ஈரான் மீது இஸ்ரேல் – அமெரிக்கா கூட்டுத் தாக்குதல்: உச்ச தலைவர் அலி காமேனி உயிரிழந்தாரா?
எப்ஸ்டீன் வழக்கில் ஹிலாரி கிளிண்டனிடம் 06 மணிநேரம் விசாரணை
ஆப்கானிஸ்தான் மீது பாகிஸ்தான் தாக்குதல்
ரஷ்யா - உக்ரைன் போரை நிறுத்துவதற்கான ஐ.நா சபை தீர்மானத்துக்கு 107 நாடுகள் ஆதரவு
பிரித்தானிய முன்னாள் தூதர் பீட்டர் மண்டேல்சன் லண்டனில் கைது செய்யப்பட்டுள்ளார்
கூகுள் டீப்மைண்ட், ஏஐ தொழில் மாற்றங்கள்: சுந்தர் பிச்சை வெளியிட்ட முக்கிய தகவல்கள்
ஈரான் மீது இஸ்ரேல் – அமெரிக்கா கூட்டுத் தாக்குதல்: உச்ச தலைவர் அலி காமேனி உயிரிழந்தாரா?
01 Mar, 2026 | 03:29 AM
ஈரான் மீது இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இணைந்து அதிரடி வான்தாக்குதல் மேற்கொண்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஈரானின் அணுசக்தி மையங்கள், அணுசக்தி உள்கட்டமைப்புகள் மற்றும் பல இராணுவ தளங்கள் குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அமெரிக்க போர் விமானங்கள் தெஹ்ரானுக்குள் நுழைந்து பல இடங்களில் குண்டுவீச்சு நடத்தியதாக கூறப்படுகிறது. குறிப்பாக, ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் வளாகம், தலைமையகம், ஜனாதிபதி மாளிகை மற்றும் உளவுத்துறை கட்டிடங்கள் தாக்குதலுக்குள்ளானதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இஸ்ரேலிய ஊடகங்கள், கமேனியின் வளாகத்தில் சுமார் 30 குண்டுகள் வீசப்பட்டதாக தெரிவித்துள்ளன.
FOX News, Reuters உள்ளிட்ட சில சர்வதேச ஊடகங்கள், இஸ்ரேலிய மூத்த அதிகாரிகளை மேற்கோள் காட்டி, கமேனி தாக்குதலில் உயிரிழந்ததாக தகவல் வெளியிட்டுள்ளன. எனினும், தெஹ்ரானிலிருந்து இதுவரை எந்தவிதமான அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தலும் வெளியாகவில்லை. Al Jazeera, தெஹ்ரானில் இருந்து உத்தியோகபூர்வ அறிவிப்பு எதுவும் இல்லை என தெரிவித்துள்ளது.
அதேவேளை, “உச்ச தலைவர் மற்றும் ஈரான் ஜனாதிபதி பாதுகாப்பாக
உள்ளனர்; அரசின் செயற்பாடுகள் வழக்கம்போல் நடைபெற்று வருகின்றன” என IranTimes செய்தி வெளியிட்டுள்ளது.
இஸ்ரேல் நடத்திய தாக்குதலில், ஈரானின் பாதுகாப்பு அமைச்சர் அமீர் நசீர்ஜடே மற்றும் புரட்சிகர காவல்படை தளபதி முகமது பாக்பூர் உயிரிழந்ததாக நம்பப்படுகிறது. பாக்பூர், 2025 ஆம் ஆண்டு இஸ்லாமிய புரட்சிகர காவல்படை (IRGC) தளபதியாக பொறுப்பேற்றவர்.
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்:
“கமேனி இப்போது இல்லை என்பதற்கான பல சாத்தியங்கள் உள்ளன. ஆனால் அவரது மரணத்தை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்த முடியாது. ஈரானுக்கு எதிரான நடவடிக்கை தேவைப்படும் வரை தொடரும்” என தெரிவித்தார். அவர் மேலும், “ஈரானிய மக்கள் தங்களை கொடுங்கோன்மையிலிருந்து விடுவித்துக் கொள்ள இது ஒரு வாய்ப்பு” என்றும் குறிப்பிட்டார்.
இந்நிலையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், கமேனி உயிரிழந்துள்ளதாகக் கூறி வெளியிட்ட கருத்து சர்வதேச அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டிரம்ப் வெளியிட்ட அறிக்கையில், காமெனியின் மரணம் “ஈரான் மக்களுக்கான நீதி” எனவும், இது ஒரு பதிலடி எனவும் தெரிவித்துள்ளார். மேலும், அமெரிக்காவின் உளவுத்துறை மற்றும் மேம்பட்ட கண்காணிப்பு தொழில்நுட்பத்தின் மூலம் இந்த நடவடிக்கை சாத்தியமானதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அவரது அறிக்கையில், இஸ்ரேலுடன் இணைந்து மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் மூலம் காமெனி மற்றும் பல தலைவர்கள் கொல்லப்பட்டதாகவும், ஈரான் புரட்சிகர காவல்படை (IRGC), இராணுவம் மற்றும் பாதுகாப்புப் படையினரின் சிலர் இனி போராட விரும்பவில்லை என தகவல்கள் கிடைத்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
மேலும், “இது ஈரான் மக்களுக்கு தங்கள் நாட்டை மீட்டெடுக்க மிகப்பெரிய வாய்ப்பு” என டிரம்ப் தெரிவித்துள்ளார். அதேசமயம், மத்திய கிழக்கில் அமைதியை நிலைநிறுத்தும் வரை தாக்குதல்கள் தொடரும் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.
இந்த அறிக்கையைத் தொடர்ந்து பல்வேறு நாடுகள் அமைதி அவசியம் என வலியுறுத்தியுள்ளன. மத்திய கிழக்கில் மேலதிக மோதல்கள் ஏற்படாமல் இருக்க அரசியல் மற்றும் இராஜதந்திர முயற்சிகள் அவசியம் என நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இந்த தாக்குதலுக்கு பதிலடியாக, ஈரான் இஸ்ரேல் மற்றும் மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்க நட்பு நாடுகளின் தளங்கள் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஈரான் – இஸ்ரேல் மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், மத்திய கிழக்கு முழுவதும் கடும் பதற்றம் நிலவி வருகிறது. சர்வதேச சமூகமும் நிலைமையை தீவிரமாக கண்காணித்து வருகிறது. நன்றி வீரகேசரி
எப்ஸ்டீன் வழக்கில் ஹிலாரி கிளிண்டனிடம் 06 மணிநேரம் விசாரணை
Published By: Digital Desk 3
27 Feb, 2026 | 09:42 AM
அமெரிக்காவின் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஹிலாரி கிளிண்டனிடம், நேற்று வியாழக்கிழமை (26) நியூயோர்க்கின் சாப்பக்வாவில் உள்ள அரங்கம் ஒன்றில் வைத்து அமெரிக்க பாராளுமன்றக் குழுவினர் இரகசியமாக விசாரணை செய்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சுமார் 06 மணிநேரம் நீடித்த இந்த விசாரணையில், ஹிலாரி கிளிண்டன் தனக்கும் எப்ஸ்டீனுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
"நான் அவரைச் சந்தித்ததே இல்லை; அவருடைய தீவுக்கோ, அலுவலகங்களுக்கோ அல்லது வீடுகளுக்கோ சென்றதில்லை" என அவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.
இந்த விசாரணை வெறும் "அரசியல் நாடகம்" எனவும், முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் எப்ஸ்டீன் இடையேயான நெருங்கிய தொடர்புகளில் இருந்து மக்களின் கவனத்தைத் திசைதிருப்பவே குடியரசுக் கட்சியினர் தன்னை விசாரணை செய்வதாக ஹிலாரி குற்றம் சாட்டியுள்ளார்.
விசாரணையின் போது, குடியரசுக் கட்சி எம்.பி. லாரன் போபர்ட் விதிமுறைகளை மீறி ஹிலாரி கிளிண்டனின் புகைப்படத்தை சமூக ஊடகங்களில் கசியவிட்டதால் விசாரணை சிறிது நேரம் நிறுத்தப்பட்டது.
ஹிலாரியைத் தொடர்ந்து, அவரது கணவரும் அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதியுமான பில் கிளிண்டனிடம் இன்று வெள்ளிக்கிழமை (27) விசாரணை நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அமெரிக்க வரலாற்றில் முன்னாள் ஜனாதிபதி ஒருவர் பாராளுமன்றக் குழுவினால் கட்டாயப்படுத்தி விசாரணைக்கு உட்படுத்தப்படுவது இதுவே முதல்முறையாகும்.
ஜெப்ரி எப்ஸ்டீன் பாலியல் குற்றச்சாட்டுகளுக்காக சிறையில் இருந்தபோது 2019-ல் தற்கொலை செய்து கொண்டார்.
தற்போது 2026 இல் அமெரிக்க அரசு எப்ஸ்டீன் தொடர்பான மில்லியன் கணக்கான ஆவணங்களை வெளியிட்டதைத் தொடர்ந்து, அவருடன் தொடர்பிலிருந்த முக்கியப் புள்ளிகளிடம் இந்த விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. நன்றி வீரகேசரி
ஆப்கானிஸ்தான் மீது பாகிஸ்தான் தாக்குதல்
Published By: Digital Desk 3
27 Feb, 2026 | 08:50 AM
பாகிஸ்தான் விமானப்படை வெள்ளிக்கிழமை (27) அதிகாலை முதல் ஆப்கானிஸ்தானின் முக்கியப் பகுதிகளில் தாக்குதல் நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அதன்படி, ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல், தலிபான் தலைவர் ஹிபத்துல்லா அகுந்த்ஸாதா வசிக்கும் முக்கிய நகரம் கந்தகார், எல்லைப் பகுதி மாகாணம் பக்தியா ஆகிய பகுதிகளில் தாக்குதலை மேற்கொண்டுள்ளது.
தலிபான் அரசு பாகிஸ்தானின் இந்தத் தாக்குதலை உறுதிப்படுத்தியுள்ளது.
பாகிஸ்தான் பாதுகாப்புத் துறை அமைச்சர் கவாஜா ஆசிப் சமூக ஊடகத்தில், "எங்கள் பொறுமை எல்லையை மீறிவிட்டது. தற்போது எங்களுக்கும் உங்களுக்கும் இடையே நேரடிப் போர் ஆரம்பமாகிவிட்டது" என பகிரங்கமாக அறிவித்துள்ளார்.
பாகிஸ்தான் இந்த இராணுவ நடவடிக்கைக்கு 'ஆபரேஷன் கசாப் லில் ஹக்' என்று பெயரிட்டுள்ளது.
முன்னதாக வியாழக்கிழமை இரவு, தலிபான் படைகள் பாகிஸ்தான் எல்லைப் படைகள் மீது பெரிய அளவிலான தாக்குதலை நடத்தியுள்ளன. அதில் 55 பாகிஸ்தான் வீரர்களைக் கொன்றதாகவும், பல இராணுவப் சாவடிகளைக் கைப்பற்றியதாகவும் ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு அமைச்சகம் உரிமை கோரியுள்ளது.
தனது நாட்டில் நடக்கும் தீவிரவாதத் தாக்குதல்களுக்கு ஆப்கானிஸ்தானில் உள்ள குழுக்களே காரணம் என பாகிஸ்தான் குற்றம் சாட்டுகிறது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை பாகிஸ்தான் நடத்திய வான்வழித் தாக்குதலில் குழந்தைகள் உட்பட 18 பேர் கொல்லப்பட்டதாக தலிபான் அரசு தெரிவித்தது. இதற்குப் பதிலடியாகவே தலிபான்கள் வியாழக்கிழமை தாக்குதலை ஆரம்பித்தனர்.
அக்டோபர் மாதம் ஏற்பட்ட மோதலுக்குப் பின்னர் இரு நாடுகளுக்கும் இடையிலான நில எல்லைகள் பெரும்பாலும் மூடப்பட்டுள்ளன.
தலிபான் செய்தித் தொடர்பாளர் ஜபிஹுல்லா முஜாஹித், காபூல் மற்றும் கந்தகாரில் நடந்த வான்வழித் தாக்குதல்களில் உயிரிழப்புகள் ஏதும் ஏற்படவில்லை எனத் தெரிவித்துள்ளார். எனினும், எல்லைப் பகுதிகளில் தொடர்ந்து கனரக ஆயுதங்களுடன் கடும் போர் நடந்து வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. நன்றி வீரகேசரி
ரஷ்யா - உக்ரைன் போரை நிறுத்துவதற்கான ஐ.நா சபை தீர்மானத்துக்கு 107 நாடுகள் ஆதரவு
25 Feb, 2026 | 12:35 PM
கடந்த ஐந்து ஆண்டுகளாக நீடித்து வரும் ரஷ்யா - உக்ரைன் போரை நிறுத்துவதற்காக ஐக்கிய நாடுகள் சபையில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்துக்கு 107 நாடுகள் ஆதரவளித்த நிலையில் செவ்வாய்க்கிழமை (24) இத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்த தீர்மானத்துக்கு பிரிட்டன், அவுஸ்திரேலியா, கனடா, பிரான்ஸ், டென்மார்க், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், மெக்சிகோ, பிலிப்பைன்ஸ், போலந்து உட்பட 107 நாடுகள் ஆதரவாக வாக்களித்தன.
மேலும், கியூபா, ஈரான், மாலி, ப்ருண்டி, பெலாரஸ், ரஷ்யா , சூடான், நைஜர் உள்ளிட்ட 12 நாடுகள் தீர்மானத்துக்கு எதிராக வாக்களித்தன.
அதேவேளை, இத்தீர்மானத்துக்கான வாக்கெடுப்பில் இலங்கை, இந்தியா, அமெரிக்கா, சீனா, பங்களாதேஷ் முதலான 51 நாடுகள் பங்கேற்கவில்லை.
ரஷ்யா - உக்ரைன் ஆகிய நாடுகளுக்கிடையிலான தொடர்ச்சியாக நிலவி வரும் போரில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர். பலர் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு, இடப்பெயர்வுகளை எதிர்கொண்டுள்ளனர். பெண்கள், சிறுவர்கள் அதிகமான உடல், உளப் பாதிப்புகளுக்கு முகங்கொடுத்துள்ளனர்.
இந்நிலையில், இந்த போரை முடிவுக்கு கொண்டுவர அமெரிக்கா பல்வேறு சந்தர்ப்பங்களில் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. எனினும், உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது.
இதன் காரணமாக, மோதலை முடிவுக்கு கொண்டுவருவதற்காக உலக நாடுகளின் ஆதரவை உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி திரட்டி வருகிறார். இந்த சூழலில் ரஷ்யா - உக்ரைன் இடையிலான போரை உடனடியாக நிறுத்துவதற்கு அழைப்பு விடுத்து, ஐ.நா. சபையில் தீர்மானம் கொண்டுவரப்பட்டது.
இந்த தீர்மானத்துக்கு 107 நாடுகள் ஆதரவளித்த நிலையில், அந்த நாடுகளுக்கு உக்ரைன் ஜனாதிபதி நன்றி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ஜெலன்ஸ்கி தனது எக்ஸ் தளப் பக்கத்தில், “முழுமையான போர் நிறுத்தம் மற்றும் எங்கள் நாட்டு மக்கள் மீண்டும் தாய்நாடு திரும்புவதற்கான தெளிவான அழைப்புகளுடன் கூடிய எங்களின் தீர்மானத்தை ஐ.நா பொதுச் சபை ஏற்றுக்கொண்டுள்ளது. இவை சரியான நடவடிக்கை. அமைதியை ஏற்படுத்த எங்களின் நட்பு நாடுகளுடன் இணைந்து தொடர்ந்து பணியாற்றுவேன்” என்று குறிப்பிட்டுள்ளார். நன்றி வீரகேசரி
பிரித்தானிய முன்னாள் தூதர் பீட்டர் மண்டேல்சன் லண்டனில் கைது செய்யப்பட்டுள்ளார்
Published By: Vishnu
24 Feb, 2026 | 05:59 AM
அமெரிக்காவுக்கான முன்னாள் பிரிட்டிஷ் தூதர் பீட்டர் மண்டேல்சன் லண்டன் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொதுப் பதவியில் இருந்தபோது தவறான நடத்தை மற்றும் தவறான நடத்தைக்கான சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டதாக பிரிட்டிஷ் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
சர்ச்சைக்குரிய நிதியாளரும் பாலியல் குற்றவாளியுமான ஜெஃப்ரி எப்ஸ்டீனுடன் மண்டேல்சனுக்கு நெருங்கிய தொடர்பு இருப்பதாக வெளியான தகவல்களுக்குப் பிறகு, கடந்த செப்டம்பரில் மண்டேல்சன் தனது தூதர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். நன்றி வீரகேசரி
கூகுள் டீப்மைண்ட், ஏஐ தொழில் மாற்றங்கள்: சுந்தர் பிச்சை வெளியிட்ட முக்கிய தகவல்கள்
Published By: Digital Desk 3
20 Feb, 2026 | 02:32 PM
டெல்லியில் இடம்பெறும் ஏஐ (Artificial Intelligence) மாநாட்டின் 4 ஆவது நாளில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கூகுள் நிறுவனத்தின் தலைமைச் செயல்பாட்டு அதிகாரி சுந்தர் பிச்சை முக்கியப் பேச்சாளராக கலந்து கொண்டார்.
இந்த மாநாட்டில் கலந்துகொண்டு சுந்தர் பிச்சை பேசும் போது தெரிவித்ததாவது, ஆந்திர மாநிலத்தின் விசாகப்பட்டினத்தில் கூகுள் சார்பில் 15 பில்லியன் டொலர் முதலீட்டில் ஏஐ மையம் நிறுவப்பட உள்ளது. இதன் மூலம் இந்தியாவில் ஏராளமானோர் தொழில் வாய்ப்புகளைப் பெறுவார்கள். புதிய ஏஐ தொழில் நுட்பங்கள் உருவாகி, நாட்டின் தொழில் வளங்கள் மேலும் விரிவடையும் .
இந்தியா, அமெரிக்காவை இணைக்கும் வகையில் கடலுக்கு அடியில் ஆப்டிக் கேபிள் பதிக்கப்படவுள்ளது. இதன் மூலம் தொழிலாளர்கள், விவசாயிகள் போன்ற பலருக்கும் வானிலை முன்னறிவிப்பு சேவைகள் வழங்கப்பட முடியும்.
சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு யூடியூப்பில் பணம் சம்பாதிக்க முடியுமென யாரும் நினைத்திருக்கவில்லை. இப்போது இலட்சக்கணக்கானோர் யூடியூப்பில் இலாபம் பெறுகிறார்கள்.
அதே நேரத்தில், ஏஐ தொழில் நுட்பம் அதிவேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது. இது தொழில் துறையில் பெரிய மாற்றங்களை ஏற்படுத்துவதுடன், புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கும் என அவர் குறிப்பிட்டார்.
கூகுளின் டீப் மைண்ட் நிறுவனம், ஏஐ தொழில் நுட்பத்தின் மூலம் ஆல் பாபோல்ட் (AlphaFold) என்ற மொடலை உருவாக்கியுள்ளது. இதன் மூலம் புரொடீனின் 3டி வரைபடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இது மருத்துவத் துறையில் பெரிய புரட்சி ஏற்படுத்தி, கோடிக்கணக்கான மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தும் வகையில் பயன்படும். ஏஐ தொழில்நுட்பங்கள் அறிவியல் துறையில் மிகவும் கடினமான பிரச்சினைகளுக்கு கூட தீர்வை வழங்கும் சக்தி கொண்டவை என மேலும் குறிப்பிட்டார். நன்றி வீரகேசரி

No comments:
Post a Comment