ATBC மெல்பேர்ண் கலையக ஒன்றுகூடல் - சௌந்தரி -

.
அவுஸ்திரேலியத் தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் 2010 ம் ஆண்டுக்கான மெல்பேர்ண் கலையக ஒன்றுகூடலும் இராப்போசனமும் சனிக்கிழமை மார்கழி 4 ம் திகதி மெல்பேர்ண் Preston மண்டபத்தில் நடைபெற்றது. மண்டபம் நிறைந்த நேயர்களோடும் ஆதரவாளர்கள் அபிமானிகளோடும் அந்நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது. அவ்விழாவில் கலந்துகொள்வதற்கு சிட்னியில் இருந்து பல அறிவிப்பாளர்கள் ஒன்றாக சென்றிருந்தோம். எமது பயணம் மிகவும் மகிழ்ச்சியானதாகவும் பெருமைப்படக்கூடியதாகவும் அமைந்திருந்தது.




மெல்பேர்ண் ஒழுங்கமைப்பாளர்களின் நன்முயற்சியால் ஒன்றுகூடலுக்குரிய அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கிய ஓர் சிறப்பான நிகழ்வாக அன்றைய நிகழ்வு நடைபெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. எல்லா வகையிலும் மிகுந்த கவனமெடுத்து இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தார்கள் என்பது போற்றப்படவேண்டிய விடயம்.

இரவு 7 மணிக்கு ஆரம்பித்த நிகழ்வு பல கலைநிகழ்ச்சிகளையும் உள்ளடக்கி மிகவும் நேர்த்தியாக நடைபெற்றது. atbc மெல்பேர்ண் கலையத்தின் வளர்ச்சி பற்றியும் அதன் முக்கியத்துவம் பற்றியும் தனது வரவேற்புரையில் இளம் அறிவிப்பாளர் Deborah Sugirthakumar  மிக அழகாக சரளமான தமிழில் கூறினார்.

தமிழ்த்தாய் வாழ்த்து சிறுவர்களின் கோலாட்டம, திரையிசைப் பாடல்கள் நாடகம் போன்ற பல கலை நிகழ்ச்சிகளில் சிறப்பித்த சிறுவர்களின் பங்களிப்பு வளரும் தலைமுறையின் கலையார்வத்தையும் தமிழ்மொழியின் மீதான பற்றையும் அனைவருக்கும் பறைசாற்றியது.


நிர்மலன் சிவாவின் நெறியாள்கையில் உருவான எந்திரன் இளையதம்பி என்ற நாடகம் அரங்கத்தை மகிழ்வூட்டியது. அதைத் தொடாந்து செய்தியலைகள் புகழ் ரகுராம் தலைமையில் சிட்னி அறிவிப்பாளர்கள் பங்கேற்ற ஆண்களின் அழகு பெண்களை அடக்குவதிலா இல்லை பெண்களுக்கு அடங்குவதிலா என்ற நகைச்சுவைப் பட்டிமன்றம் இடம்பெற்றது. பெண்கள் சார்பில் சாரதா சிவாஜினி மற்றும் சௌந்தரி ஆகியோரும் ஆண்கள் சார்பில் சந்துரு பிறின்ஸ் மேகநாதன் ஆகியோரும் பங்கேற்றனர். இவற்றோடு சிறிதரன், சோனா, கேஷிகா ஆகியோரது இசைநிகழ்ச்சியும் இணைந்து பல்சுவை நிகழ்ச்சிகளால் அரங்கம் மேலும் களைகட்டியது. இடைவேளையின்போது கலாநிதி சந்திரலேகா வாமதேவா அவர்களது சுழலும் தமிழுலகம் நூல்பற்றிய அறிமுகமும் இடம்பெற்றது.

ஒன்றுகூடல் நிகழ்விற்கு கலை நிகழ்ச்சிகளின் கனம் கொஞ்சம் அதிகமா இருந்த போதிலும் ஒவ்வொரு நிகழ்ச்சியையும் கட்டுக்கோப்பாகவும் ரசிக்கும்வண்ணமும் மேகநாதன் நெறிப்படுத்தியவண்ணம் இருந்தார். நேரக்கட்டுப்பாட்டுக்கு முக்கியத்துவம் கொடுத்து நிகழ்ச்சிகளை அவர் தொகுத்து வழங்கியவிதம் மிகவும் பாராட்டத்தக்கது.


பல அறிவிப்பாளர்களை நேரடியாக ஒரே இடத்தில் சந்தித்தது மெல்பேர்ண் நேயர்களுக்கு பெரும் மகிழ்ச்சியைக் கொடுத்தில் வியப்பேயில்லை. மிகவும் ஆரவாரத்துடனும் குதூகலிப்புடனும் எம்மை எல்லாம் வரவேற்று மகிழ்வித்தார்கள்.

சிட்னியிலிருந்து சென்ற அறிவிப்பாளர்களுக்கு மிகுந்த வரவேற்பை அரங்கத்தினரும் மெல்பேர்ண் கலையகத்தினரும் அள்ளி வழங்கியது பெருமையாகவும் பூரிப்பாகவும் இருந்தது.

இளம் கலைஞர்களாகிய துளசி கனகரட்ணம், ரமா சர்மா மற்றும் மெல்பேர்ண் துளிர் உறுப்பினர் அஞ்சலி காசிநாதன் ஆகியோரது பங்களிப்பும் ஊக்கமும் atbc  மெல்பேர்ண் கலையகத்தின் வளர்ச்சியை மேலும்; பறைசாற்றியது. பெரியவர்களின் ஊக்கத்தின் மூலம் atbc  ஐ தளமாக பாவித்து இளையவர்கள் தமது திறனை வெளிப்படுத்தும்விதம் எல்லோரையும் கவர்ந்தது. மேலும அவர்கள் ஊக்குவிக்கப்படவேண்டும் என்பதே அனைவரதும் விருப்பமும் ஆகும்.

அன்றைய நிகழ்ச்சிக்கும் atbc  வானொலிக்கும் என்றும் ஆதரவளிக்கும் மெல்பேர்ண் சிட்னி விளம்பரதாரர்களுக்கும் பாராட்டையும் நன்றியையும் மேகநாதன் கூறியிருந்தார்;.

கலைநிகழ்ச்சிகளைத் தொடர்ந்து சுவையான இராப்போசனம் வழங்கப்பட்டது. மிக நேர்த்தியான விழாவிற்கு கூடுதலான பலம் சேர்த்தது atbc  ன் தனித்துவமான சுவையான உணவு. அறுசுவையுடன் கூடிய உணவைப்பற்றியும் மெல்பேர்ண் பொறுப்பாளர்களின் விருந்தோம்பலைப்பற்றியும் புகழாதவர்கள் இல்லை என்றே கூறலாம். வழமைபோல் மேகநாதனும் ரகுராமும் அரங்கத்தினருக்கு மத்தியில் நின்றவாறே புதிர்ப்போட்டிக்கான கேள்விகளை கேட்க அவற்றிற்கான பதில்களை கூறியவண்ணம் தமது உணவுகளை ஆரவாரமின்றி சபையினர் பரிமாறிக்கொண்டார்கள்;.

நிறைவாக American auction  ம் பெறுமதிமிக்க பரிசுப் பொருட்களும் வழங்கப்பட்டு நிகழ்ச்சிகள் அனைத்தும் நிறைவுபெற்றது.

அறிந்த மனிதர்களை அன்பாக கை நீட்டுகின்ற உறவுகளை சந்திக்கும் போதெல்லாம் மகிழ்ச்சி பொங்குவது வழக்கமானதே. அதேபோல்தான் மெல்பேர்ண் நிகழ்ச்சியும். வானொலியில் மட்டுமே குரல்களை கேட்ட சி;ட்னி அறிவிப்பாளர்களுக்கு நேயர்களது நேரடி அறிமுகம் மிகுந்த மகிழ்வைக் கொடுத்திருந்தது என்பதை அவர்கள் சிட்னிக்குத் திரும்பும்போது ஆர்வத்தோடு பேசிக்கொண்டார்கள்.

அவுஸ்திரேலியத் தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் 2010 ம் ஆண்டுக்கான ஒன்றுகூடலும் இராப்போசனமும் எல்லோரும் பாராட்டும் அளவுக்கு நடைபெற்றது அனைவருக்கும் மகிழ்ச்சியைக் கொடுத்திருந்தது.

எந்தவிதமான வேறுபாடுகளுமின்றி ஓர் குடும்பமாக இணைந்து atbc ன் முன்னேற்றத்தை மட்டுமே நோக்கமாக கருத்தில் கொண்டு மெல்பேர்ண் மற்றும் சிட்னி அறிவிப்பாளர்கள்; ஆதரவாளர்கள் மற்றும் நிர்வாகத்தினர் அனைவரும் ஒன்றாக செயற்படுகின்ற ஆரோக்கியமான போக்கு atbc ன் வளர்ச்சியை அனைவருக்கும்; உறுதிப்படுத்தியது.atbc ன் செயற்பாடுகளை மேலும் விஸ்தரிப்பதற்கான செயல்திட்டங்களுடன்; பல நேயர்களும் ஆதரவாளர்களும் தாமாக முன்வந்தமை அதற்குரிய சான்றாக அமைந்தது.

சிறப்புகளை பட்டியிலிடும்போதே ஏதாவது குறைகள் இருந்தால் அவற்றை இனிவரும் காலங்களில் நிவர்த்தி செய்ய வேண்டும் என்ற எண்ணம் ஒழுங்கமைப்பாளர்களுக்கு தானாக உருவாகிவிடும் என்பது எனது நம்பிக்கை. அந்த வகையில் இந்த இனிய விழாவை சிறப்பாக்கிய அனைவருக்கும் வாழ்த்துக்களும் நன்றிகளும் தெரிவிக்கின்றேன்.

1 comment:

Kiri said...

அவுத்திரேலியாவின் சமூக வானொலி மெல்பன் போன்ற நகரங்களைக் கடந்து சகல மாநிலங்களிலும் ஓங்கி ஒலிக்க வேண்டுகிறேன்