இலங்கைச் செய்திகள்

 இந்தியா – இலங்கை இணைப்பை வலுப்படுத்தும் புதிய திட்டங்கள் : ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் அறிவிப்பு

இலங்கை - தென்கொரியா இடையிலான பொருளாதார உறவுகளை வலுப்படுத்த இணக்கம்!

சுரேஷ் சலே கைது: அரசியல் சதித்திட்டத்தின் பகிரங்க இரகசியம் - நிசாம் காரியப்பர் எம்.பி!

யாழ். பல்கலை புதிய துணைவேந்தராக சிரேஷ்ட பேராசிரியர் தி.வேல்நம்பி தெரிவு!

பெருங்குடல் மற்றும் மலக்குடல் புற்றுநோயால் பாதிக்கப்படும் 30 – 50 வயதுக்கு இடைப்பட்ட நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு



இந்தியா – இலங்கை இணைப்பை வலுப்படுத்தும் புதிய திட்டங்கள் : ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் அறிவிப்பு

26 Feb, 2026 | 03:54 PM

இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையிலான விமான சேவை இணைப்பை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் பல முக்கிய மூலோபாய திட்டங்களை அறிவித்துள்ளது. 

இந்தியாவின் டெல்லியில் நடைபெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பில் இத்திட்டங்கள் வெளியிடப்பட்டன. இந்நிகழ்வு தென் ஆசியாவின் முன்னணி சுற்றுலா மற்றும் பயணக் கண்காட்சியான SATTE 2026 உடன் இணைந்து நடைபெற்றது.

இந்தியாவை இலங்கைக்கும் உலகிற்கும் மேலும் நெருக்கமாகக் கொண்டு வருவது நிறுவனத்தின் நீண்டகால இலக்காக இருந்து வருகிறது. 

தற்போது இரு நாடுகளுக்கிடையில் வாரத்திற்கு சுமார் 90 விமான


சேவைகள் இயக்கப்பட்டு வருகின்றன. 

இந்தியா, SriLankan Airlines நிறுவனத்தின் மிகப்பெரிய சந்தையாக இருந்து, மொத்த பயணிகளின் சுமார் 30% மற்றும் இலங்கைக்கு வரும் மொத்த சுற்றுலாப் பயணிகளில் 23% பங்கைக் கொண்டுள்ளது.

2026ஆம் ஆண்டில் இந்தியாவுக்கான வாராந்த சேவைகளை அதிகரிக்க நிறுவனம் திட்டமிட்டுள்ளது. 

தற்போது சென்னை, மும்பை, டெல்லி, ஹைதராபாத், பெங்களூர், கொச்சி, திருவனந்தபுரம், மதுரை மற்றும் திருச்சிராப்பள்ளி ஆகிய நகரங்களுக்கு சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றன.


இந்த வலையமைப்பில் விரைவில் இணையும் பத்தாவது இந்திய இலக்காக அகமதாபாத் அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதன் மூலம் இந்தியாவின் எட்டு முக்கிய மாநகர மையங்களில் ஆறு நகரங்களுக்கு சேவை வழங்கும் நிலைக்கு SriLankan Airlines உயர்கிறது. இது ஆண்டு முழுவதும் நிலையான பயணத் தேவையையும், இரு நாடுகளுக்கிடையிலான கலாசார மற்றும் வர்த்தக உறவுகளையும் மேலும் வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்த புதிய முயற்சிகள் மூலம் 2026ஆம் ஆண்டில் இந்திய பயணிகளின் எண்ணிக்கை சுமார் 12% வரை அதிகரிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

விடுமுறை, வர்த்தகம், தொழில், உறவினர் சந்திப்பு அல்லது திருமண


விழாக்கள் உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்காக இந்தியர்கள் பயணிக்கும் நிலையில், கொழும்பு வழியாக உலகின் பல பகுதிகளுக்கு இணைப்பு வழங்குவதில் நிறுவனம் முக்கிய பங்காற்றுகிறது. 

இந்திய பயணிகளில் சுமார் 30% பேர் கொழும்பு வழியாக மத்திய கிழக்கு, மாலைதீவு, தூர கிழக்கு நாடுகள், ஐரோப்பா மற்றும் அவுஸ்திரேலியா போன்ற நாடுகளுக்கு பயணிக்கின்றனர்.

Sri Lanka Tourism Promotion Bureau மற்றும் Sri Lanka Tourism Development Authority உள்ளிட்ட சுற்றுலா அமைப்புகளுடன் இணைந்து SriLankan Airlines தேசிய சுற்றுலா வளர்ச்சியை ஊக்குவித்து வருகிறது. 

இந்திய சந்தையில் இலங்கையை பல்துறை கவர்ச்சியுள்ள சுற்றுலாத் தலமாக நிலைநிறுத்தும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

சமீபத்தில் நிறுவனம் அறிமுகப்படுத்திய விருது பெற்ற “ராமாயண பாதை” (Ramayana Trail) பிரச்சாரம், இந்திய பயணிகளை இலங்கையில் உள்ள ராமாயண வரலாற்றுத் தளங்களை பார்வையிட ஊக்குவிக்கும் உணர்வுபூர்வமான விளம்பர முயற்சியாக அமைந்துள்ளது.

இந்திய பயணிகளின் முன்பதிவுகளில் சுமார் 60% பாரம்பரிய பயண முகவர்கள் மற்றும் ஆன்லைன் பயண முகவர்கள் (OTA) மூலம் மேற்கொள்ளப்படுகின்றன. மீதமுள்ளவை நேரடியாக நிறுவனத்தின் தளங்கள் மூலம் செய்யப்படுகின்றன. டிஜிட்டல் சேவைகளை விரிவுபடுத்துவதுடன், இந்திய முழுவதும் உள்ள வர்த்தக கூட்டாளிகளுடனான ஒத்துழைப்பையும் நிறுவனம் தொடர்ந்து பேணிவருகிறது.   நன்றி வீரகேசரி 







இலங்கை - தென்கொரியா இடையிலான பொருளாதார உறவுகளை வலுப்படுத்த இணக்கம்!

26 Feb, 2026 | 04:13 PM

தென்கொரியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள வெளிவிவகார மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர, அந்நாட்டின் வெளிவிவகார பிரதி அமைச்சர் யுயி-ஹே சிசிலியா சுங்  ஆகியோருக்கிடையிலான இருதரப்பு பேச்சுவார்த்தை நேற்று புதன்கிழமை (25) சியோலில் நடைபெற்றது.

இலங்கை மற்றும் தென்கொரியாவிற்கு இடையிலான இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவது குறித்து இதன்போது விரிவாக ஆராயப்பட்டது. குறிப்பாக, இலங்கையின் கடன் மறுசீரமைப்பு செயன்முறையின் முன்னேற்றம் மற்றும் பொருளாதார மீட்சிக்கு அமைவாக பொருளாதார ஒத்துழைப்பை ஆழப்படுத்துதல், இலங்கையர்களுக்கான வெளிநாட்டு வேலைவாய்ப்பு சந்தையை விரிவுபடுத்துதல், அபிவிருத்தி மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பை பலப்படுத்துதல் போன்ற விடயங்கள் குறித்து அவதானம் செலுத்தப்பட்டது.

இலங்கையில் அண்மையில் ஏற்பட்ட 'டிட்வா'  சூறாவளி அனர்த்தத்தின் பின்னர் தென்கொரியா வழங்கிய காலோசித உதவிகளுக்கு பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர தனது நன்றிகளைத் தெரிவித்தார். அத்துடன், இலங்கையை மீளக் கட்டியெழுப்பும் தேசிய முயற்சிகளுக்குத் தென்கொரியாவின் தொடர்ச்சியான ஆதரவையும் அவர் இதன்போது கோரினார்.

இரு நாடுகளுக்கும் இடையிலான வளர்ந்து வரும் சமூக மற்றும் கலாசார உறவுகள், குறிப்பாக இலங்கை இளைஞர்களிடையே தென்கொரிய கலாசாரம் கொண்டுள்ள செல்வாக்கு, இரு நாட்டு மக்களுக்கும் இடையிலான தொடர்புகளை வலுப்படுத்துவதில் முக்கிய பங்காற்றுவதாக பிரதி அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

இலங்கை மற்றும் தென்கொரியாவிற்கு இடையிலான இராஜதந்திர உறவுகள் ஆரம்பிக்கப்பட்டு அடுத்த வருடத்துடன் (2027) 50 ஆண்டுகள் நிறைவடைகின்றன. இந்த வரலாற்று மைல்கல்லைக் கொண்டாடும் வகையில் உயர்மட்ட விஜயங்கள் மற்றும் நிறுவன ரீதியான தொடர்புகளை அதிகரிப்பது தொடர்பிலும் இரு தரப்பினரும் இணக்கம் கண்டுள்ளனர்.

இச்சந்திப்பின் ஊடாக இலங்கை மற்றும் தென்கொரியாவிற்கு இடையிலான நீண்டகால பங்காளித்துவத்தை மேலும் வலுப்படுத்துவதற்கான அர்ப்பணிப்பு மீள உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.   நன்றி வீரகேசரி 





சுரேஷ் சலே கைது: அரசியல் சதித்திட்டத்தின் பகிரங்க இரகசியம் - நிசாம் காரியப்பர் எம்.பி!

26 Feb, 2026 | 05:20 PM

(இராஜதுரை ஹஷான்)

மத மூடநம்பிக்கையை அரசியல் இலாபத்துக்காக திட்டமிட்டு பயன்படுத்திய சதித்திட்டம் என்ற பகிரங்க இரகசியத்துக்கு சுரேஷ் சலேவின் கைது உத்தியோகப்பூர்வ அறிவித்தலாகும். அந்த அரசியல் சதியால் பயனடைந்தவர்கள் தற்போது கவலை வெளியிடுவது இயல்பானதே என ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் பொதுச்செயலாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி நிசாம் காரியப்பர் குறிப்பிட்டுள்ளார்.

சுரேஷ் சலே கைது செய்யப்பட்டமை தொடர்பில் தனது உத்தியோகபூர்வ எக்ஸ் வலைத்தளத்தில் மேற்கண்டவாறு பதிவு செய்துள்ளார்.

அரச புலனாய்வு பிரிவின் முன்னாள் பிரதானி சுரேஷ் சலே கைது செய்யப்பட்டுள்ளமையானது, தவறாக வழிநடத்தப்பட்ட மத மூடவெறியால் சிலர் தங்களைத் தாங்களே வெடிக்கச் செய்த ஒரு சாதாரண சம்பவம் மட்டுமல்ல என்பதை வெளிப்படுத்துகிறது.

அந்த மத மூடநம்பிக்கையை அரசியல் இலாபத்துக்காக திட்டமிட்டு பயன்படுத்திய சதித்திட்டம் என்ற பகிரங்க இரகசியத்துக்கு இது உத்தியோகப்பூர்வ அறிவித்தலாகும். ஆகவே அந்த அரசியல் சதியால் பயனடைந்தவர்கள் கவலை வெளியிடுவது இயல்பானதே என பதிவேற்றம் செய்துள்ளார்.

2019.04.21 ஆம் ஆண்டு இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்களைத் திட்டமிட்டமை மற்றும் அதற்கு உதவி ஒத்தாசை புரிந்தமை தொடர்பான குற்றச்சாட்டில் அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பிரதானி சுரேஷ் சலே நேற்று முன்தினம் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தால் கைது செய்யப்பட்டார்.

சுரேஷ் சலே கைது செய்யப்பட்டமை தொடர்பில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான உதய கம்மன்பில, சரத் வீரசேகர, அலி சப்ரி ஆகியோர் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர்.அதேபோல் பாராளுமன்ற உறுப்பினரான திலித் ஜயவீரவும் எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளார்.   நன்றி வீரகேசரி 






யாழ். பல்கலை புதிய துணைவேந்தராக சிரேஷ்ட பேராசிரியர் தி.வேல்நம்பி தெரிவு!

Published By: Digital Desk 3

26 Feb, 2026 | 05:26 PM

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக சிரேஷ்ட பேராசிரியர் திருநாவுக்கரசு வேல்நம்பி ஜனாதிபதியால் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

வலிகாமம் கிழக்கு புத்தூரைச் சேர்ந்த இவர் யாழ்ப்பாண பல்கலைக்கழக உயர் பட்டப்படிப்புகள் பீடத்தின் பீடாதிபதியாக செயற்பட்டு வருகின்றார்.

தற்போதைய துணைவேந்தரின் பதவிக் காலம் எதிர்வரும் மார்ச் 24 ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ள நிலையில் எதிர்வரும் 25.03.2026 தொடக்கம் பேராசிரியர் தி.வேல்நம்பி துணைவேந்தராக பதவியேற்கவுள்ளார்.

யாழ். பல்கலைக்கழகப் பதிவாளரால் கடந்த செப்ரெம்பர் முதல் வாரத்தில் துணைவேந்தர் பதவிக்காக விண்ணப்பங்கள் கோரப்பட்டிருந்த நிலையில்  துணைவேந்தருக்கான தேர்தலில் அதிக புள்ளிகளைப் பெற்று முதன்மை நிலையை வேல்நம்பி பெற்றிருந்தார்.

அத்துடன் கடந்த மூன்று தடவைகள் இடம்பெற்ற துணைவேந்தர் தேர்தலில் வேல்நம்பி முதல் மூன்று ஸ்தானங்களுள் தெரிவாகி இருந்தார்.

இலங்கையிலுள்ள பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களைத் தெரிவு செய்வதற்கான பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுச் சுற்றறிக்கையின் படி, பேரவையின் விசேட கூட்டத்தில் விண்ணப்பதாரிகள் பெறும் புள்ளி ஒழுங்கில் முதல் மூன்று இடங்களைப் பெற்றவர்களின் விபரங்கள் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு, கல்வி அமைச்சு ஆகியவற்றினூடாக ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்படும்.

1978 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்கப் பல்கலைக் கழகங்கள் சட்டத்தின் படி ஜனாதிபதிக்குள்ள அதிகாரத்தின் அடிப்படையில், பேரவையினால் முன்மொழியப்பட்ட மூவரில் இருந்து ஒருவரை ஜனாதிபதி தெரிவு செய்து துணைவேந்தராக நியமனம் செய்வார்.

இந்நிலையில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக பேராசிரியர் திருநாவுக்கரசு வேல்நம்பி ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் தெரிவுசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.   நன்றி வீரகேசரி 






பெருங்குடல் மற்றும் மலக்குடல் புற்றுநோயால் பாதிக்கப்படும் 30 – 50 வயதுக்கு இடைப்பட்ட நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

Published By: Vishnu

27 Feb, 2026 | 04:59 AM

(செ. சுபதர்ஷனி)

பெருங்குடல் மற்றும் மலக்குடல் புற்றுநோயால் பொதுவாக 50 வயதுக்கு மேற்பட்டவர்களே பாதிப்புக்குள்ளாகும் அபாயம் காணப்பட்ட போதிலும், அண்மைக்காலமாக நாட்டில் 30 – 50 வயதுக்கு இடைப்பட்டவர்களிடையே புதிய நோயாளர்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துள்ளதாக தேசிய புற்றுநோய் கட்டுப்பாட்டு நிகழ்ச்சித்திட்டத்தின் சமூக வைத்திய நிபுணர் ஹஸரெலி பெர்னாண்டோ தெரிவித்தார்.

சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் புதன்கிழமை (25) இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவிக்கையில்;

"இலங்கையில் மாத்திரமல்லாது உலகளாவிய ரீதியிலும் பெருங்குடல் மற்றும் மலக்குடல் புற்றுநோயால் பாதிப்புக்குள்ளாகுவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. உலக சுகாதார ஸ்தாபனத்தால் வெளியிடப்பட்ட 2024 ஆம் ஆண்டுக்கான 'க்ளோபோகேன்' ஆய்வறிக்கையின்படி, 1.1 மில்லியன் புதிய புற்றுநோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அத்தோடு, 2023 ஆம் ஆண்டு மாத்திரம் சுமார் 9 இலட்சம் பேர் இந்த நோயால் உயிரிழந்துள்ளனர்.

உலகளவில் அதிக நோயாளர் மற்றும் மரண வீதத்தைக் கொண்ட நோய் பட்டியலில் பெருங்குடல் மற்றும் மலக்குடல் புற்றுநோய் இரண்டாவதாகத் தரப்படுத்தப்பட்டுள்ளது. தேசிய புற்றுநோய் கட்டுப்பாட்டு நிகழ்ச்சித்திட்டத்தின் வருடாந்த தரவுகளுக்கமைய, 2022 ஆம் ஆண்டில் மட்டும் இத்தகைய புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சுமார் 3,000 நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். ஆண், பெண் என இருபாலாரும் இப்புற்றுநோய்க்கு ஆளாகின்ற போதிலும், அந்தவகையில் அவ்வாண்டு 1564 ஆண்களும், 1519 பெண்களும் கண்டறியப்பட்டுள்ளனர்.

ஆண்களுக்கு ஏற்படும் புற்றுநோய்களில் வாய் மற்றும் கழுத்துப் புற்றுநோய் முதலாவதாகவும், பெருங்குடல் மற்றும் மலக்குடல் புற்றுநோய் இரண்டாவதாகவும் உள்ளன. 50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கே இந்நோய் பாதிப்பு ஏற்படும் அபாயம் அதிகமாக இருந்த போதிலும், தற்போது 30 – 50 வயதுக்கு இடைப்பட்ட நோயாளர்களும் அதிகளவில் அடையாளம் காணப்படுகின்றனர். மாறிவரும் உணவுப் பழக்கவழக்கங்கள் மற்றும் வாழ்வியல் மாற்றங்களே இதற்கு முக்கிய காரணமாகும்.

சமிபாட்டை இலகுவாக்கும் மற்றும் அனைத்து போசாக்குகளும் அடங்கிய உணவுகளை உட்கொள்வது அவசியமாகும். பெருங்குடல் பகுதியில் ஏற்படும் சிறு கட்டிகள் (பொலிப்ஸ்) நாளடைவில் புற்றுநோய் கலங்களாக மாற வாய்ப்புள்ளது. உரிய பரிசோதனையின் மூலமே இதனை ஆரம்பத்தில் கண்டறிய முடியும். உடல் இயக்கமின்றி இருத்தல், உடற்பருமன், உடனடி உணவுகள் மீதான நாட்டம் மற்றும் மது அருந்துதல் போன்றவை இந்நோய் ஏற்படக் காரணங்களாக உள்ளன. அத்துடன், மரபணு மூலமும் ஒருவருக்கு இந்நோய் ஏற்பட வாய்ப்புள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன என்றார்.   நன்றி வீரகேசரி 

No comments: