அவுஸ்திரேலியாவிற்கான தமிழ் படகுப் பயணிகளின் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்படும் ‐ பாலித கொஹணே

.


சட்டவிரோதமான முறையில் படகுகளின் மூலம் அவுஸ்திரேலியாவிற்கு செல்லும் இலங்கைத் தமிழர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்படும் என ஐக்கிய நாடுகளுக்கான இலங்கையின் வதிவிடப் பிரதிநிதி டொக்டர் பாலித கொஹணே தெரிவித்துள்ளார்.

அகதிகளுக்கு அடைக்கலம் வழங்குவது தொடர்பில் அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் புதிய கொள்கைகள் வரவேற்கத் தக்கதென அவர் குறிப்பிட்டுள்ளார்.

புதிய சட்ட அமுலாக்கத்தினால்  சட்டவிரோதமான முறையில் அவுஸ்திரேலியாவிற்குள் பிரவேசிக்க முனைப்பு காட்டும் இலங்கைத் தமிழ் அகதிகளின் எண்ணிக்கையில் கணிசமான  வீழ்ச்சி ஏற்படும் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

அவுஸ்திரேலியாவின் இந்த நடவடிக்கையினால் சட்டவிரோத குடியேற்றக்காரர்களின் நடவடிக்கையில் தாக்கத்தை ஏற்படுத்தும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், சட்டவிரோதமான முறையில் புகலிடம் கோருவோர் வேறும் நாடொன்றை இலக்கு வைத்து படையெடுக்கக் கூடுமென அவர் எதிர்வு கூறியுள்ளார்.


இலங்கை, ஆப்கானிஸ்தான் அகதிகள் குறித்த அவுஸ்திரேலியாவின் தீர்மானத்திற்கு இந்தோனேஷியா வரவேற்பு


இலங்கை ஆப்கானிஸ்தான் அகதிகளுக்கு அரசியல் தஞ்சம் வழங்குவதில்லை என்ற அவுஸ்திரேலியாவின் தீர்மானத்தை வரவேற்பதாக இந்தோனேஷிய அரசாங்கம் அறவித்துள்ளது.

மனித உரிமை அமைப்புக்கள் இந்தத் தீர்மானம் குறித்து அதிருப்தி வெளியிட்ட போதிலும், சட்டவிரோத குடியேற்றக்காரர்களின் நடமாட்டத்தை இதன் மூலம் தடுக்க முடியும் என இந்தோனேஷிய வெளிவிவகார அமைச்சர் தெகு பயிசயா தெரிவித்துள்ளார்.

இந்த நடவடிக்கையின் மூலம் பிராந்தியத்தில் சாதகமான விளைவுகளை எதிர்பார்க்க முடியும் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

குறிப்பாக மலேசியா, இந்தேனேஸியா மற்றும் தாய்லாந்து போன்ற நாடுகளைப் பயன்படுத்தி அவுஸ்திரேலியாவிற்குள் சட்டவிரோதமாக பிரவேசிக்கும் நபர்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.

குறிப்பிட்ட தீர்மானத்தின் மூலம் சட்டவிரோதமான முறையில் ஆட்களை கடத்திச் செல்லும் நபர்களது நடவடிக்கைகளை வரையறுக்க முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments: