வாழும் போதே கௌரவிப்பு! ஈழத்து படைப்புலகின் நண்பன்:திரு.பத்மநாப ஐயர்.

.







                                                                                    முல்லைஅமுதன்

வாழும் போதே கௌரவிக்கிற நிகழ்விற்கு பொருத்தமானவர்களில் முதலிடத்தை பெறுபவர் திரு. பத்மநாப ஐயர் அவர்கள். ஈழத்து இலக்கிய உலகில் பன்முகப் பார்வை கொண்டவர். நவீன படைப்பிலக்கிய முயற்சிகளின் உந்து சக்தியாக விளங்குபவர். பதிப்பு, படைப்புகளைத் தேர்ந்தெடுப்பதின் திறமை, திசைகளெங்கும் வருகிற படைப்புகளில் தரமானவற்றை பலரையும் படிக்க வைப்பதிலும் முன் நிற்கிறார். நாற்பது ஆண்டுகளுக்கு மேலாக வெளியீட்டு துறையில், ஆக்கங்களை தொகுப்பதிலும் ஆர்வம் காட்டி வருவது நமக்கு கடவுள் தந்த கொடையாகும்.

28/08/1941 இல் பிறந்த பத்மநாப ஐயர் தீவிர இலக்கிய வாசகனாக இருப்பதால் தான் நல்ல இலக்கிய முயற்சிகளை கொணர்வதில்/ தேடுவதில் ஆர்வம் காட்டுகிறார் என உணர முடிகிறது. கூடவே இவருக்கு வாய்த்த கல்வி, வீட்டுச் சூழல், நண்பர்கள் இவரைச் சரியான திசையில் செல்ல வைத்தது. அ.யேசுராஜா, மு.நித்தியாந்தன், மு.புஷ்பராஜன், என்.கே.மகாலிங்கம், ஏ,ஜே.கனகரட்னா, சட்டநாதன், குப்பிளான்.ஐ.சண்முகம், கே.கணேஷ், செல்வா.கனகநாயகம், சு. வில்வரத்தினம், சசி.கிருஷ்னமூர்த்தி, மு.பொன்னம்பலம், சேரன் ,நிர்மலா,ரகுபதி, வ.ச.ஐ.ஜெயபாலன், எஸ்.வி.ராஜதுரை, வ.கீதா, சுந்தரராமசாமி, நா.கண்ணன், 'கிரியா.ராமகிருஸ்னன், சி.மோகன் என விரிகிறது இவரின் நண்பர்கள் கூட்டம்.


டொமினிக் ஜீவா, கைலாசபதி, காவலூர் ஜெகநாதன் போன்றோரின் முயற்சியினால் ஒரு வழியாக நமது இலக்கியம் முன்னெடுக்கபட்ட சூழலில் முதன் முதலாக தென்னக இலக்கிய உலகில் நமது படைப்புகள் பற்றி பேச வைத்த பெருமை திரு.பத்மநாப ஐயரையே சாரும்.


அந்த நாட்களில் வெளி வந்த தீபம், கணையாழி, எழுத்து, கசடதபற, காலச்சுவடு, படிகள், புதியகலாசாரம் எனப் பல சிறு சஞ்சிகைகளை பலருக்கு அறிமுகபடுத்தியதுடன் அது போல சஞ்சிகைகளும் நம்முள் வர உந்து சக்தியாக இருந்தவர். புதுசு, அலை, சமர் குறிப்படதக்கவைகள். ஐயர் என்றாலே இலக்கிய உலகில் தெரியாதவர்கள் இல்லை எனலாம்.


முதன் முதலில் நூலக சுட்டெண்ணுடன் வெளி வந்த ஈழத்து தமிழ் நூல் வெளியீடு இவர் தொகுத்த அலை இதழ்களின் தொகுப்பே. அச்சிடலின் முன் மாதிரியான தொகுப்புக்களைக் கொண்டு வந்ததில் ஓவியர். மார்க்ஸ் அவர்களின்' தேடலும் படைப்புலகமும்'(1987) நூலாகும். தமிழ் நாட்டிலும் வந்ததில்லை எனச் சொல்வர். அந்த நாட்களிலேயே நாற்பத்தைந்தாயிரம் ரூபாய் செலவில் தயாரிக்கப்பட்ட நூலாகும். வடிவமைப்பில் புதுமுயற்சியாகவும் கருதப்பட்டது. மேலும் தரமான கவிதைகளைத் தேர்ந்தெடுத்து 'மரணத்துள் வாழ்வோம்'(1985) எனும் தொகுப்பாக இன்றும் பேசப்படுகிற தொகுப்பாக்கித் தந்துள்ளார்.


ஐயர் என்றாலே அவரின் இலக்கிய முகமே நம் கண் முன் வந்து நிற்கிறது. ஈழநாடு ஆசிரியர் சபாரத்தினம் எழுதிய ஆசிரியத் தலையங்கங்களைத் தொகுத்து 'ஊரடங்கு வாழ்வு'(1985) தமிழியல் வெளியீடாக வெளியிட்டு உலகிலேயே முதலில் வந்த ஆசிரியத் தலையங்கங்களின் தொகுப்பெனும் பெருமையையும் தந்துள்ளது. கவிதை என்றவுடன் பலருக்கும் ஞாபகம் வருவது சண்முகம் சிவலிங்கம். அவரின் 'நீர்வளையங்கள்'(1988) ஐம்பத்தெட்டுக் கவிதைகளைக் கொண்ட நூலாகும். சுந்தர ராமசாமி, கைலாசநாதக்குருக்கள் போன்றோர் மீது அபிமானம் கொண்டிருந்தவர்.


திருமதி.பத்மநாப ஐயரின் 'இலங்கையின் தோட்டப் பள்ளிக்கூடங்களின் கல்வியமைப்பும் பிரச்சினைகளும்'(1988) வெளியிட்டு இன்னொரு பரிமாணத்தினை படைப்பில்/வெளியீட்டில் காட்டி நின்றார். கா.கைலாசநாத குருக்களின் 'இந்து பண்பாடு:சில சிந்தனைகள்' நூலை 1986 இலும் 'சைவத் திருக்கோவிற் கிரியை நெறி' நூலை 2009 இலும் வெளிவரக் காரணமாக இருந்தவர். வண்ணார்பண்ணையை பிறப்பிடமாகக் கொண்டிருந்தாலும் பல இடங்களிலும் தந்தையுடனும், கல்வி, தொழில் நிமித்தம் பல இடங்களிலும் வசிக்க நேர்ந்ததில் பல இலக்கிய நேசிப்பாளர்களை நண்பர்களாக்கியும் கொண்டார். தெளிவத்தை.ஜோசெப், கே.கணேஸ் குறிப்பிடதக்கவர்கள்.


யாழ் நூலகம் எரியுண்ட போது அதன் மீள் எழுகைக்காக தன் பங்களிப்பை அன்றே வழங்கியவர். பின் நாளில் வெளி வந்த நூலகம் பற்றிய (Burnning memories)- விவரண சித்திரத்தின் பின் ஒத்துழைப்பை வழங்கியவர்களில் இவரும் ஒருவர். தர்மசிறி பண்டாரநாயக்காவின் சின்னத்திரைப்பட முயற்சிகளுக்கு ஒத்துழைப்பு வழங்கியதன் மூலம் இன்னொரு பரிமாணதிற்கான ஒத்துழைப்பையும் வழங்கி ஈழத்து இலக்கிய பரம்பலுக்கான படிகளை திறந்து விட்டார்.


இதே போலவே ரஷ்ஷிய சுயசரிதை(...) நூலை நண்பர் ஊடாக சிங்களத்தில் வெளியிட உதவினார். 21/10/2007 இல் அவுஸ்திரேலியாவிலிருந்து வந்த காந்தி மக்கின்ரயரின் நாடகத்தை லண்டனில் மேடையேற்ற நண்பர்களுடன் உதவியாக இருந்தார். எமது விடுதலை போராட்டத்தின் மீதான அக்கறை அதிகம் நிரம்ப பெற்றவர். எனினும் போராடத்தின் பின்னடைவின் மீது விமர்சனத்துடன் கூடிய வருத்தமும் உண்டு.


விடுதலை போராட்ட நெருக்கடி காலத்தில் கூட அதீத அக்கறை காட்டி பயங்கரம் மிகுந்த கடல் வழிப் பயணம் மேற்கொண்டு தமிழகத்தில் ரகுபதி(Early Settlements in Jaffna), யேசுராசா(தொலைவும் இருப்பும் ஏனய கதைகளும் ,அறியப்படாதவர் நினைவாக) போன்றோரின் நூல்கள் வெளிவரக் காரணமாக இருந்தவர்.


மயிலங்கூடலூர்.பி.நடராஜனின் நட்புக்கு பாத்திரமாய் இருப்பவர். நூலகக் கனவின் ஒரு படியாகவே ஈழத்து நூல்களை 'மதுரைத் திட்ட இணைய நூலகத்தில் கணிசமான எமது நூல்கள் சேர்க்கப்பட்டிருப்பதும், ஈழத்து நூல்களுக்கான நூலக திட்டதின் படி இணைய நூலகம் ஒன்று மின்னம்பலத்தில் பவனி வரச் செய்தவர். பல நூல்களை யாரும் பார்க்கலாம்.


தங்களின் நூல்களை மின்னம்பலத்தில் பதிவேற்றம் செய்வதற்கு தங்கள் நூல்களை அல்லது நூற்பதிப்பின் குறுந் தகடுகளை பெறுவதில் ஆர்வம் காட்டி வருவதுடன் பதிப்பாளர்களிமிருந்தும் எதிர்பார்ப்பது தவிர்க்கமுடியாதது. 1965 இல் லக்ஷ்மி வாசகர்வட்டம் மூலம் வெளியிட்ட 'அக்கரை இலக்கியம். இவருள் ஏற்படுத்திய தாக்கமே இன்று வரை நல்ல வாசகனாகவும், தரமான நூல்கள் வருவதில் பெருவிருப்பு கொண்டவராகவும் பவனி வருகிறார்.


இசை மீதான அதீத ஈடுபாடு கொண்டதின் வெளிப்பாடே மணக்கால் ரங்கராஜனின் லண்டனில் நடாத்திய இசை நிகழ்வும் தான் விரும்பும் இசையை நண்பர்களும் கேட்க வைப்பதில் அவருடன் பழகியவர்க்குத் தெரிந்திருக்கும். எம்.எஸ்.சுப்புலக்ஷ்மி தொடங்கி அனைத்து கர்நாடக இசை கலைஞர்களை நேசத்துடன் வரவேற்பதுடன் அவர்களின் இசையை நண்பர்கள் மூலம் பரப்புவதிலும் முன் நிற்கிறார். தரமுள்ள ஏழை எழுத்தாளர்களையும், இசைக் கலைஞர்களையும் கைதூக்கி விடவேண்டும் என்பதில் ஆர்வம் காட்டி செயல்படுத்தியும் உள்ளார்.
பாரதி , சி.வி.இராமன் போன்றோரின் விவரணச் சித்திரத்தை நமக்கெல்லாம் தந்துதவியவர். ஈஸ்ட்காம் தமிழர் நலன்புரிச் சங்கத்தில் கடமை புரிந்த காலத்தில் அதன் ஊடாக பத்தாவது ஆண்டுச் சிறப்பிதழ்(1996), கிழக்கும் மேற்கும்(1997), இன்னுமொரு காலடி(1998) ,யுகம் மாறும்(1999) ,கண்ணில் தெரியுது வானம்(2001) வெளியிட்டதன் மூலம் இலக்கியத்தின் இன்னொரு பரிமாணத்தை உலகுக்கு காட்டியவர் எனலாம்.
கடாவிலிருந்து வெளிவரும் 'காலம் ' சஞ்சிகை வெளியிட்ட சுந்தரராமசாமி, ஏ,ஜே.கனகரட்னா .கே.கணேஷ் சிறப்பிதழ்களுக்கு ஒத்தாசையாக இருந்தவர். இவர் வெளியிட்டவற்றில் 'அக்கரைக்கு போன அம்மாவுக்கு'(1985), யுகங்கள் கணக்கல்ல(1986) , பெண்களின் சுவடுகளில்..(1989), யதார்த்தமும் ஆத்மார்த்தமும்(1991), மீண்டும் வரும் நாட்கள்(2004), வர்ணங்கள் கரைந்த வெளி'(2004) AJ:The Rooted Cosmopolitan (Articlesby AJ) (2008), சுழலும் தமிழ் உலகம் (2008) , ஒற்றை மைய உலக அரசியலில் போரும் சமாதானமும் (2008), தேடலும் விமர்சனங்களும்...(2009), முடிந்து போன தசையாடல் பற்றிய கதை(2009) என்பனவற்றுடன் இன்னும் அச்சில் வர விருப்பவைகள் தமிழியல் வெளியீடாகும். வெளியீட்டு முயற்சியின் மைல் கல்.


ஏ.ஜே.கனகரட்னாவின் நூலுக்கான வெளியீட்டுக்கான முழு ஒத்துழைப்பும் இவருடையதே. இதே போல் தான் தன் கஷ்டம் பாராது பலருக்கு உதவுவதில் மற்றவர்க்கு தெரியாமலேயே செய்வதை நண்பர்கள் சொல்லக் கேட்டிருக்கிறேன் நந்தினி சேவியர் கூட ஒரு முறை தன் இதய சிகிச்சைக்கு ஐயர் உதவியதை சொன்னார்.
இவர் எத்தனை லட்சத்திற்கு அதிபதி என்று கேட்டால் அவரின் கடன் பட்டியல் தெரிய வரும். அதுவும் புத்தகத்திற்காக/ எழுத்தாளர்களுக்காகச் செலவு செய்திருப்பதும் அறிய வரும். வீடு முழுக்க இறைந்து கிடக்கும் நூல்கள் இவரின் தேடலுக்கான பதிலாகும். மனித நேயம் அங்கு உணரப்படும் வண்ணார்பண்ணை வைத்தீஸ்வர வித்தியாலயத்திலும், பண்டாரவளை அர்ச்.சூசையப்பர் கல்லூரியிலும், பேராதனைப் பல்கலைக் கழக பௌதீக விஞ்ஞான பட்டதாரியான இவர் இரத்தினஐயர் யோகாம்பாள் தம்பதிகளின் புதல்வராவார்.


சஞ்சிகையில் தனக்கென தனி இடத்தை பெற்ற அலை வெளியீடாக'மார்க்ஸியமும் இலக்கியமும்:சில நோக்குகள்(1981), ஒரு கோடை விடுமுறை(19810, தேசிய இனப் பிரச்சினையும் முஸ்லீம் மக்களும்(1983),அகங்களும் முகங்களும்(1985)இவரின் பங்களிப்பை பேச வைத்த நூல்களாகும். அலைகளின் பிரதிகளை ஒரே தொகுப்பாக்கி முதன் முதலில் வெளியிட்ட பதினைந்து வருடங்களுக்குப் பின்பே பிற சஞ்சிகைகள் தங்களின் இதழை தொகுப்பாக்கினர்..


பத்மநாப ஐயரின் தூண்டுதலினால் அக்கரை இலக்கியம்(1968), விழிப்புணர்வு பற்றிய விளக்கங்கள்(1981), போர்க்குரல்(1981), வடமொழி இலக்கிய வரலாறு(1981)அழியா நிழல்கள்(1982 )தியானம்(1982) ,மழை வரும் நாட்கள்(1983), இரண்டாவது சூரிய உதயம்(1983) ,சாதாரணங்களும் அசாரணங்களும்(1983), நதிக்கரை மூங்கில்(1983) மகாகவி கவிதைகள்(1984) ,பதினொரு ஈழத்து கவிஞர்கள்(1984) முற்போக்கு இலக்கியம்(19840) ,அறியப்படாதவர் நினைவாக(1984), ஏழாண்டு இலக்கிய வளர்ச்சி(1984), புது யுகம் பிறக்கிறது(1984), போர்ப்பறை(1984) மெய்யுள்(1984) ,கலைஞனின் தேடல்(1984), ஒரு தனி வீடு(1984) ,இந்து சமுத்திர பிராந்தியமும் இலங்கை இனப்பிரச்சினையும்(1987) தொலைவும் இருப்பும் ஏனைய கதைகளும்(1989), வீடற்றவன்(... )மத்து(2000), செங்காவலர் தலைவர் யேசுநாதர்(2000),கிருஷ்ணகானம்1,2(2000) நூல்களின் வருகை ஐயரின் பரிமாண வளர்ச்சி திசை எங்கும் பேசப்பட்டு வருகிறது. அவர் ஒரு பல்கலைக் கழகம் தான். 2004 இல் கனடா இலக்கிய தோட்டமும் டொரொண்டோ பல்கலைக்கழக தென்னாசிய மையமும் இணைந்து வழங்கிய 'இயல்'விருது இவருக்கு வழங்கிய அதி உயர் விருதாகும்.


வடமொழி இலக்கிய வரலாறு போன்ற கைலாசநாதகுருக்களின் நூல்களை மறு பிரசுரம் செய்து தமிழகம் உள்ளிட்ட தமிழர் வாழும் பிரதேசங்களில் கொண்டு செல்லும் நாளும் வெகு தூரத்தில் இல்லை என்பதில் உறுதியாக உள்ளார்.


நகைச்சுவை நிரம்பியவராக இருப்பினும் தீவிர பதிப்பாளராவே தென்படுகிறார். இலக்கிய உலகம் இவருக்கு நிறையவே கடமைப் பட்டிருக்கிறது. இவரை 'வெளிக்கள நூலகர்' என மௌனகுருவும் ,'தமிழ்த்தூது' என எம்.ஏ.நுஹ்மானும் சொல்வது உண்மை தான். காலம் சஞ்சிகை சிறப்பிதழை வெளியிட்டு பெருமை தந்தது. பொ.ஐங்கரநேசன் இவரை நேர்காணல் கண்டு தினக்குரலில் பிரசுரித்தும் , அதை தன் நூலில் இணைத்துக் கொண்டுள்ளார்.


வாழும் போதே கௌரவிக்கப் படவேண்டியவர். எனினும் நல்ல மனம் படைத்தவர்கள் வாசகராக இணைந்து இவரை பலப் படுத்த வேண்டும் .அதுவே சிறந்த கௌரவமாகும். இவர் பட்டங்களை நாடிச் சென்றவர் இல்லை.


தமிழ் மெல்லச் சாகும் என்கிற கவலை நம்மை போலவே இவருக்கும் உண்டு. இவரின் களமுனையில் இணைவதன் மூலம் இந்த நடமாடும் நூலகம் புதுப் பரிமாணத்துடன் கூடிய இலக்கிய வளர்ச்சிக்கு உதவமுடியும்.


டூட்டிங் முத்துமாரிஅம்மன் ஆலய முத்தமிழ் விழாவில்(10.04.2010) ஐயாவை கௌரவம் செய்வதன் மூலம் நாமும் மகிழ்வடைவோம்.
வாழ்த்துக்களுடன்.
முல்லைஅமுதன்

தமிழ்முரசும்  ஐயர் அவர்களின் சேவையை பாராட்டுவதோடு அவர் பெற்ற பாராட்டுக்காக மகிழ்வடைகிறது.
நன்றி

No comments: