எனது இலங்கைப் பயணம் - செ.பாஸ்கரன்

.
யாழ் நோக்கி பிரயாணிக்கும் பிரயாணிகள் தாண்டிக்குளத்தில் சோதனையிடப்படுகின்றார்கள். நாங்கள் தாண்டிக்குளத்தில் காரை நிறுத்தியபோது பெட்டிக்குள் என்ன இருக்கிறது என்று கேட்டார்கள் இராணுவத்தினர். உடுப்புக்கள் என்றதும். ஓகே யண்ட மாத்தயா என்றார்கள். அந்த இடத்தில் மட்டும் ஏ9 வீதியால் போக விடாது பைபாஸ் போன்று முகாமின் பின்புறமாக இருக்கும் மண் றோட்டால் வந்து மீண்டும் ஓ9 வீதியில் ஏறவேண்டும்.ஏறக்குறைய ஒரு 500 மீற்றர் தூரம் இருக்கும் என நினைக்கிறேன்





ஆனையிறவு ஸ்ரொப் என்ற தடைகேற்றால் மூடப்பட்டுள்ளது. காரை நிறுத்திய சாரதி இறங்கிச் சென்று காரியாலயத்தில் லைசென்சை காட்டிவிட்டு வருகின்றார் தடை கேற் திறக்கப்பட்டு செல்ல அனுமதிக்கப் படுகிறது. இப்போது பொழுது போய்விட்டதால் இராணுவ வீரர்கள் இலங்கையை தூக்கிப் பிடித்தவண்ணம் இருக்கும் காட்சியை சரியாக பார்க்க முடியவில்லை.

 யாழ் செல்லும் வரை குண்டும் குழியுமான பாதையாகவே இருக்கிறது. பளை தென்னந் தோப்பு தாண்டி சாவகச்சேரி தாண்டுகின்றபோது கடையில் இருந்து ஒலித்துக்கொண்டிருந்த சீர்காளியின் பாடலான தணிகை மலை படிகள் எல்லாம் திருப்புகழ் பாடும் பெரிய சத்தமாக ஒலிக்கிறது. மனம் மிகவும் பூரிப்படைகிறது. என்மனதில் அந்தக் காலநினைவுகள் தட்டிச்செல்கிறது. கொடிகாமம் வீடுகள் பழுதடைந்தும் ஆட்கள் மிகக் குறைவாகவும் இருப்பது போல் தோன்றியது. கோப்பாய் கைதடிப்பாலம் மிக அழகான பாலமாக மாறியிருக்கிறது. அந்த கடலேரியும் தூரத் தெரியும் நாவற்குழி இராணுவ முகாமும் சரியாக தெரியவில்லை.கோப்பாய் சந்தியைதாண்டி உரும்பிராயை அடைந்தபோது காருக்குள் ஆரவாரமாக இருக்கின்றது பல ஆண்டுகளுக்குப் பின்பு மீண்டும் சொந்த மண்ணுக்கு வந்துவிட்ட மகிழ்வில் என்மனைவியும் மற்றவர்களும் ஒவ்வொரு வீடுகளையும் பார்த்து அந்தக்கால நினைவுகளையும் அதில் வாழ்ந்த ஒவ்வொருவரைப்பற்றியும் உரையாடுகின்றார்கள் அவர்கள் பேச்சிலிருந்து அங்கு வாழ்ந்த எங்கள் வயதினர் அதற்கும் இளவயதினர் எல்லோருமே வெளிநாடுகளில்தான் வாழ்கின்றார்கள் என்பது புரிகிறது. பேச்சினிடையே அவர்களின் சம்பாசனை இப்படி என்காதில் விழுகிறது “ அப்ப இப்ப ஆர் இருக்கினம் இந்தவீட்டில? மறுமொழி இப்ப பலாலியில இருந்து இடம்பெயர்ந்த ஆக்கள் இருக்கினம், நாம் துவங்கிவைத்த போரினால் நாம் கண்டது புலப்பெயர்வும் உள்நாட்டில் இடப்பெயர்வும் அடர்ந்து செளித்திருந்த பூமியை ஆட்கள் இல்லாத பூமியாக மாற்றியதும்தான் என்ற வேதனை நிறைந்த உண்மை மனதில் நுளைந்துகொள்கிறது. நம்மில் யாராவது வெளிநாட்டிலிருந்து திரும்பிவந்து இங்கு வாழ்வோமா என்ற நினைவு வந்தபோது அதன் விடையை நினைத்து துக்கம் தொண்டையை அடைத்துக்கொண்டது.


இராமர் பதின்நான்கு ஆண்டுகள்தான் அஞ்ஞானவாசம் புரிந்தார் எங்கள் உறவுகள் கிளிநொச்சி வவுனியா கொழும்பென்று மாறிமாறி இருபத்தைந்து வருடங்கள் ஓடி மீண்டும் வந்து பிறந்த வீட்டில் வாழும் திருப்தி முகத்தில் தெரிய எங்களை வரவேற்கிறார்கள். உரும்பிராயில் கோயில்கள் திருத்திஅமைக்கப்பட்டு கோபுரத்தில் இருக்கும் சிற்பங்கள் போதாதென்று இந்தியாவில் இருந்து கலைஞர்கள் வந்து சிற்பங்கள் பொம்மைகள் வைத்துக்கொண்டிருக்கின்றார்கள். யாரோ லண்டனில் இருக்கும் புண்ணியவான் பணத்தை இறைப்பதாக கேள்விப்படுகின்றேன். இவர்களுக்கு

யாரும் வன்னியில் உள்ள பாடசாலைக் கட்டடங்களைக் காட்டினால் நல்லதென்று எண்ணினேன்.இப்போது இந்த தளத்தில் உள்ள படங்களைப்பார்த்தாவது யாரும் முன்வரவேண்டும் அவைகளை புனருத்தாரணம் செய்து கல்விக்கூடங்களை மேம்படுத்த வேண்டும் “வரப்புயர” என்று மன்னனைப்பார்த்து ஒளவையார் வாழ்தியது போல் கல்விக் கூடங்கள் உயரவேண்டும் அது உயர்ந்தால் மாணவர் வாழ்வுயரும் தமிழர்வாழ்வுயரும் என்று என் மனதில் எண்ணக்கரு வந்து செல்கிறது. யாராவது கவனிப்பார்களா?
உரும்பிராய் கோவில்களுக்கு அண்மையில் கல்யாண மண்டபங்கள் கட்டப் படுகின்றது. மிக நன்றாக வடிவமைக்கின்றார்கள். வெளிநாடுகளில் இருக்கும் மண்டபங்களுக்கு எந்தவகையிலும் குறைந்ததாக இவை இருக்கமாட்டாது என்றே எண்ணுகின்றேன். இந்தியாவிலும் சிங்கப்பூரிலும் நடந்த வெளிநாட்டுத் திருமணங்கள் இனி இங்கே நடப்பதற்கான வாய்ப்புள்ளதாகவே தெரிகிறது. உரும்பிராய் வேள்வி ஒருகாலத்தில் மிகப்பிரபல்யம். காட்டுவைரவர் கோவில் வேள்வி யென்றால் குடாநாட்டின் பலபாகங்களிலிருந்தும் மக்கள் வருவதும் வேள்விக்கிடாய் வாங்குவதும் வருடமொருமுறை தவறாது நடக்கும் ஒன்று. அதில் யார் வீட்டுக் கிடாய் மிகப் பெரிதென்று போட்டிவேறு வெற்றி கொண்டவருக்கு பெருமையாக இருக்கும். அங்குள்ள ஒரு உறவோடு உரையாடும் போது அவர் பெருமையாக குறிப்பிட்டது சிரிப்பாக உள்ளது. “தம்பி மற்ற ஆடுகள் என்ன ஆடுகள் தம்பி உரும்பிராய்ஆட்டுக்கறி சாப்பிட்டா சாப்பிட்ட கைமணக்கும்”. அவர் கூறிய விதம் சிரிப்பாக இருந்தாலும் அவர் கூறியது முற்றிலும் உண்மை என்பதை சாப்பிட்ட பின்பு புரிந்துகொண்டேன்.
மறுநாள் புங்குடுதீவும் நயினாதீவும் செல்வதற்கான ஏற்பாடு பண்ணைப்பால றோட்டால் காரில் போக முடியாது என்பதால் பவளகாந்தன் என்பவருடைய வானில் செல்கின்றோம். தமிழ்ப்பிரதேசமே அவருக்கு அத்துபடி. யாழ் நகரத்தினூடாக வண்டி விரைகிறது. புதிய பஸ்நிலையம் மிக அழகாகக் காட்சி தருகிறது. பூபாலசிங்கம் புத்தக சாலையும் அதையொட்டி நிரையாக இருக்கும் கடைகளும் கலகலப்பாக இருக்கிறது. நான் முன்பு ரசித்த ஒரு விடயத்தை உற்று நோக்குகின்றேன்.அது இன்றும் அப்படியேதான் நடக்கிறது. அதாவது பஸ் நிலையத்துக்கு முன்பாக உள்ள ஒவ்வொரு கடைகளில் இருந்தும் ஒவ்வொரு பாட்டு ஒலித்துக்கொண்டிருக்கும் குறுக்காக நடந்து சென்றால் ஒரு பாட்டின் முதலடியும் அடுத்தபாட்டின் இரண்டாவது அடியும் கலந்து ஏதோ புதுப்பாட்டு கேட்பது போல் தோன்றும். ஒருவருக்கொருவர் போட்டியாக சத்தத்தை கூட்டி வைப்பார்கள்.இன்றும் அது மாறாமல் அப்படியே உள்ளது. தமிழன் மாறமாட்டான் என்பதற்கு இது ஒரு அடையாளமோ என்று எண்ணத் தோன்றியது. பஸ்நிலையத்தில் முன்பு மணிக்குரல் விளம்பர சேவை ஒலித்துக்கொண்டிருக்கும் சண்ணின் குரல் மிக கம்பீரமாக இருக்கும் இப்போதும் ஒரு விளம்பர சேவை நடக்கின்றது அது அந்த அளவிற்கு இல்லாததுபோல் எனக்குத் தோன்றியது. சில பொருட்கள் வாங்கவேண்டும் என்று சாரதியிடம் கூறினோம் என்ன என்றார் தண்ணிப்போத்தில் ரிசுப்பைக்கற் மாஜறீன் என்று சொன்னதும் அது உதில குழழன ஊவைல யில வாங்கலாம் என்று அந்த கடையின் முன் நிறுத்துகின்றார். நான் கொழும்பில் பார்த்த அதேகடை எம்மவர்கள் வாகனத்தை நிறுத்திவிட்டு எல்லாப் பொருட்களையும் ஒரே இடத்தில் வாங்கிச் செல்லும் சுப்ப மாக்கெற். இது இங்கும் வந்துவிட்டதா என்ற எண்ணம் ஏற்ப்பட்டது. சிங்கள முதலாளியின் கடை கொழும்பில் இருந்து புறப்பட்டால் எல்லா இடங்களிலும் இருக்கிறது  இப்போது யாழ்ப்பாணத்தையும் ஆக்கிரமிக்கின்றது. யாழ்ப்பாண வியாபாரிகள் விழித்துக்கொண்டு மாறாவிட்டால் அவர்கள் வியாபாரத்தின் நிலை என்ன ஆகும் என்பதை என் மனம் கணித்துக்கொண்டது. இந்தக் கடைக்குள் ஒஸ்ரேலியாவில் வாங்கும் அத்தனை பொருட்களும் அதே பிறாண்ட் அங்குள்ளது. எதுவும் இங்கிருந்து காவத்தேவையில்லை. டொலரில் பார்க்கும்போது இங்கு வாங்குவதைவிட அங்கு வாங்கிக் கொடுக்கலாம்போல் இருந்தது. இங்கிருந்து காவிச் செல்லவும் தேவையில்லை செலவும் குறைவாக இருக்கும்.


இப்போது பண்ணைப்பாலத்தால் செல்கின்றோம். மண்டைதீவு சந்தியை நெருங்கும் போது உயரமான காவலரணில் இராணுவம் காவல் புரிகின்றது. முன்பு நகரங்கள் தொடங்கும் போது இந்த நகரம் உங்களை அன்போடு வரவேற்கிறது என்ற வரவேற்பு பலகைகள் காணப்படும் இப்போது இராணுவம் வரவேற்கின்றது கடற்படை வரவேற்கின்றது என்ற வரவேற்பு பலகைகளே தென்படுகின்றது. காலத்தின் மாற்றம்தான் இவைகள் போல்தெரிகிறது. நகரசபையும் பட்டினசபையும் வரவேற்கக்கூட வக்கற்று இருக்கின்றதா என்ற எண்ணம் தோன்றி மறைகிறது.



பங்களாவடி சந்தியில் கடைகள் முன்பு போல் இல்லாவிட்டாலும் குறைவாக இருக்கின்றது. நாரந்தனை ஊடாக ஊர்காவற்துறை செல்லும் பாதை முதல்நாள்தான் அமைச்சர் டக்கிளஸ் தேவானந்தாவால் போக்கு வரத்திற்காக திறந்து வைக்கப்பட்டது. சந்தி எங்கும் நீலவர்ண கொடிகளும் தேவானந்தாவின் படங்களுமே காணப்பட்டது. பெரும்பாலான வீடுகளில் ஆட்கள் இல்லாது வேலிகள் இல்லாது பார்ப்பதற்கு கஸ்டமாக இருந்தது. வீடுகள் தூர்ந்து கிடப்பதை காணுகின்றபோது இனி எக்காலத்திலும் இங்கு மனிதர்கள் வருவதற்கு சந்தர்ப்பமே இல்லை என்றே எனது மனதில் தோன்றியது. முன்நாள் பாராழுமன்ற உறுப்பினர் கா.பொ.இரத்தினம் அவர்களின் வீடும் அதே கோலத்திலேதான் கிடக்கின்றது. ஆனால் அது முழுதாக இருக்கின்றது.

புங்குடுதீவு பாலத்தை தாண்டுகின்றபோது மீண்டும் கடற்படை வரவேற்கிறது. கையசைத்து சிரிக்கின்றார்கள். வேலிகள் இல்லாத இளவுவிழுந்த வீடுகள் போல் தோற்றமளிக்கின்றது வீடுகள். பெரும்பாலன வீடுகள் அடையாளமே தெரியாமல் உருக்குலைந்து போய்விட்டது. பிரசித்தமான கண்ணகை அம்மன் ஆலயத்தை அண்மித்தபோது கண்ணகைபுரம் வரவேற்கின்றது என்ற சிற்ப வேலைப்பாடு கொண்ட வளைவைக்காண்கிறேன். அப்பாடா இங்காவது முதன் முறையாக ஒரு கிராமம் வரவேற்பது மகிழ்வைத் தருகின்றது.

கோவிலில் மணிமண்டப கட்டுமான பணி இடம் பெறுகின்றது. கோவில் அர்ச்சகரோடு உரையாடியபோது ஆட்கள் நாலு மூன்று பேர்தான் வருவார்கள் கொழும்பில் உள்ள முதலாளி ஒருவர் இதைக்கட்டுகின்றார். திருவிழாவிற்கு உலகம் முழுவதிலுமிருந்து வருவார்கள் முன்பு சமாதான காலத்தில் நிறையப்பேர் வந்தார்கள் என்று கூறினார். வெளிநாடுகளில் இருந்து வருடம் ஒருமுறை வாடக்காற்றின் போது பறந்து வரும் கூளக்கடா பறவைகள் போன்று இந்த ஊர்மனிதர்களும் வருடம் ஒருமுறை சித்திரை மாத திருவிழாவிற்கு பறந்து வருவார்கள் என்ற நம்பிக்கையோடு காத்திருக்கிறார் அந்த அர்சகர் அவர் மாத்திரமல்ல அந்தக் கிராமமும் கூடத்தான். மனிதர்கள் இல்லாத அந்தக்கிராமம் எப்படி இனி இனப்பெருக்கமடையும் மீண்டும் பழைய நிலைக்கு வரும் என்ற கேள்விகளோடு நகர்கின்றேன்.

நாயமார் கோயில் முருகன் கோயில் ஆலடிச்சந்தி பிள்ளையார் கோவிலென்று எல்லா கோயில்களுமே திருத்தப்படுகின்றது அல்லது கோபுரம் கட்டப் படுகின்றது. யாராவது தொழிற்சாலைகள் கட்ட முயற்சி எடுத்தால். பொருளாதாரத்தில் முன்னேற்றத்தை கொண்டுவந்தால் மட்டுமே மனிதர்கள் குடியேறுவார்கள் இல்லாதுவிட்டால் அழகிய கோயில்களில் ஆண்டவனைக்கூட பார்க்க ஆளின்றி அடைந்து கிடப்பார் என்பதே கசப்பான உண்மை.

ஒரு சில வீடுகளைத்தவிர அனைத்து வீடுகளுமே அழிந்து கிடக்கிறது. தேடுவாரற்று ஆடு மாடுகள் திரிகின்றன. இடையிடையே இராணுவம் தெரு நீளத்திற்கும் நிற்கின்றார்கள். அவர்களிடம் வழி கேட்டால் சுத்த தமிழில் வழிகாட்டுகிறார்கள். ஒரு காலத்தில் இவர்கள் இங்கு தமிழர்களாக மாறுவார்களா அல்லது இந்த ஊரே சிங்கள கிராமமாக மாறப்போகின்றதா என்பது வெளிநாட்டில் வசிக்கும்


இவ்ஊர் பெருமக்களையே சாரும். இது இந்த ஊருக்கு மட்டுமல்ல தமிழ்ப்பிரதேசங்கள் அனைத்திற்குமே பொருந்துகின்றது.
பிரபல எழுத்தாளரும் போர்ப்பறை நாவல் ஆசிரியரும் சிந்தனையாளருமான எழுத்தாளர் மு.தலையசிங்கத்தின் நினைவாக நூல்நிலையமும் தங்குமிட வசதியும் சர்வமத சங்கத்தினால் நிர்மாணிக்கப்பட்டுள்ளது

சந்தோசமாக இருந்தது. பாரதியைப்போன்று வாழ்ந்தவரை முதலாளி வர்க்கத்தால் துன்புறுத்தப்பட்ட அந்த எழுத்தாளன் இறந்தபின்பு வாழ்கின்றான் என்பதாவது பெருமைக்குரியது.
தொடர்ந்து நயினாதீவு செல்வதற்கு குறிகாட்டுவான் செல்கின்றேன். பிரச்சினைக்குரிய இடமாக வெளிநாட்டு வானொலிகளிலும் பத்திரிகைகளிலும் பேசப்பட்ட அந்த இடம் சிங்களவர்கள் கைப்பற்றி விட்டார்கள் என்று கூறப்பட்ட அந்த இடத்தை பார்க்கிறேன். பெரிய கார்ப்பார்க் வசதியோடு நிறைய பஸ்வண்டிகள் நிறுத்தப்பட்டிருக்கிறது.
அடுத்தவாரம் இதைப்பற்றியும் நாகதீப வில் என்ன நடக்கின்றது என்பதையும் தொடர்கின்றேன் வாசகர்களே.

2 comments:

kirrukan said...

[quote]நாம் துவங்கிவைத்த போரினால் நாம் கண்டது புலப்பெயர்வும் உள்நாட்டில் இடப்பெயர்வும் அடர்ந்து செளித்திருந்த பூமியை ஆட்கள் இல்லாத பூமியாக மாற்றியதும்தான் என்ற வேதனை நிறைந்த உண்மை மனதில் நுளைந்துகொள்கிறது[/quote]

என்ன ஜயா நாம் தொடக்கின போர் என்று எம்மீது பலியை போடுகிறீங்கள்.....தேவாரம் திருவாசகம்,பைபிளும் கையுமாக இருந்து டாக்டராக, இன் ஜினியராக,கணக்காளராக,பட்டதாரிகளாக வாரதே இலட்சியம் என்று வாழ்ந்த எம்மை போர் பிரியர்கள் ஆக்கினது யார் என்று நான் சொல்லி உங்களுக்கு தெரிய வேண்டும் என்று இல்லை....அழிவில் எமக்கும் பங்கு உண்டு ஆனால் நாம் விரும்பி போர் தொடங்கவில்லை என்பது யாவரும் அறிந்த உண்மை....

மீண்டும் நாகதீபத்தில் பளமு

Ramesh said...

நாம் என்று கட்டுரையாளர் எழுதியது பொருந்தும் என்பது என் அபிப்பிராயம். தங்கள் தேவைகளுக்காக அமிர்தரும் அரசுக்கட்சியும் போரென்று பேசத்தொடங்கித்தான் அவயளின்ர அரசியல் எதிரிகளான துரையப்பாவை முடிச்சவை அதோட தொடங்கின போரால இண்டைக்கு தமிழ்த் தலைவர்களே இல்லாம பண்ணி தாதாக்களெல்லாம் தலைமை கொடுக்கிற நிலைக்கு வந்திருக்கு என்ன நான் கிறுக்கினது புரியுதோ?