1. தொட்டுப்பார் - விமர்சனம்
2. ஒச்சாயி - விமர்சனம்
தொட்டுப்பார் - விமர்சனம்
நல்ல 'சரக்கு'ள்ள கதை! அதாவது படத்தின் பாதி ரீல் 'பார்'-ல்தான் கரைகிறது. மீதி ரீல்களை சண்டை இயக்குனர் குத்தகைக்கு எடுத்துக் கொள்ள, தொட்டுதான் பாரேன் என்று கோதாவில் குதிக்கும் ஹீரோவுக்கும், வில்லன் கோஷ்டிக்கும் நடக்கிற 'வார்'தான் இந்த ...பார்!
டாஸ்மாக் பாரில் வேலை செய்யும் ஹீரோ, ஒரு கைகலப்பில் சிக்கி போலீஸ் ஸ்டேஷனுக்கு வருகிறார். அங்குள்ள இன்ஸ்பெக்டரான கொச்சின் ஹனிபா அவருக்கு வேறொரு தொழிலை கற்றுக் கொடுக்கிறார். போலி ரேஷன் கார்டு மூலம் குற்றவாளிகளை ஜாமீனில் எடுப்பதுதான் அந்த தொழில். வாங்குகிற கட்டிங்கில் பாதி ஹனிபாவுக்கு. இப்படி போகிற பிழைப்பில் விழுகிறது மண். ஹீரோவால் விடுவிக்கப்படும் ஒருவன் ஒரு கொலையை செய்ய, தும்பை விட்டு விட்டு வாலை பிடிக்க அலைகிறது போலீஸ். தப்பித்து சென்னைக்கு வரும் ஹீரோ அங்கு சந்திக்கும் கொலைகளும் கோபங்களும்தான் மீதி.
கதாநாயகி இல்லாமல் ஒரு படமா? போலீசுக்கு பயந்து ஓடும் ஹீரோ விதார்த் கதாநாயகி லக்ஷனாவின் கன்னக்குழியிலேயே பதுங்கிக் கொள்ளலாம். அந்தளவுக்கு பெருங்குழி பொண்ணுக்கு. அது கிடக்கட்டும்.... விதார்த் நடிப்பு எப்படி? மின்னல் இடி இரண்டையும் மிக்ஸ் பண்ணியது போல சீறியிருக்கிறார். நடிப்பிலும் எபவ் ஆவரேஜ். தனக்கு வாழ்வளித்த இன்ஸ்பெக்டர் கண்ணெதிரே இறந்து போனதும் அவர் எடுக்கிற மின்னல் வேக ஆக்ஷன் இருக்கிறதே, அது சண்டை பிரியர்களுக்கான லட்டு.
தினமும் குடித்துவிட்டு 'பிளாட்' ஆகும் ஒருவரை வீடு தேடிக் கொண்டு போய் விடும் விதார்த் அவருக்கு பின்னால் இப்படி ஒரு கதை இருக்கும் என்று அறிந்திருக்க மாட்டார். ரசிகர்களும்தான்! அந்த குடிகார அழகம்பெருமாளின் டாக்டர் மனைவியான அனுஹாசன் சொல்கிற பிளாஷ்பேக், நிஜமாகவே ஷாக்!
அழகு உதட்டில் பான் பராக். அசத்தும் விழிகளில் கவிழ்க்கும் போதை என்று மஞ்சரியின் அறிமுகம் மஜாவாகதான் இருக்கிறது. ஆனாலும் நாலைந்து சீன்களுக்குள்ளாகவே பரலோகத்துக்கு பார்சல் பண்ணிவிடுகிறார்கள் அவரை.
வில்லனாகியிருக்கிறார் ரமணா. கூவாகம் திருவிழாவில் பெண் வேடத்தில் அவரை காட்டும் போதுதான் தெரிகிறது. பார்ட்டி 'அந்த' ரகம் என்று. அந்த பார்வையும், பாடி லாங்குவேஜும், முரட்டு உதைகளும் பயங்கரம். ரமணா மனசு வைத்தால் வில்லன் வேடத்தில் கோடம்பாக்கத்தையே ஒரு கலக்கு கலக்கலாம்.
பாருக்குள்ளே நல்ல காமெடி மயில்சாமி காமெடி! இவரை பெரிய சினிமா கதாசிரியர் என்று பம்மி கொண்டு மற்றவர்கள் மரியாதை கொடுக்க, அவரோ பலான கதை எழுதும் கொக்கோகப் புலி! நல்ல நகைச்சுவை.
ஸ்ரீகாந்த் தேவாவின் இசையில் பாடல்கள் இடம் தெரியாமல் நுழைந்து இம்சைக்குள்ளாக்குகிறது. ஒளிப்பதிவாளர் சசிக்குமார் தன் பணியை செவ்வனே செய்திருக்கிறார். கையை கட்டிப் போட்டுவிட்டு கத்தரியை கொடுத்திருப்பார்கள் போலிருக்கிறது. இருந்தும் இல்லாமலிருக்கிறார் எடிட்டர்.
மிக்சிங் முன்னே பின்னே இருந்தாலும், அறிமுக இயக்குனர் நந்துவின் கைவண்ணம் 'துட்டு'ப்பார்க்க வைக்கும் தயாரிப்பாளரை!
-ஆர்.எஸ்.அந்தணன்
ஒச்சாயி - விமர்சனம்
தென் மாவட்டங்களுக்கேயுரிய அதே 'ரத்த' சட்னிதான்! விடிஞ்சா சரக்கு, வீசுனா அருவா என்று திரியும் முரட்டு தாதா ஒருவன் எப்படி முள்ளங்கி பத்தையானான் என்பதுதான் கதை. தலைக்கொரு சாதி இருக்கிற காலத்துல, சாதிக்காரங்க பிரிஞ்சு நின்று 'தலை' எடுக்கிற கதை என்பதால் வரிந்து கட்டுகிறது வன்முறை. ஆனால் யதார்த்தமும், மண் மணமும் பின்னி பிணைந்திருக்கும்படி படமாக்கியிருப்பதால் ஒப்பாரிக்கு பதிலாக குலவை போட்டே கொண்டாடலாம் அறிமுக இயக்குனர் ஆசைத்தம்பியை.
ரெண்டாந்தரமாக கட்டிய மனைவி சோரம் போய்விட, அவளை வெட்டி போட்டுவிட்டு ஜெயிலுக்கு போகிறார் அப்பா. கொலைகாரன் பிள்ளை என்று ஊரே விரட்டியடிக்கிறது. குப்பை மேட்டில் வளர்கிறான் ஹீரோ. ஜெயிலில் இருந்து திரும்பும் அப்பா, பிள்ளை பற்றிய கனவுகளோடு ஊர் திரும்ப, அவனோ ஊரே அஞ்சும் ரவுடியாக கண்முன்னே! அப்பனையே சரக்குக்கு சைட் டிஷ் வாங்க அனுப்புகிற அளவுக்கு முரடு. பக்கத்து ஊரில் அனாதையாக இருக்கும் தங்கை மகளை அழைத்துக் கொண்டு ஊருக்கு வந்து சேரும் அப்பா, இருவரையும் சேர்த்து வைக்க நினைப்பதும், சேர்ந்தார்களா என்பதும் மெயின் கதை. வெட்டு குத்து ரத்தங்கள் சைட் டிராக்!
ஹீரோ தயாவிடம் புதுமுகம் என்ற கூச்சம் இல்லை. எந்நேரமும் இறுகிப் போன முகம் என்பதால் நடிப்பை பிழிய வேண்டிய அவசியமும் இல்லை. (பிழைத்தார் மனிதர்!) கொப்பும் குலையுமாக ஒருத்தி வந்த போதும், விடைத்துக் கொண்டு நிற்கிற அவரது கோபத்தை ரசிக்க முடிகிறது. காதல் வந்தபின் நைசாக பக்கத்தில் போய் படுத்துக்கொண்டு வழிகிற போதும் கூட!
இந்த கதைக்காகவே பெத்து போட்ட மாதிரி அப்படியரு யதார்த்தம் புதுமுகம் தாமரையிடம். கதைக்குள் நுழைந்து நாலைந்து ரீல்கள் பேசாமலேயிருந்து, ஒரு கட்டத்தில் பொங்கி வெடிக்கிறாரே... சிலிர்த்துப் போகிறது. எல்லா பொம்பளையையும் கேவலமா நினைக்கிறீயே, உங்கம்மாவும் ஒரு பொண்ணுதான? வீட்டுக்கு வந்தா வா. இல்லேன்னா எக்கேடும் கெட்டுப்போ என்று நடையை கட்டுகிற போது தியேட்டர் மொத்தமும் சைலண்ட்டாகிறது.
நடிக்கும்போதே இது அவார்டு படம் என்று நினைத்திருப்பார் போலிருக்கிறது. இம்மியளவும் கூட குறையாத நடிப்பு ராஜேஷிடம். அவரது திரையுலக பயணத்தில் இது தடயம் பதிகிற படம்.
தயாரிப்பாளர் திரவிய பாண்டியனுக்கும் இந்த படத்தில் மிக முக்கியமான கேரக்டர். கூத்துப்பட்டறை கலைஞரை போல அநாயசமான நடிப்பு. போட்ட பணத்துக்கெல்லாம் நாம் ஒருவரே நடிப்போம் என்று எல்லா சீன்களிலும் மூக்கை நுழைக்காமல் இயல்பாக நடித்து விய(ர்)க்க வைத்திருக்கிறார். முதுகுல சுட்டு கோழையாக்கலாம்னு நினைச்சியா, நெஞ்சுல சுடுய்யான்னு நிமிர்ந்து நிற்கிறபோது அவரது கேரக்டரும் நிமிர்ந்து நிற்கிறது.
கஞ்சா கருப்பு, ஷகிலா ஜோடியின் ஆட்டத்தில் கரைபுரண்டு ஓடுகிறது கலகலப்பு. ஒரு தீப்பெட்டி வாங்கிட்டு வர்ற நேரத்துல, 'நடந்திருக்குமோ' என்று கருப்பு தவிக்கிற தவிப்பு ஐயோ பாவம். இவர்கள் எல்லாரையும் து£க்கி சாப்பிட்டிருக்கிறான் அந்த மனவளர்ச்சி குன்றிய பையன் ஒச்சு. அவன் கண்ணும், டயலாக் டெலிவரியும் நட்ட நடுபகலில் கூட நடுங்க வைக்கிறது நம்மை. நடிக்க வைத்த இயக்குனருக்கு இந்த இடத்தில் ஸ்பெஷல் பாராட்டுகள்.
கிராமத்தை கண் முன் நிறுத்தும் பிரேம் சங்கரின் ஒளிப்பதிவும், திரும்ப திரும்ப முணுமுணுக்க வைக்கிற பாடல்களுடனான ஜீவராஜாவின் இசையும் ஒச்சாயியை ஒசத்தியாக்கியிருக்கின்றன. குறிப்பாக 'கம்மங் காட்டுக்குள்ள...' பாடலை ஆயிரம் முறை கேட்டாலும் அலுக்காது.
சாதியை, தாங்கிப்பிடித்தால் கூட பரவாயில்லை. ஓங்கிப் பிடிக்கிற கதை என்பதுதான் நெருடல்.
-ஆர்.எஸ்.அந்தணன்
நன்றி தமிழ்சினிமா.கொம்
No comments:
Post a Comment