நான் இரசித்த இதமான ராகங்கள்

.                                                                        திருமதி கார்த்திகா கணேசர்.வருடா வருடம் ஈழத்தமிழர் கழகத்தால் கலை நிகழ்ச்சி நடத்தப்பட்டு அதில் சேர்க்கப்படும் நிதி ஈழத்தில் அல்லல் உறும் உறவுகளுக்கு அனுப்பப்படும். அது மட்டுமல்ல கழகத்தவர் உணவு தயாரித்து விற்பது போன்ற தொண்டுகளைச்  செய்து நிதிதிரட்டுவது அதையும் சொந்த நாட்டிலே வாழும் மக்களின் துயர் துடைக்கவே. அல்லல் படும் எமது மக்களின் துயர் துடைக்க உழைக்கும் இந்த தொண்டர்களின் சேவை பாராட்டபட வேண்டியதே.
இவ்வருட கலை நிகழ்ச்சியாக நடந்ததோ "இதமான இராகங்கள்" என்ற இசை நிகழ்ச்சி.

இந்த  நிகழ்ச்சி மூலம் திரட்டப்படும் நிதி ஈழத்திலே நடத்தப்படும் ஆனந்த இல்லம் என்ற முதியோர் நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்படும் என கழக அங்கத்தவரான திரு ஈழலிங்கம் கூறியதும் கூடியிருந்தவர் உள்ளம் கனத்தது. எம்மவருக்கு என்று வரும் விடிவு.
April 18 திகதி Ryde Civic Centre இல் "சகானா" நாடக தொடர் புகழ் சங்கீத  வித்வான்  Dr K நாராயணன் இந் நிகழ்ச்சியை வழங்கினார். இந் நிகழ்ச்சி கர்நாடக சங்கீதத்தையும் மெல் இசையையும் இணைக்கும் பாலமாக அமைந்திருந்தது. பாடகரான Dr K நாராயணன் மிகமிக சாதுரியமாக இதை கையாண்டார். அங்கு கூடியிருந்த கூட்டத்தில் பெரும் பான்மையோர் கர்நாடக சங்கீதம் என்றாலே காத தூரம் ஓடி விடுபவர்கள். அப்படிப்  பட்டவர்களையும் தன் குரல் வசீகரத்தால் வயப்படுத்தி கர்நாடக சங்கீத பாடல்களையே பாடினார். ஒவொரு பாடலையும் ஆரம்பிக்கும் முன் பாடலின் இராகத்தை கூறி திரை இசையில் எந்த எந்த பாடல்கள் அந்த இராகத்திலே   பாடப்பட்டன என எடுத்துக் காட்டினார். அப்பாடல்கள் திரை இசையாக பிரபலமானவை. அதன் பின் தான் எடுத்து கொண்ட கர்நாடக இசை பாடலை அழகிய தமிழிலே மொழி சுத்தமாக புரியும்படி பாடினார். மக்கள் இசையுடன் இணைந்தனர். பல வருடங்களுக்கு முன்னர் இத்தகைய நிகழ்ச்சி சென்னை தொலைக்கட்சியிலே   வாராவாரம்  பாலமுரளி கிருஷ்ணாவால் வழங்கப்பட்டது. மக்களின் அமோக ஆதரவையும் பெற்றது. அதே பாணியை கையாண்டிருந்தார் கலைஞர் DR K நாராயணன்.7 மணிக்கு பாட தொடங்கியவர் 8.30 வரை 1 -1 /2 மணிநேரம் இவ்வாறே   பாடினார். "பாலும் தெளிதேனும்" என விருத்தத்துடன் ஆரம்பமான கச்சேரி M .M . தண்டபாணி தேசிகனின் தாமரை பூத்த தடாகமடி என தமிழ் மணம் கமழ அமோகமாக இருந்தது. பழம் பெரும் பாடகர்களான மதுரை சோமு போன்றோரால் பாடிய பிரபலமான பாடல்களைப் பாடி எம்மை 40 50 களுக்கே அழைத்துச் சென்றார் நாராயணன். நான் இரசிக்கிறேன், ஆனால் கர்நாடக இசையாச்சே இடைவேளையுடன் யாவரும் ஓடி விடுவார்களா என உள்ளூர பயந்தேன். இடைவேளையின் போது யாவரும் கலைஞன் Dr . K நாராயணாவைப் பற்றி அமோகமாக பேசிக் கொண்டார்கள். அப்போது தான் புரிந்தது கர்நாடக சங்கீதம் யாவரையும் கவரக் கூடியது தான். புரியும் மொழியிலே இரசிகரை புரிந்து அவர்களுக்கு எந்த பாணியில் இசையை வழங்கினால் அவர்களுக்கு பிடிக்கும் என அறிந்து வழங்கினால் அவர்கள் நிச்சயமாக இரசிப்பார்கள். அந்த வகையில் கலைஞர் Dr . K நாராயணன் திறைமைசாலித்தான்.

இடைவேளையின் பின் கலைஞர் Dr . K நாராயணன் மக்கள் தன் மேல் கொண்ட நம்பிக்கையை நன்றாகவே பயன்படுத்திக் கொண்டார். கர்நாடக சங்கீத பாரம்பரியத்தில் கற்று தேறியவர் ராகம் சுரம் பாடாமல் இருக்கமுடியுமா? என தமாஷாக கேட்பது போல மக்களிடம் கல்யாணி தெரியுமா உங்களுக்கு? அவள் அடுத்த வீட்டு பெண் அல்ல ராகத்தின் பெயர் என கூறி உங்களில் எந்த்தனை பேருக்குத் தெரியும் என்றார். பின் தான் கல்யாணியை பாடட்டுமா என கேட்டு சுர மழை பொழிந்தார். நற்றாகவே ராக ஆலாபனையும் பண்ணி முடித்தார். மக்கள் கர ஒலி விண்ணை முட்டியது. ஆமாம் இரசிகரை புரிந்து கொண்டு அவர்களுக்கு கர்நாடக சங்கீதத்தின் இனிமையை எப்படி கொடுப்பது எனத்தெரிந்து கொடுத்தார். அவரது சாதூரியதிற்கு சபாஷ் போடாமல் இருக்கமுடியாது.


இவ்வாறு நிகழ்ச்சி விறுவிறுப்பாக களை கட்டி நடை பெறும் போது பூஜையில் பூனை பூந்தது போல ஒரு திருப்பம். ஒத்திசை கலைஞர்கள் வாசிப்பு யாவையும் நிறுத்தப்பட்டது. ஒலிப்பதிவு செய்யப்பட்ட இசை ஒலிபரப்பப்பட்டது. அழகிய நதியாக ஓடிய இசையில் ஏதோ அபத்தம் ஏற்பட்ட மாதிரி உணர்வு. பார்வையாளர் திகைத்தனர். மீனாட்சி வெங்கடேசனும் மேடையிலே தோன்றினார். நாராயணனுடன் இணைந்து ஒரே ஒரு திரை இசை பாடலை பாடினார். அவர்கள் இருவரும் இனணந்து சினிமா பாடல்களை பாடுவார்கள் போலும் என நாம் எண்ண மீனாச்சி மேடையை விட்டு போய்விட்டார். திரும்பவும் ஒத்திசை கலைஞர்களுடன் நாராயணன் தனது பாணியில் பாட தொடங்கினார்.
தில்லை அம்பல நடராஜா தொடர்ந்து கர்ணன் பட வஞ்சகன் கண்ணனடா  பாடல் என திரை இசை பாடல்களிலே தன் முத்துக்களை அள்ளித்தந்தார். அருமையான கர்நாடக சங்கீதத்திலே அமைந்த மக்களின் மனதில் அழியாத இடத்தை பெற்றவை அப்பாடல்கள். ஒவ்வொரு பாடலும் மக்களின் உள்ளத்தை கவர்ந்தது.

 

Dr K நாராயணனின் இசைக்கு மெருகூட்டியவர்களோ  எமது சிட்னி கலைஞர்கள். அவர்கள் வாசிப்பு தரமாகவே இருந்தது. வயலினை ராமும் கீ போர்டை சதீஷும் வாசிக்க தாள வாத்தியமான மிருதங்கம் தபேலாவை முறையே Dr ரமேஷும் கிஷான் ஜெகேந்திரனும் வாசித்தார்கள். "இதமான இராகங்கள்" இதமான சுகா அனுபவத்தை ஊட்டியது.
இடையிலே ஏன் அந்த கோளாறு என நிகழ்ச்சி தயாரிபாளர்களிடம் கேட்டபோது சில கசப்பான செய்திகள் தெரியவந்தது. நிகழ்ச்சி ஏற்பாட்டின்படி இடை வேளையின் பின் Dr K நாராயணனும்  மீனாட்சி வெங்கடேசனும் இணைந்து திரை இசை பாடுவதாக இருந்ததாம். அதற்கான ஒத்திசையும் நடந்ததாம். அது மட்டுமல்ல கீ போர்ட் கலைஞர் சதீஷ் பல பாடல்களை பாடுவதாகவும் ஏற்பாடு செய்யபட்டிருந்தது. ஆனால் மேடையில் அமர்திருந்த இந்தியாவில் இருந்து வந்த கலைஞர் நாராயணனோ ஏற்பாடையோ அல்லது முதல் நாள் நடந்த ஒத்திகையையோ சட்டை செய்யாது தன் இஷ்ட்டப்படி பாடத் தொடங்கி விட்டார். அவரது பாடல்கள் மக்களை கவர்ந்திருக்கலாம் ஆனால் நிகழ்ச்சி ஏற்பாட்டின் படி நடக்காமல் தன் இஷ்ட்டப்படி நடந்து கொள்ளும் கலைஞரை என்ன செய்யலாம். இந்தியாவில் இருந்து வரும் வரை எமது விருப்பப்படி நிகழ்ச்சியை நடத்துவதாக கூறி பின் இங்கு வந்ததும் மேடையிலே தன் போக்கில் நடக்கும் கலைஞர் இவர் மட்டுமல்ல. இதற்கு முன்னும் இவாறு நடந்ததாக தயாரிப்பாளர்கள் கவலைப் படுகிறார்கள்.

No comments: