வவுனியாவுக்குப் போயிருந்தேன்

.

வெயில் விழுதுகளாய் விழுந்து கொண்டிருக்கும் நடு மதிய நேரத்தில், கொழும்பு புறக்கோட்டை பேருந்து நிலையத்திலிருந்து வவுனியா செல்லும் 87ம் எண் பேருந்து புறப்பட்டு கொழும்பு வீதிகளைக் கடந்தது. எப்படியும் ஏழு மணி நேரப் பயணத்தை, நெரிசலோடு அனுபவிக்க வேண்டும் என மனதை பதப்படுத்திக்கொண்டேன். கொழும்பு வீதிகளில் மிக முக்கியமாக அவதானிக்க வேண்டிய விடயம், எல்லாப் பலகைகளில் தமிழ் எழுத்துகள் அழகாய் இருந்து கொண்டிருக்கின்றன. நிமிடங்கள் கரையக்கரைய பேருந்தில் மனிதர்கள் எண்ணிக்கை கூடிக்கொண்டே போனது, சிலாபம், புத்தளம் என நேரமும், பேருந்தின் வேகமும் சாலைகளைத் தின்று, ஊர்களை குடித்துக்கடந்து கொண்டிருந்தது. புத்தளத்தில் பேருந்து கொள்ளாத கூட்டம் பிதுங்கி வழியத் தொடங்கியது. புத்தளத்திலிருந்து அனுராதபுரம் வரை பெரும் தொகையிலான இடங்கள் காடுகளாகவே, பசுமை நிறைந்த பகுதியாகவே இருந்தது. அனுராதபுரம் கடக்கும் போது இருள் கவ்வத் தொடங்கியது. அனுராதபுரத்தை விட்டு வவுனியா நோக்கி பேருந்து வேகம் கொள்ளத் துவங்கிய போது, இருள் துகள்களாய் படியத் தொடங்கியது.


சிங்கள வாசனை முழுதும் அகன்று தமிழ் மணம் வீசும் மண்ணுக்குள் நுழைகிறோம் என்ற எண்ணம் கொஞ்சம் குதூகலமாய் இருந்தாலும், அடிபட்டு துவண்டு கிடக்கும் பூமிக்கு நெருங்குவதை நினைக்கும் போது மனது முழுதும் இறுக்கம் பிணைந்து கிடந்தது. சிங்களம், தமிழ், ஆங்கிலம் என்று முறையே வவுனியா என்ற பெயர்ப்பலகை வரவேற்றது.

நல்ல இருட்டு சூழ்ந்து கிடந்தது. வரவேற்று அழைத்துச் செல்ல வந்திருந்த நண்பர் தயாராக இருந்தார். ஒல்லியான உருவங்களில் நகர் முழுதும் இலங்கைப் போலீசார் இருவர் இருவராக நின்று கொண்டிருந்தனர். குறிப்பிட்ட இடைவெளியில் சாலையில் செல்லும் வாகனங்களை ஏனோ நிறுத்தி நிறுத்தி விசாரித்துக் கொண்டிருந்தனர். காவலர்களின் கண்களில் துளியும் சிநேகம் இருப்பதாகத் தெரியவில்லை. என்னை அழைத்துச் சென்ற நண்பரையும் நிறுத்தி விசாரித்தனர். ஏதோ சிங்களத்தில் வாக்குவாதம் நடந்தது. ஆச்சரியமாக இருந்தது, நண்பர் அந்த காவலர்களிடம் சிறிதும் பயம் இல்லாமல் விவாதித்தது.

அடுத்த நாள் காலை வவுனியாவிலிருந்து யாழ்ப்பாணம் வரை, செல்வதாகத் திட்டம். வடக்குப் பகுதிகளான கிளிநொச்சி, முல்லைத்தீவு, பரந்தன், ஆனையிறவு, யாழ்ப்பாணம் பகுதிகளுக்குச் செல்ல இலங்கை பாதுகாப்புத் துறையினரடிமிருந்து அனுமதிக் கடிதம் பெறவேண்டும் என்பதால், என்னுடைய கடவுச்சீட்டின் பிரதியை கொழும்பு நண்பரிடம் கொடுத்துவிட்டு, அடுத்த நாள் அனுமதிக் கடிதம் கிடைத்தவுடன் மின் மடலில் அனுப்ப வேண்டியிருந்தேன்.

இலங்கையில் ’போயா’ தினத்திற்காக பொதுவிடுமுறை நாள் என்பதால், அனுமதிக் கடிதம் கிடைப்பதில் சிக்கல் இருக்கிறது என்று நண்பர் சொல்ல, பெருத்த ஏமாற்றமாக இருந்தது. சரி சென்று பார்ப்போம், சோதனைச் சாவடியில் அனுமதி கிடைத்தால் செல்வோம் என புறப்பட்டோம். வாகனம் வவுனியாவைத் தாண்டி ஏ-9 வீதியில் வாகனம் விரையத் துவங்கியது. தாண்டிகுளம் தாண்டும் வரை அவ்வளவாக இராணுவம் கண்ணில் படவில்லை. சாலைக்குப் பக்கவாட்டில் புகையிரதத் தடமும் உடன் பயணித்து வருகிறது. ஓமந்தை பகுதிக்குள் நுழைந்ததிலிருந்து சுமார் முந்நூரு அடிக்கு ஒரு குடில் என ஏ-9 வீதி மற்றும் புகையிரத தடம் ஓரம் இராணுவம் அமைத்திருக்கிறது. இரண்டு பக்கமும் வயல் வெளிகள் வெறும் புற்கள் மூடி அகலமாகக் கிடக்கின்றது. ஒவ்வொரு இராணுவக் குடில்களின் முன் புறத்திலும் தவறாது ஒரு துப்பாக்கி சாலையை நோக்கியும், புகையிரதம் செல்லாத வெற்றுத்தடத்தை நோக்கியும் தயார் நிலையில் வைக்கப்பட்டிருக்கிறது, ஒவ்வொரு குடிலுக்குள்ளும் இரண்டு இராணுவ வீரர்களாவது தென்பட்டனர். சாலைகளில் குறிப்பிட்ட இடைவெளியில் வாகனங்கள் விரைந்து கொண்டிருக்கின்றன. முன் செல்லும் வாகனத்தை வேகத்தோடு ஒதுங்கி தாண்டிச் செல்வது தடைசெய்யப்பட்டுள்ளதாம்.

துப்பாக்கிக் குடில்களைத் தாண்டி ஓமந்தை சோதனைச் சாவடியில் இராணுவத்தால் எங்கள் வாகனம் ஓரம் கட்டப்பட்டது. நண்பரின் அடையாள அட்டை பரிசோதிக்கப்பட்டது, என் இந்திய கடவுச்சீட்டை வாங்கிப்பார்க்கும் போது, அலட்சியமான புன்னகை அந்த இராணுவ அதிகாரியின் இதழோரம் வழிந்தது. பாதுகாப்புத் துறையின் அனுமதிக் கடிதம் இல்லாமல் அனுமதிக்க முடியாது என்று திருப்பியனுப்பப் பட்டோம். இந்தியன் என்றதையறிந்த அந்த இராணுவத்தானின் இதழோரம் வழிந்த அலட்சியப் புன்னகை மனதில் ஆழப் பதிந்து குடைந்துகொண்டேயிருந்தது.

தமிழர்கள் யாரைச் சந்தித்தாலும் வரவேற்று உபசரிப்பதில் அன்பை அள்ளித் தெளிப்பதை உணரமுடிந்தது. சந்தித்தவுடன் தவறாமல் கேட்கும் முதல் கேள்வி, இலங்கை எப்படியிருக்கிறது, உங்களுக்கு பிடித்திருக்கிறதா. பெரிதும் போர் குறித்து பேசுவதை ஒரு வகையாய் தவிர்க்கவே விரும்புகின்றனர். நீண்ட நேரம் பேசும் போது, கொஞ்சம் கொஞ்சமாக போர் குறித்த செய்திகளை ஒரு வித விரக்தியோடு பகிர்ந்து கொள்ள முன் வருகின்றனர். தோல்வி மிகப் பெரிய அயர்ச்சியைக் கொடுத்திருக்கிறது. ஊடகங்களின் துரோகத்தனத்தை, தமிழகத்தின் சில அரசியல்வாதிகளின் நாடகத்தனத்தை குறித்து மிகக் கடுமையாக வேதனையோடு பேசுகின்றனர்.

விடுமுறை தினமாதலால் பிறிதொரு இடத்தில் ஒரு பகுதியில் இருந்து வேறு பகுதிக்குச் சென்று கொண்டிருந்த இந்திய ராணுவத்தினர் சிலரைச் சந்தித்து உரையாடும் வாய்ப்பு கிடைத்தது. மிதிவெடி, கண்ணி வெடிகளை அகற்றும் இந்திய ராணுவத்தைச் சார்ந்த அவர்கள் போர் நடந்த உள்ளடங்கிய கிராமங்களையொட்டி பகுதிகளில் புதைத்து வைக்கப்பட்டிருக்கும் கண்ணி வெடி, மிதி வெடிகளைக் கிண்டிக் கிண்டி எடுக்கும் பணிகளைச் செய்து வருகின்றனர்.

முதலில் ஒருவித சந்தேகத்தோடு பேசத் தயங்கியவர்கள் கொஞ்சம் நம்பிக்கையடைந்த பின் நிறைய பகிர்ந்து கொள்ளத் துவங்கினர். இவர்களும் புலிகள் அமைப்பை இயக்கம் என்றும், பிரபாகரன் அவர்களை தலைவர் என்றுமே பெயரிட்டு அழைப்பது உண்மையிலேயே ஆச்சரியமாக இருந்தது. இயக்கம் புதைத்து வைத்த வெடிகளுக்கு நிகராக, இராணுவமும் வெடிகளை நிலத்தில் புதைத்து வைத்துள்ளதாக சொல்கின்றனர். ஒவ்வொரு நாட்டு இராணுவமும் பாதுகாப்பிற்காக எல்லையோரங்களில் கண்ணிவெடி, மிதிவெடிகளை வைக்க ஐக்கிய நாடுகள் சபை அனுமதிக்கின்றது, அதே நேரம் அதற்கான சில வரைமுறைகள் உண்டு, ஆனால் எந்த வரைமுறைகளையும் மதிக்காமல் இலங்கை இராணுவம் வெடிகளை வைத்திருக்கின்றது.

அவர்கள் பேச்சில் தமிழர்கள் மேலும், இயக்கம் மேலும் மரியாதை வைத்திருப்பதை உணர முடிந்தது. இறுதிக்கட்டப் போரில் இந்திய வீரர்கள் பங்கேற்றதாகச் சொல்வதை மறுக்கும் அவர்கள், இறுதிப்போருக்காக ரேடார் மற்றும் தொழில் நுட்ப உதவிகளை இந்திய ராணுவம்தான் செய்ததாக அடித்துச் சொல்கின்றனர். புலிகள் அமைப்பிற்கு வரவேண்டிய ஆயுதக் கப்பல்களை அழிக்க இந்திய ராணுவமே முக்கியக் காரணம், அதுவே போரின் தோல்விக்கான காரணங்களில் முக்கியமானது என்றும் சொல்கின்றனர். கூடவே கிழக்கில் புலிகளுக்குள் ஏற்பட்ட பிரிவும் தோல்விக்கு முக்கியக் காரணம் என்பதும் அவர்களின் கருத்து. சீனாவின் பங்கு குறித்து கேட்கும் போது, ஆயுதங்களை பெருமளவில் கொடுத்தது சீனாதான் என்றும் அதற்கு பிரதியுபகாரமாக, மன்னாரில் சீனப் படை தளம் அமைக்க அனுமதி கொடுத்து, பொது மக்கள் செல்லத் தடைவிதிக்கப்பட்ட ஒரு பகுதியில் சீனர்கள் குடியமர்த்தப் பட்டிருப்பதாகவும் கூறுகின்றனர். மன்னாரில் உட்கார்ந்து மிக வசதியாக சீனா இந்தியாவை கவனித்து வருகிறது, அதுவும் தமிழகத்திற்குத்தான் பெரிதும் இடைஞ்சலான ஒன்று என்பதும் அவர்கள் கருத்து. கிராமப் புறங்களில் பிரபாகரன் இறந்துவிட்டார் என்று சொன்னால் அடிக்க வந்துவிடுவார்கள் என்று ஒரு வீரர் சொன்னதை கசப்பான புன்னைகையோடு கேட்கவேண்டியிருந்தது.

வவுனியா முகாமில் கைது செய்யப்பட்ட பெண் புலிகளை அடைத்து வைத்திருப்பதாகச் சொன்னார்கள். ஓமந்தை மத்தியக் கல்லூரி இப்போது முகாமாக மாற்றப்பட்டுள்ளது. அங்கு போரில் பிடிபட்ட புலிகளை அடைத்து வைத்திருப்பதாகச் சொல்கின்றனர். கடந்து போகும் வேலையில் கவனிக்கும் போது, பக்கவாட்டில் சுருண்டு கிடக்கும் கம்பியோரம் ஒரு ஆள் மெலிந்த தேகத்தோடு, சுடும் வெயிலில் நின்று கொண்டு சாலையைப் பார்த்துக் கொண்டிருப்பது தெரிந்தது. சரி முகாமில் இருக்கும் புலிகளின் எதிர்காலம் எப்படிப்பட்டதாக இருக்கும் எனக்கேட்கும் போது முகம் இருண்டு போகிறது.

பெரும்பாலும் சந்தித்த மனிதர்களில் சிலர் கடினமான செய்திகளைப் பேசும் போது இடையிடையே, முந்தைய போர் வெற்றிகளை சிலவற்றை சிலாகித்துச் சொல்லி, மனித மனம் நாடும் தற்காலிக சுகத்தால் மனதை சிறிது நேரம் சமநிலைப்படுத்திக் கொள்வதாகவே தோன்றுகிறது. இத்தனை காலம் இதற்காகத்தான் எங்கள் பொடியன்கள் போராடினார்களா எனக் கேட்கும் போது இயலாமை நம்மையும் அடித்து நொறுக்கிறது.

எல்லா மனிதர்களுக்கும் ஏதோ ஒரு வடிவத்தில், வகையில் பாதிப்பு இருந்து கொண்டேயிருக்கின்றது. போர் நடந்த பகுதியில் இருந்த குடும்பங்கள் குறைந்த பட்சம் தங்கள் குடும்பத்திலிருந்து பாதி மனிதர்களையாவது இழந்திருக்கின்றனர். கிளிநொச்சியைக் கைப்பற்றியது முதல் இராணுவம் கொடூரமான ஒரு யுக்தியை கையாண்டிருப்பதாக அவர்கள் பேச்சில் உணரமுடிகிறது. நகர்புறத்தில் இருக்கும் சில கட்டிடங்களைத் தவிர்த்து, கிளிநொச்சி தொடங்கி முல்லைத்தீவு வரை, போரில் பாதிக்கப்பட கட்டிடங்கள் உட்பட எல்லாக் கட்டிடங்களையும் புல்டோசர் மூலம் முற்றிலும் இடித்துவிட்டதாக தெரிவிக்கின்றனர். கிட்டத்தட்ட கிளிநொச்சி முதல் முல்லைத்தீவு வரை மனிதர்கள் பிழைப்பதற்கான வாய்ப்புகள் அனைத்தும் முற்றிலும் சிதைக்கப்பட்டிருக்கிறதாகவே உணரமுடிகிறது. முல்லைத்தீவைச் சார்ந்தவர் மிக இயல்பாகச் சொல்கிறார், தன்னுடைய வீடு முற்றிலும் இராணுவத்தால் சிதைக்கப்பட்டதாகவும் போர் முடிந்தும் இன்னும் அதற்கான நிவாரணம் வழங்கப்படவில்லை அப்படியே வழங்கினாலும் மூன்று லட்சம் மட்டும் வழங்குவார்கள் (இந்திய மதிப்பில், ரூ.1,20,000), அது எந்த வகையிலும் வீடு கட்ட உதாவது என்பதுதான்.

போரை உக்கிரமாக நடத்தி முடித்த ராணுவம், போரினால் சாகும் மனிதர்களைப் பற்றி சிறிதும் சிந்திக்காமல் ஆத்திரத்தையும், அவசரத்தையும் காட்டிய அரசாங்கம், போரில் வாழ்விடங்களைத் துறந்து, மிகக் கொடுமையான முகாம்களில் அடைபட்டுக் கிடக்கும் மனிதர்கள் குறித்து சிறிதும் அக்கறையில்லாமல் இருப்பதுவும், அப்படியே ஏதோ கண் துடைப்பிற்காக ஆங்காங்கே குடியமர்த்தப் போவதாக போக்கு காட்டிக்கொண்டிருப்பதும் சிறிதும் மனிதாபிமானமற்ற செயல் என்பது மிகத் தெளிவாகத் தருகிறது. முகாமில் அடைந்து கிடக்கும் மக்களை, அப்படியே தொடர்ச்சியாக அடைத்து வைத்து மனதளவிலும், உடலளவிலும் முற்றிலும் சிதைப்பதை மிகத் தெளிவாக அரசு செய்து வருகிறது. முகாமில் இருக்கும் மக்களை வெளியில் இருக்கும் மக்கள் எப்படி நோக்குகிறார்கள் என்று கேட்கும் போது, வெளியில் இருக்கும் மக்களும், தங்கள் வீடு, உறவுகளில் பாரிய அளவில் இழப்பைச் சந்தித்திருப்பதால், அது அவர்களுக்கு மிக பெரிய தாக்கத்தைக் கொடுக்கவில்லையென்றே சொல்கின்றனர். இதுவும் கூட இராணுவ யுக்திக்கு ஒரு வித வெற்றி மனோநிலைதான்.

வட மற்றும் கிழக்கு பகுதியில் அரசோடு இணைந்து பதவிகளை அனுபவித்து வரும் சில தலைவர்கள் குறித்து பேசும் போது, மக்கள் அந்த இயலாமையிலும் கொந்தளிக்கின்றனர் வெள்ளை வேன் என்ற பதத்தை பயன்படுத்துகின்றனர். வடபகுதியைச் சார்ந்த ஒரு குறிப்[பிட்ட அரசியல் ஆட்கள் வெள்ளை வேன் மூலம் மக்களைக் கடத்தி மிரட்டி பணம் பறிப்பதை வாடிக்கையாகக் கொண்டுள்ளனர் என்பது கசப்பான உண்மை. புலிகள் தமிழர்கள் பகுதியை ஆண்ட பொழுது திருட்டு, கொள்ளை, கற்பழிப்பு என்பது நூறு சதவிகிதம் ஒழிக்கப்பட்டிருந்தது. அதே பூமியில் இன்று அரசாங்கத்தின் கைக் கூலியாய் இருக்கும் தமிழர்கள் ஆள் கடத்தலிலும், இராணுவ வீரர்கள் கற்பழிப்பிலும் ஈடுபடுவது மிகச் சாதாரணமாக இருக்கின்றன.

போரின் இறுதி சில நாட்களில் எல்லைகள் மிகச் சுருங்கி தாக்குப்பிடிக்க முடியாது போன புலிகள், பொது மக்களை தங்கள் கேடயமாக பயன்படுத்தியதாகவும், அதில் இருந்து தப்ப முயன்றவர்களை ஒரு கட்டத்தில் புலிகளே சுட்டதாகவும் சிலர் கூறுகின்றனர். அதே சமயம் இராணுவத்தின் ஆட்கள் புலிகளோடு புலிகளாக கலந்திருந்ததாகவும், அவர்களே அப்படிப்பட்ட குழப்பங்களை ஏற்படுத்தியதாகவும் சிலர் கூறக்கேட்டேன்.

மேலும் இறுதிக் கட்டத்தில் தோல்வியை உணர்ந்த புலிகள் தாங்கள் வைத்திருந்த கோடிக்கணக்கான பணத்தை இராணுவத்திடம் கிடைக்காமல் இருக்க எரித்தது, இப்போது இராணுவம் ஆங்காங்கே சத்தமில்லாமல் தோண்டியெடுத்துப் போகும் தங்கப் புதையல்கள் குறித்து கூறும் போது, அதை தங்களையே நம்பி கடைசிவரை வந்த மக்களிடமாவது புலிகள் கொடுத்திருக்கலாம் என்றும், இப்போது அது எந்த வகையிலும் தமிழ் மக்களுக்கு பயன்படாமல் போய்விட்டதையும் மிகுந்த கொஞ்சம் வேதனையோடு ஒருவர் குறிப்பிட்டார்.

என்னோடு பேருந்தில் பயணித்த, கிழக்கு பகுதியைச் சார்ந்த மருந்து விநியோகஸ்தரான ஒருவர், தங்களைப் போன்றவர்களுக்கு எல்லாப் பகுதிகளுக்கும் செல்ல அனுமதி இருந்தும், மாங்குளத்திலிருந்து முல்லைத் தீவு வரை செல்லும் சாலையில் தங்களையும்கூட முற்றிலும் அனுமதிப்பதில்லை எனவும், அந்தப் பகுதிகள் இன்னும் மர்மமாகவே அரசாங்கத்தின் பிடியில் இருப்பதாகவும் கூறினார்.

எல்லோரும் வருத்தமாகக் கூறுவது, இறுதிக்கட்டத்தில் தங்கள் கண்முன்னே முகாமிற்கு என்று அழைத்துச் செல்லப்பட்ட பெருந்தொகையான மக்கள் என்ன ஆனார்கள் என்றே தெரியவில்லையென்பதே. குடும்பத்தில் தன்னோடு சக உறவாக இருந்த மகனையோ, மகளையோ, கணவனையோ எங்கிருக்கார், உயிரோடு இருக்கிறாரா இல்லையா என்றே தெரியாமல் தேடிக் கொண்டிருக்கும் கொடுமை யாருக்கும் நிகழக்கூடாது என்றே நினைக்கின்றனர். இறுதிக்கட்ட போர் நடந்த பகுதியில் இருந்த மக்கள் பல இலட்சம், அதில் இறந்ததாகவும், முகாமில் இருப்பதாகவும் அடையாளம் காட்டப்பட்டவர்கள் கிட்டத்தட்ட ஒரு லட்சம் மட்டுமே, மீதி அவ்வளவு பேர் என்ன ஆனார்கள் என்ற கேள்வி மட்டும் எல்லோருக்குள்ளும் குடைந்துகொண்டேயிருப்பதை அறிய முடிகிறது. தகவல் தொடர்பு சுருங்கிப்போன உலகத்தில் இப்படி லட்சக்கணக்கில் காணாமல் போன, கொலையுண்ட மக்கள் குறித்து பல நாடுகள் குறைந்த பட்சம் அழுத்தம் கூட தராமல் மேம்போக்கான மௌனம் காத்து வருவது அறுவெறுப்பான ஒன்று.

கடைசி வரை இந்தியாவோ அல்லது வேறு நாடோ எப்படியாவது போர் நிறுத்தத்திற்கு உதவும் என உயிரைக் கையில் பிடித்துக்காத்திருந்த மக்களின் உயிர்கள் கொத்துக்கொத்தாக பறிபோனதை நினைக்கும் போது பதறுகிறது. ஒட்டுமொத்த உயிர்களோடு விளையாட இந்திய அரசியலுக்கு அப்படியென்ன இத்தனை ரத்த வெறி என்று கேட்கும் ஓங்கிய குரல்களுக்கு தலை தாழ்ந்துதான் இருக்க வேண்டியிருந்தது. ஒட்டுமொத்த ஊடகங்கள் தமிழர்களின் தோல்வியை விலை பேசி வீதி வீதியாக விற்றதை கோபத்தோடு பகிர்கிறார்கள். போரின் இறுதிவரை புலிகள் அமைப்பு எப்படியாவது இராணுவத்தை திருப்பி அடிப்பார்கள் என்பது போல் ஒரு மாயையை உருவாக்கி தங்களுக்கு உண்மையை புரியாமலே ஏமாற்றி வைத்திருந்த ஊடகங்களை பேச்சினாலேயே காறி உமிழ்கிறார்கள்.

யாழ்பாணத்தைப் பூர்வீகமாகக் கொண்டாலும் காலம் காலமாக கொழும்பிலேயே வசித்து வரும் ஒரு விடுதித் தொழிலாளி, புலிகளின் வீழ்ச்சி தங்களுக்கிருந்த அனைத்து நம்பிக்கைகளையும் வீழ்த்தி விட்டதாக வலியோடு கூறினார். புலிகள் அமைப்பு இருக்கும் வரை தங்களை ஒரு வித பயம் மற்றும் மரியாதையோடு மதித்த சிங்களவர்கள், இப்போது அவர்களை கேவலமாக நடத்த முனைவதாக, நான் கொழும்பில் சந்தித்த ஒரு தமிழர் கூறினார், இத்தனைக்கு அவருடைய குடும்பம் காலம் காலமாக கொழும்பில் வசித்து வருகிறது.

ஏ-9 வீதி வழியாக திரும்பி வரும்போது ஆங்காங்கே படர்ந்திருக்கும், மர நிழலில் சிறப்பு சேவை என ஆங்கிலத்தில் எழுதப்பட்ட பேருந்துகள் நின்று கொண்டிருக்க, மக்கள் காலை உணவை சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். இவர்கள் அனைவரும் தென் இலங்கையிலிருந்து யாழ் வரை சுற்றுலா என்ற பெயரில் இராணுவ வெற்றிகளைப் பார்த்துவர அனுப்பி வைக்கப்படுவதாகவும், அதற்கு ஒவ்வொரு பேருந்திற்கும் ரூ.25,000 அரசாங்கம் தந்துதவுதாகவும் கூறுகிறார்கள். புலிகள் இறந்தவர்களுக்கு அமைத்திருந்த மாவீரர் துயிலகம் அனைத்தும் இடித்து அழிக்கப்பட்டு இறந்த ராணுவ வீரர்களுக்கு நினைவிடம் கட்டப்பட்டிருப்பதாகக் கூறுகின்றனர். வென்றெடுத்து விட்டோம் என்று கொக்கரிக்கும் ராணுவமும், அரசும் இன்னும் ஏன் முன்னூரு அடிகளுக்கு ஒரு துப்பாக்கி என காவல் காக்கிறதென்று தெரியவில்லை. இந்தக் காவல்களுக்கு மத்தியில்தான் தங்கள் வெற்றிகளை சுதந்திரமாக தம் இன மக்களை அழைத்து ரசிக்கச் சொல்லி அழகு பார்க்கின்றது.

விரக்தி மேலிட ஒரு அடர்மௌனம் எல்லோர் மனதிலும் இன்னும் கிடந்து தவித்துக் கொண்டிருக்கிறது. அந்த மனிதர்களுக்கு இப்போதைய உடனடித்தேவை போர் அல்ல, தொலைந்த தங்கள் உறவுகளைத் தேடிக்கண்டுபிடிக்க வேண்டியதும், முகாமில் மிகக் கேவலமான சூழலில் இருப்பவர்கள் வெளியில் வந்து சுதந்திரத்தை அனுபவிக்க வைப்பதுமே. மீண்டும் ஒரு போர், இரத்தம், இழப்பு குறித்து சற்றும் சிந்திக்கும் மனோநிலையில் நான் சந்தித்த மனிதர்கள் இல்லவே இல்லை. கொழும்பில் சந்தித்த நண்பர் சொன்னதும் நாங்கள் இப்போது கட்டமைக்க நினைப்பது எங்கள் மனிதர்களின் உளவியல் மேம்பாடு மற்றும் பொருளாதார மேம்பாட்டிற்கு உதவும் விசயங்களைத் தான். எதையும் அரசியலாக்கும், தமிழ்நாட்டின் சில அரசியல்வாதிகள் போலி பற்றையும், தர்மம் சிறிதுமின்றி மீண்டும் ஒரு போர் நிகழும் என்ற தொணியில் எழுதிவரும் ஊடகங்களை அந்த மனிதர்கள் முற்றிலும் புறந்தள்ளி காறி உமிழ்வதாகவே தோன்றுகிறது.

நேரம் கடக்கக்கடக்க அங்கிருந்து புறப்படவேண்டும் என்ற மனநிலையில், அந்த மண்ணின் மேலும், அந்தக் காற்றின் மேலும் ஏதோ பாசம் கூடிக்கொண்டே போனது, ஏதோ சொந்த ஊரில் ஒரு உறவினர் வீட்டில் இருப்பது போன்று அந்நியத்தன்மை ஏதுமற்ற மண்ணாகவே வவுனியா மனதிற்குப் பட்டது.

இரவு பனிரெண்டு மணிக்கு வவுனியாவிலிருந்து கொழும்பு நோக்கிய பேருந்தில் அமர்ந்தேன். சொல்ல முடியாத அளவிலான மிகுந்த களைப்பு, கொஞ்சம் சொகுசு கூடிய இருக்கை, குளிர்ப் பதனப்படுத்தப்பட்ட பேருந்து, இருந்தும் பொட்டுத் தூக்கம் இல்லை. மனதுக்குள் ஏதோ சுழற்றி சுழற்றி அடித்துக்கொண்டே இருந்தது. இந்த மனிதர்களும் மனிதர்களாய் மகிழ்ச்சியாய் வாழ்ந்திட ஒரு நாள் வரவேண்டும் என்ற பிரார்த்தனை ஓயாமல் உள்ளுக்குள் ஓடிக்கொண்டிருந்தது. ஏதாவது ஒரு விடியலில் முகாம்கள் எல்லாம் மறைந்து போய், அங்கு அடைந்து கிடக்கும் மனிதர்கள் தங்கள் உறவுகளோடு வீடு, வாசல் என கை கோர்த்து திரிவதை, நிம்மதியாய் உறங்குவதை எப்போது காண முடியும் என்ற ஏக்கம் மனது முழுதும் நிரம்பிக்கிடந்தது. அங்கு வாழும் மனிதர்களுக்கு மனதளவில் ஏதாவது ஒரு வகையில் நாம் ஆறுதலாய் இருப்பது மிக அவசியம் என்பது ஆழப்புரிந்தது.

nantri maaruthal/Erode Kathir

7 comments:

kalai said...

எழுதிய தமிழகத்து சகோதரனின் பெயரை ஏன் முரசு தவிர்த்தது??????.
தமிழகத்து சகோதரர் , வன்னி சென்று மக்களின் அவலத்தை இங்கு சொல்லியிருக்கிறார்.
ஈழத்துச்சகோதரர்கள் நல்லூர் கோவில் திருவிழா, தில்லாலங்கடி திரைப்படம் சென்று பார்த்த சுற்றுலாக்களை சொல்லியிருக்கிறார்கள்.

kirrukan said...

[quote]வென்றெடுத்து விட்டோம் என்று கொக்கரிக்கும் ராணுவமும், அரசும் இன்னும் ஏன் முன்னூரு அடிகளுக்கு ஒரு துப்பாக்கி என காவல் காக்கிறதென்று தெரியவில்லை. இந்தக் காவல்களுக்கு மத்தியில்தான் தங்கள் வெற்றிகளை சுதந்திரமாக தம் இன மக்களை அழைத்து ரசிக்கச் சொல்லி அழகு பார்க்கின்றது[/quote].

சர்வதேசமும் நம்புது,சிங்களமும் நம்புது......இந்தியாவும் நம்புது

Anonymous said...

வேண்டுமென்று பெயரைத் தவிர்க்கவில்லை. இணையதளத்தின் பெயரைக் குறிப்பிட்டு இருந்தோம். இப்போது பெயரையும் குறிப்பிட்டு இருக்கின்றோம். உங்கள் ஆதரவுக்கும் கருத்துக்களுக்கும் நன்றி.

ஆசிரியர் குழு

kalai said...

நன்றிகள்

Kiri said...

கலை என்பவரின் நிலையைப் பார்த்தால் பரிதாபமாக இருக்கிறது. ஈழத்துச் சகோதரர்கள் இன்னமும் கஷ்டப்பட்டுக் கொண்டே இருக்க வேண்டும் என்றே எதிர்பார்க்கிறார்.

kalai said...

நான் எங்கே சொன்னேன். ஈழத்து சகோதரர்கள் கஸ்டப்படவேண்டும் என்று? .ஒரு வேளை உங்களை சொன்னதாக நீங்கள் நினைக்கிறீர்களா?. நான் சொன்னது அங்கு ஈழத்தில் வன்னியில் இன்னும் பலர் கஸ்டத்துடன் வாழ்கிறார்கள். இதனை தமிழகத்து சகோதர் சொல்லியிருக்கிறார். ஆனால் ஈழத்து சகோதரர்கள் தாங்கள் சுற்றுலா சென்றதைச் சொல்லியிருக்கிறார்கள். நீங்கள் சுற்றுலா செல்லுங்கள். ஆனால் அங்கு கஸ்டப்பட்டவர்களையும் நினையுங்கள்.

Kiri said...

ஈழத்துச் சகோதரர்கள் அங்கு கண்டதையே எழுதினார்கள், அவர்கள் பார்வையில் அமது மக்கள் ஏதோ ஒரு வகையில் தங்களை இயல்பு வாழ்க்கைக்கு மாற்றவிரும்புவதைக் காட்டியிருக்கின்றார்கள்.

நீங்களாக ஒரு முடிவை எடுத்து விமர்சிக்க முனைகிறீர்கள், அந்த ஈழத்துச் சகோதரர்கள் கஷ்டப்பட்டவர்களை நினைக்கவில்லை என்று ஒரு கட்டுரை மூலம் முடிவெடுக்கும் உரிமையை உங்களுக்கு யார் தந்தது?

சொந்த நாட்டில் எம் மக்கள் கஷ்டப்படும் போது நானும் நீங்களும் இணையத்தைப் பார்த்துக் கொண்டு தானே இருக்கிறோம்?