. மெல்லியதாக கண்ணீர் முட்டியது.

"போப்பா. அந்தம்மா என்ன வாளில தண்ணீ எடுத்தார சொல்லறாங்க. மூனு மாடி என்னால தூக்கியாற முடியல. கையெல்லாம் காச்சு போவுது. மீந்து போனதெல்லாம் சாப்பிட கொடுக்கிறாங்கப்பா. அந்த கொளந்தங்க தப்பி தவறி ஏதாவது திங்க கொடுத்திட்டா அந்த கெளவி கத்தி கூப்பாடு போடுது. அடிக்குது."

"அப்படியா. நான் தெளிவா சொல்லிட்டு போறேன். எதுவானாலும் எங்கிட்ட சொல்லுங்க. அடிக்காதீங்கன்னு. நீ புத்திசாலி பொண்ணு இல்லையா. நெலமைக்கு ஏத்த மாதிரி நடந்துக்கம்மா. உன்னால முடியலைன்னா தைரியமா எடுத்து சொல்லிடு. பயப்படாதெ. சரியா."

செல்வி விசும்புவதை ஆறுமுகத்தால் கண் கொண்டு பார்க்க முடியவில்லை.

"இன்ணும் மூனே மாசம்மா. மொதலாளி சம்பளத்தை கூட்டி தரேன்னு சொல்லியிருக்காரு. பதினாலு வயசு ஆகட்டும். அந்த கம்பனிலேயே உனக்கும் ஏதாவது வேலை போட்டு தரேன்னு சொல்லியிருக்காரு. கொஞ்சம் பொறும்மா."

சொல்லிக்கொண்டே வந்தவர் சட்டென கண் கலங்கி...

"என்ன கஷ்டம்மா. நம்ம பொழப்பு நாய் பொழப்பு. வேண்டாம்மா. அடுத்த ஜன்மத்துலயாவது நீ கொஞ்சம் வசதியானவங்க குடும்பதுல பொறந்து தொலை. என்ன பாவம் செஞ்சேனோ, உன்னை இப்படி வாட்டுது. நீ சம்பாரிச்சு நாங்க சோறு திங்கனும்கிறது நரகல சாப்பிடறத விட கேவலம். என்னை மன்னிச்சுடும்மா."

நடுங்கும் கைகளால் செல்வியின் சவலைக் கைகளைப் பிடிக்க, " என்னப்பா. இந்த பேச்சை இத்தோட நிறுத்துப்பா. வசதி இல்லாட்டாலும் உன்ன மாதிரி அப்பா எனக்கு இனிமே கெடைக்கமாட்டாங்க. அது நிச்சயம். எனக்கு வசதியெல்லாம் வேண்டாம்பா. நீங்க, அம்மா, சேகரு போதும்.... சரிப்பா. இன்னும் மூனு மாசம்தானே. நான் பார்த்துக்கறேன். நீங்க நிம்மதியா போங்க. போறதுக்கு முன்னாடி அந்த கெளவிய பத்தி அந்தம்மாகிட்டே தெளிவா சொல்லிடுங்க... அப்பறம்.... சரி... நான் சமாளிச்சுக்கறேன்..."

பேச்சு அழுகையோடு கலந்துதான் வந்தது.

திமிறி வந்து கன்னங்களில் வழிந்த கண்ணீரை இனிமேல் அழப்போவதில்லை என்ற மாதிரி பிஞ்சு விரல்களால் வழித்துப் போட்டாள்.

தன் நெஞ்சு வரை வளர்ந்திருந்த செல்வியை அப்படியே சில நிமிடங்கள் மௌனத்துடன் அணைத்துக் கொண்டார் ஆறுமுகம். மனசு கசங்கிய காகிதம் மாதிரி கிவிட்டது. கால்கள் துவண்டு உடம்பு முழுவதும் ஒரு ஆயாசம் இருந்தது.

வீட்டுக்குத் திரும்பி வந்ததும் குழந்தைகள் செல்வியைக் கண்ட மகிழ்ச்சியில் ஓலமிட்டன. கிழவி பேச்சற்று ஒரு விரோத பார்வையுடன் பார்த்துக் கொண்டிருந்தது. ஆறுமுகம் கெஞ்சிக் கூத்தாடி வீட்டுக்கார அம்மாவை சம்மதிக்க வைத்துவிட்டார்.

செல்வி ஓடியாடி சகஜமாக வேலை செய்வதை பார்த்த திருப்தியோடு ஆறுமுகம் போனார். செல்வி பால்கனியிலிருந்து கையசைத்ததில் நம்பிக்கை தெரிந்தது.

சுமதி ஆபீஸ் போய்விட்டாள். கிழவி தூங்கப் போய்விட்டது. குழந்தைகளை குளிப்பாட்ட வேண்டும். ஆளுக்கு ஒரு பிளாஸ்டிக் தொட்டியில் உட்கார்ந்து கொண்டு அட்டகாசம் செய்ய ஆரம்பித்தன.

செல்விக்கு சேகரோடு கிராமத்து பம்ப் செட்டில் குளித்தது ஞாபகத்துக்கு வந்தது. ஒரு நாளைக்கு இரண்டு மணி நேரம் கொட்டமடிப்பார்கள். பெரிய குழந்தை தண்ணீரை வாரி சின்னதின் மேல் அடிக்கவும், அதை பொறுத்துக் கொள்ள முடியாமல் அது செல்வியின் பின்னால் ஒளிந்து கொண்டது.

சேகருக்கு வலது காலை விட இடது கால் சற்று சிறியது. கொஞ்சம் இழுத்து இழுத்துதான் நடப்பான். ஆனாலும் துரத்தினால் ஓட்டமாய் ஓடுவான்.

அவளுக்குள் இருந்த குழந்தை குணம் அவளை மெல்ல மெல்ல ஆக்கிரமிக்க, செல்வி அழத்தொடங்கினாள். ஆனால் இந்த முறை ஒரு வித்தியாசம், யாருக்கும் தெரியாமல்.

Nanri- Nilacharal

No comments: