உலகச் செய்தி

.
"விக்கிலீக்ஸ்' இணையதள நிறுவனர் ஜூலியன் அசாஞ்சுக்கு லேப்-டாப் வசதி இல்லை : ஆனால், கைதிகள் அவருக்கு முழு ஆதரவு
லண்டன் : "விக்கிலீக்ஸ்' இணையதள நிறுவனர் ஜூலியன் அசாஞ்சுக்கு லேப்-டாப் மற்றும் இணையதள இணைப்பு ஆகியவை மறுக்கப்பட்டதாக, அவரது வக்கீல் தெரிவித்துள்ளார்.

பாலியல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட அசாஞ்ச் தற்போது, லண்டனின் தென்மேற்குப் பகுதியில் அமைந்துள்ள "வேண்ட்ஸ்வொர்த்' சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ளார். கடந்த 7ம் தேதி அவருக்கு ஜாமீன் மறுக்கப்பட்ட நிலையில், வரும் 14ம் தேதி மீண்டும் அவர் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்ய திட்டமிட்டுள்ளார்.


சிறையில் இருக்கும் கைதிகள் அனைவரும் தங்களது ஆதரவை அவருக்குத் தெரிவித்ததாக லண்டனில் இருந்து வெளிவரும், "தி கார்டியன்' பத்திரிகை குறிப்பிட்டுள்ளது. அவர் தனது வக்கீல் குழுவினரிடம், லேப்-டாப் கேட்டதாகவும், சிறை அதிகாரிகள் அதற்கு அனுமதியளிக்க மறுத்து விட்டதாகவும் அப்பத்திரிகை கூறியுள்ளது.

இதுகுறித்து அசாஞ்சின் வக்கீல் மார்க் ஸ்டீபன்ஸ் கூறுகையில், "இணையதள இணைப்பு இல்லாத லேப்-டாப் கூட அவருக்குத் தருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அவரிடம் சில கோப்புகள் உள்ளன. ஆனால், அவரிடம் தாள் அல்லது பேனா எதுவும் இல்லை. இணையதளங்களில் இருந்து தகவல்களைத் திருடுவதற்கு விக்கிலீக்ஸ் விவகாரம் தூண்டுதலாக இருப்பதாக மக்கள் ஆராயாமல் குற்றம் சாட்டி வருவது குறித்து அவர் வருத்தப்பட்டார்' என்று தெரிவித்தார்.

இந்நிலையில், அசாஞ்ச் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும் என்று, பிரிட்டனின் பிரபல பத்திரிகையாளர் ஜான் பில்ஜெர், நடிகரும் இயக்குனருமான டெர்ரி ஜோன்ஸ், நடிகை மிரியம் மர்கோலிஸ், நாவலாசிரியை ஏ.எல்.கென்னடி ஆகியோர், "தி கார்டியன்' பத்திரிகைக்கு கடிதம் அனுப்பியுள்ளனர்.

அதில், "விக்கிலீக்ஸ் மீது குறிப்பாக அதன் நிறுவனர் ஜூலியன் அசாஞ்ச் மீது தாக்குதல்கள் தொடுக்கப்பட்டிருப்பது கண்டனத்திற்கு உரியது. பல்வேறு பிரச்னைகளில் நமது அரசுகளின் கண்ணோட்டம் என்பதை இந்த தகவல்கள் வெளிப்படுத்தியிருப்பதன் மூலம் அவை ஜனநாயகத்துக்கு உதவியிருக்கின்றன' என்று கூறியுள்ளனர்.
 நன்றி தேனீ

No comments: