இனிய பல படைப்புக்களை வழங்குவதுடன் என் உள்ளத்து ஆதங்கத்தையும் வெளிப்படுத்தக் களம் அமைத்த தமிழ் முரசு பத்திரிகைக்கு என் நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.
சோனா பிறின்ஸ்
‘‘பிள்ள எழும்பு கோயில் மணிஅடிச்சிட்டு” இந்த வார்த்தைகள் தான் என்னை அதிகாலையில் கண் விழிக்கச் செய்யும். நான் மட்டுமல்ல எங்கள் ஊரில் உள்ள அனைவருமே கோயில் மணி ஓசை கேட்டுத் துயில் எழுவார்கள் என்றால் அது மிகையாகாது.
அம்மம்மாவை இறுகக் கட்டியணைத்தபடி தூங்கிக்கொண்டிருக்கும் என்னை அதிகாலை 5 மணிக்கு அடிக்கும் கோயில் மணியைச் சொல்லி அம்மம்மா எழும்ப வைப்பா. எனக்கோ சிணுக்கம் வந்துவிடும், உடனே ‘கொஞ்ச நேரம் அம்மம்மா என்று கெஞ்சத் தொடங்குவேன். ஆனால் அவவோ விடமாட்டா அது போலத்தான் படுக்கைக்கு போவதற்கு முன்பாக, அவவிற்கு அருகில் இருந்து கிட்டத்தட்ட ஐந்து அல்லது ஆறு சிறிய சிறிய செபப்புத்தகங்கள் வைத்திருப்பா அவை அனைத்தும் சொல்லி முடிக்கும் வரை. “அம்மம்மா நித்திரை வருகுது” என்றாலும் விடமாட்டா. எல்லாம் சொல்லாமல் படுத்தால் “நடுச்சாமத்தில் பேய்வந்து கண்ணைக் குத்தும்” என்று பயங்காட்டியே எல்லாம் சொல்லி முடிக்கும் வரை விழித்திருக்க வைத்துவிடுவா. அப்போது எனக்கு ஆறு அல்லது ஏழு வயது தான் இருக்கும். அப்போதே “பின் தூங்கி முன் எழுவாள்” என்பது போல்தான் என் தூக்கம்.
அம்மம்மாவிற்கு பற்கள் எல்லாம் விழுந்து விட்டதனால் வெத்திலையை இடித்து சாப்பிடுவா. அவ இடிக்கத் தொடங்கியதும் அவவிற்கு முன்பாக இருந்து கொண்டு
“அம்மம்மா ! எனக்கு அம்மம்மா ! எனக்கு” என்று அவசரப்படுத்துவேன் .
“கொஞ்சம் பொறு தாறன்” என்று சொன்னாலும் எனக்கு காத்திருக்க முடிவதில்லை.
என் கரைச்சல் தாங்காமல் “அந்தச் சின்னக் குடத்தைக் கொண்டு போய் குழாயில தண்ணி எடுத்துக் கொண்டு வா” எனக் கலைத்து விடுவா. ஏனென்றால் அவவின் வளவிற்குள் கிணறு இல்லை, கத்தரிச் செடி மிளகாய்ச்செடி போன்ற சிறு செடிகள் வைத்திருப்பா, அவற்றிற்கும் தண்ணீரை தெருவில் உள்ள குழாயில் இருந்து கொண்டு வந்து நான் ஊற்ற வேண்டும் சில வேளைகளில் “நான் விளையாடப் போறன் அம்மம்மா” என்றால், “கச்சான் தருவன்” என்று சொல்லி செடிகளுக்கு தண்ணீர் ஊற்ற வைத்து விடுவா.
அம்மம்மாவின் சமையல் பக்குவம் போல் நான் எங்கும் கண்டதில்லை ஊரில் உள்ள பலர் அவவிடம் சமையல் முறைகளைக் கேட்பார்கள். மஞ்சள் சோறு, மரவள்ளி முறுக்கு, மா உருண்டை, குப்புஸ், என்று விதவிதமான பலகார வகை என்றாலுமோ, கறி வகைகள் என்றாலுமோ அம்மம்மாவிடம் தான் கேட்க வேண்டும்;.
அம்மம்மாவின் பச்சரிசிச் சோறும் கத்தரிக்காய் கறியும் போதும் ஒரு பெரிய விருந்து சாப்பிட்டது போன்ற நிறைவைத் தரும். அம்மம்மா வீட்டின் பின் புறம் உள்ள அன்னமுன்னா மரத்தில் நான் ஏறி நின்றால் ஒரு சிறிய தடியுடன் மரத்திற்கு கீழே நின்று “இறங்கு இல்லாவிட்டால் அடிப்பேன்” என்று சத்தம் போடுவா. “நீங்க போங்கோ நான் வாறன் அம்மம்மா” என்று அவவை உள்ளே அனுப்பி விட்டு ஆய்ந்து வைத்திருந்த பழங்களை அணிந்திருக்கும் சட்டையில் வைத்து சட்டையை தூக்கி பிடித்துக் கொண்டு வந்தால் “சட்டையைக் கீழே விடு” என்று கத்துவா. “இல்ல அம்மம்மா சட்டையைக் கீழே விட்டால் பழங்கள் எல்லாம் விழுந்துவிடும்” என்று சொல்லிக்கொண்டு வீட்டுக்குள்ளே ஓடி விடுவேன். பழங்களைப் பார்த்தவுடன் அம்மம்மாவிற்கு கோபம் இன்னும் அதிகமாகி விடும். “ஆ…இஞ்சபார்! முள்ளு வெடிக்காத காய்களை கொண்டு வந்து எல்லாத்தையும் வீணாக்கிப் போட்டுது, நீ இஞ்ச வரவேண்டாம் ஓடு உங்கட வீட்ட” என்று தடியோட என்னைக் கலைப்பா.
முகத்தைத் தொங்கப் போட்டுக் கொண்டு வீட்ட போய்விட்டு மறுபடியும் கொஞ்ச நேரத்தின் பின்பு அம்மம்மா வீட்டிற்கு ஓடிப் போய் பின்புறமாக அம்மம்மாவின் கழுத்தைக் கட்டிக் கொண்டு நின்றால் “அவ்வளவு ரோசக்காரி போகச் சொன்னா போய்விடுறதா” என்று கேட்பா.
“அம்மாட்ட சொல்லி நல்ல சட்டை போட்டுக் கொண்டு வா” என்பா. ஏன் அம்மம்மா? என்று கேட்டால் இன்று காணிக்கை மாதா கோவிலுக்கு காவலுக்கு போக வேணும் என்பா. “அது என்ன அம்மம்மா காவல்? ” என்று கேட்டால் காலையில் போய் மாலை வரைக்கும் சாப்பிடாம இருந்து செபம் சொல்லி மன்றாடிவிட்டு வர வேணும் என்பா. “ எனக்குப் பசிக்கும் அம்மம்மா.” என்றால், “உனக்கு நான் சாப்பாடு தருவேன்” என்பா. அவவுடன் போய் இருந்து அவவோட மாலையில் வீடு வருவேன். முகமாலையில் உள்ள கோவிலுக்கும் அம்மம்மாவுடன் காவலுக்கு சென்று வந்தேன்.
அம்மம்மா நிறையவே நடப்பா எவ்வளவு தூரமானாலும் மாதா கோவிலுக்கு தன்னுடன் நடந்து வரும்படி என்னையும் அழைத்துச் செல்லுவா. நாங்கள் அம்மம்மா என்று அவவை அழைப்பது போல் அருகில் உள்ளவர்களும் அழைப்பார்கள். ஒரே ஒரு தடைவ அம்மம்மா திரையரங்கிற்கு என்னை அழைத்து சென்றார். தேவதாஸ் படம் பார்ப்பதற்காக. அப்போது அத்திரைப்படம் அரை குறையாகத்தான் எனக்கு விளங்கியது.
அன்று தொழில் நுட்பம் அதிகம் வளர்ச்சியடையாத காலம் அதனால் சிறுவர்களாகிய நாம் எம் உறுவுகளுடன் நெருக்கமாகிப் பாசமழையில் வளர்ந்தோம். ஆனால் இன்று, பிள்ளைகள் உறவுகளுடன் நெருக்கம் இல்லாமல், கணணியுடன், தொலைக் காட்சிப் பெட்டியுடன், விளையாட்டு இயந்திரங்களுடன், நெருக்கமாகிப் போகின்றார்கள். அதனால்உறவுகளின்அருமையும் பெருமையும், அவர்கட்கு தெரியப் போவதில்லை.
பெயரளவில் பெற்றோராக, பெயரளவில் பாட்டன் பாட்டியாக, வாழும் காலத்தில்தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
No comments:
Post a Comment