மைனா விமர்சனம்

.
காட்டில் பூவாய் மலரும் ஒரு காதல், நாட்டில் எப்படி கசக்கி எறியப்படுகிறது என்கிற கதைதான் மைனா. ஹீரோயின் மைனாவின் குடும்பம் அநாதையாக நிற்கும்போது உதவிக்காக நீள்கிறது ஹீரோ சுருளியின் கரம். பள்ளி பருவத்து பரிவு, பருவ காலத்தில் காதலாகிறது. திருமணக் காலத்தில் மைனாவின் அம்மா, படித்த பிள்ளைக்கு படித்த பையனை தேடுகிறார். விளைவு சுருளி வெகுண்டு எழ, காட்டுக்குள் காக்கி சட்டை கால் பதிக்கிறது. காவல்துறையும், காதலும் துரத்த காட்டுக்குள் ஓடுகிறது காதலும், காவலும். ஒன்றை விட்டு ஒன்று பிரிய முடியாத சூழ்நிலையில் அவர்களுக்குள் அன்பும், பரிவும், காப்பாற்றுதலும், நன்றியுமான உணர்வுகள் மாறி மாறி வருகிறது. அன்பு ஒன்றே அனைத்துக்குமான தீர்வு என்ற பாடத்தை காடு கற்றுக் கொடுத்து நாட்டுக்கு அனுப்புகிறது. ஆனால் நாடு அதை புரிந்து கொள்ளாமல் காதலர்களை கசக்கிப் போடுகிறது. 

அடர்ந்த காடு, அதில் அச்சம் நிறைந்த பள்ளத்தாக்கு. பத்து வீடுகளோடு ஒரு கிராமம். பத்து வீட்டு மனிதர்களும் பத்து விதமாக என தமிழ் சினிமாவின் புதிய கதைக் களத்திலேயே நிமிர்ந்து உட்கார வைத்துவிடுகிறார் இயக்குனர் பிரபு சாலமன். ஒளிப்பதிவாளர் சுகுமார், கதையை அழுத்தமாகவும், ஆழமாகவும் சொல்ல உதவியிருக்கிறார். ஒவ்வொரு காட்சியிலும் முக்கிய கேரக்டராக அவரது கேமராவும் நடிக்கிறது. காடு, மலை, பள்ளத்தாக்கு, காட்டாறு என்று அறியாத பிரதேசங்களை அறிமுகப்படுத்தி வைக்கிறது.

சுருளியாக விதார்த்தும், மைனாவாக அமலா பாலும் கேரக்டர்களாக வாழ்ந்திருக்கிறார்கள் என்பது கூட வழக்கமான வரிகள்தான். மைனா தனக்கில்லை என்று தெரிந்ததுமே, முகத்தில் தோன்றும் அந்த வெறியும், ‘ஜெயிலிலிருந்து வந்ததும் பணியாரம் சுட்டு பொழைக்கலாம்’ என்று காதலியிடம் சொல்லும் அப்பாவித்தனமும், ‘மைனாவுக்கு பொட்டுன்னா ரொம்ப புடிக்கும் சார்’ என்று காட்டுக்குள் பொட்டு தேடுவதும், காலில் ஆணி குத்திய மைனாவை தோளில் உப்பு மூட்டை சுமந்து ஓடும் அந்த பதற்றமுமாக, விதார்த் நம்பிக்கைக்குரிய வரவாக தெரிகிறார். ‘சுருளியத்தவிர வேறொருத்தனை கட்டிக்க மாட்டேன். பிடிக்கலேன்னா செத்துப்போ’ என்று தாயிடம் சீறுவதாகட்டும், இரவில் படிக்க, சுருளி சைக்கிள் லைட் எரிய, விடிய விடிய சைக்கிள் பெடல் சுற்றும்போது பார்க்கும் அந்த காதல் பார்வையிலும், ‘பழிவாங்குற நேரமா இது. அவங்கள போயி காப்பாத்து’ என்று ஆணையிடுவதிலும் மைனாவை மனதுக்குள் கொண்டு வந்து உட்கார வைக்கிறார் அமலா.

சட்டை மடிப்பு கலையாத விரைப்பு போலீசை பார்த்துச் சலித்த கண்களுக்கு புதுமுகம் சேதுவும், தம்பி ராமையாவும் யதார்த்த போலீசாரின் பலத்தையும், பலவீனத்தையும் காட்டுகிறார்கள். மனைவியின் டார்ச்சர் ஒரு புறம், கைதி தப்பித்த கோபம் ஒருபுறம் என்ற இருபக்கமும் இடி வாங்கி முகத்தில் எப்போதும் வெறுப்பும், கோபமுமாக புதுமுகம் சேது கவனம் ஈர்க்கிறார். பின்னணி இசையிலும், பாடலிலும் இமான் ஆச்சர்யம் கொடுத்திருக்கிறார். குறிப்பாக ‘நீயும் நானும்...’, ‘மைனா மைனா’ மெலடியும், ‘கிச்சு கிச்சு தாம்பாளம்’ கிராமியமும் ஹிட் லிஸ்ட்டில் எளிதாக நுழைகிறது. ‘ஜிங்ஜிக்கா’ பாடலும், பாபி ஆண்டனி மாஸ்டரின் டான்ஸும் கிக் ரகம்.

ஒரு சராசரி சப் ஜெயில் வார்டனின் பிடிவாத மனைவியிடம் துவங்கும் கதை, அதே ஜெயிலுக்குள் இருக்கும் ஹீரோவின் நினைவில் நகர்வதும், கடைசியில் அதே ஜெயிலுக்குள் அதே வார்டன் அமர்ந்திருக்க முடிவதுமான அற்புதமான திரைக்கதையோட்டத்தில் பிரபு சாலமனின் திறமை பேசுகிறது. நெகிழ வைக்கும் கிளைமாக்ஸ் ஆச்சர்யம். தீர விசாரிக்காமல் அப்படிப்பட்ட ஒரு காரியத்தை வார்டனின் மைத்துனர்கள் செய்வதிலும், மனைவியை பற்றித் தெரிந்தும் இன்னொரு பெண்ணை நள்ளிரவு நேரத்தில் ஜெயிலர், வீட்டுக்கு அழைத்து செல்வதிலும் யதார்த்தம் இல்லை என்றாலும், நெஞ்சுக்குள் கண்ணடிக்கிறாள் மைனா.
Nanri Dinakaran

No comments: